நூறு ஆயுசு - குறள் கதை
நூறு ஆயுசு
- முடிவிலி
தொலைவில் எங்கோ இடி இடித்துக் கொண்டிருக்க, மெல்லிய மழையின் ஓசை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. மெல்ல என் கண்களை விழித்துப் பார்த்தேன். "செல்வம், முழிச்சுட்டியாடா? ஓடக்கரையாத்தா, உனக்கு மாவிளக்கு போடுறேம்மா" என்று அம்மா அழத் துவங்கினார். பக்கத்து கட்டிலில் இருந்தவர்கள் என்னையும், அம்மாவையும் பார்க்க, மெல்ல எழுந்து அமர முயன்றேன். உடலெங்கும் வலி விரவியிருந்தது. எங்கெங்கோ கட்டுகள் போடப்பட்டிருந்தன. முதுகும், தோளும் விண்ணென்று வலித்தன.
"வேணாம்யா, படுத்துக்கடா, இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க அந்த நர்ஸம்மா, இப்பக் காணோம். நான் போயி டாக்டரைக் கூட்டியாரேன்" என்று எழப் போன அம்மாவைக் கையைக் காட்டி நிறுத்தி, "சங்கரு" எனக் கூற முயன்றேன்.
"என்னடா?" என்றார் அம்மா.
"சங்கரு எப்படி இருக்கான்?" இப்போது தான் பேச்சு வந்திருந்தது.
"அதோ மூனாவது பெட்டுல படுத்திருக்கானே. ரொம்ப நேரம் எல்லாம் என்னால தான் ஆச்சுன்னு அழுதுட்டே இருந்தான். அப்பா என்ன தான் சொன்னாலும் அவன் மனசு ஆறல, அப்படியே அழுதுட்டே தூங்கிட்டான். அப்பா, அண்ணன்லாம் இதுவரைக்கும் இங்க தான் இருந்தாங்க. நான் தான் ரெண்டு நாள் ஆச்சு, ஊருக்குப் போங்க, நான் தகவல் சொல்றேன்னு சொல்லி அனுப்புனேன்." என்று தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு, "நான் அப்பாக்குப் போன் போட்டுச் சொல்லிட்டு, அப்படியே டாக்டரையும்..." என்று சொல்லிக் கொண்டே சென்றார் அம்மா. படபடவென்று பேசியபடிச் சென்றாலும், கலங்கிய கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் சொல்லின அம்மாவின் பாசத்தை.
நான் என்னுடைய கட்டிலின் எதிரே இருந்த சாளரத்தின் வழியே வெளியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேறெங்கும் பார்க்கவும் முடியாத அளவுக்குக் கழுத்தில் வலி. இரண்டு நாட்களுக்கு முன், இதே போல தான் மழை பெய்துகொண்டு இருந்தது.
"அம்மா, இன்னிக்கு சங்கரு துபாய்லேந்து வர்றான்ல, மழை வேற விடாம பெய்யுது, நம்ம துரையண்ணன்கிட்ட காரு கேட்டிருக்கேன். இப்ப கெளம்புனா தான் அவன் வெளில வரதுக்கு முன்ன நான் போயி சேர முடியும்."
"அதுக்கு இப்ப என்னடா? ஒரு ரெண்டு நிமிசம் பொறுடா, இட்லி இப்ப வெந்துடும்" என்று உள்ளே இருந்து வந்தது அம்மாவின் குரல்.
சொன்னது போலவே வந்த இட்லியை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மழையையும் பார்க்காமல் நான்கு வீடு தள்ளி இருக்கும் துரையண்ணன் வீட்டுக்கு ஓடினேன்.
"என்ன செல்வம், மாமா பையன் துபாய்லேந்து வரானா? எனக்கு என்னடா கொண்டு வருவான்?" என்று சிரித்தபடி கேட்ட துரையண்ணனிடம், "முதல்ல சாவியக் கொடுங்கண்ணே, போயிக் கூட்டிட்டு வர்றேன். நீங்களாச்சு, அவனாச்சு" என்ற என்னிடம், "மழையாக் கெடக்கு, பத்திரமா ஓட்டிட்டுப் போடா" என்றார் துரையண்ணன்.
வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் நான் சீட் பெல்ட்டைப் போட்டதைப் பார்த்த துரையண்ணன், "என் வண்டியில இதைப் போட்டு ஓட்டுற ஒரே ஆளு நீ தான்." என்று கூற, "எல்லாம் ஒரு சேப்டிக்குத் தானண்ணே" என்று சொல்லியபடி வண்டியை எடுத்துக் கொண்டு திருச்சி வானூர்தி நிலையம் நோக்கிக் கிளம்பினேன். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் வானூர்தி நிலையத்தின் வருகைப் பகுதியில் நின்றிருந்தேன். மழை இப்போது விட்டிருந்தது. பத்து நிமிடம் முன்னதாகவே வந்திறங்கியிருந்தது Air India Express. வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் உற்று நோக்கியபடி நின்றிருக்க, வந்தவர்களில் பலரும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தனர், சங்கரும்.
"சங்கரு! இங்க" என்று கையை மேலே காட்டி அவனை அழைக்க, என்னைப் பார்த்து தொலைக்காட்சிப் பெட்டியையும், மற்றொரு பெரிய அட்டைப்பெட்டியையும் trolleyல் தள்ளிக் கொண்டே வந்தான் சங்கர்.
"மச்சான், எப்படி இருக்கடா?" என்று சொல்லிக் கொண்டே,கட்டிப்பிடித்துக் கொண்டான்.
"நான் நல்லா இருக்கேன்டா, நீ எப்படிடா இருக்க? துபாய்ல ஏசில இருந்து இருந்து, டேய் அந்த கூலிங் கிளாஸைக் கழட்டுடா, மழை வெளுத்து வாங்குது."
"உனக்குப் பொறாமை, மச்சி, வா, ஏதாவது டாக்சி எடுத்துக்கலாம். லக்கேஜ் நெறைய இருக்கு" என்றான் சங்கர்.
"டேய், நம்ம துரையண்ணன் கிட்ட வண்டி வாங்கிட்டு வந்தேன். வா போகலாம்." என்று சொல்லிக் கொண்டே நான் முன்னே செல்ல, பின்னால் வந்தான் சங்கர்.
கொண்டு வந்தவற்றை வண்டியின் பின்னாலும், தொலைக்காட்சிப் பெட்டியை வண்டியின் பின் இருக்கையிலும் வைத்து விட்டு, ஓட்டுனர் இருக்கையில் நான் அமர, "செல்வம், நான் ஓட்டவா?" என்றான் சங்கர்.
"வேணாம்டா, அண்ணன் நானுங்கிறதால வண்டியே குடுத்தாரு" என்று சொல்லிக் கொண்டே வானூர்தி நிலையத்தின் வெளியே வந்து இடது புறம் திரும்பி, புதுக்கோட்டை சாலையின் போக்குவரத்தில் இணைந்தேன். மழையினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்க, அடிக்கடி திரும்பி, பின்னிருக்கையில் இருந்த தொலைக்காட்டிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
"என்னடா, அதையே பாத்துட்டு வர்ற?"
"ஒன்னுமில்ல"
"ஆமா, உங்க வீட்டுல தான் ஏற்கனவே டிவி இருக்கே, அப்புறம் ஏன்டா இதைச் சுமந்துட்டு வர்ற?"
"அதெல்லாம் ஒரு டிவியா? இது 42 இன்ச், நல்ல ஆபர்ல கெடச்சுது 800 திர்கம், நம்மூரு காசுக்கு 15000ரூவா வரும். இதுக்கு ஏர்போர்ட்டுல 6000ரூவா புடுங்கிட்டாய்ங்க. ஆமா, நான் சம்பாதிச்சு வாங்குறதுக்கு இவனுக்கு எதுக்கு குடுக்கணும்?"
"இதே டிவி இங்க வாங்குனா நாப்பதாயிரம் ஆகும். இப்ப நீ கொடுத்த 6000ரூவாயச் சேத்தாலும் இருபத்தொன்னு தானே வருது, அப்புறம் ஏன் புலம்புற?"
சற்று நேரம் அமைதியாக இருந்தவன், "மச்சி, அப்படியே வண்டியக் கொஞ்சம் ஓரங்கட்டேன்" என்றான்.
"எதுக்குடா?"
"சொல்றேன்டா, நிறுத்து"
வண்டியை நிறுத்தியதும், இறங்கிச் சென்று மரத்தின் பின்னால் சிறுநீர் கழிக்கத் துவங்கினான். நான் வண்டியில் இருந்து இறங்கி, "ஏன்டா, இதெல்லாம் ஏர்போர்ட்லயே முடிச்சுட்டு வரலாம்ல" எனக் கேட்டேன்.
"என்ன தான் இருந்தாலும், இப்படி காத்தோட்டமாப் போறதே செம்மல்ல" என்றான்.
"ஏன்டா, துபாய்லயும் இப்படித்தானா?"
"அது என் நாடு இல்லயே. என்னதான் காசு கெடச்சாலும், இங்கப்போல freeயா இருக்க முடியுமா?"
"அந்த நாட்டுக்காரனுக்கு அவன் நாடு தானே, என்னிக்காச்சும் அவன் இப்படிச் செய்யுறத பாத்திருக்கியா?"
"ப்ச், அடாடாடா, தொடங்கிட்டியா? டேய் இப்பத் தானே வந்திருக்கேன். அதுக்குள்ள" என்று சொல்லிக் கொண்டே, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான் சங்கர்.
"டேய், நான் ஓட்டுறேன், நீ வெளியில வா" என்று நான் சொல்ல, "இதோ கீரனூர் பக்கத்துல வந்துட்டோம். இன்னும் 15 கிலோ மீட்டர்ல ஊருக்குப் போயிடப் போறோம். நான் ஓட்டுறேன் செல்வம்" எனக் கெஞ்ச, நான் சுற்றி வந்து முன்னிருக்கையில் அமர்ந்து என்னுடைய சீட்பெல்டைப் போட்டேன்.
"நான் அப்பவே கவனிச்சேன், என்னடா, இது, நம்மூர்ல சீட்பெல்ட்லாம் போட்டு ஓட்டுறது நீ மட்டும் தான்டா" என்றான் சங்கர்.
"டேய், வண்டிய நிறுத்து, சீட் பெல்ட் போடு."
"போடா, ப்ளைட்ல அந்த ஏர் இண்டியா பாட்டி சொல்லியே நான் சீட் பெல்ட் போடல, நீ சொல்லிப் போடுவனா? இதென்ன துபாயா? சீட் பெல்ட் போடலன்னா camera ல பாத்து fine போட, கொஞ்ச நேரம் அமைதியா..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எதிரே வந்த லாரி ஒன்று மழையில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓட, சங்கர் brakeஐ அழுத்தியும் நொடி நேரத்தில் வண்டி சுழன்று கொண்டிருந்தது. கண்ணாடி தெறித்து ஆங்காங்கே சிதறிக் கொண்டிருந்தது. வண்டி சுழன்ற வேகத்தில் சங்கர் என் மீது இடிக்க, எனது தலை இடதுபுறக் கதவின் கண்ணாடியில் இடிக்க, அரை மயக்க நிலைக்குச் சென்றேன். வண்டி தலை கீழாய் கவிழ்ந்து கிடக்க, எனது இருக்கையில் நான் தொங்கிக் கொண்டிருக்க, எனக்குக் கீழே சங்கர் குருதி வெள்ளத்தில் கிடந்தான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நான் முழுதாய் மயங்கிப் போயிருந்தேன்.
மருத்துவர் வந்து கண்களில் டார்ச் அடித்து இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். "Nothing to worry, மா, ஒரு ரெண்டு நாள் இங்க பெட்ல இருக்கட்டும்." என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அம்மா வந்து அருகில் அமர்ந்தார். "ரெண்டு நாள் எங்களைக் கதறவிட்டுட்டியே, அவனுக்கு தான் அடி அதிகம். ஆனா, அவனே முழிச்சுட்டான். ஆனா நீ..."
"அம்மா, யாரும்மா எங்களை இங்க சேர்த்தது? யாரு கூட்டிட்டு வந்தது?"
"உங்க ரெண்டு பேரையும் ஒரு அஞ்சு மணி வரை யாரும் தேடல, அப்புறம் அப்பா தான் 'காலைல போனவனை இன்னும் காணல, ஒரு மணி நேரத்துல வந்துடலாம், இன்னுமா வரல'ன்னு போன் அடிக்கிறாரு. போன் சுட்ச் ஆப்புன்னு வருது. துரையண்ணனும் வந்துட்டாரு. கடைசில ஒரு எட்டு மணி இருக்கும். துரையண்ணனுக்கு போன் வந்துச்சு. 'சார், நான் திருச்சி காவேரி ஹாஸ்பிடல்லேந்து பேசுறேன். உங்க வண்டி ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு, நான் தான் அதுல வந்த ரெண்டு பசங்களையும் 108க்குப் போன் போட்டு வரவழைச்சு, காவேரி ஹாஸ்பிடல்ல சேத்தேன்'னு சொல்ல, அடிச்சு புடிச்சு ஓடியாந்தோம். என் கையில் உங்க ரெண்டு பேரோட போன், கழுத்துல இருந்த செயின்லாம் கொடுத்துட்டு, 'அந்தப் பையன் பாத்துக்கங்கம்மா, டாக்டர் உடனே கொண்டு வந்ததால நல்லதாப் போச்சுன்னு சொன்னாரு, நீங்க பதறாதீங்க'ன்னு சொல்லிட்டு 'போயிட்டு வர்றேன்'னு அந்தப் பையன். நைட் பத்து மணி இருக்கும். 'தம்பி, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலப்பா'ன்னு சொல்றேன். அதுக்கு அந்தத் தம்பி சொல்லுச்சு, 'எனக்கு இவங்களை இங்கக் கொண்டு வந்து சேர்த்தது கூடப் பெருசாத் தெரியல. 108க்கு அடிச்சேன். வந்துச்சு, இங்கயும் கொண்டு வந்தாச்சு, ஆனா, உங்களுக்குத் தகவல் சொல்றதுக்குத் தான் நொந்து போயிட்டேன். போன் இருக்கு, ஆனா, lock ஆகிருக்கு, பர்ஸ் இருக்கு, ஆனா, அதுல கொஞ்சம் பணம் இருந்துச்சு, உங்க போட்டோ இருந்துச்சு. வேற எதுவும் இல்ல. நான் ஆம்புலன்ஸ்ல ஏறுறதுக்கு முன்னாடி அந்த வண்டியோட நம்பரை போட்டோ எடுத்து வச்சிருந்தேன். அதுக்குப் பக்கத்துல துரைன்னு போட்டு, ஒரு அட்ரஸும், நம்பரும் இருந்துச்சு. அதை வச்சுத் தான் உங்களுக்கு போன் செஞ்சேன். உங்க பையன் வச்சிருந்த பணத்தை வச்சே இங்கக் கொஞ்சம் காசு கட்டிருக்கேன். அதோட பில் இருக்கு. நான் எதுவும் யாரும் செய்யாததெல்லாம் செய்யலம்மா, யார் என்ன செய்யணுமோ அதத் தான் செஞ்சேன், நான் போயிட்டு வர்றேன்மா'னு சொல்லிட்டுப் போயிட்டான்" என்று சொல்ல, "ஏம்மா, அவர் யாரு, என்னன்னு கூட கேக்கலயா?" என்றேன்.
"இருந்த பதட்டத்துல என்ன செய்யுறதுன்னே தெரியல, அந்தப் பையன் போனதுக்கு அப்புறம், அப்பா வந்து கேட்கும்போது தான் கேட்காம வுட்டேனேன்னு எனக்குத் தோனுச்சு" என்று சொன்ன அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
துரையண்ணன் வந்து கொண்டிருந்தார், படுக்கையில் இருந்தபடியே "அண்ணே, உங்க வண்டி" என்று சொன்ன, என்னைப் பார்த்து, "அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்டா, செல்வம்" என்றவர், அம்மாவை நோக்கி "அன்னிக்கு இவங்களை இங்க கொண்டு வந்து சேத்தான்ல, அந்தப் பையன் பேசுறான், உங்ககிட்ட பேசணுமாம்" என்று கூற, அம்மா அலைபேசியை வாங்கி, "தம்பி, உங்களுக்கு நூறு ஆயுசுப்பா" என்றார்.
- முடிவிலி
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு. (211)
அதிகாரம் : ஒப்புரவறிதல்
இயல் : இல்லறவியல்
கைம்மாறு எதிர்பார்த்து பெய்யாத மழை போல வாழ்பவர்கள் தான் செய்த உதவிக்கு வேறெதுவும் எதிர்பார்ப்பதில்லை.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு. (211)
அதிகாரம் : ஒப்புரவறிதல்
இயல் : இல்லறவியல்
கைம்மாறு எதிர்பார்த்து பெய்யாத மழை போல வாழ்பவர்கள் தான் செய்த உதவிக்கு வேறெதுவும் எதிர்பார்ப்பதில்லை.
Comments
Post a Comment