திமன்வா - குறள் கதை
திமன்வா
-முடிவிலி
கோடை விடுமுறை என்றாலே என் மனம் மகிழ்ந்து நிறைவுற்றிருக்கும். என் பேரனும், பேத்தியும் வந்து எங்களுடன் தங்கும் காலம் அல்லவா? இப்போதும் என்னிருபுறமும் அமர்ந்து கொண்டு நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
"தாத்தா, தாத்தா, ஏதாச்சும் கதை சொல்லுங்க, தாத்தா"
எப்போதும் அலைபேசியும் கையுமாக இருக்கும் இக்காலக் குழந்தைகள் நடுவே கதை கேட்க விரும்பும் குழந்தைகளாக இவர்கள் இருப்பதை நினைத்தால்...
"தாத்தா, கேக்குறோம்ல, இப்ப கதை சொல்லப் போறீங்களா, இல்லையா?" என்றான் பேரன் கார்த்திக், மிரட்டலாக. வேறு யார் நம்மை மிரட்டுவதற்கு.
நானும் மிரண்டவனாய், "சொல்றேன்" என்று சொல்ல, இருவரும் 'ஏ'யெனச் சிரித்தனர். "சரி, என்ன கதை வேணும்? திருக்குறள் கதை சொல்லவா? இப்பக் கூட குறள்மொழின்னு எழுதிட்டு வர்றாங்க, அதுலேந்து ஒரு கதை சொல்றேன்" என்றேன்.
"தா...த்தா" என்று ஒன்று போல் இழுத்தார்கள், என் பேத்தி இனியா, "தாத்தா, ஏதாச்சும் சயின்ஸ் பிக்ஷன் கதை இருந்தா சொல்லுங்க" என்றாள்.
"சயின்ஸ் பிக்ஷனா? எனக்கு நான் படிச்ச கதை தெரியும், எனக்கு நடந்த கதை தெரியும். கற்பனையா எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாதே" என்றேன்.
"அதெல்லாம் தெரியும், சொல்லு தாத்தா, சயின்ஸ் பிக்ஷன், ப்ளீஸ்"
"சரி, சரி, நான் சொல்றது சயின்ஸ் பிக்ஷனா இல்லயான்னு தெரியாது, ஆனா, நான் சொல்லப் போறத கண்டிப்பா நம்பமாட்டீங்க" என நான் கூற, இருவரும் ஆர்வமானார்கள்.
***
"கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னாடி, நான் மெட்ராஸ்ல மருத்துவப்படிப்பு முடிச்சுட்டு, கொஞ்ச நாள் மெட்ராஸ்லேயே வேலை பார்த்தேன்."
"தாத்தா, சென்னை"
"ஆமா, சென்னை, அப்போ எல்லாரும் மெட்ராஸ்னு தான் சொல்லுவோம். என்னோட டிகிரி சர்டிபிகேட்ல கூட பாரு, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்னு தான் இருக்கும்" என்று சுவற்றில் தொங்கிய எனது மருத்துவச் சான்றிதழைக் காட்டினேன்.
"அப்புறம், மேலச்சொல்லுங்க தாத்தா"
"சொல்றேன், ஆனா, நடுவுல இடைமறிக்கக் கூடாது, ஓகேயா?" என நான் சொல்ல, வாயில் விரல் வைத்து அமைதியானவர்கள் போல் நடித்தனர், வாலுங்க.
"என்னதான் நிறைய பேருக்கு மருத்துவம் பாத்தாலும், மனசுக்குள்ள மெட்ராஸ் நம்ம இடம் இல்லன்னு தோனிக்கிட்டே இருந்தப்ப தான் ஊட்டியில குந்தா பகுதியில ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர் தேவைங்கிறதும், மலைப்பகுதிங்கிறதால யாரும் அந்த இடத்துக்குப் போக விரும்புறதில்லன்னும் கேள்விப்பட்டேன். கேட்டதும் உடனே இடமாற்றமும் கிடைச்சுது. அங்கப் போனதுக்கு அப்புறம், என் மனசுக்குள்ள நான் கேட்டுக்கிட்ட கேள்வி இது தான். 'ஏன் இங்க யாரும் வர விருப்பப்படல, சுத்தமான காத்து, எங்கப் பாத்தாலும் பச்சை பசேல்னு பசுமை, மரம், காடு, போயிட்டு வர அரசு ஜீப், எல்லாத்தையும் விட நல்ல மனுசங்க. இப்படி எல்லாம் இருந்தும் மத்தவங்க ஏன் இங்க வர விரும்பல?'
கொஞ்ச நாளுல குந்தா பகுதியில மட்டும் இல்ல, சுத்தி இருந்த எல்லா ஊருக்கும் போயி மருத்துவம் பாக்கத் துவங்கியிருந்தேன். சில மலைப்பாங்கான இடத்துல இருக்குற வீட்டுக்குப் போறதுக்கு வழிகாட்ட, எனக்கு உதவியா ஆள் தேவைப்பட்டாங்க. அப்படி வந்தவர் தான் செங்கோடன் அண்ணன்.
ஒரு நாள் இதே போல மே மாதம் ஒரு நாள் ஓய்வு கிடைச்சுது. நான் செங்கோடனைக் கூட்டிக்கிட்டு முக்குருத்தி ஏரிக்குப் பக்கத்துல இருக்குற காட்டுக்குப் போயிருந்தேன். ஜீப்பைச் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, காட்டுக்குள் நடக்கத் தொடங்கினோம். செங்கோடன் கேட்டார், "டாக்டரய்யா, எதுக்கு இந்தக் காட்டுக்குள்ள போறோம். இப்படியே கொஞ்ச தொலவு போனா, ஏரி தான் வரும். யானை, புலின்னு என்ன இருக்கும்னே தெரியாது, எதுக்கு?"
"மிஸ்டர் செங்கோடன்"
"என்னய்யா என்னப் போயி மிஸ்டர்னுலாம் சொல்றீங்க?"
"வயசுல மூத்தவர் நீங்க, என்னை டாக்டரய்யான்னு தானே சொல்றீங்க, நான் உங்களை மிஸ்டர் வச்சு சொல்லக் கூடாதா?"
"நீங்க படிச்சவுக"
"நீங்களும் தான். இந்தக் காட்டைப் படிச்சிருக்கீங்க, உங்க குடும்பத்துலயே யானைக்குப் பேறு பாக்குறவங்கல்லாம் இருந்திருக்காங்கல்ல?"
"அதுவும் உங்களைப் போல படிச்சுட்டு டாக்டர் ஆவுறதும் ஒன்னாயிடுமா?"
"ஆகாதுன்னே வச்சுக்கிட்டாலும், மனுசனுக்கு மனுசன் மதிப்பு கொடுக்குறதுக்குப் படிப்போ, வேலையோ காரணமா இருக்கணும்னு கட்டாயமில்லங்க" என்று நான் சொன்னப்ப, சில நொடி செங்கோடன் அங்கேயே நின்று விட்டார்.
"ஏன் நின்னுட்டீங்க? வாங்க, போலாம். அந்த ஏரியை நான் பாத்தே ஆகணும். வெளிச்சம் இருக்குறப்பவே பாத்துடணும். அப்புறம் நீங்க தான் சொன்னீங்களே, புலி, பாம்புன்னு" என்று நான் சொல்ல, இன்னும் வேகமாக நடக்கத் துவங்கினோம்.
அரை மணி நேர நடைக்குப் பின் ஏரியின் கரையை அடைஞ்சிருந்தோம். சுற்றிலும் உயரமா மரங்கள் நின்றிருக்க, பச்சை விரித்த புல்வெளிக்கு நடுவே எனக்கே எனக்கான இடம் இது என்பது போல் நிறைந்திருந்துச்சு தண்ணீர். என்ன தான் கோடைக்காலம்னாலும், மேகம் சூழ்ந்த வானத்துல சூரியன் ஒளிஞ்சு விளையாட, ஏரியோட மேல புகை மாதிரி பனி படர்ந்திருந்துச்சு. "செங்கோடண்ணே, இத எல்லாம் என் ஊருல பாக்க முடியுமா? வாங்க, நீங்களும் உட்காருங்க" என்றேன்.
'இதெல்லாம் நாங்க நெதமும் பாக்குறது தானே, டாக்டர்' என்று சொல்லிக் கொண்டிருக்குற போதே வானத்தில் பெருசா வெடிச்ச சத்தம் கேட்டுச்சு, அங்கங்கே எரிஞ்சபடி ஏதேதோ விழுந்துது. சில நொடிகள் என்ன நடக்குதுன்னே எங்களுக்குப் புரியல. அந்த வெடிச்சத்தத்தைக் கேட்ட நொடி எங்களையும் அறியாம, தலையில் கைவைத்துக் கொண்டு மரங்களை நோக்கி ஓடத் தொடங்கியபோது தான் நான் கவனித்தேன், விழுந்தவை ஒரு விண்வெளி ஓடத்தோட பாகங்கள்னு. ஏன்னா முக்குருத்தி ஏரியில அந்த விண்வெளி ஓடத்தோட பெரும்பகுதி விழுந்து மூழ்குச்சு. நானும், செங்கோடனும் மரங்களுக்குள்ள நுழையப் போறப்ப, செங்கோடனுக்குப் பக்கத்துல கல் போல ஏதோ ஒன்னு விழுந்தது. கை அளவுக்குச் சின்னதா தான் இருந்துச்சு. ஆனா, விழுந்த இடத்துல ஒரு பள்ளத்தையே உருவாக்கியிருந்துச்சு.
அந்தப் பொருளில் ஏதோ மினுக் மினுக்குன்னு எரிஞ்சுகிட்டு இருந்தது சிலநொடிகள்ல நின்னுப் போச்சு. அதை நான் கையில எடுத்துப் பாத்தேன்.
'டாக்டரய்யா, அட நேரம் காலம் இல்லையா? கண்டதெல்லாம் கையில எடுத்துக்கிட்டு, இத்தனை நாளா இந்தக் காட்டுல இப்படில்லாம் நடந்ததே இல்ல, மேலேந்து என்னென்னமோ வுழுவுது, வாங்க முதல்ல திரும்பப் போவோம்'னு சொல்லிக்கிட்டுருக்குற நேரம் நாங்க இருந்த பைன் மரக்கூட்டத்துக்குள்ள ஏதோ விழுந்து மரங்களில் அடிபட்டு கீழே பட்டு உருண்டது. நான் என்ன அதுன்னு பாக்க ஓடினேன். 'வேணாங்க, வேணாங்க'ன்னு சொல்லி செங்கோடனும் பின்னாலயே வந்தாரு. பக்கத்தில் வந்தபிறகு தான் தெரிந்தது, விழுந்திருப்பது வேற்றுகோள் மனிதன்னு"
"அப்படின்னா, ஏலியனா?" என்றான் கார்த்திக்.
"நடுவுல பேசாதன்னு சொன்னேன்ல, ஆமா, ஏலியன் தான், முதலில் எனக்கும், செங்கோடனுக்கும் பயமாகத்தான் இருந்தது. ஆனா, தலையிலும், தோளிலும் பெரிய காயத்தோட உடலெங்கும் சிராய்ப்புகளோடு இருந்ததை அப்படியே விட்டுட்டு வர எனக்கு மனசு வரல, 'டாக்டர், பாத்தா மனுசனுங்க மாதிரி இருக்கு, ஆனா முகம் அப்படி இல்லயே, வானத்துலேந்து வேற வுழுந்திருக்கு, பயமா இருக்கு, வாங்க ஓடிருவோம்' என செங்கோடன் பதறிய போது தான் நான் கவனித்தேன். விழுந்திருப்பது பெண் ஏலியன் என. 'இந்தக் காட்டுல விட்டுப் போனா புலி தான் தூக்கிட்டுப் போவும், செங்கோடண்ணே, வண்டி வரைக்கும் தூக்கிட்டுப் போயிடுவோம். பிடிங்க'ன்னு சொல்ல, சற்று தயங்கியவர், 'சரி, தள்ளுங்க டாக்டர்'னு சொல்லி, அலேக்காக அப்படியே அந்த ஏலியனைத் தூக்கித் தோள்மேல் போட்டு நடக்கத் துவங்கினார். சில நிமிடங்களில் வண்டிக்கு வந்திருந்தோம். 'அண்ணே, வரும்போது தான் நினைச்சுப்பாத்தேன். இவ்ளோ பெரிய வெடி வெடிச்சது போல சத்தத்தோட விழுந்த இந்த shuttle பத்தி அரசு, விண்வெளி ஆராய்ச்சி மையம், போலீஸ், forest department எல்லாம் தேட வருவாங்க. பொருள் என்ன வேணும்னாலும் கிடைக்கட்டும். இந்த ஏலியன் மட்டும் கிடைச்சுதுன்னா, இதையும் ஆராய்ச்சிப் பொருள் ஆக்கிடுவாங்க. அதனால, நம்ம இங்க வந்தது யாருக்கும் தெரிய வேணாம். எனக்குக் காட்டுக்குள்ள தங்குறதுக்கு ஒரு இடம், யாரும் தேடி வராம இருப்பது போல வேணும்'னு சொல்ல, 'சரிங்க, நான் கூட்டிப் போறேன்'னு சொன்னாரு செங்கோடன்.
வண்டியை அவர் ஓட்ட, படுத்திருந்த அந்த ஏலியனின் நாடிப்பிடித்து செக் பண்ணுனேன். துடித்தது. ஆனால் மயக்கநிலையில் தான் இருந்தது அந்த ஏலியன். அவர்களின் உடலியல் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே நமக்கு மருத்துவம் செய்வது போலவே வண்டியில் இருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்த சில மருந்துகள் வைத்து காயங்களுக்கு முதலுதவி செய்தேன்.
செங்கோடன் அவலாஞ்சிப் பகுதியில் உள்ள ஒரு மரவீட்டுக்கு அழைத்துச் சென்றார். 'இங்க யாரும் வரமாட்டாங்க, என்ன அட்டைப்பூச்சி நெறைய இருக்கும். நீங்க உள்ளப் போங்க. நான் பக்கத்து ஊருல போயி, கொஞ்சம் உப்பு எடுத்துட்டு வர்றேன், அப்படியே கொஞ்சம் துணியும் கொண்டாரேன்'னு கிளம்ப, 'அப்படியே என் வீட்டுக்குப் போயி என்னோட மருந்துப் பெட்டி எடுத்துட்டு வாங்க'ன்னு சொன்னேன். வண்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்பினார் செங்கோடன்.
அவர் சென்று சிறிது நேரத்தில், மயக்கம் தெளிந்து கண் விழித்தது அந்த ஏலியன்" என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு, கார்த்திக்கையும், இனியாவையும் பார்த்தேன்.
"ஏன் தாத்து, நிறுத்திட்டீங்க சொல்லுங்க" என்றனர்.
"என்ன கதை கேட்குறீங்க?" என்று ஒரு குரல் கேட்க, மூவரும் நிமிர்ந்து பார்த்தோம். என் மனைவி நின்று கொண்டிருந்தாள். கார்த்திக், "பாட்டி, தாத்து ஏலியன் கதை சொல்றாங்க, வாங்க நீங்களும் கேளுங்க" என்று அவளையும் அழைத்து உட்கார வைத்தனர்.
"எதுக்கு இப்ப ஏலியன் கதையெல்லாம் சொல்லி பசங்களைப் பயமுறுத்துறீங்க?" என்றாள் என் மனைவி வான்மதி.
"வான்ஸ், பசங்க தான் சயின்ஸ் பிக்ஷன் கதை கேட்டாங்க" என்று சொல்ல, "தாத்தா, என்ன ஆச்சு, ஏலியன் கண்ண முழிச்சதோட நிக்குது கதை" என்றாள் இனியா. "சொல்லித் தொலைங்க, எனக்கு வேலை கெடக்கு, நான் போறேன்" என்ற வான்மதியின் கை பிடித்து அமரவைத்தேன்.
"ஆங், கண்ண முழிச்ச ஏலியனுக்குத் தான் எங்க இருக்கோம்னு தெரியல. அமைதியா இருந்த அறையைச் சுத்திப் பாத்துச்சு. நான் அது பக்கத்துல வந்து நின்றேன். என்ன பேசுறதுன்னு எனக்கும் தெரியல, அதுக்கு நான் பேசுறது புரியுமா இல்லையான்னும் தெரியல. வாயில் தமிழும், கை அசைவை வைத்தும் பேசுனேன். 'படுத்துக்கோ, எந்திரிக்க வேண்டாம், நீ இங்க பாதுகாப்பா இருக்கலாம். ஓய்வு எடு'ன்னு கையை அசைத்தபடி சொன்னதுல எவ்ளோ அந்த ஏலியனுக்குப் புரிஞ்சுதோ தெரியல. ஆனா, முதலில் அதன் கண்ணில் தெரிந்த பயம் குறைந்து, தனக்கு ஏதும் ஆகாது என்ற நம்பிக்கை வந்தது போல் இருந்துச்சு உடலெங்கும் கட்டுப் போடப்பட்டிருப்பதைத் தனது கையால் தடவிப் பார்த்துச்சு, கொஞ்ச நேரத்தில் மீண்டும் தூங்கிப் போச்சு"
"தாத்தா, ஏன் வந்துச்சு, பாத்துச்சுன்னு சொல்றீங்க, அது லேடி ஏலியன் தானே, வந்தா, பார்த்தான்னு சொல்லலாம்ல" என்றாள் இனியா.
"அதுவும் சரிதான். சரி மேலக் கேளு, செங்கோடன் ஒரு பையில் துணிகளும், மருந்துப்பையையும் கொண்டு வந்திருந்தான். கொண்டு வந்த உப்பை வீட்டைச் சுற்றியும், ஏலியன் இருந்த கட்டிலைச் சுற்றியும் கொட்டினான். 'டாக்டரய்யா, எனக்கு இன்னும் பயமாத்தான் இருக்கு. அது பாட்டுக்கு எந்திரிச்சு கடிச்சு வச்சுடுச்சுன்னா' எனச் சொல்ல, 'அதெல்லாம் ஒன்னுமில்ல, அவ எழுந்திட்டா, நான் சொல்றது புரியலன்னாலும், ஆனா அமைதியாத்தான் இருந்தா'ன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டு எழுந்து எங்களைப் பார்த்தாள் அவள். 'பாரு முழிச்சுட்டா' என்றேன். அவளும் 'முதிச்சுத்தா' என்றாள். எனக்கும், செங்கோடனுக்கும் வியப்பு. எப்படி தமிழில் பேசுகிறாள் என. மெல்ல எழுந்து அமர்ந்தவள், அருகே சென்று நான் நின்றேன். எனது கையைத் தொட வந்தாள். நான் சற்று பயந்தவனாய் கையைப் பின்னுக்கு இழுத்தேன். மீண்டும் தொட முயற்சி செய்தாள். என்ன தான் நடக்கும் எனத் தொடவிட்டேன். என் கையைப் பிடித்து, கண்களை மூடிக்கொண்டாள். சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், 'நான் இப்ப எங்க இருக்கேன்?' என்றாள்."
"எப்படி? எப்படி அவ தமிழ்ல பேசுனா?" என்றான் கார்த்திக்.
நான் சிரித்துக் கொண்டே, "இதே போல தான் நானும் கேட்டேன். 'நீ எப்படி தமிழ்ல பேசுற'ன்னு. அதுக்கு அவ சொன்னது இன்னும் எனக்கு வியப்பாருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க, என் கையைத் தொட்டது மூலமா, நியூரான் வழியா மூளையில இருக்குற மொழிப்பகுதியை copy paste செஞ்சிருக்கா. உடனே என் கையை விட்டுட்டு, இப்ப பூமியில இருக்க, ஆனா, எங்கேயும் வெளியே போகாதே, இங்க தான் நீ பாதுகாப்பா இருக்க முடியும்'னு சொன்னேன். நான் அவகூட தமிழ்ல பேசிட்டு இருக்கேங்கிறத என்னால நம்பவே முடியல. செங்கோடன் அண்ணனாலும், வாயைப் பிளந்தபடி பார்த்துட்டு இருந்தாரு.
'சரி, நீ எந்த கோள்லேந்து வர்ற?' என்றேன்.
'சரி, நீ எந்த கோள்லேந்து வர்ற?' என்றேன்.
'கோளா, அப்படின்னா?'ன்னு கேட்க,
'இது பூமி, அதே போல உங்க இடம் பேரு என்ன?'ன்னு கேட்டேன்
'மிரிக்சோ'ன்னு சொன்னா. 'அப்படின்னா என்ன பொருள்'னு கேட்டதுக்கு, நிலம்னு பொருள்னு சொன்னா. இங்கே எப்படி எர்த்னு பேரு வச்சிருக்கோமோ, அவங்க எர்த்க்கு நிலம்னு பொருள் வரது போல தான் பேரு வச்சிருந்திருக்காங்க.
'சரி, என் பேரு நிலவன், இவரு செங்கோடன், உன் பேரு என்ன?'ன்னு கேட்க, 'திமன்வா'ன்னு சொன்னா.
'திமன்வா, நல்லாருக்கு, சரி, எங்க ரெண்டு பேருல ஒருத்தங்க எப்பவும் உன் கூட இருப்போம். உன் காயங்கள் எல்லாம் ஆறுற வரை இங்கேயே இருக்கலாம். வெளில போக வேண்டாம். இங்க government, police கையில நீ கெடச்சா, உன்ன ஆராய்ச்சிப் பொருளா மாத்திடுவாங்க. இப்படி தொட்டு மூளையைப் படிக்குறது போல வேற ஏதாவது super power இருந்தா இப்பவே சொல்லிடு, திடீர்னு ஏதாவது செஞ்சு எங்களைப் பயமுறுத்தாதே'ன்னு படபடன்னு பேசி முடிச்சேன். இப்பவும் நான் சொன்னது எல்லாம் அவளுக்குப் புரிஞ்சுதான்னு டவுட் இருந்துச்சு.
'சரி, என்னாலயும் எந்திரிச்சு நடக்க முடியுமான்னு தெரியல. அதனால நீங்களா என்ன வெளிய கூட்டிட்டுப் போனாத்தான் உண்டு, ஆனா, எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். என்னோட கிரிட்டின் விழுந்த இடத்துக்குப் போயி, அங்க மெட்டிடெட்னு ஒன்னு விழுந்திருக்கும். அதை எடுத்துட்டு வரணும்'னு சொன்னாள்.
'கிரிட்டின், மெட்டிடெட்டா அப்படின்னா புரியல'
'கிரிட்டின் - நான் வந்த ஊர்தி, வண்டி, அய்யோ உன்னோட மொழியில சொல்லத் தேடித் தேடிப் பேசிட்டு இருக்கேன். தலைய வலிக்குது. அதுல தான் நான் வந்தேன். அது விழுந்த இடத்துல, கையளவுப் பொருள் ஒன்னு, அதுல சின்னச் சின்னதா ஒளி வரும், அது தான் மெட்டிடெட், அதுலேந்து நான் எங்க இடத்துக்குத் தகவல் அனுப்ப முடியும்'னு சொன்னாள்.
செங்கோடன், என்னிடம் வந்து, 'டாக்டர், இவங்க சொல்றது...' என்றிழுக்க, 'ஆமாண்ணே, நாம அங்க பாத்தோமே, அதத்தான் சொல்றா போல, சரி, நான் போயி எடுத்துட்டு வர்றேன்'னு சொன்னேன்.
'ரொம்ப நன்றிங்க, எங்க இடத்துல புதிதாக யாரோ வந்தா, இப்படி கவனிச்சிருப்பாங்களான்னு தெரியாது. உதவிருப்பாங்களான்னு தெரியாது. நீங்க என்ன இனமோ, நான் என்ன இனமோ, ஆனா அதெல்லாம் பாக்காம உதவி செய்யுறீங்க'ன்னு சொல்ல, செங்கோடன், 'ஆமாங்க, நானும் இப்படியே தான் நெனச்சேன். இவரை முதல் முதலா பாக்குறப்ப, யாருன்னு பாக்காம உதவி செய்வாரு எங்க டாக்டரய்யா'ன்னு சொல்ல, திமன்வா, 'ஓ, நீங்களும் வேற இடத்துலேந்து தான் வந்தீங்களா'ன்னு கேட்டாள்.
'அண்ணே, நீங்க வேற அவளைக் குழப்பாதீங்க'ன்னு செங்கோடண்ணன்கிட்ட சொல்லிட்டு, அவளைப் பார்த்து, 'திமன்வா, நீ படுத்து ஓய்வெடு, நான் வெளியே போய், சாப்பிட ஏதும் வாங்கிட்டு வர்றேன்'னு அவளைப் படுக்க வைத்தேன். அவள், 'நீங்க அப்ப கேட்டதுக்கு நான் இன்னும் பதில் சொல்லல, என்னால வேற என்ன முடியும்னு கேட்டீங்கல்ல, என்னால இன்னொரு உருவத்துக்கு மாற முடியும். ஆனா, அப்படி மாறிட்டா, மீண்டும் என் உருவத்துக்குத் திரும்ப முடியாது. அதனால, பெரும்பாலும் நாங்க அதைச் செய்வதில்லை'ன்னு சொல்லிட்டுப் படுத்து கண்ணை மூடியவளை நானும், செங்கோடண்ணனும் வியந்து போயிப் பாத்துட்டு இருந்தோம்"
"தாத்து, governmentல அவங்களைக் கண்டுபுடிச்சுட்டாங்களா? அந்த மினுக் மினுக் எரிஞ்சதை நீங்க தானே வச்சிருந்தீங்க? அப்புறம் ஏன் சொல்லல?" என்று கார்த்திக் கேட்க,
"அவங்களைத் திருப்பி அனுப்பிட்டீங்களா? அனுப்பாம இங்கயே வச்சுக்க முடியாதா?" என்று கேட்டாள் இனியா.
வான்மதி சிரித்துக் கொண்டாள். நானும் சிரித்துக் கொண்டே, "இருங்கடா, மீதிக்கதையும் சொல்லிடுறேன். கொஞ்ச நாள் இப்படியே போச்சு. Government வந்து அந்த ஏரியையே சுத்தி வளைச்சு, இருந்ததெல்லாம் எடுத்துட்டுப் போயிருந்தாங்க. திமன்வாவுக்கும் உடல் சரியாகி, எழுந்து வீட்டுக்குள்ளேயே நடக்கத் தொடங்கியிருந்தாள். இந்த நாட்கள்ல வேற ஒரு கோளிலேந்து வந்தவள்னு தோன முடியாத அளவுக்கு எங்க கூட நட்பா மாறியிருந்தா. கிட்டத்தட்ட எப்போதாவது இங்கிருந்து போகணும்னு அவ சொல்லிடக் கூடாதுன்னு நெனச்சுக்கிட்டேன். ஆனா, எப்படியும் அவள் திரும்பிப் போய்த்தானே ஆகணும். திமன்வா வந்து நாலு மாசம் ஆகியிருந்தது. அவளிடம் சென்று, 'கையக் காட்டு' என்றேன். அவ, 'என்ன வள்ளிக்கிழங்கா? சோளமா?'ன்னு கேட்டாள். 'எங்களை மாதிரி நீயும் திங்குறதுலயே இருக்கியே, கையக் காட்டு, என்னன்னு காட்டுறேன்'னு சொன்னேன்.
கையை நீட்டினாள். மெட்டிடெட்டை அவள் கையில் வைத்தேன். அவள் கண்கள் வியப்பில் விரிந்தன. ஓரமாய் கண்ணீர் துளிர்த்தது. மெட்டிடெட்டைக் கையில் எடுத்துக்கொண்டவள், என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழத் தொடங்கிட்டா"
'ஹோய்' என கார்த்திக்கும், இனியாவும் கத்த, "பாட்டி, இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் இனியா.
"எனக்கே இப்பத்தான் தெரியும்டா கண்ணு" என்று வான்மதி சொல்ல,
"Hey, just friendsயா" என்று சொல்லி மீண்டும் கதையைத் தொடர்ந்தேன்.
"அழுதுகிட்டே, 'உண்மையா, என் மேல இவ்ளோ நம்பிக்கையா? நான் வேற இடத்துலேந்து வந்திருக்கேன்னு எப்பவும் தோனலியா? நான் எங்க போனாலும், உங்களை என்னால மறக்கவே முடியாது. எப்பவும் இந்த உதவியையும், பாதுகாப்பையும் நினைச்சுப் பார்த்துக்கிட்டே இருப்பேன்'னு சொல்லி, கையில் இருந்த மெட்டிடெட்டை அழுத்தினாள்." என்று முடித்தேன்.
"அழுதுகிட்டே, 'உண்மையா, என் மேல இவ்ளோ நம்பிக்கையா? நான் வேற இடத்துலேந்து வந்திருக்கேன்னு எப்பவும் தோனலியா? நான் எங்க போனாலும், உங்களை என்னால மறக்கவே முடியாது. எப்பவும் இந்த உதவியையும், பாதுகாப்பையும் நினைச்சுப் பார்த்துக்கிட்டே இருப்பேன்'னு சொல்லி, கையில் இருந்த மெட்டிடெட்டை அழுத்தினாள்." என்று முடித்தேன்.
"அப்புறம் என்ன ஆச்சு தாத்தா? சொல்லுங்க, என்ன ஆச்சு?" என்று கேட்க, "அவ்ளோ தான், கதை முடிஞ்சது. அதுக்கப்புறம் வேற உலகத்துலேந்து ஆளுங்க வந்தாங்களா, திமன்வாவக் கூட்டிட்டுப் போனாங்களா எல்லாம் உங்க கற்பனைக்கே விட்டுடுறேன்" என்று சொல்ல, "போ, very bad தாத்து" என்று சொல்லியபடி கார்த்திக்கும், இனியாவும் வெளியே விளையாடச் சென்றனர்.
வான்மதி என் கையைப் பிடித்தாள், என் கண்ணை நேராய்ப் பார்த்தாள். "என்னம்மா?" என்றேன். விழியின் ஓரம் மெலிதாய்க் கண்ணீர் நிறைய, என் கையில் மெட்டிடெட்டை வைத்தாள் வான்மதி எனும் திமன்வா.
- முடிவிலி
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பிறர் தேவையறிந்து உதவிடும் நற்பண்பான ஒப்புரவிற்கு ஈடானது எவ்வுலகிலும் இல்லை.
Comments
Post a Comment