யாருடா அந்தப் பொண்ணு - குறள் கதை
யாருடா அந்தப் பொண்ணு?
- முடிவிலி
- முடிவிலி
புல்நுனியில் உறங்கிக் கொண்டிருந்த பனித்துளியைத் தன் கதிரினால் எழுப்பிக் கொண்டிருந்தது சூரியன். எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று அந்த வீட்டு மாடத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு குவளையின் ஓரம் அமர்ந்து அதில் இருந்த நீரைக் குடித்துக் கொண்டிருந்தது. அது குடித்து முடிக்கும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்ச்செல்வி. தனது 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் மனதில் தன் உடல்நிலை பற்றிய நிலை அறிந்தும், வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. தனது அலைபேசியை எடுத்து, ஆதனை அழைத்தார். ஆதன் தமிழ்ச்செல்வியின் பின்னலாடை நிறுவனத்தின் சென்னைக் கிளையைப் பார்த்துக் கொள்கிறான். புதிதாக அவனுடைய எண்ணத்தில் உருவான custom design T-Shirt பெரிய வரவேற்பைப் பெற்று நல்ல வருவாயையும் பெற்றுத் தந்தது. ஆதன் தன் அம்மாவிடம் எவ்வளவு அழைத்தும் அவள் வராததற்கு என்ன காரணம் என்று ஆதனுக்கும் தெரியும்.
"ஹலோ, ஆதன்"
"சொல்லும்மா, என்ன காலையிலயே?"
"ஆதன், நீ அமுதனையும் கூட்டிக்கிட்டு ஈரோடு வர்றியா? உங்க ரெண்டு பேருக்கிட்டயும் கொஞ்சம் மனசு விட்டுப் பேசணும்"
"என்னம்மா, புதிர் போடுறீங்க, எதுவா இருந்தாலும் போன்ல சொல்லுங்கம்மா, உங்களுக்கு ஒடம்புக்கு ஒன்னுமில்லையே?"
"அட, அதெல்லாம் ஒன்னுமில்லய்யா"
"பின்ன, தினமும் போன்ல பேசுறோம். மாசம் ஒரு நாள் நான் வந்து பாக்குறேன். அவனும் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை உங்களைப் பாக்க வந்துடுவான். இப்படி இருக்க, திடீர்னு மனசு விட்டுப் பேசணும், வாங்கன்னு சொன்னா"
தமிழ்ச்செல்வி அமைதியாக இருந்தாள். தாயின் அமைதியின் சூடு தாளாதவனாய், "சரிம்மா, அமுதனையும் கூட்டிட்டு வர்றேன், இன்னிக்கு நைட் ட்ரெயின்ல வர்றோம், சரியா?" என்றான்.
"சரி" என்ற தமிழ்ச்செல்வியின் பதிலில் இருந்த ஒலியில்லாத சிரிப்பையும் அவன் கண்டுகொண்டிருந்தான். அம்மாவோட எல்லாமும் தெரிந்தவன் ஆதன். ஆனால், 'இப்போது எதற்காக அழைக்கிறாள்? எதைப் பற்றிப் பேசப் போகிறாள்?' என்று புரியாதவனாய் அலைபேசி அழைப்பைத் துண்டித்தான். கல்லூரியில் படிக்கும் தன் தம்பி அமுதனை அழைத்தான் ஆதன்.
தனது யமஹா RX100ல் சென்று கொண்டிருந்த அமுதன், அலைபேசி ஒலி கேட்டு, வண்டியை ஓரமாய் நிறுத்தி அழைப்பை எடுத்தான். "சொல்லுடா, இப்ப தானே ரூம்லேந்து கிளம்பி வந்தேன், என்ன அதுக்குள்ள?" என்றான் அமுதன்.
"அம்மா கால் செஞ்சிருந்தாங்க, நம்ம ரெண்டு பேரையும் உடனே கிளம்பி வரச்சொன்னாங்க, உனக்கு இப்ப செமஸ்டர் எக்ஸாம் ஒன்னும் இல்லல்ல?"
"ஒரு செமினார் ஒன்னு இருக்கு, நாளைக்கு செக்ரட்ரியேட்ல ஒரு அப்பாயிண்ட்மெண்ட், அப்படியே டெல்லிக்குப் போக வேண்டியிருக்கும், சரி, அண்ணன் சொல்லிட்ட, எல்லாம் கேன்சல், நான் ரெடி, வாயேன், அப்படியே என் வண்டியிலயே போயிட்டு வந்துடலாம், ஆமா, எதுக்கு அம்மா கூப்டாங்க, என்ன உனக்குப் பொண்ணு பாத்திருக்காங்களா?" என்றான் அமுதன்.
"அடேய், அதெல்லாம் ஒன்னுமில்ல, நைட் ட்ரெயின்ல புக் செய்யுறேன். இன்னிக்குக் காலேஜ் போயிட்டு நேரத்துக்கு ரூம் வந்து சேரு"
"சரிங்கண்ணே" என்று கேலியாய் அமுதன் சொல்ல, அழைப்பைத் துண்டித்த ஆதனுக்கு மனதில் பல கேள்விகள். 'இது போல அம்மா பேசிக் கேட்டதில்லையே. சின்ன வயசுலேந்து அவங்களைப் போல துணிச்சலானவங்களப் பாத்ததில்லயே' என்று நினைத்தவனின் மனம் தன் சிறு வயது நினைவுகளை அசை போட்டது.
***
'தடதக், தடதக்' எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது தறிச்சத்தம். அப்பா செந்திலும், தமிழ்ச்செல்வியும் வீட்டின் பின்புறமே இருந்த மின் தறியறையில் இருக்க, ஆதன் தனது தம்பி அமுதனோடு வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான்.
அதுவரைக் கேட்டுக் கொண்டிருந்த தறிச்சத்தம் திடீரென நிற்க, "ச்ச, கரண்டு போச்சே" எனச் சொல்லிக்கொண்டே உள்ளே வந்தனர் செந்திலும், தமிழ்ச்செல்வியும். ஆதனைப் பார்த்த செந்தில், "வீட்டுப்பாடமா? நல்லாப் படிக்கணுமடா" என்று சொல்லியபடி, வாசற்புறமாய்ப் போய் அமர்ந்தார். தமிழ்ச்செல்வியும் சென்று அமர, "வா, தமிழு, பசங்க நல்லாப் படிக்கிறாங்க. இவனுங்க ரெண்டு பேரு இல்லாம நம்ம ஊரு பள்ளியில பீஸ் கட்ட முடியாத பசங்களுக்கும் சேத்து கட்டுறோம். ஆனா, இந்தத் தறி மட்டும் வச்சுக்கிட்டு, இதெல்லாம் செய்ய முடியுமான்னு தெரில" என்றான்.
அதுவரைக் கேட்டுக் கொண்டிருந்த தறிச்சத்தம் திடீரென நிற்க, "ச்ச, கரண்டு போச்சே" எனச் சொல்லிக்கொண்டே உள்ளே வந்தனர் செந்திலும், தமிழ்ச்செல்வியும். ஆதனைப் பார்த்த செந்தில், "வீட்டுப்பாடமா? நல்லாப் படிக்கணுமடா" என்று சொல்லியபடி, வாசற்புறமாய்ப் போய் அமர்ந்தார். தமிழ்ச்செல்வியும் சென்று அமர, "வா, தமிழு, பசங்க நல்லாப் படிக்கிறாங்க. இவனுங்க ரெண்டு பேரு இல்லாம நம்ம ஊரு பள்ளியில பீஸ் கட்ட முடியாத பசங்களுக்கும் சேத்து கட்டுறோம். ஆனா, இந்தத் தறி மட்டும் வச்சுக்கிட்டு, இதெல்லாம் செய்ய முடியுமான்னு தெரில" என்றான்.
"அட, என்னங்க நீங்க, அதெல்லாம் நம்ம பசங்க நல்லா படிச்சுக்குவானுங்க. நீங்க மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க" என்றாள்.
"அதில்லம்மா, நாம மட்டும் காசு போட்டு படிக்க வைக்குறதுன்னா, நம்ம பசங்களுக்கு மட்டும் தான் செய்வோம். ஆனா, ட்ரஸ்ட் போடு செஞ்சோம்னா, நம்மளப் போலவே உதவணும்னு நெனக்குற எல்லாரும் வருவாங்க. நாமளும் நெறைய பேருக்கு உதவி செய்ய முடியும். அப்படியே, திருப்பூர் பக்கம் மொத்த விலைக்கு வாங்கி, துணி விக்கலாம்னும் இருக்கேன். வீட்டுல தறியும் ஓடும். இப்ப நான் சொன்னது எல்லாம் மனசுல ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏதோ சொல்லோணும்போல தோனுச்சு."
"இவ்ளோ தானே. நாலு பசங்களுக்குப் படிப்பு குடுக்க, என்ன வேணும்னா செய்யலாம்." என்று அம்மா சொன்னது ஆதனுக்கும் கேட்டது.
"நான் ஈரோடு போனப்ப, அங்க நம்ம தங்கராசண்ணனைப் பாத்தேன். அவரு தான் சொன்னாரு, ட்ரஸ்ட் அமைக்கிறதப் பத்தி. அவரு சொன்னதுலேந்து மனசுக்குள்ளயே நின்னுட்டு இருந்துச்சு. பேரு கூட வச்சுட்டேன். இப்ப நீயும் சரின்னு சொல்லிட்டல்ல, ஒடனே தங்கராசண்ணன்கிட்ட சொல்லி, தொடங்கிடுவோம்" என்று செந்தில் மனமகிழ்ந்து கூற, "என்ன பேருன்னு சொல்ல மாட்றீங்களே?" என்றாள் தமிழ்.
"குறள் கல்விக் கட்டளை, எப்படி இருக்கு?"
"நல்லாருக்கு, அதென்ன குறள்னு பேரு?" என்றாள் தமிழ்.
"ரெண்டு வரி குறள்ல எவ்ளோ பொருள் அடங்கிக் கெடக்கு. அதே போல, நமக்குக் கெடச்சுருக்க இந்தச் சின்ன வாழ்க்கைல எவ்ளோ நெறைய நல்லது செய்யணுமோ செய்யணும். அதுக்குத்தான் குறள்னு வச்சேன்" என்றார் பெருமிதம் முகத்தில் பொங்க.
சில நாட்களிலேயே, கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது. ஊரில் இருந்த இளைஞர்களும் களப்பணிகளில் தன்னார்வமாகக் கலந்து கொண்டனர். செந்தில் ஆயத்த ஆடை மொத்த விற்பனையிலும் வெற்றி கண்டார். அவர் கொண்ட மகிழ்ச்சிக்குத் திடீர் முற்றுப்புள்ளி விழுந்தது, திருப்பூரிலிருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராது நிகழ்ந்த விபத்தினால். படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் கிடந்த போது, தமிழ், ஆதன், அமுதன் அருகிலிருக்க, "நல்ல வேளை, ட்ரஸ்ட் உன் பேருல தொடங்குனேன். என்ன ஆனாலும், ட்ரஸ்ட்ட மட்டும் விட்டுடாத, தமிழு" என்றபடி உயிர் விட்டிருந்தார்.
***
"ஆதன், மிஸ்டர் ஆதன்" நீலகிரி விரைவு வண்டியின் B2 பெட்டியின் upper berthல் படுத்திருந்த அமுதன் எதிரே இருந்த ஆதனைக் கூப்பிட, "டேய், அண்ணன்னு ஒரு மதிப்பு குடுக்குறியா? பேரு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு" என்றான் ஆதன்.
"அதானே, எப்பவும் போல டேய் அண்ணான்னு கூப்பிட்டுருந்தா அமைதியா இருப்ப, மிஸ்டர் ஆதன்னு கூப்பிடுறேன்ல, எனக்கு இது வேணும் தான்" என்றான் அமுதன்.
"சொல்லு, தம்பி, என்னவோ கேட்க வந்தீங்களே?" என்றான் ஆதன்.
"திடீர்னு மம்மி கூப்ட்டு விட்டிருக்காங்களே, எதுக்குன்னு உங்க அறிவு மூளைக்கு ஏதாச்சும் தோனுதா?"
"வெளயாடதடா, நானே என்ன ஏதுன்னு தெரியாம குழம்பிட்டு இருக்கேன், நீ வேற?"
"எப்படி இருந்தாலும் நாளைக்குத் தெரியப் போவுது. ரொம்ப யோசிக்காம மூடிட்டுப் படு, மூனு மணிக்குல்லாம் ஈரோடு வந்து சேந்துடும், இப்பவே மணி 11 ஆகுது" என்றான் அமுதன்.
மூன்றரை மணிக்கு வீட்டினை அடைந்திருந்தனர். பயணக் களைப்பில் மீண்டும் உறங்கியவர்கள் எழுந்திருக்க, காலை ஏழு மணி ஆகியிருந்தது. எழுந்து வீட்டின் வரவேற்பறைக்கு ஆதன் வர அங்கே அம்மா அமர்ந்திருந்தாள். "ஆதன், வா, கடைக்குட்டி இன்னும் எழுந்திருக்கலையா?" என்றாள் தமிழ்ச்செல்வி.
"அம்மா, நேத்து போன்ல ஏதோ உடனே பேசணும். கெளம்பி வான்னு சொல்லிப் பதறவுட்டு, இப்ப என்னடான்னா" என்றான் ஆதன்.
"அட, ஒன்னுமில்லடா, எனக்கும் வயசாகிட்டே போவுதில்ல, சில முடிவுல்லாம் எடுக்க வேண்டிருக்கு. அதான் கூப்பிட்டேன்" என்று அம்மா கூற, ஆதன், "அம்மா, ஒன்னு மட்டும் சொல்லவா?" என்றபடி அம்மாவின் அருகே வந்து அவளின் தாடையில் கைவைத்தபடி, "உனக்கு வயசாயிடுச்சன்னு ஏதாவது பொண்ணு பாத்து வச்சிருக்கேன்லாம் சொல்லிடாதம்மா, ப்ளீஸ்" என்றான்.
"ச்ச, இல்லடா" என்ற தமிழ், சிரித்துக் கொண்டே, "அப்படியே பாத்தாக்க என்னடா?" என்றாள். ஆதனின் முகம் மாறியதைக் கண்ட அம்மா, "யாருடா அது?" என்றாள். சரியான நேரத்துக்கு அமுதனும் வந்து கொண்டிருந்தான் "குட்மார்னிங் மம்மி" என்று சொல்லிக் கொண்டே.
அம்மாவுக்கு மட்டும் கேட்கும்படி குரலைத் தாழ்த்தி, "நான் எல்லாம் அப்புறம் சொல்றேன், அமுதன்கிட்ட மட்டும் சொல்லாதம்மா" என்ற ஆதன், குரலை இயல்பாக்கி, "அதெல்லாம் அப்புறம்மா, என்ன பேசணும்னு கூப்பிட்டீங்க?" என்றான்.
"டே அண்ணா, ஏன்டா அம்மாவ மெரட்டுற?" என்றபடி வந்து அமர்ந்தான் அமுதன்.
தன் இருபுறம் வந்தமர்ந்திருக்கும் இருவரையும் கண்ட மகிழ்வு தமிழ்ச்செல்வியின் முகத்தில் புன்னகையாய் நிரம்பி வழிந்தது. "நம்ம ட்ரஸ்ட் பத்தியும், ஹோம் பத்தியும் தான்டா பேசணும். முன்ன மாதிரி இருக்க முடியல. அடிக்கடி முட்டிவலி வேற, எனக்கு அப்புறம்" என்று சொல்லிட்டு இருக்கும்போதே ஆதன் இடைமறித்தான். "ஏம்மா, காலையிலயே அப்புறம்னு சொல்லிக்கிட்டு" என்றான்.
"ஆதன், தீயின்னு சொன்னா சுட்டுடுமா? சிலதெல்லாம் பேச வேண்டியிருக்கு. இந்த ட்ரஸ்ட், அதுலேந்து வளந்த குறள் இல்லம், இதெல்லாம் அப்பாவோட கனவு. இதனால எத்தனை பேரு பயனடையுறாங்கன்னு உங்களுக்கும் தெரியும். ஆனா, என் காலத்துக்குப் பிறகு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "உங்க காலத்துக்குப் பிறகு, ஆதனும், நானும் பாத்துக்கப் போறோம்" என்றான் அமுதன்.
ஆதன் தொடர்ந்தான், "எங்க மேல நம்பிக்கை இல்லையாம்மா, அப்பா விட்டுட்டுப் போன இடத்துலேந்து இதுவரை கொண்டு வந்திருக்கீங்க, இத அப்படியே விட்டுடுவோமா? நான் படிச்சுட்டு இருந்த காலத்தை விட இதோட தேவைகள் இன்னும் அதிகமாயிருக்கு. மேம்படுத்துறோம்னு பின்னாடி இழுத்துட்டுப் போறவங்ககிட்டேந்து படிச்சு முன்னேறணும்னு நினைக்குற குழந்தைங்களைக் காப்பாத்த வேண்டி இருக்கு. இதோ இன்னும் கொஞ்ச நாளுல இவனும் பி.எல் முடிச்சுடுவான். இங்க தான் வரப் போறான். நம்ம கார்மெண்ட்ஸ் கம்பெனிலேந்து ஒவ்வொரு பங்கு இந்தக் குறள் கட்டளைக்கு வந்திடும். நாங்க பாத்துக்கிறோம்மா" என்று சொல்லி முடிக்க, "இது போதும்யா, இது போதும், நம்ம சேத்து வச்ச செல்வத்துனால மத்தவங்களுக்கும் உதவியா இருக்கணும்னு தான் இதைத் தொடங்குனோம். என்னோட செல்வங்க நீங்களும் அப்படியே இருக்கீங்க, நல்லாருங்கய்யா" என்று இருவரின் தலையில் கைவைத்துச் சிரித்தாள், கண்கள் நனைந்திருந்தன.
"அதெல்லாம் சரி, யாருடா அந்தப் பொண்ணு?" என்று அமுதன் கேட்க, அறையில் இவர்களின் சிரிப்பொலி நிறைந்தது.
- முடிவிலி
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
மருந்தாகப் பயன்படும் மரம் தன்னுடைய அனைத்துப் பகுதிகளும் பிறர்க்குப் பயன் தருதல் போல பெருமை கொண்டவர்களிடையே சேரும் செல்வமும். அனைவருக்கும் பயன்படும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
மருந்தாகப் பயன்படும் மரம் தன்னுடைய அனைத்துப் பகுதிகளும் பிறர்க்குப் பயன் தருதல் போல பெருமை கொண்டவர்களிடையே சேரும் செல்வமும். அனைவருக்கும் பயன்படும்.
👌👌👌
ReplyDelete