முகிலன் மகிழ்ச்சி அண்ணாச்சி - குறள் கதை
முகிலன் மகிழ்ச்சி அண்ணாச்சி
"தம்பி, எங்கய்யா போயிட்டு வர்ற?" வீட்டில் நுழைந்து கொண்டிருந்த முகிலனை அவனது அப்பா தங்கராசின் கேள்வி தடுத்து நிறுத்தியது.
"பள்ளியோடம் லீவுதானப்பா, அதான் நெல்லடிக்கிற களத்துல கிரிக்கெட் வெளயாண்டு வர்றோம்." முகிலன் 7 வது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கிறான். அரையாண்டு விடுமுறை விட்டு இரண்டு நாட்கள் ஆகின்றது.
"யாரோடய்யா வெளயாண்டுட்டு வர்ற?"
"வெங்கடேசு, அருளு, வேலு, அப்புறம் குமரன்" குமரன் பெயரைச் சொன்னதும், தங்கராசின் குரல் மாறியது.
"குமரனா? நம்ம வயலுக்குப் பக்கத்து வயல் வச்சிருக்க மாரிச்சாமி மவனா?"
"ஆமா, அவன் மட்டும் இல்ல, என்கூட பள்ளியோடத்துல படிக்குற பசங்க நெறைய பேரு வந்திருந்தாங்க, ரொம்ப நாள் ஆச்சு, இப்படி வெளயாடி"
"தம்பி, என்னடா இது? நமக்கும், அந்தக் குடும்பத்துக்கும் பேச்சு வழக்கு இல்லயே. ஏன்யா அவன் கூடல்லாம் வெளயாட்டு" என்று சொன்னபோதும் தங்கராசு பொறுமையாகவே சொன்னார். அவரின் குணமே அது தான். யாருடனும் அதிர்ந்து கூடப் பேசாதவர். ஒரே முறை தான் அவருக்கும் கோவம் வருமென்று ஊருக்கே தெரிந்தது. 'வயலின் வரப்பு தள்ளிப் போட்டு என்னோட நெலத்தை எடுத்துகிட்டான்' என்று மாரிச்சாமி, தங்கராசின் மேல் ஊர்க்குழுவிடம் பழி கூறிய போது.
தங்கராசு, தன் பக்க ஞாயங்களை எவ்வளவு எடுத்துச் சொல்லியும், தன்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவுகளைக் காட்டியும், எதையும் மதிக்காத மாரிச்சாமி, "ஒத்தை வரப்பைக் கால் அடி தள்ளிப் போட்டிருக்க, அதுல வைக்கப்போற ரெண்டு வரிசை நெல்லுல, என்ன கோபுரமா கட்டப்போற? ஏன்யா இப்படி சில்றத்தனமா நடந்துக்குற?" எனக் கேட்க, கோவம் கொண்ட தங்கராசு மாரிச்சாமி மேல் பாய ஊரே அவரைத் தடுத்தது.
இறுதியில், மாரிச்சாமி "ஊர்க்குழுவுல சொன்னா, ஞாயம் கெடைக்கும்னு தான் சொன்னேன். ஆனா, என்ன அடிக்கத்தான் பாயுறாரு. இனிமே கோர்ட்ல பாத்துக்குறேன்" என்று கூற, தங்கராசு, "ஏன்யா மாரி, இது வரைக்கும் ஒன்னுமண்ணா தான்யா பழகிட்டு வர்றோம். கோர்ட்டு அது இதுன்னு ஒன்னும் வேணாம். என்ன இந்த வரப்பு தானே? நீயே தள்ளிப் போட்டுக்க, ஆனா இன்னியோட உனக்கும், எனக்கும் பேச்சு வழக்கு இல்ல, என்னிக்கும் நான் வந்து உன் வீட்டு வாசல்ல நிப்பேன்னு நெனச்சுடாத" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வந்தார்.
"அப்பா, அவனும், நானும் ஒன்னாப் படிக்கிறோம். ஒரே வகுப்பு வேற, எப்படிப்பா பேசாம இருக்க முடியும்?" என்று முகிலன் கூற, அதுவும் சரிதானே என்று மனதிற்குப் பட்டாலும், வாயால் ஒத்துக்கொள்ள தங்கராசால் முடியவில்லை. அமைதியாய் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது அப்பாவைப் பார்த்துக் கொண்டே நின்ற முகிலன், உள்ளேயிருந்து "முகிலா, வந்துட்டியாடா? வாடா சாப்பிடலாம்" என்ற குரல் கேட்டு வீட்டின் உள்ளே ஓடினான்.
****
காலம் எப்படி ஓடியது என்று தங்கராசால் உணர முடியவில்லை. இருபது ஆண்டுகள் கழித்தும், இன்னமும் உழவினைக் கைவிடவில்லை. மாடுகள் போய், ட்ராக்டர் வந்திருந்தது. ஏரிக்கரை ஒட்டிய நிலம் என்பதால், ஆண்டு முழுதும் நல்ல அறுவடையும் கிடைத்தது. வயலுக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும், மாரிச்சாமியைப் பார்க்க நேர்ந்தாலும், அன்றிலிருந்து இதுவரை ஒருமுறை கூடப் பேசிக் கொண்டதில்லை. ஆனால், இருவருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை என்னவென்றால், இருவரும் உழவையும், நிலத்தையும் விட்டுத்தராமல் இருந்தது தான். ஆனால், தங்கராசு மனதில் வெளிநாட்டில் இருந்து தன்னை அழைத்துக் கொண்டே இருக்கும் தனது மகன் முகிலனோடு சென்று விட ஏக்கம். அதுவும் தன் மனைவி இறந்த இந்த இரண்டு ஆண்டுகளில், தனியாய் இருப்பதால் கூட இருக்கலாம். படிப்பில் சிறந்து, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை பெற்று, தன் முயற்சியால் முனைவர் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முகிலனை மீண்டும் அழைத்துக் கொள்ளவும் அவர் மனம் ஒப்பவில்லை.
"அண்ணே, இந்த முறையும் நல்ல அறுவடை போல" திண்ணையில் அமர்ந்திருந்த தங்கராசுவைத் தரகர் சற்குணத்தின் குரல் திரும்ப வைத்தது.
"வாய்யா, சற்குணம், உட்காரு, இரு தண்ணி கொண்டாரேன்" என்று தங்கராசு எழுந்திருக்க,
"அட உட்காருண்ணே, அண்ணி போனதுக்குப் பின்னாடி எல்லாம் நீ தான் செய்ய வேண்டியிருக்கு. இதுல எனக்கு நீங்க போயி தண்ணி எடுத்துட்டு வரணுமா? இருங்க, நானே போயி குடிச்சுட்டு, உங்களுக்கும் கொஞ்சம் கொண்டாரேன்." என்று உள்ளே சென்றான் சற்குணம்.
திண்ணையில் இருந்தபடி, வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்திருந்த தங்கராசுவின் நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றன.
"எப்ப வந்தீங்க? ஒரு குரல் குடுக்கக் கூடாது. உள்ளே சமையல் வேலையா இருந்தேன். அதான் நீங்க வந்ததைக் கவனிக்கவே இல்ல" என்றாள் தங்கராசுவின் மனைவி.
"நீ தான் நாள் முழுசும் உக்காராம வூட்டுக்குள்ளயே ஓடிட்டு இருக்க, வா வந்து இங்க உக்காரு" என்று தங்கராசு கூற,
"சரி, முதல்ல தண்ணிக் குடிங்க" என்று தண்ணீர்ச்செம்பினை நீட்ட,
"அண்ணே, இந்தாங்கண்ணே, தண்ணி" சற்குணத்தின் குரல், அமர்ந்து உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்த தங்கராசுவை நிகழ் நொடிக்குக் கொண்டு வந்தது.
"என்ன ஆச்சுண்ணே? அப்படியே சிலை போல உறைஞ்சு போயி உக்காந்திருக்க?"
தண்ணீர்ச்செம்பினை வாங்கி, தன் அருகே வைத்து விட்டு, எதிர்த்திண்ணையில் அமர்ந்த சற்குணத்திடம், "வீட்டுல ஆளே இல்லாம ஏதோ மாதிரி இருக்குப்பா, இந்த நெலத்தை விக்கிறது சொன்னேனே, யாராச்சும் வெளச்சல் செய்யுறது போல ஆள் இருக்காங்களா?" என்றார் தங்கராசு.
"விக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அப்புறம் என்ன வெளச்சல் செய்வாங்களா? வீடு கட்டுவாங்களான்னுட்டு" என்று முனகினான் சற்குணம்.
"என்னய்யா முனகுற?"
"பின்ன என்னங்க, நெலத்த வாங்குறவன் என்ன வேணும்னாலும் செஞ்சுட்டுப் போறான். உங்களுக்கு நல்ல விலை கெடச்சா போதாதா?"
"என்னய்யா முனகுற?"
"பின்ன என்னங்க, நெலத்த வாங்குறவன் என்ன வேணும்னாலும் செஞ்சுட்டுப் போறான். உங்களுக்கு நல்ல விலை கெடச்சா போதாதா?"
"யோவ், பொன்னு வெளயுற நெலம்யா அது. இதுவரை ஒருமுறை கூட நெலம் கைவுட்டுச்சுன்னு தலையில கை வச்சதில்ல, ஏதோ மனசு புடிச்சு ஆட்டுது. தேனு இருந்தவரைக்கும் கூட தெரியல. இப்ப என் மவனைப் போயி பாக்கணும், பேரனைத் தூக்கிக் கொஞ்சணும்னு இருக்கு."
"இருக்குல்ல, உன் பையனை வந்து இங்க இருக்கச் சொல்லுங்க"
"போய்யா, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சிருக்கான், தெரியுமா? அதுவும் இங்க காலேஜ்ல சேத்த வரை தான் எனக்குத் தெரியும். அப்புறம் எப்படி படிச்சான்னே தெரியாது. உதவித்தொகை கெடச்சுதுன்னு சொல்லுவான், வேலை பாத்துட்டே படிக்குறேன்னு சொல்லுவான். இப்ப அவன் பேருக்கு முன்னாடி டாக்டர்னு கூட போட்டுக்கலாம், தெரியுமா? அவனா கை ஊனி, கால் ஊனி, எந்திரிச்சுருக்கான், அவனை எனக்காகப் புடிச்சு இழுத்து வுட்டுடக் கூடாது."
"என்னவோ, நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சுடுறேன். உங்க நெலத்தைக் கேட்டு, ஒரு பெரிய கம்பெனி வந்திருக்காங்க. ஏரிக்கரை பக்கத்துல இருக்குறதுனால மார்க்கெட் ரேட்டை வுட அதிகமாக் கொடுத்தே வாங்கிக்கிறாங்களாம்" என்று சற்குணம் கூற, தங்கராசுவுக்கு எங்கோ பொறி தட்டியது.
"ஏன்யா அதிக வெலைக்கு வாங்குறாய்ங்க? ஆமா என்ன கம்பெனி?"
"அது ஏதோ இங்கிலீசுல சொன்னாங்கப்பா, ஆங், தண்ணிய பாட்டில்ல அடைச்சு விக்குறாங்களே, அது போல ஒன்னு."
"இல்லய்யா, வெளச்சல் பாக்குற மாதிரி யாராச்சும் கேட்டாங்கன்னா சொல்லு, இதெல்லாம் வேணாம்யா" என்று தங்கராசு சொல்ல, "பெருசு, இது போலக் கம்பெனி கேட்குதுன்னு வெளிய தெரிஞ்சா போதும், உன்கிட்ட வெளச்சல்னு வாங்குறவன் கூட இன்னும் எச் ரேட்டுக்கு வித்துட்டுப் போயிடுவான். எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க?" என்றான் சற்குணம்.
தங்கராசு சற்று நேரம் அமைதியாய் இருந்து விட்டு, "சற்குணம், வேணாம்யா, உறுதியாச் சொல்றேன். நான் நெலத்தைக் குடுக்கலன்னு சொல்லிடு, இனிமே நெலத்தைப் பத்தி யார்கிட்டயும் பேச வேணாம்." என்றார்.
"பெருசு, என்னப்பா திடீர்னு, ஊருக்குப் போறேன், பேரனைப் பாக்கணும்னுலாம் சொன்னியே, கடைசில இந்தக் கமிசனும் போச்சா?" என்று புலம்பிக் கொண்டே நடையைக் கட்டினான் சற்குணம்.
உள்ளே சென்று சார்ஜரில் மாட்டியிருந்த அலைபேசியை எடுத்து, தன்னுடைய மகனின் வாட்சப்பில் ஏதோ எழுதியவர், துண்டை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார். விடுவிடுவென அடுத்த தெருவரை வந்தவர், மாரிச்சாமி வீடு அருகில் வர வர அவரின் நடையின் வேகம் குறைந்தது. மாரிச்சாமியின் வாசல் அருகே நின்று திறந்திருந்த கதவைத் தட்டினார் தங்கராசு.
கொல்லைப்புறத்தில் இருந்து வீட்டின் உள்ளே வந்த மாரிச்சாமி, தங்கராசைப் பார்த்ததும், அவன் மனைவியை அழைத்து, "ஏய், தங்கராசண்ணே மாதிரி இருக்கு, என்னன்னு கேளு" என்று பணிக்க, மாரிச்சாமியின் மனைவி கதவு அருகே வந்து "என்னண்ணே, நல்லாருக்கீங்களா? வெளியவே நிக்கிறீங்களே, உள்ள வாங்கண்ணே" என்றாள்.
"இல்லம்மா, மாரி இருக்கானா, அவன்கிட்ட கொஞ்சம் பேசணும், கொஞ்சம் வரச் சொல்றியா?" என்றார்.
"என்னண்ணே, எவ்ளோ காலம் கழிச்சு நீங்க வந்ததே பெருசு, உள்ள வாங்கண்ணே, "குமரா, போயி நம்ம மணிக்கடைல சர்பத் போட்டு வாங்கிட்டு வா," என்றவள், "என்னிக்கோ நடந்தது, எப்பவோ மறந்தாச்சு. இந்த மனுசனும் அப்பப்ப சொல்லுவாரு, தங்கராசண்ணே மனசு வைரம் மாதிரி, அன்னிக்கு நான் சொன்ன ஒத்தச் சொல்லுல துண்டை உதறித் தோளுல போட்டுப் போனவரு தான். இத்தனை காலம் போயும், பேசுவனான்னு இருக்காரு பாருன்னு" என்று சொல்லி முடிக்க, "வாங்கண்ணே" என்றார் மாரிச்சாமி.
தங்கராசின் கண்களில் கண்ணீர் பொங்கியது. மாரிச்சாமி, சற்று தடுமாறிய தங்கராசைத் தாங்கிப் பிடித்துத் திண்ணையில் அமர வைத்து, "தங்கராசுண்ணே, நேர்லயே பாக்க வந்திருக்கன்னா, ஏதாச்சும்" என்று மாரிச்சாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "நான் என் நெலத்தை ஒனக்குக் குடுத்துடலாம்னு இருக்கேன், மாரி" என்றார் தங்கராசு.
"அண்ணே, காலடி வரப்புக்குச் சண்டை போட்டு இதுநாள் வரை என்கூட பேசாம இருந்தியேண்ணே. இப்ப நெலத்தை விக்குறேன்னு சொல்றியே."
"விக்குறேன்னு சொல்லல, மாரி, கொடுக்குறேன்னு சொல்றேன்."
"புரியலயே. தெளிவாச் சொல்லிடுண்ணே"
"நீயும், உன் மவன் குமரனும் வெளச்சல் தான் பாத்துக்குறீங்க, நான் என் மவன் கூட இருக்கலாம்னு நெலத்தை விக்கப்பாத்தப்ப, ஒரு தண்ணி கம்பெனி வந்து அதிகமா காசு தர்றேன்னு சொல்றாங்க. இப்ப நான் நெலத்தை வித்தாலும், வாங்குறவன் அந்தக் கம்பெனிக்குக் குடுக்க மாட்டான்னு எப்படி தெரியும்? அதான், என் நெலத்தை ஆளுறதுக்கு மட்டும் உனக்கு உரிமை இருப்பது போல, பத்திரத்தைத் திருத்தி உன்கிட்ட நெலத்தைக் குடுத்துடுறேன். நீ உன் நெலத்தைப் போல என் நெலத்திலும் வுட்டுடாம வெளச்சலைப் பாத்துக்கிட்டா போதும்."
"இதுனால உனக்கு என்னண்ணே கெடச்சுடப் போவுது? அந்தக் கம்பெனிக்குக் குடுத்தாலும், நெறைய காசு கெடைக்கும். இத்தனை காலம் போயி, என்கிட்ட கொண்டு வந்து கொடுக்குறேன்னு சொல்றியே?"
"போய்யா, நான் பாட்டுக்குக் காசு கெடைக்குதேன்னு அவனுக்கு வித்துட்டுப் போனா, அவன் வந்து இருக்குற தண்ணிய உறிஞ்சுனா, உன் நெலமும் சேந்து தான் வீணாப் போயிடும். நாம செய்யுறது நமக்கு நல்லது குடுக்குதாங்குறது அடுத்தது, அடுத்தவனுக்குக் கேடா போயிடக் கூடாதுல்ல, நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன். நீ மட்டும் தான் என் நெலத்தை நல்லா பாத்துக்க முடியும்" என்ற தங்கராசின் கையில் இருந்த அலைபேசி டிங்கென மணியடித்தது.
குரல்செய்தியாக முகிலன் பேசியிருந்தான்.
"அப்பா, மகிழ்ச்சிப்பா, நெலத்தை நம்ம குமரன் அப்பாகிட்டயே கொடுத்துடுங்க. எப்படியோ ரொம்ப நாள் கழிச்சு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கப் போறீங்க, மகிழ்ச்சியா இருக்கு"
திண்ணையில் அருகருகே அமர்ந்து முகிலனின் குரல்செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த மாரிச்சாமி, தங்கராசுவின் கைகள் இணைந்திருந்தன. குமரன் ஓடிவந்து சொம்பில் கொண்டு வந்த நன்னாரி சர்பத்தினை இரு குவளையில் இருவரிடம் கொடுக்க, வாங்கிக் குடித்த இருவரின் வாய் மட்டுமல்ல, மனமும் இனிப்பாய் இனித்தது.
- முற்றும் -
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)
தீயினும் அஞ்சப் படும். (202)
அதிகாரம் - 21 (தீவினையச்சம்)
தீயச் செயல்கள் தீமையையே கொடுக்கும் என்பதால் நல்லோர்களுக்குத் தீயச்செயல்கள் தீயை விட அச்சம் தருவதாக உள்ளன.
அருமை தமோ. உறவுகளையும் உணர்வுகளையும் வைத்து கதையெழுதுவதில் சிறந்த எழுத்தாளர், முடிவிலி என்று மீண்டும் உணர்த்தும் ஒரு கதை. 👏 👏 👌
ReplyDelete