டிங் டங் - குறள் கதை
டிங் டங்...
- முடிவிலி
அதுவரை ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றதும் தூக்கம் கலைந்தாலும், படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தேன். 'அதிகரித்துக் கொண்டே போகும் மின் தேவையின் காரணமாக, சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் காலை அரை மணிநேரம், மாலை அரை மணி நேரம் கட்டாய மின்தடை' என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனது அலைபேசியில் alarm வைத்ததே இல்லை. மின்விசிறி நின்றால் தூக்கம் கலைந்துவிடும் நிலைக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
ஓடாது நின்று கொண்டிருந்த மின்விசிறியில் படிந்திருந்த தூசியை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்த என்னைத் திரும்ப வைத்தது அந்த 'டிங் டங்' என்ற ஒலி. எனது அலைபேசியின் குறுஞ்செய்தி ஒலி. எடுத்துப் பார்த்தேன். என்னுடைய பள்ளிக்கால நண்பன் மணியன். மூன்று தெரு தள்ளிதான் அவனுடைய வீடு. பள்ளிப்படிப்பு முடிந்ததும், வெவ்வேறு கல்லூரி, பின்னர் வேலையின் காரணமாக வெவ்வேறு ஊர் என எங்கெங்கோ சுற்றித் திரிந்து மீண்டும் கூடடைந்த பறவையாக இங்கு வந்து சேர்ந்த நான், இப்போதெல்லாம் நினைப்பதுண்டு, 'பக்கத்தில தான் இருக்கான் ஆனா ஆண்டுல ரெண்டு முறை இவனைப் பாக்குறதே பெருசா இருக்கு'. ஆனால் நான் alarm வைக்காததுக்கு இன்னொரு காரணம் இவன். காலை தவறாமல் ஒரு 'காலை வணக்கம்' அனுப்பிடுவான்.
இன்று இரு குறுஞ்செய்திகள் வந்திருந்தன. முதலாவது எப்போதும் போல், 'காலை வணக்கம் குமரவேல்', அடுத்தது 'இனிய உயர்தோன்றல் ஆண்டு வாழ்த்துகள்' என்று எழுதியிருந்த படமொன்று அனுப்பப்பட்டிருந்தது. தகவலின் மேல் Forwarded.
அலைபேசியின் முகப்புப் பக்கத்தில் இன்றைய தேதியைப் பார்த்தேன். Wed, Apr 14 2048 என்றது. Muteல் போடப்பட்டிருந்த குழுக்களில் வாழ்த்துச்செய்திகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. 'இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் மணியா' என எழுதி பதிலனுப்பினேன். அதற்கு மேலும் படுத்திருக்க மனம் ஒப்பவில்லை. எழுந்து குளியலறைக்குச் சென்று திரும்பிய நேரம் மின்விசிறி சுழலத் தொடங்கியிருந்தது.
அயல்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதால், வழக்கம் போல ஏப்ரல் 14க்கு எனக்கு விடுமுறை இல்லை. அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த நேரம், எனது அலைபேசி சிணுங்கியது. அழைப்பை எடுத்து, "என்னடா மணியா? நல்லாருக்கியா?" என்றேன்.
"டேய், உங்க வீட்ல தண்ணி வருதாடா?" என்றான்.
"வருதே, என்னடா ஆச்சு?"
"என் வீட்ல தண்ணியில்லடா, நான் வேற ஒரு இடத்துக்குப் போவணும், நான் அங்க வரவா, மச்சான்?"
"என்னடா இது? இதுக்கெல்லாம் போன் செஞ்சு கேட்டுக்கிட்டு. நேரா வர்ற வேண்டியது தானே, கொஞ்சம் உடனே வா, நான் office கெளம்பிட்டு இருக்கேன்."
"சரிடா, இன்னும் ரெண்டு நிமிசத்துல அங்க இருப்பேன்."
சிரித்துக் கொண்டே, 'இன்னும் இவன் மாறவே இல்ல, ஆனா, இன்னிக்கு இவனுக்கு லீவு தானே? அப்படி எங்க அறக்க பறக்க கெளம்புறான்?' என்று எண்ணிக் கொண்டேன்.
சொன்னது போல், அடுத்த இரண்டாவது நிமிடம் வீட்டின் முன் வந்து நின்றான். Door security buzz அழுத்தியதும், கதவு திறக்க உள்ளே வந்தான் மணியன். பின்னால் மாட்டிக்கொள்ளும் பையில் துண்டு, மாற்றுத்துணி, சோப், perfume என அனைத்தும் கொண்டு வந்திருந்தான்.
"மச்சான், ரொம்ப தாங்க்ஸ்டா, பாத் ரூம் எங்க இருக்கு?" என்றபடி உள்ளே வந்தவனிடம், குளியலறையைக் காண்பிக்க, "தெய்வமே, நன்றி" என்றபடி குளியலறையை வணங்கியபடி உள்ளே சென்றான்.
அவனுக்கும் சேர்த்து காலை உணவு செய்து வைத்திருந்தேன். சரியாய் அரை மணிநேரம் கழித்து, தான் கொண்டு வந்திருந்த புதுத்துணி போட்டுக் கொண்டு பளபளவென வந்தான் மணியன். தட்டில் இரு தோசையை வைத்து, அவனிடம் கொடுத்து, "ஆமா, இன்னிக்கு உனக்கு லீவு தானே? அப்படி எங்கடா இவ்ளோ பறந்துகிட்டு கிளம்புற?" என்றேன்.
"என்னடா, தெரியாத மாதிரி கேக்குற? இன்னிக்குத் தலைவன் தமிழ்ச்செல்வனோட படம் ரிலீசு, முதல் ஷோ மிஸ் பண்ணிட்டேன். அடுத்ததுக்கு டிக்கெட் கெடச்சுது, அதான் கெளம்புறேன். எப்படியும் பாரு, க்ரிஷ் படம் கலெக்சனை வுட தலைவன் படம் கலெக்ஷன் அள்ளப் போகுது. டுவிட்டர்ல ஒருத்தன் இருக்கான், எப்ப பாத்தாலும் தமிழ்ச்செல்வனை ஓட்டிக்கிட்டே இருப்பான். அவன் எதுவும் சொல்றதுக்கு முன்னாடி போய் படத்தைப் பாக்கணும்."
"டேய், உன் வூட்டுல தண்ணி வருதா?"
"Pump problemடா, அடிக்கடி ப்ளாக் ஆகுது, மெட்ரோ வாட்டர் வாரத்துக்கு ஒரு முறை தான் வரும்னு உனக்கே தெரியுமே, அடுத்த வாரம் தான் பம்ப் மெக்கானிக் கூட்டி வந்து சரி செய்யணும்."
"ஏன்டா, வூட்டுல தண்ணி வரல, ஒனக்கு முதல் நாள் படம் பாக்குறதும், டுவிட்டர்ல சண்டை போடுறதும் தான் பெருசாடா?"
"அதுக்காக தலைவன் படத்த வுட்ற முடியுமா? இந்தப் படத்துல intro songக்கு தியேட்டரே குலுங்கப் போவுது. எங்க கொண்டாட்டத்தெல்லாம் பாத்துட்டு krish fansலாம் வயிறு எரியணும்."
"யாருடா தலைவன்? என்னடா செஞ்சுருக்கான் ஒன் தலைவன், நடிக்குறது அவனோட தொழில், உன்னோடது என்னடா? இப்படி வீணா சினிமா சண்டை போடுறதுனால பத்து காசுக்கு ஏதும் பயன் இருக்கா? சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் ஒன் விருப்பம்."
"ஒன் வீட்டுல 180 அடியிலேயே தண்ணி வருதுன்னு கூட்டி வச்சு அட்வைஸ் செய்யுற? டிக்கெட்லாம் போட்டாச்சு, போயிட்டு வந்து பேசிக்கிறேன்." என்றவன் இரண்டு தோசைகளையும் சாப்பிட்டு முடித்திருந்தான்.
"டேய், மெதுவாடா, தண்ணிய குடி. இன்னும் ஒரு தோசை சுடவா?" என்றேன்.
"போதும்டா, அப்புறம் இன்னும் பேசுவ!"
"சரி, காலையில என்னடா உயர்தோன்றல்னு ஏதோ அனுப்பியிருந்த?"
"ஓ, அதுவா இன்னிக்கு சித்திரை 1 இல்லயா? அதனால தான். இது விபவ ஆண்டு, இதோட தமிழ் பேரு."
"அடேய், தமிழ் ஆண்டுக்குப் பேரு எல்லாம் ஏன் sanskritல இருக்குன்னு கேட்டா, அதைத் தமிழாக்கம் பண்ணி தலையில தூக்கிட்டு ஆடுவீங்களாடா? யோசிடா, எது வந்தாலும் forward செய்யுறதுக்கு முன்னாடி அது உண்மையா? அத மத்தவங்களுக்கு சொல்றதுனால ஏதும் நன்மையிருக்கா? இதெல்லாம் யோசிடா" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வேகமாக எழுந்தவன், "இப்படியே பேசிட்டு இருந்தா, படத்துக்கு லேட்டாகிடும், நான் கெளம்புறேன்டா" என்று தனது பையை எடுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடியே விட்டான்.
***
மதியம் 1½ மணிக்கு உணவு இடைவேளையின் போது மீண்டும் டிங் டங் என்றது எனது அலைபேசி. எடுத்துப் பார்த்தேன்.
Forwarded
'நாசாவே வியந்து போற்றும் திருநள்ளாறு, செயற்கைக்கோள்கள் கடந்து போகும் போது செயலிழந்து போவதைக் கண்டு நாசா அதிர்ச்சி, read more...'
அடேய், 25 ஆண்டுக்கு முன்னாடி எங்க அப்பாக்கு வந்த fake message டா, இன்னுமாடா இதையெல்லாம் உருட்டி ஓட்டிட்டு இருக்கீங்க, உங்களையெல்லாம்...
- முடிவிலி.
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.
பயனற்றவற்றைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் எனக் குறிப்பதாகும்.
Comments
Post a Comment