பின்நோக்காச் சொல் - குறள் கதை
பின்நோக்காச் சொல்
- முடிவிலி
'நல்ல வேளை, புதுசா வந்துருக்கிற இஞ்சினியர் தமிழ் தான். முன்னாடி இருந்த எஜிப்சியன் மாதிரி தொல்லை குடுக்க மாட்டாரு' என்று நினைத்துக் கொண்டான் கதிர்வேலன். கதிரின் அனலில் தகிக்கும் பாலைநாட்டில் கடலின் ஓரம் அமைந்திருந்த மின் நிலையத்தில் Senior Instrument Technician ஆக இருக்கும் கதிர்வேலன் தனது குழுவிலேயே நன்கு வேலை தெரிந்தவனாக இருந்தான். அவனது குழு இரு மலையாளிகள், இரு தமிழர்கள், ஒரு பாகிஸ்தானி, ஒரு வங்காளி என பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டிருந்தது.
அனைவரின் மனதிலும் புதிதாக வரப்போகும் பொறியாளர் எப்படி இருக்கப் போகிறார் என்பது தான் ஓடிக் கொண்டிருந்தது. "Good morning all, I am Dilip" என்றார் புதிதாய் வந்த பொறியாளர்.
அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். திலிப், ஒவ்வொருவரின் பெயரையும், ஊரையும் கேட்டுக் கொண்டார். திலிப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் குழு, கடல்நீரைக் குடிநீராக மாற்றும் உவர்நீக்கு நிலையத்தின் எட்டு அலகுகளில் இருக்கும் கருவிகளின் பராமரிப்பு பணிக்குப் பொறுப்பு.
திலிப் கூறினார், "இப்ப நீங்க தான் என்னை விட சீனியர்ஸ், வாங்க control room போகலாம், எனக்கு நீங்க சொல்லிக் கொடுங்க" என்று சொல்ல, குழு அனைவரும் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றனர். ஒவ்வொருவராய் தங்களது பொறியாளரிடம் நற்பெயர் எடுக்க, தங்களுக்குத் தெரிந்தவற்றை அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்திருந்தனர். தனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையும் தன்னுடைய குழு கூறும்போது கவனமாகக் கேட்டுக் கொண்டார் திலிப். பணிக்குச் சேர்ந்து சில நாட்களிலேயே குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமும் நட்புத்தன்மையோடு பழகுபவராய் மாறிப் போனார்.
****
சில நாட்களுக்குப் பிறகு, கட்டுப்பாட்டு அறையில் கணிப்பொறியின் மூலம் உவர்நீக்கு நிலையத்தின் (Desalination) மொத்த கட்டுப்பாடு செய்யும் அமைப்பில் சிறு பிழை ஏற்பட, அதைச் சரிசெய்யத் தெரியாமல் லத்தீப், கதிர்வேலனை அழைத்தார்.
கதிர்வேலன் லத்தீபை விட 10 ஆண்டுகள் அனுபவம் குறைந்தவர் எனினும், புது தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவு தெரிந்திருந்ததால் லத்தீபை விட நன்கு பணியாற்றுபவராய் இருந்தார்.
"இது கூடத் தெரியல, ஆனா 20 years experience" என்று தமிழ் - ஆங்கிலம் கலந்து கதிர்வேலன் பேச, லத்தீபிற்கு ஆங்கிலத்தில் சொன்னது மட்டும் காதில் விழுந்தது.
"கதிர், இந்தப் புது சிஸ்டம் எல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியல, ஆனா, எனக்கு ஒன்னுமே புரியாதுன்னு நெனச்சுக்காதே" என்று ஹிந்தியில் லத்தீப் கூற, கதிரும் பதிலுக்குப் பதில் பேச, சத்தம் கேட்டு திலிப் அங்கே வந்தார்.
திலிப்பைப் பார்த்ததும் இருவரும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். கதிர்வேலன் கணிப்பொறியில் நிகழ்ந்த பிழையை திலிப்பிடம் கூற, திலிப்பும் உடன் இருந்து மீள்துவக்கம் செய்து பிழையைச் சரி செய்தார். லத்தீப் சற்று நேரத்தில் அங்கிருந்து செல்ல, கதிர்வேலன் திலிப்பை அணுகி, "சார், லத்தீப்கிட்ட தான் இதைப்பத்தி சொல்லிருக்காங்க operations team, ஆனா அதை என்ன செய்யணும்னு தெரியாம என்னை வந்து கூப்பிட்டாரு." என்றான்.
"சரி, அதனால என்ன? வேலை முடிஞ்சுது இல்லையா?" என்று திலிப் கூற, "ஆனா, நான் வேலை பாக்குறேன், அவரும் சீனியர் டெக்னீசியன், 20 years experience இப்படி எல்லா நல்ல பேரும் அவருக்குப் போயிடுதே, என்னை விட அவருக்கு 2000 ரியால் சம்பளம் அதிகம் சார். ஆனா, field instruments மட்டும் தான் பார்க்கத் தெரியும், control system பத்தி ஒன்னும் தெரியாது அவருக்கு." என்று அடுக்கிக் கொண்டே போனான் கதிர்வேலன்.
அனைத்தையும் கேட்டு முடித்த திலிப், கதிர்வேலனைப் பார்த்தார். கதிர்வேலனின் முகத்தில் லத்தீபைப் பற்றி குறை கூறுகிறோம் என்ற குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல் ஒரு ஏளனப்புன்னகை ஒன்று விரவியிருந்தது.
"கதிர், உங்களுக்கு எல்லாமே தெரியும்னு நீங்க நெனச்சுட்டு இருக்கீங்களா?" என்று கேட்டார் திலீப்.
"இந்த Desalination plant பொருத்தவரை எனக்கு எல்லாம் தெரியும், சார்"
"அதே தான், திடீர்னு உங்களைப் பக்கத்துல பாய்லருக்கு மாத்தினால், உங்களோட 10 ஆண்டு experience என்பது ஒன்னுமே இல்ல, ஒருத்தரோட experience எவ்ளோ தெரிஞ்சுக்கிறாங்கங்கிறத பொருத்து இல்ல, தெரிஞ்சு எப்படி நடந்துக்கிறாங்க என்பதைப் பொருத்து இருக்கு. அவருக்குத் தெரியலன்னு சொல்ற நீங்களே அவர்க்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே, நம்ம டீம் தானே அவரு. ஆனா, அவரை நீங்க டீமா நினைக்கவே இல்ல, ஏதோ போட்டியா நினைச்சிருக்கீங்க, தனக்குத் தெரியாத ஒன்னு உங்களுக்குத் தெரியும்னு தெரிஞ்சு உங்களோட உதவியைக் கேட்டிருக்காரு அவரு. உங்ககிட்ட problem வந்தப்பக் கூட உங்ககிட்ட சொல்லிருக்காரு, நான் வந்ததும் என்கிட்ட கூட சொல்லல, பாத்தீங்களா? அதுதான் அவரோட experience. இனிமே இப்படி அடுத்தவங்களைப் பத்தி குறை சொல்றதை விட்டுட்டு, டீம்ல எல்லார் கூடவும் நல்ல relationship வளர்த்துக்க முயற்சி செய்யுங்க" என்று திலிப் சொல்லி முடிக்க, கதிர்வேலனின் முகத்திலிருந்த ஏளனச்சிரிப்பு மறைந்து விட்டிருந்தது.
"சரியா, கதிர்? சொன்னது புரிஞ்சுதா?" என்று கேட்க, தன்னிச்சையாய் கதிர்வேலனின் தலை அசைந்து ஆமென்றது.
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். (184)
முகத்திற்கு நேராகச் சினம் கொண்டு கூட பேசலாம். ஆனா, பின்விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிப் புறம் பேசுதலைத் தவிர்த்து விடுதல் நலம்.
👏👏
ReplyDelete