பார்த்தால் பேசுவானா? - குறள் கதை
பார்த்தால் பேசுவானா?
- முடிவிலி
'ஆகா, அது அருணே தான். பாத்தா பேசுவானா?' என் மனம் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
****
6 ஆண்டுகளுக்கு முன்...
பள்ளியின் முதல் பொதுத்தேர்வான பத்தாம் வகுப்பில் தேர்வாகியிருந்தாலும், சில நட்புகள் படிப்பைத் தொடர முடியாமல் விலகியிருந்தனர். சிலர் வேறு பள்ளியில் இருந்து புதிதாய் வந்து சேர்ந்திருந்தனர். அப்படி ஒரு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியான என் பள்ளியில் வந்து சேர்ந்தவர்களில் ஒருவன் அருண். சில நாட்களில் என் சிறந்த நண்பனாகப் போகிறான் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
பதினொன்றாம் வகுப்பு துவங்கிய சில நாட்களில் யாரோடும் பேசாமல் அமர்ந்திருந்தான் அருண். புதிய பள்ளி, புதிய மாணவர்கள், புதிய சூழ்நிலைக்குப் பொருந்திப் போக அவனுக்கு முடியவில்லை. நான் தான் அவனிடம் சென்று முதலில் பேசினேன்.
"அருண்"
"..."
"அருண் தானே?"
"ம், ஆமா"
"அப்பாடா, நீ பேசுவியோ மாட்டியோன்னு நெனச்சேன். ஏன்டா யாரு கூடயும் பேசாம உட்காந்திருக்க?" எடுத்ததும் உரிமையோடு நான் பேசியது அவன் மனதை இலகுவாக்கியிருந்தது.
"இல்ல, இங்க எனக்கு யாரையும் தெரியல, என்னோட பழைய ஸ்கூல்ல பத்தாவதுக்கு மேல இல்ல, அதான் இங்க வந்து சேர்ந்தேன். எங்க ஊருலேந்து வர்ற மத்த பசங்களும் காமர்ஸ் குரூப் தான் எடுத்திருக்காங்க, பர்ஸ்ட் குரூப் நான் மட்டும் தான். எல்லாமே புதுசா இருக்கு, அதான் அப்படியே உட்காந்துட்டேன்" என்றான் அருண், கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பேசினான்.
"அட, அதெல்லாம் ஒன்னுமில்ல, அருண், இதுவும் எல்லா ஸ்கூல் போல தான். பயப்படாத, என் பேரு தெரியுமா?" என்றேன்.
"ம்ம், தெரியாது."
"செல்வன், என் பேரு"
"ஓ, என் பேரு அருண்ணு உனக்கு எப்படி தெரியும்?"
"நீ தானே அட்டெண்டென்ஸ்ல முதல் பேரு, அப்ப கவனிச்சேன். இனி நாம friends, ஓகேயா?"
"சரி" என்ற அருணின் முகத்தில் முதன்முறையாய் சிரிப்பைப் பார்த்தேன். சில மாதங்கள் நன்றாகவே ஓடியது. காலாண்டுத் தேர்வு முடிந்து 5 நாட்கள் விடுமுறை விட்டிருந்தார்கள். கிரிக்கெட் விளையாட்டிற்கு அருணை அழைப்பதற்காக அவனுடைய ஊருக்குச் சென்றேன், எனது சைக்கிளை எடுத்துக் கொண்டு.
"டேய், அருண், லீவு தான் வுட்டாச்சுல்ல, இன்னும் வூட்டுக்குள்ள என்ன செய்யுற? வாடா, வெளயாடப் போலாம்." என்றேன் தெருவில் சைக்கிளில் நின்றபடியே அழைத்தேன். அருண் சிரித்தபடியே வெளியே வந்தான்.
"வாடா போலாம்." என்றான் அருண்.
"என்னடா போலாம்னு சொல்ற? எங்கடா சைக்கிளு" என்றேன்.
"சைக்கிளா?" என்று சில நொடி தயங்கியவன், "இல்லடா, அப்பா வேலைக்கு எடுத்துட்டுப் போயிருக்காரு." என்றான்.
"சரி ஏறு, கெளம்புவோம். எல்லாம் க்ரவுண்ட்ல தான் இருப்பானுங்க" என்று சொன்னதும், பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான். அருண் அமைதியாக வருவதைக் கண்டு, "என்னடா மறுபடியும் உம்முன்னு வர்ற?" என்றேன்.
"ஒன்னுமில்ல செல்வா" என்று சொல்வதிலேயே ஏதோ ஒன்று இருப்பதாகப் பட்டது.
வண்டியை நிறுத்தி, அவனைத் திரும்பிப் பார்த்து, "என்னடா, சொல்லுடா" என்றேன்.
"எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுடா"
"என்னது, என்னடா சொல்ற?" எனது பேச்சில் என்னையும் அறியாமல் எள்ளல் கூடியது.
"நீ கூப்டியேன்னு தான் வந்தேன். ஆனா, நீ சைக்கிள் எங்கடான்னு கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சுடா"
"சரிடா, சரிடா, கவலைப்படாதே. எப்ப வேணும்னாலும் கத்துக்கலாம்" என்று நான் சொல்லி, மீண்டும் சைக்கிளைச் செலுத்த, அடுத்த கால் மணிநேரத்தில் விளையாட்டுத்திடலில் இருந்தோம். நானும், அவனும் ஒரே அணியில். முதலில் எதிரணி பேட்டிங் பிடிக்க, 10 ஓவர் விளையாட்டில் 58 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு, நாங்கள் பேட்டிங் பிடிக்க இறங்கினோம். முதலில் நான் பேட்டிங் பிடிக்கச் சென்று 1 ரன் எடுக்க ஒரு ஓவரை வீணாக்கி கடைசிப்பந்தில் அவுட்டும் ஆனேன்.
அடுத்து இறங்கிய அருண், நன்கு அடித்து ஆடினான். அணி 7 ஓவரில் 42 ரன்கள் எடுத்து, வெற்றிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம், அணியின் மற்றவர்கள், "டேய், செல்வா பரவால்லடா, அருண் செம்மயா வெளயாடுறான். முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்துச்சேன்னு பாத்தா, உள்ளே நின்னு match contain செஞ்சுட்டான்" என்று என்னிடம் கூற, நம் அணி வெல்கிறது என்ற மகிழ்ச்சியை விட, என்னை விட அவனுக்குப் பாராட்டு கிடைக்கிறது என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது.
"ஏதோ ஒரு மேட்சு ஆடிட்டான். அவனுக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதுப்பா" என்று கூறியதும், அனைவரும் சிரித்தபடி, "என்னடா சொல்ற, பதினொன்னாவது படிக்கிற பையனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதா?" என்றனர்.
"இன்னும் ரெண்டு ஓவருல மேட்ச் முடிஞ்சுடும், நீ வேணும்னா அவன்கிட்டயே கேட்டுக்க?" என்று சொல்லிவிட்டு, சற்று மெல்லிய குரலில், "நான் சொன்னேன்னு சொல்லிடாத" என்றேன்.
10வது ஓவருக்கு முன்னேயே வெற்றி எங்கள் அணிக்குக் கிடைத்தது. அணியின் கேப்டனும், அருணும் இணைந்து மொத்த ரன்களையும் அடித்து முடித்திருந்தனர். விளையாட்டுத்திடலின் ஓரத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த என்னை நோக்கி வந்த அருணிடம், அணியின் மற்றவர்கள், "என்ன அருண், கிரிக்கெட்லாம் விட்டு வெளாசுற, ஆனா, சைக்கிள் ஓட்ட மாட்டியாமே, உங்கூரு காரப்பய சொன்னான்" என்றதும், அதிர்ந்த அருண் என்னைப் பார்த்தான்.
"என்னடா, என்னைப் பாக்குற, கேட்குறானுல்ல சொல்லு" என்று சொல்லிச் சிரித்தேன். அது தான் நான் அவனைப் பார்த்துக் கடைசியாகச் சிரிப்பது என்று அன்று தெரியாமல் போனது.
"தெரிஞ்சுக்கிட்டே தானே கேக்குறீங்க, ஆமா எனக்கு ஓட்டத்தெரியாது, இன்னும் நல்லா சிரிச்சுக்கோங்க" என்று சொல்லிவிட்டு, இரண்டரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அவன் ஊருக்கு நடந்தே செல்லத் துவங்கினான். பள்ளி துவங்கியதும், அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்றிருந்த எனக்கு இனிமேல் அருண் என்னிடம் பேசவே போவதில்லை என்று தெரிந்திருக்கவில்லை.
பனிரெண்டாவது முடித்து, அருண் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துச் சேர, நான் மனவுளவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன், அதில் phobiaவில் cyclophobia பற்றி படிக்கும் போது தான், அருணின் மனக்கவலை, சைக்கிள் ஓட்டுவதில் அவனுக்கு இருக்கும் அச்சம் பற்றி எல்லாம் உணர்ந்தேன். ஆனால், காலம் கடந்து விட்டதால் நல்ல நட்பினை இழந்துவிட்டிருந்தேன்.
****
இன்று
'ஆகா, அது அருணே தான். பாத்தா பேசுவானா?' என் மனம் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். என்னிடம் பேசுவானா?
- முடிவிலி
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)
நட்பாடல் தேற்றா தவர். (187)
முகம் சிரித்து நட்பு பாராட்டத் தெரியாதவர், தன் நண்பனைப் பற்றி புறம் கூறி நல்ல நட்பை இழந்து விடுவர்.
Comments
Post a Comment