ஆழி - குறள் கதை
ஆழி அன்று எங்கும் தன் நீல நிறத்தைப் பரப்பி, பரந்து விரிந்து கிடந்த கடலை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கடல் மட்டும் அலைபாயவில்லை, என் மனமும் தான். எங்கிருந்தோ ஒரு அலை வந்து என் காலின் நுனியைத் தொட்டுச் சென்றது. இன்று சமூக வலைதளங்களில் இன்று என் பெயர் தான் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இன்று எனக்கு நடக்க இருக்கும் பாராட்டு விழா. எந்த ஊரில் என் உழைப்புக்கு அடையாளம் மறுக்கப்பட்டதோ, அடையாளம் என்ன இல்லாத வேலை செய்கிறேன் என இழிவு சொல்லப்பட்டதோ, அதே ஊரில் இன்று எனக்குப் பாராட்டு விழா. மனதில் என்றோ அடித்துக் கொண்டிருந்த அலை இன்று அமைதியாகவே இருந்தது. "டாக்டர் சார்" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான செந்தில் நின்றிருந்தார். "சொல்லுங்க, செந்தில்" "சார், இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரோக்ராம் துவங்கிடும், உங்க கூட யாராவது வந்திருந்தா அவங்களை முன்வரிசைல உட்கார வைக்கத் தான் கூப்பிட்டேன். உங்க மனைவி, பையன் ரெண்டு பேருக்கும் முன் வரிசையில் இடம் கொடுத்தாச்சு. வேற சிலர் யாரும் இருக்காங்களா?...