காணொளிகள் கைவசத்தில் - Videos at your hands


இன்று ஏப்ரல் 23 - முதன் முதலாக நம் அனைவருக்கும் அறிமுகமான யூடியுப் வலைத்தளத்தின் முதல் காணொளி பதிவேற்றப்பட்ட நாள். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, யூட்யுப் நிறுவனர்களில் ஒருவரான ஜாவேத் கரீம் "me at the zoo" என்ற காணொளியைப் பதிவேற்றி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று நம் வாழ்வின் ஒரு அம்சமாக மாறிவிட்ட இந்த வலைத்தளத்தைப் பற்றி ஒருசிலத் தகவல்கள் இன்றைய வலைமலராக...
  • ஸ்டீவ் சென் (Steve Chen), சாட் ஹர்லி (Chad Hurley), ஜாவேத் கரீம் (Javed Karim) ஆகிய இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்தது இந்த யூடியுப். 
  • தைவான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டீவ் சென், பங்களாதேஷ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாவேத் கரீம் மற்றும் அமெரிக்கரான சாட் ஹர்லி ஆகியோர் Pay-Pal நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த போது, தங்களுள் உதித்த ஒரு புதிய யோசனையே இன்று உலகம் முழுதும் பயன்படுத்தும் யூடியுப் வலைத்தளம். 

ஸ்டீவ் சென் 

ஜாவேத் கரீம் 

சாட் ஹர்லி 

  • 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இதற்கென தனி வலைமுகவரி பதிவு செய்தனர். 
  • அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டியை ட்யுப் (Tube) என அழைக்கும் வழக்கம் இருந்தது. இணையம் மூலம் இருந்த இடத்தில் காணொளி காணும் இந்தத் தளத்திற்கு தொலைக்காட்சிப் பெட்டி முன்பு நீங்கள் (You before Tube) இருப்பது போல் சின்னம் அமைக்கப்பட்டது. 
  • ஏப்ரல் 23 2005 அன்று, ஜாவேத் கரீம் முதல் காணொளியை வலைத்தளத்தில் பதிவேற்றினார். சான் டியகோ மிருகக்காட்சி சாலையில், தன் பின்னால் சில யானைகள் நின்றிருக்க, ஜாவேத் யானைகளைப் பற்றி சில வரிகள் கூறுவதாய் அமைந்திருந்தது அந்தக் காணொளி. யாகோவ் லபிட்ஸ்கி  (Yakov Lapitsky) ஒளிப்பதிவு செய்திருந்தார்.
முதன் முதலாகப் பதிவேற்றப்பட்ட me at the zoo காணொளி
  • இந்தக் காணொளி இதுவரை 37 மில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது.
  • மே மாதம் 2005 அன்று கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ நடித்த நைகி (Nike) காலணி விளம்பரம் முதன் முதலாக 1  மில்லியன் பார்வைகளைக் கடந்தது. 
  • 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கூகுள் நிறுவனம் இந்த வலைத்தளத்தை 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கியது. 
  • 2005 - 06 ஆண்டுகளிலேயே ஒரு வருடத்தில் 65000 காணொளிகள் பதிவேற்றப்பட்ட யூடியுபில், இன்று 1,300,000,000க்கு மேலான காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
  • உலகமெங்கும் சராசரியாக ஒரு நாளில் 5 பில்லியன் காணொளிகள் இந்த வலைத்தளத்தில் காணப்படுகிறது.
  • காணொளிக்கு முன் / இடையில் வரும் விளம்பரம் மூலம் 1000 பார்வைக்கு 7.6 டாலர் வீதம் வருமானம் கிடைக்கும். இதில், 55% பதிவேற்றியவர்க்கும், 45% யூட்யுப் நிறுவனத்திற்கும் செல்லும். 
இன்றைய சமூக வலைத்தள உலகில், செய்தி, கல்வி, தொழிற்நுட்பம், சமையல் முதலான பலவித காணொளிகளை நம் கண் முன் கொண்டு நிறுத்தும் இந்த வலைத்தளத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்தையும், அதன் நிறுவனர்களுக்கு வாழ்த்தையும் தெரிவிப்பதில் பெருமிதம். 

சரி... நான் பதிவேற்றிய சில காணொளிகள் இதோ. 

சிறு குழந்தை ஆதியின் எழில் நடை 

சிங்கப்பூர் யுனிவெர்சல் ஸ்டுடியோவில் நடந்த நடனம்  

சிங்கப்பூர் ஜூராங் பறவை பூங்காவில் அமைந்த செயற்கை அருவி 


- கணபதிராமன் 

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka