க்ரிய்னர்ட் "ஆந்த்ராக்ஸ்" தீவு - Gruinard Island
ஆழிசூழ் உலகிற்கு
ஆழியால் அச்சமில்லை
அறிவு சார் உலகோர்
அழிவுக்கு உழைத்தால்
அறிவுக்கோர் அர்த்தமில்லை.
ஆழியால் அச்சமில்லை
அறிவு சார் உலகோர்
அழிவுக்கு உழைத்தால்
அறிவுக்கோர் அர்த்தமில்லை.
- கணபதிராமன்
போன நூற்றாண்டு பல அறிவியல் ஆராய்வுகளில் உலகை முன்னேற்றி இருந்தாலும், அழிவு வேலைகளையும் செய்யத் தவறவில்லை. அவ்விதம், அறிவியல் சோதனை முயற்சி என்ற பெயரில் ஒரு தீவு சுமார் 48 ஆண்டுகள் மனித நடமாட்டமே இல்லாமல் போனது பற்றியே இன்றையப் பதிவு.
ஐக்கிய அரசில் (United Kingdom) அங்கமாய் இருக்கும் ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் அமைந்துள்ள ஒரு தீவு க்ரிய்னர்ட் தீவு. சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்தத் தீவு குறித்து 16 ஆம் நூற்றாண்டில் டீன் மன்றோ என்பவர் "மிகுந்த மரங்கள் நிறைந்த வளமையான தீவு" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மனித நடமாட்டமே இல்லாத - யாரும் செல்ல அஞ்சக்கூடிய இடமாக உள்ளது.
க்ரிய்னர்ட் தீவு, ஸ்காட்லாந்து |
இரண்டாம் உலகப் போரின் போது, தான் வெல்வதற்குத் தன்னால் இயன்ற பல வழிகளை கையாண்டன அப்போரில் பங்கு கொண்ட நாடுகள். துப்பாக்கி, தோட்டாக்கள், டாங்குகள் மட்டுமல்லாமல் வேதியியல் ஆயுதம் முதல் அணு ஆயுதம் வரை உபயோகிக்கப்பட்ட போர் அது. இதில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தவும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இங்கிலாந்து, தனது உயிரியல் ஆயுத சோதனையை ஸ்காட்லாந்து க்ரிய்னர்ட் தீவில் நடத்த முடிவு செய்தது. இந்த சோதனைக்கு ஆப்பரேஷன் வெஜிடேரியன் (Operation Vegetarian) எனப் பெயரிடப்பட்டது.
1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ ஆய்வாளர்கள் தனது ஆந்த்ராக்ஸ் உயிரியல் ஆயுத சோதனையை இந்தத் தீவில் துவங்கினர். 80 செம்மறி ஆடுகளை ஆய்வுக்காக மரப்பெட்டகத்தில் அடைத்து வைத்து, ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா கொண்ட வாயு ஒரு குண்டுவெடிப்பு மூலம் விடுவிக்கப்பட்டது. ஆந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்ட செம்மறி ஆடுகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் இறந்து போயின. இந்த சோதனை வெற்றியடைந்தது என இங்கிலாந்து ராணுவ ஆய்வாளர்கள் அறிவித்தனர். இறந்த ஆடுகள் அந்தத் தீவிலேயே எரிசூளையில் (incinerators) எரிக்கப்பட்டன.
1945 ஆம் ஆண்டு இந்தத் தீவின் உரிமையாளர்கள், இந்தத் தீவிற்கு செல்ல முயன்ற போது, இங்கிலாந்து அரசு அவர்களைத் தடுத்து, க்ரிய்னர்ட் தீவு போர்க்கால சோதனையில் உயிரியல் தூய்மைக்கேடு அடைந்தப் பகுதி எனவும், அந்தப் பகுதி மீண்டும் பயன்படுத்தத் தகுதியாகும் வரை அரசு பொறுப்பில் இருக்கும் எனவும் கூறியது. எப்போது ஆந்த்ராக்ஸ் கிருமித் தொற்று முழுதும் நீங்கி மனிதர் செல்ல ஏதுவாக தீவு மாறுகிறதோ, அப்போது உரிமையாளர்கள் 500 பவுண்ட்கள் கொடுத்து தீவை வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறியது அரசு.
1981 வரை க்ரிய்னர்ட் தீவை சுத்தம் செய்ய எவ்வித முயற்சியும் செய்யாத அரசு, அந்த ஆண்டு இரண்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளர்களை க்ரிய்னர்ட் தீவிற்கு அனுப்பி மண் மாதிரி (Soil Sample) எடுத்து வர அனுப்பியது. சுமார் 140 கிலோ மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் இந்த முயற்சி கைவிடப்பட்டது.
1986 ஆண்டு தூய்மைப்படுத்தும் முயற்சியில் |
1986 ஆண்டு மீண்டும் தீவை சுத்தப்படுத்தும் வேலை துவங்கியது. சுமார் 280 டன் ஃபார்மால்டிஹைட் திரவம் 2 சதுர கிலோமீட்டர் பரப்பில் தெளிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு இதே நாளில் (24.04.1990) க்ரிய்னர்ட் தீவு தூய்மைப்படுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
உரிமையாளர்களால் 500 பவுண்டிற்கு இந்தத் தீவு மீண்டும் வாங்கப்பட்டாலும் இது வரை இந்தத் தீவு மனிதப் புழக்கம் இல்லாத பகுதியாகவே இருந்து வருகிறது.
ஒரு நாள் செய்த உயிரியல் ஆயுத சோதனையால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய 48 ஆண்டுகள் ஆயின. என்ன தான் தூய்மைப்படுத்தாயிற்று எனக் கூறப்பட்டாலும், இதுவரை சோதனை விளைவின் பயம் மக்களின் மனதில் இருந்து நீங்கியதாகத் தெரியவில்லை.
1942 ஆம் ஆண்டு செய்த சோதனை காணொளிப் படம் பிடிக்கப்பட்டு ராணுவ ஆவணமாக்கப்பட்டது. அந்தக் காணொளி 1997 ஆம் ஆண்டு பொதுப்பார்வைக்கு வெளியிடப்பட்டது.
ஆப்பரேஷன் வெஜிடேரியன் - காணொளி
இன்னமும் ஆந்த்ராக்ஸ் முதலான பல உயிரியல் ஆயுதங்களின் நுண்ணுயிர் மூலக்கூறுகள் (Pathogen) முன்னேறிய நாடுகளின் ஆய்வகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அமைதி விரும்பும் நாடுகளாக தற்பெருமை பேசும் அந்த நாடுகள் அவற்றை முற்றிலும் அழிக்காமல் இருக்க காரணம் என்ன என்பதை உங்களின் கற்பனைக்கே விடுகிறேன். என்னைப் பொறுத்த வரையில், அழிவுக்கு அடிகோலும் எவ்வித அறிவியல் முன்னேற்றமும் அவசியமில்லாதது.
- கணபதிராமன்
Comments
Post a Comment