உலகை வேறாய்க் காண்பவர்கள் - The People who see the world differently


"காணும் காட்சியின் வண்ணம் 
காணும் கண்களைப் பொறுத்தது... 
காண்பது வேறாய் இருந்தால் -
காண்பதைப் புரிதல் வேறாய் இருந்தால் 
அது குறையல்ல...
நிறக்குருடு குருடல்ல...
குறைபாடு நோயல்ல... "

- கணபதிராமன் 


நீங்கள் வேதியியல் ஆய்வகத்தில் பினாப்தலீன் நிறமி உபயோகித்து நிறமாற்றம் நிகழ்வதை உணர முடியாமல் இருந்துள்ளீர்களா? 

நிறம் மாறும் ஒளியீரி (Color Changing LED) நிறம்  சிவப்பா பச்சையா என குழம்பி இருக்கிறீர்களா? 

மற்றவர்கள் எளிதாய் உணரும் நிறங்களை உங்களால் உணர முடியாமல் போனதுண்டா? 


இந்தக் குறை உங்களிடம் மட்டுமல்ல உலகில் சுமார் 4.5 சதவீத மக்கள் நிறக்குருடு உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் ஆண்களே. இந்த நிறக்குருடு எதனால் ஏற்படுகிறது? எத்தனை வகை? ஆண்கள் அதிகம் பாதிக்கக் காரணம் என்ன? இதுவே இன்றையப் பதிவு. 

நமது கண்ணில் விழித்திரையில் அடிப்படை நிறங்களை உணர்வதற்கு கூம்பு வடிவ செல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மற்றும் செயல் திறன் நமக்கு காணும் காட்சியின் வண்ணங்களைப் பிரித்தறிய உதவுகிறது. அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, சிவப்பு எனப் பிரித்தறிய உதவுவது இந்த கூம்பு வடிவ செல்கள் தான். எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறம் பிரித்தறியும் செல்கள் குறைவாகவோ, இல்லாமல் போனாலோ அல்லது செயல்திறனற்று இருந்தாலோ சிவப்பு நிறம் பிரித்தறியும் திறன் இல்லாமல் போகலாம். சிவப்பு நிறம் மற்றும் பச்சை நிறத்திற்கு வேறுபாடு தெரியாமல் போகலாம். 

சிலர் இந்தக் குறைபாட்டுடன் வாழ்ந்து, தனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்தது தெரியாமலே தங்கள் வாழ்வை நடத்தி சென்றதுண்டு. இக்குறைபாடு இருப்பது தெரிய வந்த பின்னர், மனமுடைந்து தாழ்வு மனப்பான்மையினால் நொந்து போனவர்களும் உண்டு. இப்பதிவின் இறுதியில், இக்குறைப்பாட்டையும் மீறி, உலகில் சாதனைப் படைத்த சிலரையும் பட்டியல் இட்டுள்ளேன். 

நிறக்குருடு இரு வகைப்படும். 
  • முழு நிறக்குருடு (Total Color Blindness)
  • பகுதி நிறக்குருடு (Partial Color Blindness)
முழு நிறக்குருடு உள்ளவர்கள் விழித்திரை கூம்பு செல்கள் செயல் திறன் அற்றவையாகவோ அல்லது கூம்பு செல்கள் இல்லாமலோ இருக்கும். இவர்கள் உலகே கருப்பு வெள்ளை படம் போல் தான் இருக்கும். கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் மட்டுமே இவர்களால் காண முடியும். இவ்வகை நிறக்குருடு வெகு அரிதானது. (சுமார் 0.1%)

பகுதி நிறக்குருடு மேலும் இரு வகையாக பிரிக்கப்படுகிறது. 

  • சிவப்பு - பச்சை நிறக்குருடு (Red - Green Color Blindness)
  • நீலம் - மஞ்சள் நிறக்குருடு (Blue - Yellow Color Blindness)
சிவப்பு - பச்சை நிறக்குருடு: இவ்வகை குறைபாடே அதிகமாகக் காணப்படுகிறது. (சுமார் 4%). சிவப்பு அல்லது பச்சை கூம்பு செல்கள் இல்லாமல் இருப்பதால் அல்லது செயல்திறன் இல்லாமலா இருப்பதால் சிலருக்கு சிவப்பை அடிப்படையாகக் கொண்ட நிறங்கள் பச்சையாகவோ, பச்சையை அடிப்படையாகக் கொண்ட நிறங்கள் சிவப்பாகவோ அல்லது சிவப்பு மற்றும் பச்சைக்கு வேறுபாடு தெரியாமலும் இருக்கலாம்.  

நீலம் - மஞ்சள் நிறக்குருடு: இவ்வகை குறைபாடு சுமார் 0.4% மக்களிடம் இருக்கிறது. நீல நிறமாறியும் கூம்பு செல்கள் குறைந்து காணப்படுதலால், இவர்களால் நீலநிறத்தை சரிவர உணரமுடியாது. 

பெரும்பாலும், நிறக்குருடு பெற்றோர்களிடம் இருந்தே (பரம்பரை) குழந்தைகளுக்கு வருகிறது. கூம்பு வடிவ செல்களின் பண்புகள் 23ஆம் இணை குரோமோசோமான பால் குரோமோசோமில் தான் உள்ளது. அதிலும், X குரோமோசோமில் தான் இந்த பண்புகள் அடங்கிய ஜீன்கள் இருக்கும். ஆண்களுக்கு (XY) ஒரே X குரோமோசோம் மட்டுமே இருப்பதால், அதில் உள்ள ஜீன்கள் நிறக்குருடு குறைபாடு உள்ளவையாய் இருந்தால் அவர்களுக்கு நிறக்குருடு வர வாய்ப்பு அதிகம். ஆனால், பெண்களிடம் (XX) இரு X குரோமோசோம் இருப்பதால், அவர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு இருப்பதில்லை. ஆனால், ஒரு குறைபாடு உள்ள X குரோமோசோம் கொண்ட தனது அடுத்த தலைமுறைக்கு இக்குறைபாட்டை எடுத்து செல்லும் தாங்கியாக (Carrier) செயல்படுவர். இரு X குரோமோசோம் குறைபாடு உள்ள பெண்களுக்கே நிறக்குருடு இருக்கும். 
நிறக்குருடு அடுத்த தலைமுறைக்கு பரவும் முறை 
நிறக்குருடு குறைபாடு உள்ள ஆணுக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண் தாங்கியாக இருப்பாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிறக்குருடு இருக்க 50% வாய்ப்பு உள்ளது. 

எவ்வாறு நிறக்குருடு இருப்பதை தெரிந்து கொள்வது?
பெரும்பாலும் நிறக்குருடு இருப்பதை அறிந்து கொள்ள இஷிஹாரா தட்டுக்கள் (Ishihara Plates) உபயோகிக்கப் படுகின்றன. இந்த முறை ஜப்பானைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷிநோபு இஷிஹாராவால் (Dr. Shinobu Ishihara) 1917 ஆம் ஆண்டு தனது நிறக்குருடு கொண்ட உதவியாளரின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. பல நிறங்களில் ஒருங்கே கொண்ட ஒரு பக்கத்தில், ஒரு குறிப்பிட்ட நிறத்தில் எழுதப்பட்ட எண்களைக் கண்டறிய சொல்வது மூலம் ஒருவருக்கு நிறக்குருடு உள்ளதா என அறியமுடியும். 

மருத்துவர் ஷிநோபு இஷிஹாரா
இஷிஹாரா சோதனை மூலம் உங்கள் நிறம் அறியும் திறனை சோதிக்க  இந்த இணைப்பை சொடுக்கவும். 


இதுவரை இந்த நிறக்குருடு குறைபாடுக்கு சிகிச்சை எதுவும் இல்லை எனினும் இக்குறைபாட்டுடன் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் ஆகிறது. இன்று பலநாடுகளில் நிறக்குருடு உள்ளவர்களுக்கு இருந்த ஓட்டுனர் உரிமத் தடைகள் நீக்கப் பட்டுள்ளன. நிறக்குருடு உள்ளவர்களுக்கு நிறம் பிரித்தறிய கண்ணாடிகள் / தொடு வில்லைகள் (Contact Lenses) உள்ளன. ஆனால் இவற்றின் பயன்பாடு சிறந்த ஒளி இருக்கும் பொது மட்டுமே சிறப்பானதாய் இருக்கும். 

ஜீன் தெரபி மூலம் நிறக்குருடுக்கு நிரந்தர சிகிச்சைக்கு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென, நிறக்குருடு கொண்ட டால்டன் என்ற குரங்கின் மீது செய்த ஆய்வில் அது சிவப்பு நிறத்தை உணரத் துவங்கியுள்ளது.
ஜீன் தெரபி ஆய்வில் டால்டன் குரங்கு 
தனது குறைபாடு வாழ்வை எவ்விதமும் பாதிப்பதில்லை என உலகுக்கு சொல்ல - வாழ்வில் வென்று காட்டினர் பலர். சரியாக சொல்ல வேண்டுமென்றால், உலகை அனைவரைப் போலல்லாமல் வேறாய் - வித்தியாசமாய் பார்த்தவர்கள். வித்தியாசம் வியாதியல்ல. குறைபாடு நோயல்ல. 
ஜான் டால்டன் (இயற்பியல் மேதை)
மார்க் ட்வைன் (சிந்தனைவாதி)
பில் கிளிண்டன் - முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி 
கிறிஸ்டோபர் நோலன் - இயக்குனர் (சிவப்பு - பச்சை நிறக்குருடு)  

ஜான் கே - ராக் பாடகர் (முழு நிறக்குருடு உடையவர்)

கியானு ரீவ்ஸ் - 'மேட்ரிக்ஸ்'  நடிகர் 

மார்க் - Facebook நிறுவுனர் (சிவப்பு - பச்சை நிறக்குருடு)


மற்றும்

- கணபதிராமன்

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka