புரட்சிக் கவிஞனுக்கு வீரவணக்கம் - Salute to Revolutionary Poet

கனகசபை சுப்புரத்தினமாய் இருந்தவன், தமிழ்ப்பற்று கொண்டு - தமிழர்கள் மீது திணிக்கப்படும் காழ்ப்புணர்வு கொண்டு - வீறு கொண்டு - மொழியையே ஆயுதமாக்கி - கவிதையால் சாட்டை சுழற்றி - புரட்சிக்கவிஞனாய் மாறினான். அவனுடைய நினைவு நாளான இன்று பாரதிதாசன் கனக சுப்புரத்தினத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
பாரதிதாசன் (29.04.1891 - 21.04.1964)
இன்று அவர் கவிதை சிலவற்றை இணையம் வழி எடுத்துப் படித்த போது, இதுவரை இந்த கவி ரத்தினங்களை படிக்காமல் இருந்துள்ளோம் என என்னுள் தோன்றிய குற்ற உணர்வின் வெளிப்பாடே இவ்வார்த்தைகள்:
 காதல் - புரட்சி - நாட்டுப்பற்று - மொழிப்பற்று - சமகால அரசியல் என பலவகைகளில் தன கருத்துகளை காலத்தால் அழியா கவியாய் செதுக்கிய பாரதிதாசனை நாம் இன்னும் சரியாய் படிக்கவில்லை; அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. சுப்பிரமணிய பாரதியை விட அதிகம் படிக்கப்பட வேண்டியவன் பாரதிதாசன்.
அவரின் கவிதைகளில் சில இதோ நம் அனைவருக்காக...!
பெண்களால் மட்டுமே சமுதாய மாற்றம் நிகழ முடியும் என்பதை தீர்க்கமாக நம்பிய பாரதிதாசன் பெண் குழந்தைகளுக்கு எழுதிய தாலாட்டு பாடல்... பாடல் என்னவோ குழந்தைக்கு இருந்தாலும், கருத்துக்கள் மொத்த சமுதாயத்திற்குமே...
பெண் குழந்தை தாலாட்டு 
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!

அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!

எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!
காதல் - பழந்தமிழ் காலம் முதல் நமது பண்பாட்டுடன் ஒன்றி இருந்த இந்த காதல் உணர்வு, அகம் என செய்யுள்களில் ஒரு பெரும் பகுதியையே காதலுக்காக கொண்ட தமிழினம்,  பின் வந்த சாதியினால் இன்று காதல் என்பதையே கெட்டதாக எண்ணுகின்றோம். காதலுற்ற இருவர் காணும் ஒற்றுமை குறித்து கவிஞரின் வரிகள்:
இருவர் ஒற்றுமை
எனக்கும் உன்மேல் - விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
             {
எனக்கும் உன்மேல்...}

எனக்கு நீதுணை அன்றோ -    இங்
குனக்கு நான்துணை அன்றோ - அத்தான்
             {
எனக்கும் உன்மேல்...}

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன் செயல்        இனிக்கும்
தனித்தல் உனக்கும் எனக்கும் -   நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
             {
எனக்கும் உன்மேல்...}

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல்
- அத்தான்
             {
எனக்கும் உன்மேல்...}

நீ உடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நமதன்பும் - இங்கு
ஒழியவிலை பேரின்பம் - அத்தான்
             {
எனக்கும் உன்மேல்...}

இந்தக் கவிதைக்குத் தனியாக அறிமுகம் தேவையில்லை. தமிழரின் எழுச்சி குறித்து தனது எழுத்துகளால் புரட்சி விதைக்கிறார் பாரதிதாசன்.  
எழுச்சி
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?
செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா
?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?



இந்தித் திணிப்பு குறித்து பாரதிதாசனின் வரிகள் :

இந்தி எதிர்த்திட வாரீர் -- நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி)

முந்திய காலத்து மன்னர் நம்
முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்
வந்தவட மொழிதன்னை -- விட்டு
வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி)

செந்தமிழ் தன்னில் இல்லாத -- பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?

எந்த நலம்செய்யும் இந்தி -- எமக்கு
இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.
        (இந்தி)

தென்னாடு தான்எங்கள் நாடு -- நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை -- எங்கள்
பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம். (இந்தி)

இன்னலை ஏற்றிட மாட்டோம் -- கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் -- வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.    (இந்தி)

- பாரதிதாசன் (சுப்புரத்தினம்) 
பாரதிதாசனின் தமிழ் பருக ஆசை இருந்தால், அவரின் படைப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில்.... பாரதிதாசன் கவிதைகள்















Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka