உலக புவித்தாய் நாள் 'ஏப்ரல் 22' - International Mother Earth Day

மனிதர்கள் நாம் மட்டுமல்லாமல், நாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல உயிர்களுக்கு உணவு தந்து - உறைவிடமாய் இருந்து வருவது நம் புவித்தாய். 


ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஏப்ரல் 22 இன்று உலக புவித்தாய் நாளாக கொண்டாடுகிறது. உயிர் வாழ தகுதியுள்ள இந்தப் புவியில், மனிதனோடு, வாழும் அத்தனை உயிர்களுக்கும், தாவரங்களுக்கும் இந்த புவித்தாய் உரிமை உடையவளாய் இருக்கிறாள் என்பதை கூறும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்த வருடத்தின் பேசுபொருள் "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அறிவு - Environmental & Climate Literacy". 


கல்வியறிவு - விழிப்புணர்வு இவையே நம் முன்னேற்றத்திற்கு வழிகோலும். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் மட்டுமல்லாது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது, 

நாம் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளும், இயற்கையை விட்டு அகன்று செல்லும் ஒவ்வொரு அடியும், இப்புவியில் நமது வாழ்வை நாம் கடினமாக்க, நமக்கே செய்து கொள்ளும் வினை என்பதை நாம் உணர வேண்டும். 

ஆறுகள் ஆண்டாண்டு காலம் கொண்டு சேர்த்த வளமிக்க மணலை சடுதியில் அள்ளிவிடலாம். அள்ளிய இடத்தில் அதே அளவு மணல் சேர எவ்வளவு காலம் ஆகும் என்பதே நமக்கு புவித்தாய் மீதும் அடுத்த தலைமுறை மீதும் உள்ள நமது அக்கறைக்குத் தீனியிடும் வினா. 

நெகிழிப் பொருட்கள் (Plastic) தவிர்ப்போம் என நாம் கூறிக் கொண்டிருந்தாலும், உருவாகும் குப்பைகளில் சுமார் 60 சதவீதம் நெகிழிக் குப்பைகளே. ஆங்காங்கே கடலில் கொட்டப்படும் இந்த நெகிழிக் குப்பைகள், பெருங்கடல் நடுவே பெரும் குப்பை மேடாக சுழன்று வருகிறது. உலகின் மிக ஆழமான கடல் பகுதியான மரியானா அகழிப் பகுதியில் கூட நெகிழிக் குப்பை கண்டெடுக்கப் பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மரியானா அகழிப் பகுதியின் ஆழம் 10.924கிலோ மீட்டர். 

ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டன் நெகிழிப் பயன்பாட்டுக்கு வருகிறது. அவற்றில், பாதியளவு சுமார் 12 நிமிடத்திற்குள் குப்பையாக கொட்டப்படுகிறது. சுமார் 8 மில்லியன் டன் நெகிழிக் குப்பைகள் கடலை சென்றடைகிறது. 

காட்டை அழித்து கோவில் செய்து கொண்டாடும் மூடர்களை எதிர்த்து பேச முடியா ஒரு காலத்தில் நாம் இருப்பினும், நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் இந்தப் புவியினை உயிருள்ளதாக இருக்கச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 
  • முடிந்த வரை, மரம் நடுவோம்.
  • வனவிலங்குகளைக் காப்போம்.
  • காடு மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், தாங்கள் கொண்டு வரும் குப்பைகளைக் காட்டிலே போடாமல் தாங்களே எடுத்து செல்லுதல் நலம். முக்கியமாக, கண்ணாடிக் குடுவைகள் - வன விலங்குகளின் காலில் கண்ணாடி குத்தினால் நாம் வைத்தியம் பார்ப்பதில்லை. 
  • முடிந்த வரை, நெகிழி பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
  • பயன்படுத்தும் நெகிழியை மறுசுழற்சி செய்வோம். 
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து கொட்டுவோம்.
  • மக்கும் குப்பை பயன்படுத்தி இயற்கை உரம் செய்தல் இன்னும் நலம்.
  • மிக முக்கியமான ஒன்று, குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம். 
நம் இயற்கைத் தாய் - புவியைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் உலக புவித்தாய் நாள் வாழ்த்துக்கள். 
 உலக புவித்தாய் நாள் சிறப்புக் காணொளி - International Mother Earth Day Video

Comments

  1. 2days before i came to know from my daughter. We should control our self

    ReplyDelete
  2. Ya true..big journey start with small steps.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka