ஒதுக்கீடு - Reservation

சுயநிலை விளக்கம்: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதப்பட்டது அல்ல... அவ்வாறு புண்பட்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக செய்த கொடுமையின் குற்ற உணர்ச்சியாக இருக்குமே தவிர, இந்தப் பதிவினால் இருக்காது.

நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவன் மங்கள் பாண்டே எனவும் அவனே 1857 சிப்பாய் கலகத்துக்குக் காரணம் எனவும் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்... உண்மை அதுவல்ல... கங்கையில் குளித்து விட்டு கரையேறிக் கொண்டிருந்த பாண்டேயின் மீது மோத வந்த ஒரு தலித் சிறுவனைக் கடிந்து "நீ தொட்டால் தீட்டு... மீண்டும் குளிக்க வேண்டும்..." என்றான் பாண்டே... பதிலாய் அந்த சிறுவன் கேட்ட கேள்வியே நம் விடுதலைக்கு வித்திட்டது...

அந்த சிறுவன் கேட்டான் 
"மாட்டுக் கொழுப்பு தடவிய தோட்டாவினை வாயால் கடித்து துப்பாக்கியில் பயன்படுத்தும் நீ, பிராமணனா? நான் தொட்டால் தீட்டா?"
இந்தக் கேள்வியால் பாண்டேயினுள் எழுந்த சாதிப்பற்றினால் தான் சிப்பாய் கலகம் துவங்கியது. எப்படியோ, இந்திய விடுதலைக்கு வித்திட்ட அந்த முகம் தெரியாத சிறுவனுக்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டினாலே நாடு
முன்னேறாமல் போனது என
முட்டாள்தனமாக பேசுவார்
அவர் மட்டுமல்லாமல்,
இட ஒதுக்கீட்டால் படித்தவர்
மனத்தில் இதைக் கூறி
குற்ற உணர்ச்சியை விதைப்பார்...

வேதம் ஓத ஒரு சாதி...
நாட்டை ஆள சில சாதி...
வணிகம் செய்ய சில சாதி...
இவர் மூவர்க்கும் பணிந்து செல்ல சில சாதி...
என பிரித்து வைத்து இடஒதுக்கீட்டை
மதத்தின் பேரால் துவங்கி
வைத்தோம்.

நான்கிலும் சேராத சிலரை
மனிதனாய் கூட மதியாமல்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அடிமையாய் நடத்தினோம்.

அடிமையாய் இருந்தவனுக்கு
அரசு வேலையா?
குறைந்த கட்டணத்தில் படிப்பா?
நாடு எப்படி முன்னேறும்?
இப்படி அங்கலாய்க்கிறோம்...

ஊருக்குள் வாடகைக்கு வீடு விடும்போது கூட
சாதி கேட்டு வீடு தரும் கேடு கெட்ட நாடு
சொல்கிறது இட ஒதுக்கீடு வேண்டாம் என...

இங்கு எனக்கு கிடைக்கலையே என
வேதனை படுபவனை விட,
அவனுக்கு கிடைக்குதே என
அழுபவன் தான் அதிகம்....

அன்றும் இன்றும் இட ஒதுக்கீடு இல்லாத
இரு வேலைகள்....
மணி அடிக்கும் வேலை
மலம் அள்ளுபவனுக்கு கிடைத்தால்
இங்கே சாதிக் கொடுமை
ஏதும் இல்லை எனக் கூறலாம்.

ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் இருந்தவன்
சொல்லட்டும் இனி எனக்கு
இட ஒதுக்கீடு வேண்டாம் என...
இல்லையேல் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது
பொறுத்திருங்கள்....

இத்தனை காலம் ஒதுக்கி வைக்கப்பட்டவன்
ஒதுக்கீட்டினால் உங்கள் தோளுடன் தோள்
உரசினால் பெருமை கொள்ளுங்கள்
உலகின் உன்னத மனித இனம் நாம் என...

மாறாக பொறாமை கொண்டால்
ஒரு செல் உயிரி கூட
உங்களைக் கேவலமாய் காணும்...

- கணபதிராமன்

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka