திக்குதல் விழிப்புணர்வு நாள் - Stuttering Awareness Day

ஒருவர் கூற வரும் கருத்தை விட அதை எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தான் கூற வேண்டிய வார்த்தைகளை விழுங்கியோ, திக்கியோ சொல்வதை கேலி செய்தும், அவர் மனம் புண்படுவதைக் கண்டு மகிழ்ந்தும் இருக்கிறோம். இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இவ்வாறு அவரின் குறையை எள்ளி நகையாடுவது அவர் தன்னைத் திருத்திக் கொள்வதற்கே, அவர் நலனுக்கே எனக் கூறிக் கொள்வது.
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் (22 அக்டோபர்) 

இந்த திக்குவாய் பிரச்சினை என்பது, வார்த்தைகளின் முதலில் சிரமப்பட்டு ஆரம்பிப்பது, சொற்றொடரின் நடுவே விட்டு விட்டு பேசுவது, தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்ப திரும்ப சொல்வது, ஒரே சொல்லை சொற்றொடருக்கு நடுவே பலமுறை வேகமாக சொல்வது, பேசும்போது அர்த்தமற்ற அசைகள் (ஒலிகள்) எழுப்புவது (ஆ... ம்ம்... ஹ..), இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்குப் புதிதான மொழியைப் பழகும் போது, நிச்சயம் அனைவரும் திக்கி தான் பேசுவோம். இதற்கு காரணம், நாம் பேசும் போது நமது மொழியில் இருந்து புதிய மொழிக்கு மனதிற்குள் மொழியாக்கம் செய்து கொண்டே பேசுவதும், தவறாக எதுவும் சொல்லி விடக்கூடாது என்ற உணர்வுமே ஆகும். நாம் சரியாகத் தான் பேசுகிறோம் என்ற நேர்மறை எண்ணம் வந்து விட்டால், மொழியினால் வரும் இந்த திக்கலை சரிசெய்து விடலாம் என்பது என் கருத்து.

பெண்களைக் கண்டால் மட்டும் திக்கும் சிலரைக் கண்டிருப்போம். அவர் மற்றவர்களிடம் மிகச் சரியாகத் தான் பேசுவார்கள். இதற்குக் காரணம் சிறுவயது முதல் எதிர்பாலினம் குறித்து சரியான புரிதல் இல்லாததும், அவர்களுடன் அதிகம் பேசாததும் தான். 

நம்மூரில் இன்னொரு மன வியாதி உள்ளது. ஆங்கிலத்தில் சரிவர பேசாமலோ, சில சொற்களை தவறாக உச்சரித்தோ பேசுபவர்களை கேலி செய்வது. இவ்வாறு கேலி செய்பவர், கண்டிப்பாக அவர் குறையைக் கலைய முயல்வதில்லை. மாறாக, உளவியல் ரீதியாக மேலும் அவர் பாதிக்கப்பட ஏதுவான சூழலை உருவாக்கி விடுகிறார்கள். 

சிறுவயதில், திக்கிப் பேசும் குழந்தைகளுக்கு அவர்கள் குடும்பத்தினர், குறிப்பாக பெற்றோர் உறுதுணையாக இருப்பது அவசியம். மற்றவர் கேலி செய்தாலோ, எள்ளி நகையாடினாலோ பாதிக்கப்படும் குழந்தையின் மனது பெற்றோர்களால் கண்டிக்கப்படும் போது மேலும் பாதிக்கப்படும். மற்றவர் போல் வேகமாகப் பேசவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த திக்கல் அதிகமாகிறது. மெதுவாகப் பேசும் முறை (Slow Speech therapy) மூலம் திக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

இன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்... உலகில் சுமார் 70மில்லியன் மக்கள் இந்தக் குறைபாட்டுடன் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் மக்கள் திக்குவதாக இந்திய திக்குவாய் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இவர்களுக்காக நாம் அனைவரிம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உதவி செய்யாவிடினும், கேலி செய்யாமல் இருப்போம். 

Don't make fun out of Stammering / Stuttering. Its not funny.

திக்குவாய் பிரச்சினை கொண்டு அதைக் கடந்து புகழ்பெற்றவர்களுள் சிலர்.

லூயிஸ் கரோல் - ஆலிஸ் இன் தி வொண்டர்லேண்ட் நாவலாசிரியர்
ஐசக் நியூட்டன் - அறிவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர்
வின்ஸ்டன் சர்ச்சில் - இங்கிலாந்து பிரதமர், சிறந்த பேச்சாளர்...!

மெர்லின் மன்றோ - அமெரிக்க நடிகை 
சாமுவேல் எல் ஜாக்சன் - அமெரிக்க நடிகர்
டைகர் உட்ஸ் - கால்ஃப் வீரர்

டைகர் உட்ஸ் - கால்ஃப் வீரர் (திக்குவாயினால் சிறு வயதில் பாதிக்கப்பட்ட இவர், இன்று அதற்கான சிகிச்சை அளிக்கும் / விழிப்புணர்வு அளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்)

திக்குவதைக் கவனிப்பதை தவிர்ப்போம்... அவர்கள் எப்படி சொல்கிறார்கள் எனபதை விடுத்து என்ன சொல்கிறார்கள் என கவனிப்போம்.

- கணபதிராமன்



Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka