ஜேசன் லூயிஸ் - Jason Lewis

நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்களை உலகத்தில் யாரோ சிலர் எங்கோ முயன்று கொண்டுதானிருக்கிறார்கள். உலகத்தை எந்த எரிபொருள் துணையில்லாமல் சுற்றி வருவது சாத்தியமானதா? முயன்றால் முடியாதது இல்லை என்கிறார் ஜேசன் லூயிஸ். 

ஜேசன் லூயிஸ் இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷியர் பகுதியைச் சார்ந்தவர். 13 செப்டம்பர் 1967 அன்று பிறந்த ஜேசன் லூயிஸின் பள்ளிப் பருவம் அனைவரைப் போல சாதாரணமாகவே இருந்தது. இவரின் நண்பர் ஸ்டீவி ஸ்மித் மற்றும் அவரின் தந்தை ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோரின் தூண்டுதல் மற்றும் இயற்கையின் மீது அவர்களின் பார்வை ஜேசனின் உலகைப் புரட்டிப் போடுவதாய் இருந்தது. ஸ்டூவர்ட் ஸ்மித் தனது கனவுப் பயணமான 'பெடல் ஃபார் த பிளானெட்' (Pedal for the Planet) பற்றி ஜேசன் மற்றும் ஸ்டீவியிடம் பேசிய வண்ணம் இருப்பார். இதற்காக நிதி திரட்டவும் ஆரம்பித்திருந்தார் ஸ்டூவர்ட். பின்னாளில் அந்த நிதியே ஜேசனின் பயணமான 'எக்ஸ்பெடிஷன் 360' (Expedition 360)க்கு ஆதாரமாக அமைந்தது. 
ஜேசன் லூயிஸ் 
12 ஜூலை 1994ல் நண்பன் ஸ்டீவியுடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருந்தார் ஜேசன் லூயிஸ். பயணத்தில் ஒரே விதிதான் : எந்த எரிபொருள் கொண்டியங்கும் வாகனமும் உபயோகிக்கக் கூடாது. மனித உழைப்பினால் மேற்கொண்ட பயணமாய் அமைய வேண்டும். ஸ்டீவியும் ஜேசனும் இங்கிலாந்தில் இருந்து மிதிவண்டி மூலம் பிரான்ஸ், ஸ்பெயின் வழியே போர்ச்சுகல் அடைந்திருந்தனர். 13 அக்டோபர் 1994 அன்று போர்ச்சுகலின் லாகோஸ் துறைமுகத்திலிருந்து தங்களின் 'மோக்‌ஷா' படகு மூலம் அமெரிக்கா நோக்கிய கடல் பயணத்தைத் துவங்கினர் ஜேசன் மற்றும் ஸ்டீவி. மோக்‌ஷா படகு ஒரு மிதிப்படகு ஆகும். 4500 மைல்கள் தொலைவை 111 நாட்களில் கடந்து மியாமி கடற்கரையை அடைந்தனர். 

ஜேசன் அங்கிருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நோக்கி காலணி உருளி (Roller skate) துணையுடன் பயணத்தைத் தொடர்ந்தார். அதுவரை அவரது திட்டம் போல சென்று கொண்டிருந்த பயணம், கொலராடோவின் பியூப்லோவில் எதிர்பாரா திருப்பம் கொண்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்த ஒருவனால் இடிக்கப்பட்டு கால் முறிவினால் ஒன்பது மாதங்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜேசன். ஜேசனின் விபத்து பற்றி அறிந்ததும் உடனே அங்கு விரைந்தார் ஸ்டூவர்ட் ஸ்மித். இந்த விபத்து முடிவல்ல சிறு சறுக்கலே எனக் கூறி ஊக்கம் அளித்தார் ஸ்டூவர்ட். 

முழுதாக குணமடைந்ததும் தன் பயணத்தை விட்ட இடத்திலிருந்து துவங்கிய ஜேசன், மிகவும் பிரபலமாகி இருந்தார். இவரின் பயணம் மற்றும் விபத்து குறித்து அறிந்த பலர், நிதியுதவி, பொருளுதவியும் செய்ய முன்வந்தனர். பயணத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை அடைந்த ஜேசன், கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஸ்டீவியுடன் மோக்‌ஷா படகில் ஹவாயின் ஹிலோ நகரை அடைந்தார். அத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டார் ஸ்டீவி. ஜேசன் மேலும் மனம் தளராது தன் பயணத்தைத் தொடர்ந்தார். 4 நாட்களில் ஹவாய் தீவின் 80மைல் தொலைவைக் கடந்த ஜேசன், அங்கிருந்து தனி ஆளாய் மோக்‌ஷா தராவா தீவு நோக்கி பயணித்தார். 73 நாட்களில் தராவா அடைந்த ஜேசன், பசிபிக் பெருங்கடலை மிதிப்படகில் கடந்த முதலாமவரானார். 
தராவில் இருந்து 1300 மைல் தொலைவில் உள்ள சாலமன் தீவுகளுக்கு மோக்‌ஷா படகின் வடிவமைப்பாளர் கிறிஸ் டிப்பருடனும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கான 1450 மைல் தொலைவை நண்பர் ஏப்ரல் அப்ரிலுடனும் கடந்தார் ஜேசன். 
2001 ஆம் ஆண்டு, ஜேசன் மற்றும் பயண ஆதரவுக் குழுவினர் சிலருடன் இணைந்து 88 நாட்கள் ஆஸ்திரேலியாவில் 3500 மைல்கள் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டார். குக் டவுனில் ஆரம்பித்த பயணம் டார்வின் நகரில் முடிவுற்றது. சுமார் நான்கு வருடங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி தன் பயணம் தொடர நிதி திரட்டிய ஜேசன், மீண்டும் 2005ல் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஜேசன் மற்றும் பயண ஆதரவாளர் லூர்டஸ் அரேங்கோ 450மைல் தொலைவில் உள்ள கிழக்கு திமோர் தீவு நோக்கி மோக்‌ஷாவை செலுத்தினர். 2005 முழுதும், ஜேசன் கிழக்கு திமோரில் இருந்து சிங்கப்பூர் வரை உள்ள இந்தோனீசியாவின் பல தீவுகளுக்குத் துடுப்புப்படகு மூலம் பயணம் செய்தார்.
ஜேசன் துடுப்புப்படகில்

2006 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து மிதிவண்டி மூலம் மலேசியா, தாய்லாந்து, மியான்மர் வழியாக இந்தியா அடைந்தார் ஜேசன். இமயமலையின் சில பகுதிகளை மலையேறிக் கடந்த ஜேசன், 2006ன் இறுதியில் மும்பையை அடைந்தார். 

ஜேசன் லூயிஸின் பயண வரைபடம்
ஜேசனுடன் துணையாய் இணைந்த இந்திய பயண ஆர்வலர் ஷேர் தில்லன் ஆகியோர் மோக்‌ஷா படகில் அரபிக்கடலைக் கடந்து ட்ஜிபோத்தி நாட்டை அடைந்தனர். அங்கிருந்து எத்தியோப்பியா, சூடான், எகிப்து வழி சிரியா அடைய திட்டமிட்ட ஜேசனுக்கு சூடான் கடக்கும் போது சில தடையை சந்திக்க வேண்டி இருந்தது. சூடானில் இருந்து நைல் நதி வழி எகிப்தில் நுழைய முயன்ற ஜேசனை ஒற்றன் என சந்தேகித்து எகிப்து நாடு கைது செய்தது. விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட ஜேசனுக்கு மிதிவண்டி மூலம் எகிப்தைக் கடக்க தடையும் விதிக்கப்பட்டது. தடையை மீறி இரவில் பயணம் செய்து எகிப்தில் இருந்து சிரியா வந்தடைந்தார் ஜேசன். ஜூலை 2007ல் சிரியாவில் மீண்டும் தன் மிதிவண்டிப் பயணம் துவங்கிய ஜேசன், துருக்கி, பல்கேரியா, ரோமானியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பெல்ஜியம் வழி இங்கிலாந்து வந்தடைந்தார். 
மோக்‌ஷா படகு - லண்டன் கிரீன்விச் பகுதியில் பயண முடிவின்போது
6 அக்டோபர் 2007 அன்று தான் பயணம் துவங்கிய கிரீன்விச் பகுதியை அடைந்த ஜேசன், 13 வருடம் 3 மாதங்களில் 46,505 மைல்கள் (74,408 கிமீ) தூரம், 37 நாடுகள் பயணம் செய்திருந்தார். தன் பயணத்தின் ஒரு பகுதியாக தான் சென்ற நாடுகளில் உள்ள சுமார் 900 பள்ளிகளில் உலகக் குடியுரிமை, சுழி கரியுமிழ்வுப் பயணம், இயற்கை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது 2 முறை மலேரியாத் தொற்று, செப்டிசீமியா நோயாலும் பாதிக்கப்பட்ட ஜேசன், 2005ன் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் முதலையாலும் தாக்கப்பட்டிருந்தார்.

இந்த சரித்திரப்புகழ் மிக்க பயணத்தின் அனுபவங்களை எக்ஸ்பெடிஷன் என்ற புத்தகமாய் எழுதியுள்ள ஜேசன் லூயிஸ், தொடர்ந்து நீராதார பராமரிப்பு, கரியுமிழ்வுத் தடுப்பு, புவி சூடாதல் குறித்து தொடர்ந்து எழுதியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார். 
ஸ்டூவர்ட் ஸ்மித் (1937 - 2016)
இந்தப் பயணத்திற்கு காரணமாயிருந்த ஸ்டூவர்ட் ஸ்மித் சென்ற மாதம் புற்றுநோயால் இறந்தார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

- கணபதிராமன்

Comments

  1. Travelers are always great.they explore many things and they following their dreams.thanks ganapathi u r introducing me a book to read...(wish list)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka