நுண்கதை : மனசாட்சி - Micro story
சிறிய சங்கேத ஒலியுடன் அனைத்து இருக்கையின் மேலுள்ள 'சீட் பெல்ட்' விளக்கு எரிந்தது. சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் நேரம் சுந்தர் ஜன்னலின் வழி ஒரு வருடமாய் பிரிந்திருந்த தன் நாட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஏர் ஹோஸ்டஸ் அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா, சீட் நேராக உள்ளதா என சோதித்து விட்டு, தன் இருக்கையில் அமர்ந்தாள். சுந்தரின் முன்னே அமர்ந்திருந்தவர் மீண்டும் தன் சீட் புஷ்பேக்கை பின் தள்ளிவிட்டு அமர்ந்தார். சுந்தர் "சீட் ஸ்ட்ரெயிட்டா வைங்க..." எனக் கூற, முன்னிருக்கை ஆசாமி தன் காதில் விழாதது போல் கண்மூடி தூங்கியபடி இருந்தார்.
வங்காள விரிகுடாவின் மேல் சென்று, சென்னை விமான நிலையம் நோக்கித் திரும்பியது விமானம். அடையாறு, இடிந்த பாலம், ஐஐடி, ரேஸ் கோர்ஸ், கத்திபாரா மேம்பாலம் எல்லாம் பின்னோக்கிப் போக, விமானம் ஓடுபாதையில் நுழைந்தது. லேண்டிங் கியர் ஓடு பாதையில் பட்டு நிலைம விசையில் வேகமாய் ஓடியது விமானம். உடனே, கிளிங் கிளிங்கென ஒத்திசையாய் நூறு ஒலிகள் ஒருங்கே ஒலித்தன. வேறென்ன... சீட்பெல்ட் ஓசை தான். விமானம் ஓடிக்கொண்டிருக்கும் போதே கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து தங்கள் உடைமைகளை மேலடுக்கிலிருந்து எடுத்துக் கொள்ள முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் தங்களை வரவேற்கிறது எனக் கூறி - தட்பவெப்பநிலை சொல்லிய விமான கேப்டன், விமானம் முழுதாக நிற்கும் வரை இருக்கையிலிருந்து யாரும் எழுந்திருக்க வேண்டாம் என்று அறிவித்துக் கொண்டிருப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
சுந்தர் அருகே அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் பிரச்சினையோ, ஏன் அனைவரும் இப்படி எழுந்தனர் எனப் புரியாமல் வியப்பும் கலவரமும் கலந்து பார்த்துக் கொண்டனர்.
'அடேய்...! சக இந்தியனுங்களா... மத்த நாட்டுக்காரன் முன்னாடி மானத்த வாங்குறீங்களேடா...!' என நினைத்துக் கொண்டே அடித்துப் பிடித்து தனது கைப்பைகளை எடுத்துக் கொண்டு - வரிசையில் முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஆட்டுமந்தையைப் பார்த்தான் சுந்தர். திடீரெனத் திடுக்கிட்டான்.
தானே அந்த ஆட்டுமந்தையில் நிற்பது போல் இருந்தது. உண்மை அதுதான். தனது கைப்பைகளை எடுத்துக் கொண்டு இருக்கைகளுக்கு நடுவே வரிசையில் நின்று கொண்டிருந்தான் சுந்தர். விமான இன்னும் நின்றிருக்கவில்லை.
'நாம மத்தவன சொல்லிக்கிட்டு இருக்கோம். நம்ம ஆளே இப்படித்தான் இருக்கான், நாடு வாழ்க... வந்தே மாதரம்...!' எனப் புலம்பிக் கொண்டே சுந்தரை நோக்கித் தாவியது அவன் மனசாட்சி.
- கணபதிராமன்
அன்னே அது நீங்கள் தான்
ReplyDeleteHahaha.....semo po....
ReplyDeleteGanapthiiiku innoru Peru iruku, sundhar...😃😃😃super machi🤗
ReplyDelete