அன்னி பெசன்ட் - ANNIE BESANT

பெண்ணின் கல்வி எவ்விதம் அவளை மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது என்பதற்கு ஆகச் சிறந்த சான்றானவர் அன்னி பெசன்ட் அம்மையார்.
அயர்லாந்து நாட்டைப பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிறந்து - தனது ஐந்து வயதில் தந்தையை இழந்து - தாயாலும் கைவிடப்பட்ட அன்னி வுட்டுக்கு ஆதரவாய் வந்தவர் எல்லன் மேரியட் (Ellen Marriot) எனும் தாயின் தோழியே. வெறும் அடைக்கலம் மட்டும் தராமல், சிறந்தக் கல்வியையும் சேர்த்து அன்னிக்கு அளித்து வளர்த்தார்  ஒரு பெண் தனி மனிதியாய் சமூகத்தில் நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அதற்கு சிறந்த கல்வியும் தெளிந்த பார்வையும் அவசியம் என்றும் அன்னிக்கு போதித்தார்  எல்லன்.
சிறந்த பள்ளிக் கல்வி மட்டுமல்லாது, பல புத்தகங்களின் மூலம் தனது அறிவின் பரப்பை விரிவாக்கிக் கொண்ட அன்னி வுட், தன் பதின்ம வயதின் இறுதிகளில், ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு சென்று தன் பயண அனுபவங்கள் மூலமும் பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார். புத்தகம் மூலம் உலகத்தையும், பயணம் மூலம் தன்னையும் கண்டறிந்தார் அன்னி வுட். 1867 ஆம் ஆண்டு தனது 20ஆம் வயதில், பிரான்க் பெசன்ட் எனும் இறை சேகவரை மணந்தார். ஆனால், இந்தத் திருமணம் வுட்டிலிருந்து பெசன்ட்டாக மாறிய அன்னிக்கு மலர்த்தோட்டமாய் இருந்திருக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே சிப்ஸி எனும் ஊருக்கு கிராம போதகராய் சென்றார் பிரான்க். இரு வருடங்களில் இரு குழந்தைகள் பெற்ற பெசன்ட் தம்பதியினரின் வாழ்வில், பணம், சுதந்திரம், அரசியல் பார்வை போன்றவற்றில் இருந்த கருத்து வேறுபாடு அவர்களது திருமணத்தை முறிக்கப் போதுமானதாக இருந்தது.

இங்கிலாந்தில் அன்னி பெசன்ட்
அன்னி பெசன்ட் சிறுகதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் கிடைத்த பணம் முழுதும் பிரான்க் பெசண்டுக்கு சென்றது. அக்காலத்தில், பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. பெண்களின் உடமையும் கணவனுக்கே சென்றடையும். சிப்ஸியில் தோட்டத் தோழிலாளிகள் சங்கம் அமைக்க - வாழ்வுரிமை மேம்பாடு மற்றும் சம்பள உயர்வுக்கு போராடிய தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அன்னி பெசன்ட் குரல் கொடுத்தார். தோட்ட முதலாளிகளுக்கு ஆதரவாய் இருந்த பிரான்க் பெசன்ட்டுக்கு இது பிடிக்காததாகவும், அவமானமாகவும் அமைந்தது. மனங்களிம் முரண்பாடு - வாதங்களின் வெளிப்பாடு - மணத்தின் முறிவாய் மாறிப் போனது. 1873ல் அன்னி பெசன்ட் கணவனைப் பிரிந்து, தன் மகளுடன் லண்டனுக்குச் சென்றார். இந்த ஏழு வருட திருமண வாழ்வு அவருக்கு மதக் கோட்பாடுகள் மீது கேள்வி எழுப்புவதாக இருந்தது.

லண்டனில் பிர்க்பெர்க் இலக்கியம் மற்றும் அறிவியல் கழகத்தில் பகுதி நேரமாக படித்த அன்னி பெசன்ட்டின் மதம் மற்றும் அரசியல் தொடர்பான செயல்பாடுகள், எழுத்துப் பிரசுரங்கள் பெரும் விவாதத்தைத் தோற்றுவிப்பதாக இருந்தது. இதனால், இவரது ஆய்வுக் கட்டுரைகள் கழகத்தின் தலைவர்களால் பிரசுரிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டன. கட்டுரைக்கு மட்டுமே தடை, எதிர்ப்பு எழுந்தும் எரியும் தீக்கனலாய் எரிந்த மன ஓட்டங்களுக்கு ஏது தடை என முன்னேறிச் சென்றார் அன்னி.

தொடந்து கருத்து சுதந்திரம், பெண் விடுதலை, மதச்சார்பின்மை, பிறப்புக் கட்டுப்பாடு, சமூக ஒற்றுமை, தொழிலாளர் உரிமை போன்ற பல காரணங்களுக்காகப் போராட துவங்கிய அன்னி பெசன்ட்டின் வார்த்தைகளும், எண்ணங்களும் இங்கிலாந்தில் தாக்கத்தை உருவாக்கின என்றால் அது மிகையாகாது. பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களைப் பற்றி உலகத்தின் கேலிகளை (அதுவும் விவாகரத்தான பெண்ணைப் பற்றிய தூற்றுகளை) மதியாது தன் மனதிற்கு சரியெனப்பட்டதை எழுத்து - பேச்சு - செயலாய் மாற்றித் தன்னைத் தானாய் செதுக்கிக் கொண்டிருந்தார் அன்னி.

இங்கே மூன்று நிகழ்வுகளைக் கூற விழைகிறேன்.

  1. 1877 - சார்லஸ் நோல்டன் புத்தக விவகாரம்
  2. 1888 - லண்டன் தீப்பெட்டி மகளிர் வேலை நிறுத்தம்
  3. 1914 - இந்திய சுயாட்சிக்கான குரல்
1877 - சார்லஸ் நோல்டன் புத்தக விவகாரம்:
சார்லஸ் நோல்டன் என்ற அமெரிக்க மருத்துவர், 1832 ஆம் ஆண்டு எழுதிய "Fruits of Philosophy" எனும் புத்தகம் பல தேவாலயங்களால் தடை செய்யப்பட்டது. உடல்கூற்றியல், ஆண் பெண் உறவு, பிறப்புக் கட்டுப்பாடு குறித்து விவரித்த இந்த புத்தகம், கிறித்துவக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், குடும்ப ஒற்றுமையை சீர்குலைத்து மக்களிடையே தவறான எண்ணங்களை விதைப்பதாகவும் உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் கைதும் செய்யப்பட்டார் சார்லஸ். 1850 ஆம் ஆண்டு உயிர்நீத்தார் சார்லஸ் நோல்டன். இவர் இறந்து 27 வருடம் கழித்து 1877ல் அன்னி பெசன்ட், தன் நண்பர் சார்லஸ் பிராட்லாஃப் உடன் இணைந்து அந்தப் புத்தகத்தை இங்கிலாந்தில் மறு பிரசுரம் செய்தார். மேலும், இந்தப் புத்தகம் கூறுவதான "நடுத்தர மக்கள் மேம்பட்ட வாழ்விற்கு தங்கள் குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குப் பிறப்புக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு தேவை" என்பதை மேற்கோள் காட்டி அன்னி எழுதிய கட்டுரை அப்புத்தகத்தை நிறைய பேருக்குக் கொண்டு சேர்த்தது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் விற்பனையான அந்தப் புத்தகம், 1877 ஆம் ஆண்டு 1,25,000 பிரதிகள் விற்று, சிறந்த விற்பனை நூலாக மாறிப் போனது. இது கத்தோலிக்க சபை மற்றும் பல தேவாலயங்களால் எதிர்க்கப்பட அன்னி பெசன்ட் மற்றும் சார்லஸ் பிராட்லாஃப் கைது செய்யப்பட்டனர். மக்கள் மற்றும் கருத்தாளர்களின் ஆதரவுக் குரலால் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். எழுத்து - கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாய் இதைக் கருதிய அன்னி பெசன்ட்டிற்கு இந்த வழக்கால் தன் குழந்தையை நிரந்தரமாய் கணவனிடம் விட்டுத்தர வேண்டியதாயிற்று. 

தனது நண்பர் ஹெர்பர்ட் பர்ரோஸுடன் இணைந்து பிரையண்ட் மே தீப்பெட்டி தொழிற்சாலையில் நிகழும் நாளுக்கு 14 மணிநேர கடும் வேலை - குறைந்த ஊதியம் - வெண்பாஸ்பரஸ் வேதிப் பொருளால் பாதிப்பு - இழப்பீடு குறித்து முதலாளி காட்டும் அலட்சியம் ஆகியவை கண்டித்து பத்திரிக்கையில் தலையங்கம் எழுதினார் அன்னி பெசன்ட். இந்தக் கட்டுரையால் கோபமடைந்த பிரையண்ட், தன் தொழிற்சாலையில் பணி புரியும் பெண்களை இக்கட்டுரைக்கு எதிராக கையொப்பமிடுமாறு மிரட்டினார். இதற்கு மறுத்த ஒரு பெண் தொழிலாளி வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில பெண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதலில் இவர்களை மிகச் சாதாரணமாக நினைத்த பிரையண்ட், சில நாட்களில். முழுத் தொழிற்சாலையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது கண்டு மிரண்ட பிரையண்ட், மற்ற தொழிலதிபர்களையும் அரசியல்வாதிகளையும் ஆதரவிற்கு அழைத்தார். மக்கள் ஆதரவு மகளிர் தொழிலாளிகளிடம் இருந்தது. அதுவரை இதுபற்றி அறியாதிருந்த அன்னி பெசன்ட், வேலைநிறுத்தம் பற்றி கேள்விப்பட்டு தானும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, பிரையண்டை தொழிலாளிகளின் கோரிக்கையை ஏற்கவும் வைத்தார். பின்னாளில், மகளிரால் பிரையண்ட் மே தீப்பெட்டி தொழிற்சாலைக்கு எதிராக புதிதாய் தீப்பெட்டி தொழிற்சாலை துவங்கப்பட்டது. 

1914  - இந்திய சுயாட்சிக்கான குரல்:

இந்தியாவில் அன்னி பெசன்ட்
முதல் உலகப்போரின் போது இங்கிலாந்து தனக்கு ஆதரவாகப் பேசுமாறு அன்னி பெசன்ட்டிடம் கோரிக்கை விடுத்தது. 1900ன் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு வந்திருந்த அன்னி பெசன்ட், சென்னை அடையாறில் இறைஞான சங்கம் துவங்கி இந்தியராகவே மாறியிருந்தார். இங்கிலாந்தின் கோரிக்கையை மறுத்த அன்னி பெசன்ட், முதலில் இந்தியாவுக்கு சுயாட்சி வழங்கிவிட்டு, பின்னர் ஆதரவு கோருமாறு பதிலளித்தார். இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் அன்னி பெசன்ட்டின் இந்த கூற்று பேரலையை உருவாக்கியது. பாலகங்காதர திலகருடன் இணைந்து சுதந்திரம் மற்றும் சுயாட்சி குறித்த இவரின் பேச்சுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எரிச்சல் மூட்டுவதாய் இருந்தது. இதனால் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட அன்னி பெசன்ட், அங்கும் சிவப்பு மற்றும் பச்சை நிற அன்றைய இந்தியக் கொடியேற்றியது - அங்கும் சுதந்திரம் குறித்து பேசியது இந்திய மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டுவதாக அமைந்தது. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஒன்றிணைந்து அன்னி பெசன்ட்டை விடுவிக்கப் போராட்டம் நடத்தின. விடுவிக்கப்பட்ட அன்னி பெசன்ட் 1917 முதல் ஒரு வருடம் காங்கிரஸின் தேசியத் தலைவராக இருந்தார். 1933 ஆம் ஆண்டு தானிறக்கும் வரை இந்திய சுயாட்சி, சுதந்திரத்திற்காக பேச்சு, எழுத்து, செயல் மூலம் போராடிய படியே இருந்தார் அன்னி பெசன்ட். 

இன்று அன்னி பெசன்ட்டின் பிறந்த நாள். 

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka