திகழொளி - குறள் கதை

 திகழொளி

- முடிவிலி

மர்ந்திருந்த மக்கள் எழுந்து, ஏறைக்கோனுக்கு வாழ்த்து சொல்லி மெல்லக் கலையத் துவங்கினர். தலைமைக் காவலர் கடம்பர் தன் காவற்படையிடம், கயிற்றால் கட்டப்பட்ட இருவரையும் சிறைக்கு அழைத்துச் செல்லப் பணித்தார். மன்னரிடம் நின்று பேசிக் கொண்டிருந்த மாடன், நடப்பதெல்லாம் நனவா என நம்பாதவனாய்த் தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான். அதைக் கவனித்த ஏறைக்கோன், சிரித்துக் கொண்டே, "உண்மையா எனக் கிள்ளிப் பார்க்கிறாயா? இன்னும் நம்பவில்லை எனில் என்னைத் தொட்டுப் பார்" எனக் கையை நீட்டினார்.

"நம்புறேன் மன்னா, நம்புறேன்" என்ற மாடன், அழைத்துச் செல்லப்படும் இருவரையும் பார்த்தபடி, "மன்னா, இதெல்லாம் உங்ககிட்ட கேக்கலாமான்னு தெரியல?" என்று இழுத்தான்.

"நாட்டையே காத்துக் கொடுத்திருக்கிறாய், என்ன கேட்க வேண்டும், கேள் மாடன்" என்றார் ஏறைக்கோன். சொல்லத் துவங்கினான் மாடன்.

****

ழக்கம் போல் அன்றும் ஏறைக்கோனின் அரசவை மன்றம் கூடியது. காலையில் கோயிலின் வாயிலில் நிகழ்ந்தவை அமைச்சர்கள் உள்ளிட்ட அவையில் குழுமியிருந்த அனைவரின் பேசுபொருளாக இருந்தமையால், புரியாத ஒரு மெல்லிரைச்சலில் மன்றம் மூழ்கியிருந்தது. ஏறைக்கோன் எழுந்து நின்று தனது செங்கோலால் தரையில் இடிக்க, இரைச்சல் நின்று மொத்த அவையின் கவனமும் மன்னர் மீது குவிந்தது.

"காலை நிகழ்ந்தவை அனைத்தும் அறிவீர் என்பது தங்களின் பதற்றத்திலிருந்தும், சில நொடி முன் அவை நிறைந்திருந்த இரைச்சலில் இருந்தும் அறிகிறேன். என்று திமோரதனின் தூது இந்த மன்றத்திற்கு வந்து வெறுங்கையோடு திரும்பினானோ அன்றே இதைப் போல் நிகழும் என்பதை அறிந்திருந்தேன்" என்று கூறிய மன்னர், கடம்பரைப் பார்த்துத் தலையசைக்க, கடம்பர் தனது படையின் காவலரிடம் கையசைக்க, காவலர் அவைக்கு வெளியே சென்றனர். அவையிலிருந்தோர் பார்வை மன்றத்தின் வாசலில் யார் வரப் போகிறார் என்பதிலேயே நிலைத்திருந்தது. 

"என்ன தான் அறிந்திருந்தாலும், நிகழும் போது எதிர்க்கத் துணிவுடன் காத்திருந்தாலும், வீறிட்டு ஓடிடும் வண்டி நகர்ந்திட சிறு ஆணியின் உதவி போல, பெரும் முற்றுகை அதுவும் நமது செவ்வூரின் உள்ளிருந்தே நிகழ்வதைத் தகுந்த நேரத்தில் தலைமைக் காவலரின் கவனத்துக்குக் கொண்டு வந்து இன்று காலை நிகழ்ந்த சிறையெடுப்புக்கு உதவியவருக்கு இந்த ஏறைநாடே நன்றிக்கடன் பட்டுள்ளது. தக்க நேரத்தில் உதவி செய்தவர் இதோ நம் முன்னே" என்று மன்னர் அறிவித்து அவையின் வாசலை நோக்கிக் கை காட்ட, மன்றத்தின் உள்ளே காவலர்களால் அழைத்து வரப்பட்டான் மாடன். 

அனைவரின் பார்வையும் தன் மேல் விழுவதை உணர்ந்து சற்று மிரண்டவனாய் அவையின் இருபுறத்தையும் பார்த்தவனாய் நின்றிருந்தான் மாடன். புதிய ஆடைகள் அணிந்து நேற்று வரை பார்த்த மாடனா என மன்றமே வியந்து பார்க்க, மாடனும் இத்தனை பேர் குழுமியிருக்கும் அவையைக் கண்டு மிரண்டு தான் போயிருந்தான். மாடனின் பதற்றத்தை உணர்ந்த மன்னர், கடம்பரிடம் சொல்ல, கடம்பர் சென்று அவன் கைப்பற்றி அழைக்க, மன்னர் தனது கைகளைத் தட்ட, மொத்த மன்றமும் எழுந்து நின்று மாடனுக்கு மதிப்பளித்து கரவொலி எழுப்பினர். கடம்பர் மாடனை அழைத்து வந்து தனக்கு அருகிலே இருக்கை அமைத்து அமர வைத்தார். உள்ளே நுழைந்ததிலிருந்து மாடனின் கைகள் கூப்பியவாறு, வணங்கியபடியே இருந்தது. மாடனின் விழிகள் மன்னரின் மேல் நிலைத்திருந்து இமைக்க மறந்திருந்தன. ஏறைக்கோன் மாடனைப் பார்த்து ஆதரவாய்த் தலையசைக்க, மாடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று பேசலானான்.

"மன்னருக்கு வணக்கமுங்க, இங்க இருக்குற எல்லாருக்கும் வணக்கமுங்க. இவ்ளோ கைதட்டிக் கொண்டாடுறதுக்கு என்ன செஞ்சுட்டேன்னு தெரியல. மாட்டுக்காரப்பயலுக்கு என்ன தெரியும்னு நான் சொன்னதை நம்பாம கூட போயிருக்கலாம். ஆனா, நான் சொன்னதை நம்புனதுக்கு நம்ம கடம்பர் ஐயாவுக்குத் தான் நான் நன்றி சொல்லணும். கோயில் வாசல்ல நம்ம மன்னரைப் பாத்ததும், அவரு என்கிட்ட என் பேரு சொல்லிப் பேசுனதும் இந்த நாள என்னிக்கும் மறக்கமுடியாதுங்க. இத்தனை பேரு முன்ன எனக்கும் ஒரு எடம் குடுத்து உக்கார வச்சதெல்லாம் நம்ம நாடு தவிர வேற எங்கயும் நடக்காது. எல்லாம் நம்ம மன்னரால தான். நான் ஏற்கனவே நம்ம மன்னர் கிட்ட ஒன்னு கேட்டிருக்கேன், அதை நானே இங்க எல்லாரு முன்னயும் சொல்லணும்னு சொன்னாரு" என்று சொல்லிய மாடன், ஏறைக்கோனை ஏறிட்டுப் பார்த்தான்.

ஏறைக்கோன் தனக்கே உரிய புன்னகையோடு, "கூற வந்ததைக் கூறலாம், ஆனால், அதற்கு முன்..." என்று கூறி, கடம்பரை நோக்கித் தலையசைத்தார்.

கடம்பர் மீண்டும் தன் காவலரிடம் கையசைத்து குறியிட்டுக் காட்ட, காவலர்கள் மன்றத்துக்குள் சுப்ரமணியரையும், சேகரனையும் இழுத்து வந்தனர். இருவரும் உள்நுழைய மன்றத்தில் இரைச்சல் எழுந்து நிலை கொண்டது. அவைக்கு நடுவே வந்து நிறுத்தப்பட்ட இருவரின் பார்வையும் மாடன் மீதே நிலைத்திருந்தது. 

"பாத்தீங்களாப்பா, மாடனுக்கு வந்த வாழ்வு?" என்று சேகரன் சுப்ரமணியரிடம் முனுமுனுக்க, அவனைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்திருந்த காவலன், "ம்ம்ம், வாய மூடு" என்று கயிற்றின் இழுப்பைக் கூட்டினான்.  

"இப்போது கூற விழைந்ததைக் கூறலாம்" என்றார் ஏறைக்கோன், மாடனைப் பார்த்து.

"மன்னா, நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னது போல, உங்கள தாக்குரதுக்கும், நம்ம நாட்டை வட நாட்டுக்குக் காட்டிக் கொடுக்குறதுக்குத் தொண போனது பெரிய சாமி தானுங்க. இந்த சேகரன் என்ன அடிக்குறது, வாடா போடான்னு கூப்பிடுறதுன்னு செய்வானே தவிர சின்ன பையன், மன்னா" என்று மாடன் பேசிக் கொண்டிருக்க, "யாருடா சின்னப் பையன்?" என சேகரன் இடைமறிக்க, குழுமியிருந்தோர் சேகரனை நோக்கிக் கூச்சலெடுக்க, மன்றத்தில் குழப்பம் நிலவியது. அருகில் இருந்த சுப்ரமணியர், "பகவானே, இவன் ஊமையா இருந்திருக்கப்படாதோ, வாயை மூடிண்டு இருடா" என்றார் சேகரனைப் பார்த்து.

மன்னரின் கையசைவில் அவை மீண்டும் அமைதியடைய, மாடன் தொடர்ந்தான். "இப்பவும் சொல்றேன் சேகரன் சின்ன பையன் தான். நடந்ததுக்கு எல்லாம் காரணம் அவனோட அப்பா தான். திட்டம் போட்டது, உளவு பாக்க வந்தவங்க கூட பேசுனது எல்லாம் அவரு தான். இன்னிக்குக் காலையில வண்டியில வரும் போது தான் சேகரனுக்கு இப்படி நடக்கப் போறதே தெரியும். வண்டியில வச்சு சேகரன்கிட்ட சொன்னதை நானும் கேட்டுட்டு தான் வந்தேன். ஏற்கனவே அவனுக்குத் தெரிஞ்சிருந்தா எதுக்காக வண்டியில சொல்லணும்? என்ன தான் அவன் என்னைய மாடு போல நடத்திருந்தாலும், மன்னர் செய்யாத குத்தத்துக்கு அவனைத் தண்டிக்கக் கூடாதுன்னு கேட்டுக்குறேன், மன்னா!"

மன்றமே மாடன் சொன்னதைக் கேட்டு, அமைதியின் உச்சத்தில் இருந்தது. ஏறைக்கோனின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை அறிவதில் ஆவலாகவும் இருந்தது. ஏறைக்கோனின் முகத்தில் மாறாத புன்னகை தவழ, "செய்த உதவிக்கு மாறாக செல்வம், சொத்து, நிலம் எனக் கேட்கும் இந்த உலகில் தன்னைத் துன்புறுத்தியவன் என்று தெரிந்தும், அவன் செய்யக் குற்றத்துக்குத் தண்டிக்கப்படக் கூடாதெனும் மனம் கொண்டவரை நான் இதுவரை கண்டதில்லை மக்களே, காலையில் இதை இவர் சொல்லியபோது முற்றும் துறந்த முனிவர்களை விட உயர்ந்தவராய் இவரை உணர்ந்தேன். அவர் கேட்டது குறித்து பிறகு சொல்கிறேன், இப்போது இவருக்கு எனது பரிசு ஒன்றைத் தரவிரும்புகிறேன்", என்று சொல்லித் தனது அரியணையிலிருந்து எழுந்து, மாடனை நோக்கிச் சென்ற மன்னர் அவன் கையைப் பிடித்து, "சிலரின் மனத்தின் அளவும், அழகும் புறப் பார்வையில் நமக்குத் தெரியாமல் போகலாம், ஆனால், அவரின் செயல்களில் அவருடைய மனத்தில் திகழும் ஒளியானது விளங்கி விடும். இத்தகைய நல்மனம் கொண்ட இவருக்குத் திகழொளி என்று பெயர் சூட்டுகின்றேன். இன்று முதல் இவர் திகழொளி என்றே அழைக்கப் படுவார்" என ஏறைக்கோன் கூற, மன்றத்தில் குழுமியிருந்தோர் "திகழொளி, திகழொளி" என உரக்கக் கூற, மகிழ்ச்சியின் உச்சத்தில் விழிநீர் வழிய நின்றிருந்தார் திகழொளி.

"மன்னா, பன்னெண்டு ஆண்டா இவரு வீட்டுல வேலை பாக்குறன், என்னப் பெத்தவங்க எனக்கு என்ன பேரு வச்சாங்கன்னு கூட எனக்கு நெனவுல இல்ல, மாட்டப் பாத்துக்குறவனுக்கு மாடன்னு இவங்க சொன்னது தான் எனக்குப் பேரா இருந்துச்சு. இன்னிக்கு இந்த ஏறைநாட்டு மன்னர் வாயாலேயே எனக்குப் பேரு கிடைச்சுடுச்சு" என்ற திகழொளி, "தி க ழொ ளி" என்று தன் பெயரையே ஒருமுறை சொல்லிப் பார்த்தான்.

"செய்யாத தவறுக்குத் தண்டனையா? இல்லை. எனினும், சேகரனை வேழ நாட்டு எல்லையில் இருக்கும் படைத் தளபதியின் பொறுப்பில் - கண்காணிப்பில் இருக்கும் படி ஆணையிடுகிறேன். தவறு செய்த சுப்ரமணியருக்குச் செவ்வூரின் சிறைச்சாலையும், இதுவரை துரும்பைக் கூட எடுத்துழைக்காத அவருக்கு அங்கே கடும்பணிகளும் காத்திருக்கின்றன. இவை அனைத்தையும் விட இனி அவரது மகன் சேகரனை வாழ்நாள் முழுதும் பிரிந்திருப்பதை விட வேறு தண்டனையும் வேண்டுமா?" என்று ஏறைக்கோன் கூற, சேகரனும், சுப்ரமணியரும் இழுத்துச் செல்லப்பட்டனர். 

மகிழ்ச்சியின் உச்சத்தில் திகழொளி திகழ்ந்து கொண்டிருக்க, திகழொளியின் செயலை ஏறைநாடே பாராட்டிக் கொண்டிருக்க, ஏறைமலை பிறந்து செவ்வாறு, வளவாறு வளப்படுத்தும் ஏறைநாட்டைச் சூழ்ந்த சூழ்ச்சி வீழ்த்தப் பட்டாலும், அந்தச் சூழ்ச்சி நாட்டின் வடக்கே திமோரதனாக இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்திருந்தான் ஏறைக்கோன்.    




கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா 

செய்யாமை மாசற்றார் கோள். 

(அதிகாரம்: இன்னா செய்யாமை, குறள் எண்: 312)

தன் மேல் கறுவு கொண்டு கொடுமை செய்தவர்க்கும், பழிவாங்குவதாக இன்னாத செயல்கள் செய்யாதிருப்பது மாசு மருவற்ற சான்றோர்களின் குணமாகும்.  

ஏறைநாடு கதைகள :1: முன்னொரு காலத்தில்... | 2: ஆ...! | 3: யாருக்கு நீதி? | 4: அரண் | 5: வஞ்சசன்
























Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka