அந்தக் காசு - குறள் கதை
அந்தக் காசு
- முடிவிலி
"என்ன ரைட்டரே, மாலை எல்லாம் வாங்கி வச்சுட்டீங்க போல, எல்லாரும் வந்தாச்சா? இல்ல, எப்பவும் போல நைட் டூட்டி காலையில முடிஞ்சுதுன்னு போய்ட்டாங்களா?" என்று சொல்லிக் கொண்டே காவல் நிலையத்துக்குள் வந்த தலைமைக் காவலர், அவர் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவர் இருக்கைக்குப் பின்னே இருந்த அறை, கூட்டிப் பெருக்கி புதிய அறையாக மாறியிருந்தது. அறையின் அடுக்குகளில் பல கோப்புகள் அடுக்கப்பட்டு இருந்தது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியின் கீழே இருந்த 'ட' வடிவ மேசையில், ஒரு புறம் இருந்த கணிப்பொறியின் விசைப்பலகையும், திரையும் இப்போது தான் துடைக்கப்பட்டிருந்தது.
தலைமைக் காவலர் தனது இருக்கைக்கு முன் இருந்த உள்சிறையின் கதவுக்கம்பிகளின் ஊடே பார்த்துக் கொண்டிருக்க,
"ஐயோ சார்" "ஆ...." "அம்மா..." என்ற ஓசை அவர் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. விருட்டெனப் பாயும் உருண்ட கழிகளின் ஓசை அவர் செவியை நிறைத்தது. வலியில் துடிப்பவர் கதறலும், அவர்மீது ஊற்றப்பட்ட தண்ணீரின் ஓசையும்...
'டக்' என்ற ஓசை அவர் முன் இருந்த மேசையின் மீதிருந்து எழ, தன்னினைவடைந்தவரைப் பார்த்து, "சார், டீ" என்றான் சிறுவன், இரண்டு மாதம் ஊருக்குப் போயிருந்தவன் வந்து இரண்டு நாளுக்கு முன் தான் மீண்டும் டீக்கடையில் சேர்ந்திருந்தான்.
"டேய், இன்னிக்கு உன்னை டீ கொடுக்க அனுப்பக் கூடாதுன்னு உங்க ஓனர்கிட்ட சொன்னேன்லடா" என்றார் தலைமைக் காவலர்.
"ஏட்டய்யா, அதெல்லாம் கண்டுக்காதீங்க, இப்ப நீங்க கேளுங்களேன், எனக்கு வயசு என்னன்னு. டக்னு பதினெட்டுன்னு சொல்லுவேன். நான் பாத்துக்குறேன் சார்" என்றான் சிறுவன்.
'புது இன்ஸ்பெக்டர் வர்ற நேரத்துல இவன் வேற' என்று வாய்க்குள்ளே முனுமுனுத்த தலைமைக் காவலர், "டீ வச்சுட்டல்ல, போய்த் தொலடா" என்றார்.
"அதெப்படி சார், இன்னிக்குப் புது இன்ஸ்பெக்டர் வர்றாருல்ல, அவரையும் பாத்துட்டு ஒரு டீ கொடுத்துட்டுப் போறேன்" சிரித்துக் கொண்டே சொன்ன சிறுவன், "நம்ம ஸ்டேசன் சிங்கம் இப்ப எங்க சார்?" என்றான்.
"சின்னப் பயன்னு உன்ன உள்ள விட்டா, போடா, உனக்கெதுக்குடா அதெல்லாம்" என்று குரலை உயர்த்தியவர், சற்று குரலைத் தாழ்த்தி, "போடா, சத்தம் போட்டு கையில கம்பை எடுக்குறவன்லாம் சிங்கம் இல்லடா, உனக்குப் புரியாது, போய் உன் ஓனர்கிட்ட சொல்லு. இனிமே ஸ்டேசனுக்கு உன்ன அனுப்பக் கூடாதுன்னு, போ" என்று கூற, பையனும் சரியெனத் தலையாட்டி மற்றவர்களிடத்தில் தேநீர்க் குடுவைகளை வைத்துவிட்டு வெளியேறினான். தன் இருக்கையிலிருந்தபடி காவல் நிலையத்தின் வெளியே சென்று கொண்டிருந்த பையனைப் பார்த்துக் கொண்டிருந்தார் தலைமைக் காவலர்.
காவல் நிலையத்தின் உள்ளே வந்து கொண்டிருந்தான் கார்த்திக். நுழைந்தவன் தன் பார்வையைச் சுழல விட்டு, தலைமைக் காவலர் இருந்த திசை பார்த்து, "ஏட்டய்யா, பார்க்கணும்னு வீட்டுக்கு ஆள் அமிச்சிருந்தீங்களா? அம்மா சொல்லுச்சு" என்றான்.
"ஆமா, கார்த்தி, வா, அப்படி பெஞ்சுல உக்காரு. இன்ஸ்பெக்டர் தான் உன்ன கூட்டியாரச் சொன்னாரு. வீட்டுப் பக்கம் ஆளையே பாக்க முடியலையே"
"வேலை கிடைச்சுடுச்சு ஏட்டய்யா, அம்மா மொகத்துல இப்ப தான் இந்த ரெண்டு வாரமா சிரிப்பு பாக்குறேன், இன்னிக்கு வீட்டுக்குப் போலீஸ் வந்ததும், அந்தச் சிரிப்பு போயிடுச்சு, என்னமோ ஏதோன்னு கிடந்து அள்ளாடுது. நான் தான் நம்ம ஏட்டய்யா இருக்காருல்லன்னு சொல்லிட்டு வந்தேன், எதுக்கு வரச் சொன்னாங்கன்னு தெரியுமா, ஏட்டய்யா"
"தெரியலையே, உக்காருப்பா இன்ஸ்பெக்டர் வர்ற நேரம் தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மூன்று காவலர் புடை சூழ உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் ஆய்வாளர். தலைமைக் காவலர் எழுந்து நிற்க, நேரே அவரிடத்தில் வந்து நின்ற ஆய்வாளர், "ஏட்டு, அந்த housing board பையனை வரச் சொல்லிருந்தேனே, போயிக் கூட்டிட்டு வந்தாச்சா?" என்றார்.
"வந்துட்டான் சார், அதோ உக்காந்திருக்கான்"
"என்னது அவனே வந்தானா? ரொம்ப நல்ல பையன் போல"
"ஆமா சார், எப்படியோ படிச்சு இப்ப தான் வேலைல்லாம் கிடைச்சிருக்கு, தெரிஞ்ச பையன் தான்"
"ஓகோ" என்று சொல்லியபடி கார்த்திக் அருகே சென்ற ஆய்வாளர், "ரொம்ப நல்ல பையன் தானே, அப்புறம் ஏன் சார் அந்தப் பொண்ணைக் கொன்னீங்க?" என்ற ஆய்வாளரின் கை அடுத்த நொடி கார்த்திக்கின் கன்னத்தில் அறைந்தது.
சில நொடிகள் கண்ணுக்குள் மின்னல்கள் தெறிக்க, வலித்த கன்னத்தில் ஒரு கையையும், இன்னொரு கையைத் தனக்கும், ஆய்வாளர்க்கும் நடுவே நிறுத்தியபடி, "என்ன சார் சொல்றீங்க, எனக்கு எதுவும் தெரியாது, சார். வேணும்னா நான் வேலை செய்யுற கம்பெனியில வந்து கேட்டுப் பாருங்க" என்றான் கார்த்திக்.
"ஓ, ஆர்டர் போடுறீங்களோ, யோவ் 203 இவனைப் புடிச்சு உள்ளப் போடுய்யா" என்று சொல்ல, கார்த்திக்கின் கதறலும், புலம்பலும் யார் காதிலும் கேட்காது போயின. மேல் அலுவலரின் ஆணைக்குக் கட்டுப்பட்ட 203, கார்த்திக்கின் கையைப் பின்னால் பிடித்தபடி, உந்தித் தள்ளிச் சென்று, lockupல் தள்ளினார்.
தன்னுடைய அறையில் ஆய்வாளர் சென்று அமர, அவரிடம் முன்பு வந்து நின்று, "சார், உண்மையிலுமே நல்ல பையன் சார், இவனுக்கு இப்படி ஆச்சுன்னா அவங்க அம்மா உசுர விட்டுடும் சார், அவன் தான் கம்பெனியில இருந்தேன்னு சொல்றானே, நான் போயி ஒரு எட்டு விசாரிச்சுட்டு வந்துடவா?" என்றார் தலைமைக் காவலர்.
"பெருசு, நான் எப்படி வேலை செய்யணும்னு training குடுத்திருக்காங்க. போயி உக்காரு. இவன் தான் accused, அவனுக்கு எதுவும் செய்யணும்னு தோனுச்சுன்னா, நான் தான் செஞ்சேன்னு அவனை ஒத்துக்கச் சொல்லு. இல்லயா, எப்பவும் போல station chairஐத் தேச்சுட்டு உக்காரு. நீ கம்பெனிக்குப் போயி கேட்டா, அப்படியே உண்மையத் தோண்டி எடுத்திடுவீங்களோ? போ பெருசு. இன்னும் ஒன்னரை வருசம் தான் service, பேரைக் கெடுத்துக்காத"
தன் கண் முன்னிலே ஒரு நல்ல பையனின் வருங்காலம் கேள்விக்குறியாவதை அறிந்தும், எதுவும் செய்ய முடியாத நிலையில் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். "ஏட்டய்யா, உங்களை நம்பி தானே வந்தேன்" என்று உள்ளிருந்து கார்த்திக் சொல்ல, கதவின் கம்பியில் கழியால் அடித்து, "ஏய், வாய மூடிட்டு இருடா" என்றார் 203. கம்பியைப் பிடித்திருந்த கையினை விருட்டென உள்ளே இழுத்துக் கொண்ட கார்த்திக், "அம்மா, அம்மா" என்று அழத் தொடங்கி இருந்தான்.
அரைமணி நேரத்தில் தன் அறையில் இருந்து வெளியே வந்த ஆய்வாளர், "பெருசு, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க, matter பெரிய இடம், எதையும் கண்டுக்காம இருங்க, உங்களுக்கும் ஒரு amount வந்து சேரும். சரியா? ம்ம்ம், கிளம்புங்க" என்று மெதுவான குரலில் சொல்ல, பெரியவரின் மனது கார்த்திக்கின் அம்மாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
"பரவால்ல சார், இங்கயே இருக்கேன், என்ன நடந்தாலும் என் கண் முன்னாடியே நடக்கட்டும்" என்றார்.
"கொஞ்சம் இறங்கி வந்து பேசுனா உடனே தலையில ஏறுங்கய்யா, சொல்றது புரியலையா, கிளம்பு பெருசு" என்று கூற, பேச்சு எழாதவறாய் எழுந்து மெல்ல வெளியே சென்றார். காவல் நிலையத்தின் வாசலைக் கடக்கும் போது, "ஐயோ சார்" "ஆ...." "அம்மா..." என்ற ஓசை அவர் காதில் ஒலித்தன. விருட்டெனப் பாயும் உருண்ட கழிகளின் ஓசை, வலியில் துடிக்கும் கார்த்திக்கின் கதறலும், அவன்மீது ஊற்றப்பட்ட தண்ணீரின் ஓசையும் தொடர்ந்தன.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே காவல் நிலையத்துக்கு வந்தவர், நேராக லாக் அப் சென்று பார்க்க, யாரும் இல்லாமல் தண்ணீர் விட்டு அலசியது போல் இருந்தது லாக் அப்.
"யோவ் 203, என்னய்யா ஆச்சு, கார்த்தி எங்கய்யா?" என்றார் தலைமைக்காவலர்.
"பிஞ்சு உடம்பு பையனுக்கு. சொன்னதைக் கேட்டு ஆமான்னு சொல்லிருந்திருக்கலாம், ம்ம்ம் ப்ச்" என்று கையை உதறிக் கொண்டே சொன்னார் 203.
"சரிய்யா, பையன் எங்க?" என்று பதறியவரைப் பார்த்துச் சிரித்த 203, "இருங்க ஏட்டய்யா, ஒன்னும் ஆகல, பின்னால டாய்லெட்ல இருக்கான், ஐயா, நீங்க வந்ததும் அவன்கிட்ட பேசி ஒத்துக்க வைக்கச் சொன்னாரு. நீங்க இல்லாமலே statement வாங்கிடலாம்னு தான் பாத்தோம். மயங்கிட்டான். காலையில முழிச்சதும் தான் எனக்கு உசுரே வந்துச்சு" என்று சொல்லி மீண்டும் சிரித்தவனைப் பார்த்து முறைத்தபடி, பின்னால் கழிவறை இருந்த இடம் நோக்கிச் சென்றார் தலைமைக் காவலர்.
"கார்த்தி, தம்பி கார்த்தி", என்று கழிவறையின் கதவைத் தட்டிய பெரியவருக்கு உள்ளே இருந்து எந்தக் குரலும், அசைவும் கேட்காதது அவர் பின்னங்கழுத்தில் 'சுரீர்' என்ற உணர்வைக் கொடுத்தது. "யோவ் 203, அவன் உள்ள போயி எவ்ளோ நேரமா ஆச்சு, பேச்சு மூச்சைக் காணோம், கதவை உடைங்கய்யா" என்று சாமி வந்தது போல கத்தினார். கதவை உடைத்து, உள்ளே ஆடையின்றி, உயிருமின்றிக் கிடந்த கார்த்திக்கைத் தூக்கி உள்ளே வருவதற்கும், வழக்கறிஞருடன் கார்த்திக்கின் அம்மா காவல் நிலையத்தில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
"ஏட்டய்யா, இன்ஸ்பெக்டர் இதோ வந்துடுவாரு, என்ன வேற ஏதோ நெனச்சுட்டு இருக்கீங்க போல, பழசெல்லாம் மறந்துடுங்க, வாங்க" என்றார் காவலர்.
"ஆமாமா, மறந்துடலாம், மனசு மரத்துப் போனவங்க தான நாமெல்லாம், எல்லாத்தையும் மறந்துடலாம், ஆனா அந்த அம்மா தன் பையன் பொணத்தைப் பாத்து அழுதது எல்லாம் கண்ணுலேயே நிக்குதே. அந்தப் பையனைக் கொண்டு வந்த அந்த நைட்டே அவங்க அம்மாவப் பாத்து, வக்கீல் கூட்டிட்டு வரச் சொல்லிருந்தா, அந்தப் பையன் உசுரோட இருந்திருப்பான். அன்னிக்கு நைட் முழுசும் தூக்கம் பிடிக்காம, பன்னெண்டே முக்கால் மணிக்கு வக்கீலுக்குக் கூப்பிட்டு நடந்ததைச் சொன்னேன். காலையில உடனே வர்றேன்னு வந்ததால நடந்தது எல்லாம் ஊருக்குத் தெரிஞ்சுது. இல்லன்னா, பெரிய இடத்து matterனு அதுக்கும் ஒரு meter போட்டு, செத்துப் போனவனைத் தற்கொலைன்னு தானே சொல்லிருப்போம். மறந்துடல்லாம் முடியாது. அந்த டீக்கடைப் பையன் அந்த இன்ஸ்பெக்டரப் பாத்து, ஸ்டேசன் சிங்கம் இப்ப எங்கன்னு கேக்குறான், அந்தக் கறுப்பு ஆட்டோட சிங்க வேசமெல்லாம் களைஞ்சு போச்சு. இப்ப ஆடு கசாப்புக்குப் போயிருக்குன்னு தான் சொல்ல நெனச்சேன்" என்றவர் ஒரு பெருமூச்சுக்குப் பின், "எனக்கும் சேத்து காசு வாங்கிட்டேன்னு சொன்னான் அவன். அதப் போல பத்து மடங்கு காசு என் தலையை வித்துக் கொடுக்குறேன், செத்துப் போனவன் உசுரைக் கொடுக்க முடியுமா? மனுசன மனுசனா பாக்காம, காசு காசுன்னா, அந்தக் காசு ம..." என்று சொல்லிக் கொண்டிருந்த தலைமைக் காவலரை இடைமறித்த காவலர், "ஏட்டய்யா, புது இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு" என்று எழுந்து ஓட, தலையை இடதும் வலதுமாக ஆட்டியபடி, மெல்ல எழுந்து வாசலை நோக்கிச் சென்றார் தலைமைக் காவலர்.
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
வாழ்வில் புகழ், சிறப்பைக் கொடுக்கும் செல்வம் கிடைப்பதாய் இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருப்பதே மாசற்ற சான்றோர்களின் கொள்கை.
Comments
Post a Comment