வஞ்சகன் - குறள் கதை

வஞ்சகன்

- முடிவிலி

(ஏறைநாடு கதை: 5)

“டேய் மாடா, எங்கேடா போய்த் தொலைஞ்சே, வண்டி மாட்டைக் காத்தாலேயே வண்டியில பூட்டி வைக்கிறதில்லயோ? சோம்பேறிக் கழுத, மாடு வர்ற வரை நாங்க நின்னுண்டு இருக்கணுமா?” என்று சுப்ரமணியர் பொரிந்து கொண்டிருக்க, அவரது பதினைந்து வயது மகன் சேகரன், கீழே பார்த்தபடி மாடுகளின் கயிற்றைச் சேர்த்துப் பிடித்து இழுத்து வந்து கொண்டிருந்த மாடனைக் காட்டி, “இதோ வந்துட்டான்பா, செவுட்டு மாடன்” என்று சொல்லிச் சிரித்தான்.

"ம்ம்ம், என்ன சிரிப்பு" என்று சேகரனை அதட்டிவிட்டு, மாடன் வந்த திசையில், "மாடா, டேய் மாடா, உன்னாண்ட தான்டா பேசிண்டிருக்கேன், பகவானே என் பிராணன் இவாகிட்ட கத்தியே போறதே" என்று கத்த, கீழேயே பார்த்து வந்த மாடன், சுப்ரமணியரின் காலைப் பார்த்ததும் நிமிர்ந்து பார்த்த நொடி, உடலைச் சுருக்கிக் குனிந்து, "சாமீ" என்றான்.

"செவிட்டுப் பயலே, உடனே வண்டியப் பூட்டு, கோயிலுக்குப் போகணும்" என்று வண்டியை நோக்கிக் காட்ட, மாடனும் வண்டியைப் பார்த்து, "சரிங்க சாமி" என்று தலையசைத்தான். வண்டியின் நுகத்தடியைத் தன் கையால் தூக்கிப் பிடிக்க, நன்கு பழகிய மாடுகள், தானாகவே வந்து நுகத்தடியின் அடியில் கழுத்தை வாங்கி நின்றன. இரு மாடுகளையும் கழுத்தைச் சுற்றிப் பூட்டாங்கயிற்றால் பிணைத்து, மெல்ல கழுத்தில் தடவிக் கொடுத்தான் மாடன். மாடுகளின் கயிற்றினை எடுத்துத் தான் அமரும் இடத்தில் போட்டு விட்டு, சுப்ரமணியர் அருகே வந்து, "போலாஞ் சாமி" என்றான் குனிந்தபடி.

"சேகரா, ம்ம்ம்" என்று தன் மகனிடம் சொல்ல, இருவரும் கூண்டு வண்டியில் ஏறினர். சற்று நேரத்தில் வண்டி செவ்வூரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய பெரும் கோபுரம் கொண்ட கோயில் நோக்கி நகர்ந்தது கூண்டு வண்டி. "ம்ம்ம், ஏய், க்க்க்ளிக்" என்று வாயிலே ஓசை எழுப்பிக் கொண்டிருந்தான் மாடன். அவனது வாய் ஓசைக்கும், அவனது கை அசைவுக்கும் ஏற்றபடி மாடுகள் வண்டியை உந்திக் கொண்டு சென்றன.  

"லோகத்துல நல்லது நடக்கப் போறதுன்னு நெனச்சுண்டிருந்தா நடக்குதா? திமோரதருடைய தூது பிரகாசன் வந்தப்ப, அது நல்ல படியா முடியும்னு நெனச்சுண்டிருந்தேன். ஆனா, இப்படி ஆகிடுச்சே சேகரா" என்றார் சுப்ரமணியர்.

"என்னப்பா நடக்கும்னு நெனச்சீங்க? என்ன நடக்கல?"

"சமந்தன்னு வேதத்தைப் பழிக்கிறவாள எல்லாம் சரிக்குச் சமமா மதிக்குற அரசன் இருக்குற ஊருல நமக்கு என்னடா மதிப்பு இருக்கும்?" என்று சுப்ரமணியர் சொல்ல, "அப்பா, மெதுவா பேசுங்கோ, யாராச்சும் கேட்டுறப் போறா" என்றான் சேகரன்.

"ஆமா, இந்த செவிட்டு மாடன் தான் கேட்டுறப் போறான்" என்ற சுப்ரமணியர், சற்று தாழ்ந்த குரலில், "சொல்றதக் கேளுடா. இப்ப மட்டும் இல்ல, ஏறைக்கோனோட அப்பாவும் இப்படித் தான். தங்கரர்னு ஒரு அரசகுரு இருந்தார். அவர் மேலே திருட்டுப் பட்டம் கட்டி சிறையில அடைச்சுட்டாரு. ரொம்ப நாளா திட்டம் போட்டுத் தான், அந்தப் பிரகாசனைத் திமோரதருடைய தூதுவனா ஏறைக்கோனாண்ட அனுப்புனேன். ஆனா, ஏறைக்கோன் திமோரதரோட நட்பை ஏத்துக்கல. ஏத்துண்டு இருந்தா, வேழ நாட்டின் மேல போர் எடுப்பது போல திமோரதர் இங்கேயும் வந்திருப்பார். ஏறைக்கோனை நம் வழியில் தலையிடாதபடி செஞ்சிருப்பார்"

"அப்பா, இப்ப நமக்கு என்ன குறை? நல்லா சேமமாத் தானே இருக்கோம்?"

"அடப் போடா, என் தாத்தா காலத்துல அந்த அரசர்கிட்டேந்து கிடைச்ச நிலமும், தோட்டமும் இருக்குறதால, ஏதோ இப்படி மாடனைப் போல பத்து பதினஞ்சு பேரு இருக்குறதால, நம்ம பொழப்பு ஓடுது. நான் சின்னப் பிள்ளையா இருந்த போதுல்லாம், நம்ம ஆத்துக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமோ? இன்னிக்கு நான் பாத்து வளந்த பையன்லாம் என்ன இழிவு படுத்துறான், அந்த ஏறைக்கோன் என்ன ஆகப் போறான்னு பாரு. அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்" என்று சொன்ன சுப்ரமணியரின் முகத்தை என்னவென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சேகரனிடம் தன் திட்டத்தைச் சொல்லத் துவங்க, "ஏய், க்க்கள்ளிக், உர்ர்ர்ர்" என்றபடி மாடுகளை முடுக்கி விட்டான் மாடன். 

அரை நாழிகையில் வண்டி கோயில் வாயிலை அடைந்தது. சுப்ரமணியரும், சேகரனும் கீழே இறங்க, மாடன் வண்டியிலிருந்து கீழே குதித்து, மாட்டின் முதுகில் தடவியபடி , “ஓவ், ஓவ்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.  அவன் பின்னால் சேகரன் வந்து நின்று, “டே மாடா” என்றான். மாடன் திரும்பாததைக் கண்டு எரிச்சலோடு, “டே செவிட்டு மாடா, உன்னைத் தொட்டா கோயிலுக்குப் போறதுக்கு முன்ன மறுபடியும் குளிக்கணும்டா” என்று சொல்லியபடி அவன் பார்வையில் படும்படி முன்னே வந்து, “இங்கேயே இருடா, வண்டி மாட்டை விட்டுட்டு எங்கேயும் போயித் தொலைஞ்சிடாதே, சரியா?” என்று கத்த, “சரிங்க சாமி” என்று தலையை ஆட்டினான் மாடன்.

சேகரன் வந்து சுப்ரமணியரோடு சேர்ந்து கொள்ள, இருவரும் கோயிலின் கோபுரத்தைப் பார்த்தபடி உள்ளே செல்லத் தொடங்கினர். உள்ளே இருந்து வெளியே வந்த கொண்டிருந்த தலைமைக்காவலர் கடம்பரைப் பார்த்த சுப்ரமணியரின் முகம் சற்று வெளிறினாலும், “என்ன கடம்பரே, இந்தப் பக்கம்?” என்றார்.

“ஏன், நான் கோயிலுக்கு வரக்கூடாதா சுப்ரமணியரே?”

“அதுக்கென்ன, தாராளமா வாங்க. ஆனா, தலைமைக்காவலர் இங்க வந்திருக்கீங்க, அதனால கேட்டேன்” என்றபடி சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார் சுப்ரமணியர்.

“மன்னர் இங்க வரப் போகிறார், தலைமைக் காவலன் அல்லவா, நானே வந்து ஒருமுறை பார்த்து விடலாம் என்று தான், வேறொன்றுமில்லை, நீங்கள் உள்ளே செல்லுங்கள், என்ன சேகரா? நலமா?” என்ற கடம்பரைப் பார்த்து, “நலம்” என்று சிரிக்க, இருவரும் கோயிலின் உள்ளே நகர்ந்த நேரம், ஏறைக்கோனின் தேர் கோயில் தெருவில் நுழைந்ததைப் பார்த்த கடம்பர், “இதோ மன்னரே வந்து கொண்டிருக்கிறாரே” என்றார். சுப்ரமணியரும், சேகரனும் அதிர்ந்து நின்றனர்.

சற்று நேரத்தில் கோயிலின் முன்னே மக்கள் கூட்டம் கூடிவிட்டது. மாடனும் தனது வண்டியை விட்டு கூட்டத்தின் முன்னே வந்து நின்றான். கோயிலின் முன்னே வந்து நின்ற தேரில் இருந்து இறங்கிய ஏறைக்கோன், கடம்பரிடத்தில் வந்து நின்றார். கூடியிருந்த மக்கள் மன்னரைக் கண்ட மகிழ்ச்சியில் ஆரவாரம் கொண்டனர். கூட்டத்தில் இருந்து ஒருவர், சண்பக மலர் மாலையை மன்னருக்கு அணிவிக்க, வானை முட்டும் அளவு மக்கள் குரல் எழுந்து அமைதியாக பல நொடிகள் பிடித்தன.

ஏறைக்கோன் கடம்பரை நெருங்கி, ஏதோ சொல்ல, அவரும் சரியெனத் தலையசைக்க, மன்னர் சுப்ரமணியரைப் பார்த்து, “அட சுப்ரமணியரே, நலமா?” என்றார். “மன்னரின் ஆட்சியில் கடவுளின் அருளால் அனைவரும் நலமே” என்றார் சுப்ரமணியர்.

“கடம்பரே, மக்களும் இங்கேயே குழுமி இருக்கிறார்கள், இனிமேல் இங்கிருந்து அரண்மனை மன்றத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே வழக்காடுவதை விட இங்கேயே முடித்து விடலாம் அல்லவா?” என்றார் மன்னர்.

கடம்பரும் சரியெனத் தலையசைத்து ‘அனைவரும் அமர்க’ என்பது போல் கையை அசைக்க, மக்கள் கூட்டம், மன்னரின் திருவிளையாடலைக் காண ஆவலாய் இருந்த இடத்திலேயே அமர்ந்தனர்.  ஏறைக்கோன் மக்களை நோக்கி, “வடநாட்டு ஒற்றர்கள் நமது ஏறைநாட்டில் அதுவும் இதே செவ்வூரில் நுழைந்துள்ளதாகவும், விரைவில் அரண்மனை முற்றுகை இடத் திட்டம் இட்டுள்ளதாகவும் எமக்குத் தகவல் கிடைக்கப் பெற்றோம், தாங்கள் யாரேனும் புதிதாக எவரையும் கண்டீர்களா?” எனக் கேட்க, மக்களிடத்தில் சிறு சலசலப்பு எழுந்தது. மன்னர், சுப்ரமணியரைப் பார்த்து,”தாங்கள் ஏதும் அறிவீர்களா, சதுர்வேதியாரே?” என்றார்.

திடீரென அனைவரின் பார்வை தன் பக்கம் திரும்பியதை அறிந்த சுப்ரமணியர், “அப்படி யாரையும் பார்க்கவில்லை மன்னரே” என்று கூற, மன்னர் கடம்பரை நோக்கி, “சதுர்வேதியார் யாரையும் தெரியாது எனக் கூறுகிறார். ஆனால் நீங்கள் கோயிலில் ஒற்றர்கள் இருப்பதாகக் கூறுகிறீர்களே எது உண்மை?” எனக் கேட்க, கடம்பர், “எனது கூற்று உண்மை. அந்த உண்மையை எனக்கு உரைத்தவனும் இங்கேயே உண்டு” என உரக்கக் கூறினார்.

சுப்ரமணியர் நடுவே குறுக்கிட்டு, “என்னது கோயிலில் ஒற்றரா? நான் அறியாது யார் கோயிலுக்குள் வந்து விட முடியும்? இங்கு நானும் என்னிடம் மறை பயிலும் மாணவர் மட்டுமே உண்டு. பிறர் வந்துலவ நான் விடுவேன் எனத் தாங்கள் நினைக்கிறீரா கடம்பரே? யாரவன் கோயிலுக்குள் ஒற்றர் இருப்பதாய்க் கண்டவன், உங்களுக்கு உரைத்தவன்” என்று தனது பின்னங்குடுமி ஆட, படபடவெனக் கேட்டார்.

“நாந்தாஞ்சாமீ” என்ற குரல் கூட்டத்தில் இருந்து கேட்டது.

குரல் வந்த இடம் நோக்கி அனைவரும் பார்க்க, மாடன் எழுந்து நின்றான். மன்னரைப் பார்த்து, “சாமி” எனத் தொடங்க, “மன்னா என்றே சொல், மாடன்” என்றார் ஏறைக்கோன்.

“மன்னா, எம் பேருங் கூட தெரியுமா?” இதற்கு முன் எப்போது சிரித்தோம் என்றறியாத மாடன் சிரித்தபடி கூறினான். “மன்னா, நான் சாமி வீட்டுல தான் மாட்டுக்காரனா இருக்கேனுங்க. சில மாசமாவே விளக்கு வச்சப்புறம் சாமி வீட்டுக்கு ஆளுங்கவந்து போறதா இருந்தாங்க. அரண்மனைய சுத்தி வளைக்கப போறாங்க, நாட்டைப் பிடிக்கப் போறாங்கன்னு காதுல விழுந்ததை நான் தானுங்க கடம்பர் ஐயாகிட்ட சொன்னேனுங்க”

“டேய் செவிட்டு மாடா, இப்படில்லாம் உனக்குக் காதுல விழுந்துதா? உன் பக்கத்துல நின்னு பேசுனாலே உன் காதுல விழாது” என்ற சேகரன், ஏறைக்கோனின் பார்வை தன் மீது விழுவதைக் கண்டதும் அமைதி ஆனான். ஏறைக்கோன் மீண்டும் மாடனைப் பார்க்க, “மன்னா, நான் முழுசும் சொல்லிடுறேங்க. கொஞ்ச நாள் முன்ன உங்களை வந்து பாத்துப் போன வடநாட்டுத் தூதாளும், சாமியும் சேந்து தான் திட்டம் போட்டாங்க. இப்ப நாம நிக்குறோமே இந்தக் கோபுரத்து மாடத்துல தான் ஆளுங்களைத் தங்க வச்சிருக்காங்க” என்று சொல்ல, சுப்ரமணியரின் முகம் கொடுஞ்சினத்தில் கொப்பளித்தது.

ஏறைக்கோன் கடம்பரைக் கண்டு தலையசைக்க, “தங்க வச்சிருக்காங்க இல்லை மாடன், தங்க வச்சிருந்தாங்க. நேற்றிரவே அவர்களைச் சிறை பிடித்தாயிற்று, அவர்களும் நீ கூறியவற்றை ஒத்துக் கொண்டாயிற்று” என்றதும், சுப்ரமணியர், “ஏன்டா, காது கேட்காதவன் போல நடிச்சு உண்ட வீட்டுக்கு வஞ்சகம் பண்ணிட்டியேடா” என்று கதறினார்.

“நிறுத்துங்கள் சுப்ரமணியரே, உங்களது வஞ்சகம் என்னவென்று இப்போது ஊருக்கே தெரியும். எனது பாட்டனார் காலத்தில் இவர்க்கு அளிக்கப்பட்ட நிலம், தோட்டம், வீடு இவை எல்லாம் இவரிடம் இருந்து மீட்கப்பட்டு, இவர் நிலத்தில் பணிபுரிபவர்க்கே பிரித்தளிக்கப்படும். தகுந்த நேரத்தில் தகவல் அளித்த மாடனுக்கு இந்த ஏறைநாடும், இந்த ஏறைக்கோனும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம், மாடன் இதுவரை ஏச்சும் பேச்சும் அடியும் வாங்கி, உழைப்பு மட்டுமே வாழ்வென இருக்கும் உன் போன்றவரைக் கண்டுகொள்ளாதது என் தவறே, இனி கூலிக் கொத்தடிமைக் கொடுமைகள் இல்லாத நாடாய் ஏறைநாட்டை மாற்றுவேன்" என்று கூறிய மன்னர், “கடம்பரே, இந்த இருவரையும் சிறைபிடியுங்கள்” என்று உத்தரவிட, இருவரும் கோயிலினுள் ஓட முயல, உள்ளே கடம்பர் நிறுத்தி வைத்திருந்த காவலர் படை இருவரையும் சுற்றி வளைத்தது.

கைவிலங்கிட வந்த கடம்பரிடம், “கடம்பரே, சற்றுப் பொறுங்கள்” என்ற மன்னர், “மாடன், உனது வண்டிக் காளைகளின் கட்டும் பூட்டாங்கயிற்றை எடுத்து வா, அதைக் கொண்டு இவர்களைக் கட்டி இழுத்துச் செல்வோம்” எனச் சொல்ல, மக்கள் கூட்டம் சிரிக்கத் தொடங்கியது. மாடன் கயிற்றினை எடுத்து வந்து கொடுக்க, கடம்பர் அக்கயிற்றால் அவர்களின் கைகளை இறுக்கி இழுத்துச் சென்றார்.

“சரி, உனக்குக் காது கேட்காது என இருவரும் சொல்கிறார்களே, உண்மையாகவா?” என மன்னர் கேட்க, மாடன், “இல்லை மன்னா, ஒருநாளு பால் கறந்து எடுத்து வர்றப்ப தடுக்கி வுழந்துட்டன். பால் கொட்டிடுச்சு, அதுக்கு இந்த சேகரன் என்ன கன்னத்துலயே அறைஞ்சுட்டான். அப்ப கொஞ்ச நேரம் மெய்யாவே காது கேக்கல. அதுக்கு அப்புறம் எனக்கு நல்லா கேட்டாலும் கேட்காதது போலவே நின்னுட்டு இருப்பேன்” என்று சொல்ல, மாடனோடு மன்னரும் சிரிக்கத் தொடங்கினர்.    




செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற.

குறள் : 302

அதிகாரம்: வெகுளாமை

செல்லுபடியாகாத இடத்தில் சினம் அறவே தீதானது. செல்லுபடியாகக் கூடிய இடத்திலும் சினத்தைப் போல தீமை தரக்கூடியது வேறில்லை.


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka