இன்மையின் குரல் - குறள் கதை

 இன்மையின் குரல்

- முடிவிலி

ஏப்ரல் 2, 2015

"டேய் செல்வா, என்கிட்ட முதன்முதலா இங்க வச்சு தான் உன் காதலைச் சொன்ன, நீ எப்ப சொல்லுவன்னு நானும் காத்திருந்து இங்க தான் உன்னக் கட்டிப்பிடிச்சு நானும் ஒத்துக்கிட்டேன். இனி ஒவ்வொரு ஏப்ரல் ரெண்டாம் தேதிக்கும் நாம இங்க வரணும், சரியா?" என்ற தேன்மொழியின் சொற்கள் செல்வத்தின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க, அவனது விழிகள் நிறைந்து வழியத் தொடங்கியிருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து சென்று கொண்டிருந்த அந்த இடத்திற்கு, தேன்மொழி இல்லாமல் தனியாகப் போக வேண்டுமா என்று படுக்கையிலே அசையாது வழியும் விழிநீரைத் துடைக்காமல் படுத்தபடியே இருந்தான் செல்வம். 

ஒவ்வொரு முறை கண்ணிமைக்கும் பொழுதும், தேன்மொழியின் scooty வேகமாக வந்த innovaவில் மோதுவதும், ambulanceல் குருதித் தீற்றலோடு அசையா உடலாய்த் தேன்மொழி ஏற்றப்படுவதும், Bombay Group Blood கிடைக்காமல் பல இடங்களுக்குச் சென்று விசாரித்ததும், அம்பத்தூரில் ஒரு donor இருக்கார்னு தெரிஞ்சு அவரைக் கூப்பிடச் சென்று கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கு வந்த அழைப்பு தேன்மொழியின் இழப்பைத் தெரிவித்ததும், காட்சிகளாக நிழலாடிக் கொண்டிருந்தன. கண்களை இறுக்க மூடிக் கொண்டான் செல்வம். தனக்கு எல்லாமுமாக இருந்தவளின் இழப்பு இந்த நான்கு மாதங்களில் அவனைத் தூக்கம் மறந்தவனாக மாற்றியிருந்தது.

அருகே இருந்த பேசியை எடுக்க, அதன் முகப்புப் பக்கத்தில் அவனது கையைப் பிடித்துத் தன் தோளில் போட்டபடி, உலகை வென்றவளாய்ச் சிரித்துக் கொண்டிருந்த தேன்மொழி, "வாடா, இன்னிக்கும் அந்த theme park போயிட்டு வருவோம், please, please" என்று சொல்வது போல இருந்தது. அந்த அறை முழுவதும் தேன்மொழி நிறைந்திருந்தது போல இருந்தது அவனுக்கு. அவளுடைய இன்மை அவனை வாட்டினாலும், "நீ எப்பவும் மகிழ்ச்சியா இருக்கணும், நான் இல்லன்னாலும்" என என்றோ அவள் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. கிளம்பினான் சென்னை என்று சொல்லிக் கொண்டு சென்னைக்கு வெளியே பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த theme parkக்கு.

பகல் 11:30 மணி. அன்று வியாழக்கிழமை தான். பூங்காவில் பெரிதாகக் கூட்டம் இல்லை. ஏதோ ஒரு பள்ளியில் இருந்து சிறுவர்கள் பலர் சீருடையோடு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, ஆசிரியர் இருவர் "டேய் ஓடாதீங்கடா, line form செஞ்சு நில்லுங்க" என உரக்கக் கத்திக் கொண்டிருந்தனர். சில இணைகள், சில குடும்பங்கள் என்று அப்பொழுது தான் பூங்காவின் நாள் மெல்லத் துவங்கிக் கொண்டிருந்தது. செல்வம் பூங்காவின் நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்க, திடீரென அவனை முந்திக் கொண்டு சென்று ஒருவர் "2 adult, 2 child" என்று counterல் சொன்னார். செல்வத்தின் பின்னே இருந்து ஒரு குரல், "என்னங்க, 3 பெரியவங்க ticket எடுங்க, பெரியவன் உயரமாகிட்டான்" என்று சொல்ல, முன்னே இருந்தவர் திரும்பிப் பார்த்து முறைத்தார். அடுத்து செல்வம் தனக்கு ஒரு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு பூங்காவுக்குள் நுழையும் இடத்தை நோக்கி நடந்து செல்லும் போது, "ஏன்டி, அறிவு இல்ல, இவன் உள்ளே எல்லா rideம் போகப் போறானா, அந்த எரநூறு ரூவா அவனுக்கு அள்ளிக் கொடுக்கணும். கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு இருந்தா குறைஞ்சு போயிடுமா?" எனப் பொரிந்து கொண்டிருந்தார். அவருடைய மனைவியின் கண்கள் சுற்றிலும், தன் குழந்தைகளையும் பார்த்தபடி இருந்தன. சில நொடிகள் அங்கிருக்கும் அனைவரும் தன்னையே உற்று நோக்குவதாக உணர்ந்தவளின் தொண்டை மெல்ல அடைக்கத் துவங்கியது. 

"அப்படியே சிலை மாதிரி நிக்காத, சின்னவ கையப் புடி, உங்களை வீட்ட விட்டு வெளியக் கூட்டிட்டு வந்து கொண்டு போறதுக்குள்ள உசுரை வாங்கிடுறீங்க" என்று தொடர்ந்து கொண்டே இருந்தவர், இப்போதும் செல்வத்தைக் கடந்து நுழையும் இடத்திற்குச் சென்றார். அங்கே நின்ற பணியாளர், நுழைவுச் சீட்டை வாங்கி அதில் ஒன்றை அவரின் கையில் கட்டிவிட்டு, பின்னால் பார்க்க, "ஏய், சீக்கிரம் வா, ஆடி அசைஞ்சு வர" என்றார் அவர். ஒரு கையில் தனது நான்கு வயது மகளைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு பையையும் எடுத்துக் கொண்டு சிறு ஓட்டமாக வந்தார் அவரின் மனைவி. வாயிற்பணியாளர், "என்னம்மா பையில? காட்டுங்க" எனக் கேட்க, "சாப்பாடும், தண்ணி bottleம்" என்று பதில் வந்தது. "தண்ணி மட்டும் எடுத்துக்கோங்க, உள்ளே சாப்பாடு எடுத்துட்டுப் போக முடியாது. அங்க counterல குடுத்துட்டு வாங்க" என்று அவரிடம் சொன்னார்.   

"இந்த எழவுக்கெல்லாம் தான் இங்கெல்லாம் வர்றது இல்ல. ஏன் சாப்பாடு எடுத்துட்டு வந்தா, இவனுங்களுக்கு என்ன குறைஞ்சு போகுது, அப்படியே நிக்காத, கொண்டு போயி கொடுத்துட்டு வா, கழுத" என்று இப்போதும் மனைவியிடமே சொற்கள் பாய்ந்தன. பின்னால் நின்றிருந்த செல்வா, தனது நுழைவுச் சீட்டைக் கொடுக்க, அவனது கையில் கட்டி விட்டு உள்ளே அனுப்பிய பணியாளர், தனது மனைவியைச் சினந்து பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து, 'மனுசனாய்யா நீ' என்று வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டார். 

பூங்காவின் உள்ளே வந்த செல்வம், தனது பேசியின் முகப்புத் திரையில் சிரித்துக் கொண்டிருந்த தேன்மொழியைப் பார்த்தான். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட செயற்கை அருவி அவனுக்கு முன்னால் இருந்தது. அதே இடத்தில் போய் அமர்ந்தான். அவன் அருகிலே அவள் இருப்பதாய் உணர்ந்தான். 'செல்வா... thank youடா' என்று அவனுக்குள் கேட்டதும் திரும்பிய போது, "மசமசன்னு நிக்காத, அதான் வீட்டுல செஞ்சு எடுத்து வந்து இவனுங்ககிட்ட கொடுத்தாச்சில்ல, வா" என்று சொல்லிக் கொண்டு வாய்க்குள் ஏதோ முனகிக் கொண்டே அவர் செல்ல, பின்னால் அவர்களின் பெரிய மகனும், அதன் பின்னே அவரின் மனைவியும், மகளும் செல்வத்தைக் கடந்து சென்றனர். 

"தேனு, நீ இப்ப இங்க இருந்திருந்தேன்னா, நம்ம எப்படி இருந்திருப்போம்னு உனக்கே தெரியும். வாழ்க்கையில எப்படி இருந்திடக் கூடாதுங்குறதை என்னோட அப்பாக்கிட்டேந்து கத்துக்கிட்டேன். சுத்தி எத்தனை பேரு இருக்காங்கன்னு கூட பாக்காம என் அம்மாவுக்குத் திட்டு விழும். அப்ப எல்லாம் நாம இப்படி இருந்திடக் கூடாதுங்கிறது மட்டும் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கும். அதே போல ஒருத்தனை எப்பவும் பாக்கக் கூடாதுன்னு இருந்தேன். இங்க வந்ததுலேந்து அவனே கண்ணுல படுறான். இங்க இன்னிக்கு நான் வந்தது உனக்காக. நாம நின்ன, பேசுன, கைப்பிடிச்ச, அரட்டை அடிச்ச ஒவ்வொரு இடத்துல மீண்டும் உன் பக்கத்துல இருப்பது போல இருக்கணும், அதுக்காகத் தான் நான் வந்தேன்" என்று செல்வம் தனக்குள்ளே சொல்லிக் கொண்டிருக்க, "நான் எப்பவும் உன்கூடத் தான் இருக்கேன்" என்ற தேன்மொழியின் குரல் அவனுக்குள் மென்சிரிப்பைக் கொண்டு வந்தது. 

தேன்மொழி நின்ற இடங்களைத் தேடித் தேடி நின்று, அமர்ந்து, அழுது, அவளோடு பேசி, அந்த நாளை அவளோடு கழித்துக் கொண்டிருந்த செல்வம், 2:10க்கு உணவகத்தின் அருகே வர, அங்கும் அவரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. செல்வத்துக்கு இருந்த பசியும் போக, உணவகத்துக்குப் பின்னால் இருந்த ஏரியின் அருகே இருந்த மரத்தடியில் சென்று அமர்ந்தான். செல்வம் தேன்மொழிக்குத் தன் காதலைச் சொன்ன cable car தற்போது இயங்காமல் ஏரியின் ஒரு கரையில் இருந்து பூங்காவின் மறுமுனை நோக்கி நின்று கொண்டிருந்தது. நான்கு மணிக்குத் தான் அது இயக்கப்படும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அங்கு வரும் செல்வத்துக்கு நன்கு தெரியும். அந்த மரத்தடியில் அப்படியே படுத்தான். தேன்மொழியின் மடியில் கிடப்பதாய் உணர்ந்தான். அவள் அவனது முடியை மெல்லக் கோதிவிட, கண்கள் மெல்ல மூடினான். 

பூங்காவின் பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கிகள் "வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு, இன்னும் சற்று நேரத்தில் cable car இயக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியதைக் கேட்டு எழுந்த செல்வம், cable car towerஐ நோக்கிச் சென்றான். மீண்டும் தேன்மொழியிடம் தன் காதலைச் சொல்லப் போகிறவன் போல, இன்று அவளிடம், 'I miss you' என்று அவளின் இன்மையை அவளிருப்பதாக நினைத்து உரைக்கப் போகிறவனாய் ஓடினான். இன்னும் cable car துவக்கப்படவில்லை. cable car tower மேலே சென்றவன் அங்கிருந்த பணியாளரிடம், "நான் தனியா தான் வந்திருக்கேன், நான் மட்டும் தனியா போகுற மாதிரி விடுறீங்களா?" என்றான். 

"சார், முதல்ல தொடங்கி, ஒரு சுத்து முழுசா முடிஞ்சதும் தான் உள்ளே விடுவோம். அதுக்குள்ள கூட்டமும் வந்துடும். அந்த நேரத்துல யாரும் இல்லன்னா கண்டிப்பா விடுறேன்" என்று சொல்லியபடி ஒரு இயக்கியைச் சொடுக்க, மொத்தமான இரும்புக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த இருக்கைகள் அசைந்து நகரத் தொடங்கின. சிறிது நேரத்தில் கூட்டமும் நிறைய வந்து விட, இருவராய் வந்தவர்க்கெல்லாம் வழிவிட்ட படி நின்றிருந்தான் செல்வம். தனக்குப் பின்னால், "நானும் பெரியவனும் முதல்ல போறோம், அடுத்ததுல நீயும் பாப்பாவும் வந்துடு, சரியா, ஒழுங்கா வந்துடு, எங்கயும் விழுந்து கிழுந்து எழவக் கூட்டாத" என்று கத்தியபடி வந்தவர், நின்று கொண்டிருந்த செல்வத்தை இடித்து விட்டு, "மரம் மாதிரி நிக்குற, familyயா வர்றோம் கண்ணு தெரியல" என்றபடி முன்னே சென்றார் அவர்.

பின்னால் இருந்து அவரின் தோளில் தொட்டு, "சார்" என்றான் செல்வம். திரும்பியவர் இவனைச் சரியாகப் பார்ப்பதற்குள், செல்வத்தின் கை அவரது தாடையில் இறங்கியது. "ஐயோ, அவரை விட்டுடுங்க" என்று அவரின் மனைவி கத்த, "உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் பொண்டாட்டிகிட்ட என்ன வேணும்னாலும் கத்தலாம், திட்டலாம், சுத்தி நிக்குறவன் எல்லாம் இவன் பெரிய கோவக்காரன் போலன்னு நெனச்சு ஒதுங்கிப் போவான்னு நெனப்பு. அவங்க இல்லன்னா உன் நிலைமை என்னன்னு இப்ப உனக்குத் தெரியாது, நீ பேசுன பேச்சுக்கெல்லாம் வாய மூடிட்டு இருந்தவங்க, உன் மேல கைய வச்சதும் கதறுறாங்க இல்லையா, திருந்துங்கய்யா" என்று செல்வம் சொல்ல, உடைந்த வாயோடு விழுந்தவரை, அவரின் மனைவியும், குழந்தைகளும் தூக்கினர். பணியாளர்கள் சூழ்ந்து, செல்வத்திடம் வர, செல்வம், "விடுங்க, நானே கீழப் போறேன்" என்று cable car towerஐ விட்டுக் கீழே இறங்கினான். 

அந்தப் படிகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்த பொழுது, அவன் காதோரம் "I miss youடா செல்லம்" என்றது தேன்மொழியின் குரல்.     




செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

குறள் எண்: 301
அதிகாரம்: வெகுளாமை

எங்கு நமது சினம் செல்லுபடியாகும் என்று நினைக்கிறோமோ அங்கு சினம் கொள்ளாதவனே சினம் காப்பவன், செல்லுபடி ஆகாத இடத்தில் சினத்தைக் காட்டுனா வாய் தான் உடையும். 

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka