புன்னகைத்திரை - குறள் கதை
புன்னகைத்திரை
"சிரிப்பு, பிற உயிர்கள் கிட்டேந்து நம்மளை வேறுபடுத்திக் காட்டுறது இப்படில்லாம் நாம சொல்லிக்கிறோம். ஆனா, நாம எத்தனை பேரு உண்மையா..." என்று RJ தமிழினி பேசிக் கொண்டிருந்த போதே, அந்த வீட்டில் வானொலி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
"ஏம்மா, நிறுத்திட்டீங்க, அக்கா பேசிட்டு இருந்துச்சுல்ல" என்றான் கண்ணன்.
"ஆமா, தெனமும் பேசுறது தானே? போடா, போயி படிக்கிற வேலையப் பாரு" என்று அம்மா வெடுக்கென்று கூற, மனதுக்குள் முனகிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று, தன்னுடைய திறன்பேசியில் 99.1 அலைவரிசையோடு ஒத்திசைக்க, தமிழினி தன் பேச்சை நிறுத்தி, 'நேற்று இல்லாத மாற்றம் என்னது' பாடலை ஒலிக்க விட்டிருந்தாள்.
தமிழினி இரவு 8:30க்கு company cabல் வந்திறங்கினாள். வாசல் அருகே நின்று கொண்டிருந்த அம்மா, "வா, தமிழு" என்று சிரித்தபடி வரவேற்றாள். தமிழும் அன்னையின் புன்னகையில் தன் களைப்பெல்லாம் நீங்கிப் போனவளாய், அம்மாவின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளி, "செம்மயா பசிக்குதும்மா" என்று கொஞ்சினாள்.
கண்ணன் வரவேற்பறையில் அமர்ந்து நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த தமிழினி, கண்ணனைப் பார்த்து, "என்னடா semester exam வருதில்ல, படிச்சுட்டியா?" என்றாள்.
"அக்கா, அதெல்லாம் classல கவனிச்சத வச்சுட்டே எழுதிடுவேன்."
"சரிடா, சாப்டியா?"
"இல்லக்கா, நீயும் வந்தா சேந்து சாப்பிடலாம்னு தான் வெயிட்டிங்"
"ம்ம், வா" என்று தமிழினி கூறிய நேரம், தோசைக்கல்லில் இருந்து ஸ்ஸ்ஸ் என்ற சத்தமும் கேட்க, தமிழினியும், கண்ணனும் முறுவலான தோசையை ஒரு பிடி பிடிக்க ஆயத்தமாயினர்.
****
ஆறு மாதங்கள் ஓடி இருந்தது. கண்ணன் தனது பொறியியல் படிப்பையும் முடித்து விட்டிருந்தான். தமிழினி RJ Trainee ஆகச் சேர்ந்து ஒரு ஆண்டு முடிந்திருந்தது. நிறுவனத்திலும், நேயர்களிடத்திலும் தமிழினிக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்திருந்தது. ஒரு ஆண்டு பயிற்சிக்காலம் முடிந்து, இன்று பணி நிரந்தரமானதை மேலாளர் தமிழினியிடம் கூற, தமிழினி அவரிடம், "நன்றி சார், முதல்ல இத எங்க அம்மாகிட்ட சொல்லணும்" என்றாள்.
"கண்டிப்பா சொல்லு, கால் செய், சரி நாளைக்கு இங்க ரேடியோ ஸ்டேஷன்லயே சின்னதா ஒரு செலிப்ரேஷன், முடிஞ்சா அம்மாவையும் கூட்டிட்டு வந்துடு" என்றார் மேலாளர்.
"கால் எல்லாம் வேண்டாம், இதைச் சொல்லும் போது அவங்க முகத்தில வர்ற சிரிப்பைப் பாக்கணும், நான் நேர்ல போயி சொல்லிட்டு வர்றேன். என்னோட ஸ்லாட் காலையிலயே முடிஞ்சது. ஒரு அரை நாள் பெர்மிஷன் கிடைக்குமா, சார்?"
"பெர்மனெண்ட் ஆனதும் பெர்மிஷனா?" என்றவர், சிரித்த படி, "போயிட்டு வா" என்றார்.
அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள், தமிழினி. கதவு உள்புறமாய் பூட்டி இருக்க, அழைப்பு மணி அடிக்கப் போன நேரம், உள்ளே அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
"ஏன்டா கண்ணா, எப்படா நீ வேலைக்குப் போயிச் சேருவ? எப்பப் பாத்தாலும் வீட்டுலயே உக்காந்திருக்க? ஆம்பளப் பையன் நாலு எடம் போனா தான ஏதாச்சும் வேலை கெடைக்கும்"
"அம்மா, அடுத்த வாரம் தான் ரிசல்ட்டே வருது. அப்புறம் காலேஜ் போயி, CC, provisional certificate எல்லாம் வாங்கிட்டு வந்தா தான் வேலைக்குப் போக முடியும். அதுவும் இப்ப இருக்குற நெலமைக்கு எனக்குப் புடிச்ச மாதிரி வேலை கெடைக்குமான்னு தெரியல"
"என்னடா புடிச்ச வேலை, உன் அக்கா காரி வேலைக்குப் போறான்னு நானே வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன்." என்று அம்மா சொன்னபோது தமிழினிக்குச் சுருக்கென்றது.
"கண்ணா, எப்படியாச்சும் ஏதாவது ஒரு வேலைக்குப் போடா, அப்புறம் தான் நான் உன் அக்காகிட்ட பேசிட்டு, இந்த ரேடியால பேசுற வேலைய வுடச்சொல்லணும்."
"ஏம்மா, அக்கா எவ்ளோ famous தெரியுமா? அந்த வேலைய வுடச் சொல்ற?" என்றான் கண்ணன்.
"ஆமா, பேமசு, அத வச்சுகிட்டு என்ன செய்யுறது? எந்த வரனாவது வருதா பாத்தியா?" என்று அம்மா கூற, கதவின் வெளியே சிலை போல் உறைந்திருந்தாள்.
இதுவரை தன் அம்மாவின் புன்னகைத்த முகத்தில் இருந்த திரை விலகியிருந்தது. பெண்ணைப் பெற்ற தாயின் மீது இந்த சமுதாயம் தரும் அழுத்தத்தின் மொத்தத்தையும் அந்தப் புன்னகை மறைத்திருந்ததை இப்போது தான் தமிழினி உணர்ந்து கொண்டாள். தான் பொண்ணோட விருப்பம், கனவு, புகழ் என்று எதையும் நினைத்துப் பார்க்காது யாரோ ஒரு நாலு பேரின் வாய்ச்சொல்லுக்கு அஞ்சுபவளாகவே தன் தாய் இருந்திருக்கிறாள் என்பது தமிழினி எதிர்பாராததாய் இருந்தது.
தன்னை மறந்து அழைப்பு மணியில் அவள் கை அழுத்த, "இந்த நேரத்துல யாரு?" என்று அம்மா கதவின் அருகே வந்து திறந்தாள்.
ஒரு நொடி தமிழினியைப் பார்த்து அதிர்ந்தவள், உடன் சுதாரித்துக் கொண்டு, "தமிழு, என்ன அதுக்குள்ள வந்துட்ட? வா உள்ளே வா" என்றாள் பொய்ப் புன்னகையோடு.
"ஒன்னுமில்லம்மா, லைட்டா தலைவலி" என்று தனது அறை நோக்கிச் சென்றாள் தமிழினி.
- முடிவிலி
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
அற வழியில் அல்லாதவற்றைச் செய்வதை விட தீது, உள்ளொன்று வைத்து புறத்தில் பொய்யாய்ப் புன்னகை செய்தல்.
Comments
Post a Comment