எழுத்து - இயக்கம் - குறள் கதை
எழுத்து - இயக்கம்
- முடிவிலி
உலகன் கையில் அலைபேசியைக் கையில் கொண்டு வந்து, கதை கலந்துரையாடலில் இருந்த என்னிடம் மெதுவாக, "சார், ப்ரொடியூசர் லைன்ல இருக்காரு." என்று சொல்லிவிட்டு பேசியை என்னிடம் கொடுத்தார். வாங்கி, என் காதை அலைபேசிக்குக் கொடுத்து, "ஹலோ, நல்லாருக்கீங்களா சார்" என்றேன்.
"நல்லா இருக்கேன் விவேக், தொடர்ந்து நீங்களும், தமிழரசனும் கொடுத்த எல்லா படமும் ஹிட்டு, இந்தப் படமும் நீங்க தான்னு சொல்லி அவர்ட்ட கால்ஷீட் வாங்கி வச்சிருக்கேன். நீங்க ம்ம்னு சொன்னீங்கன்னா, ப்ரெஸ்க்கு எல்லாம் சொல்லிடுவேன்."
"கதை இன்னும் ரெடியில்லயே, சார். நான் வேணும்னா தமிழ்கிட்ட பேசவா?" என்றேன் கொஞ்சம் தயக்கமாய்.
"விவேக், போன்லயே எல்லாம் பேச வேணாம். நீங்க என்னோட ஆபீஸ்க்கு வர்றீங்களா?"
சில நொடிகள் சிந்தித்து, "ம்ம், சரி" என்றேன். மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதில், இன்னும் நல்ல படமாய்க் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மீப்பெரும் பொறுப்பாய் என் மேல் அழுத்திக் கொண்டிருந்தது. வெற்றி இயக்குனர் எனும் பெயரே என்னுடைய படைப்புத்திறனைக் கேள்வி கேட்கும் அளவுக்கு மெத்தனத்தை என்னுள் விதைத்திருந்ததை இப்போது முழுதும் உணர்ந்திருந்தேன். அலைபேசியை வைத்துவிட்டு, சிந்தனையில் ஆழ்ந்திருந்த என்னைச் சுற்றி இருந்த உதவி இயக்குனர்களின் "சார், என்ன ஆச்சு சார்?" என்ற குரல் நிகழ்நொடிக்கு இழுத்து வந்தது.
"சரி, ப்ரொடியூசர் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்." என்று எழுந்து அறையின் வாசல் வரைக்கும் சென்று, திரும்பி, "உலகன்..." என்றேன்.
என்னுடைய உதவி இயக்குனரான உலகன் எழுந்து என் அருகே வந்தார். "நீங்களும் வாங்க" எனக் கூற, நானும், உலகனும் ஏறிக்கொள்ள, புதிதாய் வாங்கியிருந்த Skoda தயாரிப்பாளரின் வீடு நோக்கிச் சென்றது.
***
சில நிமிடங்களில் விஸ்வாருண் பிலிம்ஸ் அலுவலகத்தை அடைந்திருந்தோம். சிரித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் ஐயாவின் மாலையிட்ட புகைப்படத்தின் கீழே அருணாச்சலம் அமர்ந்திருந்தார்.
"வாங்க, வாங்க, உட்காருங்க விவேக்" என்று அருணாச்சலம் கூற, நான் உலகனுக்கு அருகே இருந்த நாற்காலியைக் காட்ட இருவரும் அமர்ந்தோம்.
"சொல்லுங்க சார்"
"எல்லாம் ரெடி, விவேக். நீங்க சரின்னு சொல்லணும் அவ்ளோதான்."
"என்ன சார், சொல்றீங்க? கதை வேணாமா சார்?" என்று நான் கூற, கண்ணால் சிரித்துக் கொண்டே, தன் மேசையின் திறப்பை இழுத்து உள்ளே இருந்து, ஒரு கோப்பினை எடுத்து என் முன் வைத்தார். வியப்பில் நெற்றிச்சுருக்கத்தோடு, அந்தக் கோப்பை எடுத்து திறந்து முதல் பக்கத்தில் பார்க்க, 'தமிழரசன் 39' என்று எழுதி இருந்தது. அதன் கீழே 'எழுத்து - இயக்கம் - விவேக்' என என் பெயரும்.
"என்ன சார் இது?"
"பௌண்டட் ஸ்கிரிப்ட், ஒரு காப்பி ஏற்கனவே தமிழரசனுக்குக் கொடுத்தாச்சு, ஒன்லைனும் அவருக்குப் புடிச்சிருக்கு, நீங்களும் சரின்னு சொன்னீங்கன்னா, இப்பவே அட்வான்ஸ் கொடுத்துடுவேன். ட்விட்டர்ல தமிழரசன் - விவேக் வெற்றிக் கூட்டணியில் தமிழரசன் 39 டைட்டில் வெளியீடு விரைவில், பொங்கலுக்குத் திரையில்னு ட்வீட் போட்டா வைரலாகிடும்." என்றார்.
மகிழ்ச்சி அவர் முகத்தில் புன்னகையாய்ப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ஆனால், நான் எவ்வித உணர்வையும் காட்டாமல் அவரையே பார்த்திருக்க, சிரிப்பை நிறுத்திவிட்டு, "என்ன விவேக்?" என்றார்.
"கதை யாருது சார்?"
"அதெல்லாம் உங்களுக்கு ஏன், விவேக், முழு ஸ்க்ரிப்டும் இருக்கு, ஒரு தடவை படிங்க, அப்படியே உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்துனாலும் எனக்கு ஓகே. அப்படி மாத்துங்க, அப்புறம் உண்மையாவே எழுத்து இயக்கம் விவேக் ஆகிடும்ல" என்றார்.
நானும், உலகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நான் உதவி இயக்குனராய் இருந்த நேரங்களில், என் கதைகள் இரண்டு எனக்கு முன்பே திரையைக் கண்டிருந்ததை நன்கறிவேன். அடுத்து நல்ல கதை எழுதிவிட்டு, இயக்குனராக முயன்று கொண்டிருக்கும் உலகனுக்கும் என் முன்கதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இருப்பினும், உலகன் என் காதருகே வந்து, "ஸ்க்ரிப்ட் படிச்சுப் பார்ப்போம், சார்" என்றார்.
நான் அருணாச்சலத்தைப் பார்த்து, "இருந்தாலும், கதை எழுதுனவரை நான் பாக்கணும், அட்லீஸ்ட் அவரை என் குழுவிலயாவது சேத்துக்கிறேன். கதை, திரைக்கதை, உதவி இயக்கம் அப்படின்னு க்ரெடிட் கொடுத்துடலாம்." என்றேன்.
"என்ன விவேக், பொழைக்கத் தெரியாதவரா இருக்கீங்க, எழுத்து இயக்கம் விவேக்னு போட்டா தானே கெத்து" என்றவர், மேலும் தொடர்ந்தார், "அது படத்துக்கும் வெயிட் கொடுக்கும், 75000 ரூபாய்க்கு மொத்த ஸ்க்ரிப்டையும் கொடுத்துட்டுப் போறாங்க, அவங்களுக்கு அவ்ளோ போதும், விவேக்" என்றார்.
"சரி, நானும், உலகனும் ஸ்க்ரிப்ட படிச்சுப் பாக்குறோம். கொஞ்சம் டைம் கொடுங்க." என்று எழுந்து, அலுவலகத்தின் வரவேற்பறைக்கு வந்தோம்.
"விவேக் சார்" என்ற குரல் மிக அருகில் கேட்டது. திரும்பிய இடத்தில் ஒரு இளைஞன், என்னிடம் நோக்கி வந்து, "கதை படிச்சீங்களா? பிடிச்சிருக்கா?" என்றான், என் கையில் இருந்த கோப்பைக் காட்டியபடி. எனக்குப் புரிந்துவிட்டிருந்தது.
"தம்பி, உங்க கதையா இது?" என்றேன்.
"ஆமா, சார், ரொம்ப நாளா அலைஞ்சுட்டேன். முடியல, இதுக்கு மேல முடியுமான்னும் தெரியல, கடைசியில நாம தான் திரைக்குப் போகல, நம்ம கதையாவது படமாகட்டும்னு தான் வந்தேன். அதுவும் நீங்க தான் டைரக்ஷன்னு சொன்னதும் எனக்கு செம்ம மகிழ்ச்சி சார், நீங்க ஓகே சொன்னா தான் பேலன்ஸ் பணம் கிடைக்கும்" என்று இழுத்தார்.
"ஒரு நிமிசம் இருப்பா, இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்." என்று தமிழரசனை அலைபேசியில் அழைத்தேன்.
அழைப்பை எடுத்த தமிழரசன், "விவேக், நண்பா, இந்தக் கதையைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல, போன படம் முடிஞ்சு அதுக்குள்ள எவ்ளோ செம்மயா எழுதிட்ட?" என்றான்.
"அதப்பத்தி தான் பேசணும்னு போன் செஞ்சேன். அந்தக் கதை என்னுதே இல்ல"
***
அன்று மாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்த சிற்றுந்து ஒன்றில், "மச்சான், தமிழரசன் ட்வீட் பாத்தியா, அடுத்த படம் பத்தி, புது டைரக்டராம். Proud to introduce Writer - Director Ezhilvelanனு ட்வீட் போட்டிருக்கான், மூனு படம் விவேக் வச்சு செம்ம ஹிட், மறுபடியும் விவேக் கூட செய்வான்னு பாத்தா, புது ஆளுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கான், செம்மல்ல".
- முடிவிலி
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
நடுநிலை தவறுவதற்கு அஞ்சுபவர், தனக்குப் பயன் கிடைக்குமென்ற நிலையிலும், பழி தரும் தீய செயல்களைச் செய்யமாட்டார்.
Comments
Post a Comment