களாக்காய் - குறள் கதை
களாக்காய்
"எழிலன் சார், நீங்க ப்ரீயா இருக்கீங்களா?" தொலைபேசி வழி விளித்த வெங்கட் வினவினார்.
"இது வரைக்கும் பிஸியில்ல. வீட்டுல தான் இருக்கேன். என்னன்னு சொல்லுங்க வெங்கட்?" என்றேன்.
"நெருங்கிய நண்பர் ஒருத்தரைக் கூட்டி வர்றேன், நம்ம வாழ்க்கையே ஒளிமயமா மாறப்போகுது" என்ற வெங்கட்டின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.
"இன்னும் என்னன்னு நீங்க சொல்லவே இல்லயே, வெங்கட்" என்றேன்.
"இன்னும் ஒரு அரைமணி நேரம், நாங்க வீட்டுக்கே வந்திடுவோம். நேர்ல சொல்றோம். நான் சொல்றதை விட விக்டரி வேந்தன் சார் சொல்றது தான் சரியா இருக்கும்." என்று வெங்கட் கூற, சரியென்று அழைப்பைத் துண்டித்தேன்.
"எழில், your coffee is ready"என்று கையில் இரு காபிக்கோப்பையுடன் வந்து அமர்ந்தாள் என் மனைவி சுபா. "Second Saturday வந்தா தான் ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து காபி சாப்பிட முடியுது. இல்ல எழில்?"
"ஆமா, உனக்கு ஸ்கூல், எனக்கு பேங்க், இப்படியே நாம ஓடிக்கிட்டு இருந்தாலும், இந்த வாழ்வு நல்லாத்தான் இருக்கு. உன் coffee போல, ஆமா, அகரன் எழுந்துட்டானா?"
"எழுந்துட்டான், இன்னிக்கு evening வெளியில போகணும்னா, இப்பவே homework முடிக்கணும்னு சொன்னேன். அதான் எழுதிட்டு இருக்கான். யாரு போன்ல?"
"என் கூட வேலை பாக்குறாரே வெங்கட், அவர் தான். அவரோட friend ஒருத்தரைக் கூட்டிக்கிட்டு வர்றாராம். இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவாரு"
"ஓ, சரி, I will make some tea for them" என்று சொல்லி எழுந்த ஆங்கில ஆசிரியர் சுபாவைப் பிடித்து நிறுத்தினேன். "அதான் அரைமணி நேரம் இருக்குல்ல? முதல்ல, உன்னோட coffeeயக் குடிச்சு முடி, உட்காரு" என்றேன். அவள் கண்கள் என்னைப் பார்த்து, ஐ லவ் யூ சொல்லின.
****
அரைமணி நேரத்தில், வெங்கட் வீட்டின் வரவேற்பறையின் பஞ்சிருக்கையில் அமர்ந்திருக்க, அருகில் வெங்கட்டின் நண்பர் விக்டரி வேந்தன் ஏப்ரல் மாத வெயிலிலும் கோட் சூட்டுடன் இருந்தார். கைக்குலுக்கல்கள், வணக்கங்கள் முடிந்திருக்க, சுபா கொண்டு வந்து கொடுத்த தேநீர்க்கோப்பைகள் இருவரின் கைகளிலும் இருந்தன.
"சொல்லுங்க, வெங்கட்" என்றேன்.
"எழிலன் சார், இவர் தான் விக்டரி வேந்தன்" என்று கூற, மீண்டும் ஒரு முறை அவரைப் பார்த்து நான் புன்னகைக்க, அவர் எழுந்து அவருடைய visiting card ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதன் ஒரு பக்கத்தில் victory என பெரிய எழுத்துக்களில் எழுதியிருக்க, இன்னொரு புறம், Vendhan, Senior Marketing Manager, Victory International என எழுதியிருக்க, கீழே இரு தொலைபேசி எண்கள் இருந்தன. Visiting card ஐ இருமுறை திருப்பிப் பார்த்த நான் அதை வாங்கி என் இருக்கைக்கு அருகே இருந்த தொலைபேசியின் அருகே வைத்தேன்.
வெங்கட் தொடர்ந்தார். "இவர் கூட பேசுனதுக்கு அப்புறம் வாழ்க்கையே வேற மாதிரி ஆச்சு, என்ன தான் பேங்க்ல வேலைன்னாலும், நம்ம கைக்கும், வாய்க்கும் தான் சரியா இருக்குல்லயா? இவரோட ஐடியா நம்ம கையிலும் பணம் புரள வைக்கும், சார்" என்று வெங்கட் வியந்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.
மையமாகத் தலையாட்டிக் கொண்டிருந்த என்னைப் பார்த்த வெங்கட், "என்ன சார், ஒன்னுமே சொல்லமாட்றீங்க?" என்றார் வெங்கட்.
"இன்னும் என்ன ஐடியான்னே சொல்லல, வெங்கட்." என்று நான் கூற, விக்டரி வேந்தனே பேசத் துவங்கினார். "சார், எங்க கம்பெனி பேரே விக்டரி இண்டர்நேஷனல், இந்தக் கம்பெனிக்கு ஏன் இந்தப் பேரு வச்சாங்கன்னா, கம்பெனியின் உரிமையாளர்க்கு மட்டுமில்ல, இதன் உறுப்பினரான எல்லாருக்கும் வெற்றி கிடைக்கணும்னு தான்" என்று நிறுத்தியவர், சில நொடிகள் இடைவெளிவிட்டு, "நீங்களும் இந்த விக்டரியில் உறுப்பினரானால், உங்களுக்கும் வெற்றி தான்" என்றார்.
"நேரடியா என்ன சேதின்னு சொல்லிடுங்க, சார், வந்ததிலிருந்து சுத்தி வளைச்சே பேசிக்கிட்டு இருப்பது போல் இருக்கு" என்றேன்.
"ஒரு பொருள், உற்பத்தி ஆவதிலிருந்து, வாடிக்கையாளர் கைக்குச் சேருவது வரை எத்தனை பேரு கைக்கு மாறி வருகிறது, தெரியுமா, சார்?" எனக் கேட்டார் வேந்தன். நான் தெரியாதெனத் தலையாட்ட, "கிட்டத்தட்ட 10 - 15 இடைத்தரகர்கள் வழியாகக் கடந்து தான் ஒவ்வொரு பொருளும் நம் கைக்கு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும், அதன் விற்பனை விலை அதிகமாகி, உற்பத்தி விலையை விடப் பலமடங்கு அதிகமான விலை கொடுத்து தான் வாடிக்கையாளர் வாங்க வேண்டியுள்ளது. ஆனால், எங்கள் முறையில், உற்பத்தியாளர்க்கும், வாடிக்கையாளர்க்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறோம். இடைத்தரகர்களுக்குச் செல்லும் பலன்கள் வாடிக்கையாளர்க்கும், உறுப்பினர்க்கும் கிடைக்கும். மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்" என்று சொல்லி நிறுத்தினார்.
வெங்கட், "இப்போதைக்கு ரெண்டு பொருட்கள், ஒன்று, காளான் உணவு, மலேசியாலேந்து இறக்குமதி ஆகுது, விக்டரி கம்பெனியோட நேரடி உற்பத்திப் பொருள். இன்னொரு பொருள், liquid soap and shampoo, ரெண்டுமே நல்ல பொருட்கள், நானே வாங்கிப் பயன்படுத்துறேன், சார்" எனக் கூற, வேந்தன், "என்ன சொல்றீங்க, சார்? நீங்களும் விக்டரியில் உறுப்பினராகச் சேர விரும்புறீங்களா?" என்றார்.
"மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்னு சொல்றீங்க, சோப்பு, ஷாம்புன்னு சொல்றீங்க, இதுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்குன்னே எனக்குப் புரியல" என்று இழுத்தேன்.
"இதோ நான் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது நீங்க வெங்கட்கிட்டேந்து எங்களுடைய பொருள் வாங்குறீங்க, உங்களுக்குப் பொருள் பிடித்திருந்தால், உங்க பக்கத்து வீட்டுக்காரர்கிட்ட சொல்வீங்கல்லயா? அதே போல தான். இந்த மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கும், நீங்க வெங்கட் கிட்ட வாங்கி உறுப்பினர் ஆனதும், நீங்க மேலும் இருவரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். அவர்கள் மேலும் இருவரைச் சேர்த்து விட்டால், உங்களுக்கும் அவர்கள் வாங்கியப் பொருட்களின் விலையில் ஒரு பங்கு வந்து சேரும். இப்படி உங்களுக்குக் கீழே உறுப்பினர்கள் அதிகமாக அதிகமாக, உங்களுக்குக் கிடைக்கும் தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்." என்ற வேந்தனும், உடனிருந்த வெங்கட்டும் எனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த உணர்ச்சி வெளிப்பாடு என் முகத்தில் இருக்கவில்லை.
"சரி, என்னை வெங்கட் சேர்த்து விடுறார். நான் எனக்குக் கீழே ரெண்டு பேரைச் சேர்த்து விடுறேன். அவர்கள் ஒவ்வொருத்தரும் இன்னும் ரெண்டு பேரைச் சேர்த்து விட முடியலன்னா, என்ன ஆகும்?" என்று கேட்டேன்.
"எடுத்ததுமே எதிர்மறையா யோசிக்காதீங்க, சார், அப்படி ஒரு நிலை வந்தால், நான் எனக்குத் தெரிந்த சிலரை அவர்களின் பின்னே சேர்த்து விடுவேன்." என்றார் வெங்கட்.
"நல்ல பேங்க் வேலையில் இருக்கிற நான் எதுக்கு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் செய்யணும்? சோப்பு விக்கணும்?" என்றேன்.
இப்போது, வேந்தன், "சார், நான் கூட ஒரு மத்திய அரசு வேலையில் தான் இருந்தேன். ஆனால், விக்டரியில் உறுப்பினரான சில நாட்களிலேயே, என் வேலையை விட்டு விட்டு, இதையே முழு நேரமாகச் செய்து வருகிறேன். இப்போது, மாருதி கார், நல்ல வீடு எனப் பல வசதிகளோடு இருக்கேன்." என்றவரைப் பார்த்து, இறுதியாகச் சொன்னேன்.
"நீங்க சொல்றது வாய்ப்பு, நான் உறுப்பினர் ஆனால், எனக்குக் கீழே இருவரை உறுப்பினராகச் சேர்த்தால், அவர்கள் ஒவ்வொருவரும் இருவரை உறுப்பினராகச் சேர்த்தால், இவர்கள் அனைவர்க்கும் பொருட்கள் பிடித்திருந்தால், அதை மீண்டும் மீண்டும் வாங்கினால், இப்படி பல காரணிகள் இருக்குது இல்லயா? ஆனால், இப்போதிருக்கும் வேலைல, வாரம் ஆறு நாள் வேலை பாத்தா, மாசத்தொடக்கத்துல சம்பளம். ஆண்டுக்கொரு முறை Tour, Retire ஆகும் போது PF and Retirement Benefits, இதெல்லாம் விட்டுட்டு என்னால இதுக்காக நேரம் ஒதுக்க முடியாதுங்க."
"சார், நீங்க முழு நேரமாச் செய்யணும்னு கட்டாயம் இல்ல, வார இறுதியில் கூட" என்ற வெங்கட்டை இடைமறித்து, "வெங்கட், வார இறுதி என் குடும்பத்துக்கான நேரம், அதிலும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்னு ஆள் சேத்துக்கிட்டு இருக்க என்னால முடியாது, அதுவுமில்லாம, என்னிக்கோ கிடைக்குற பலாக்காய்க்காக, இன்னிக்கு இருக்கிற களாக்காயைத் தூக்கிப் போட விரும்பல, இதுல பலாப்பழம் உடனே கிடைக்கும்னு நீங்க சொன்னாலும், அது எனக்குத் தேவையில்ல, எனக்குத் தெரிஞ்ச துறையில இருப்பதையே நான் விரும்புறேன். அதுவுமில்லாம, பணம் கிடைக்கும்னு பேராசை காட்டித்தான் ஆள் சேர்க்கிறோம், சேர்ப்பவர்க்குப் பொருள் தேவையா இல்லையா என்பதைக் கூட நாம் அறிய முயல்வதில்லை, இது மக்களுக்கும், உற்பத்தி விலையில் கொடுக்க முயல்வதில்லை, தரகர்க்குக் கிடைக்கும் பயனைக் கொடுத்து மக்களையே தரகராக்குது, அவர்கள் அதிக விலை கொடுத்து தான் இன்னமும் வாங்குகிறார்கள் என்பதை உணர்வதுமில்ல, இதுவும் சரியானதா எனக்குப் படல, அதனால மன்னிச்சுக்கோங்க" எனக் கூற, விக்டரி வேந்தன் என்னை உறுப்பினராகச் சேர்க்க முயன்ற முயற்சியின் தோல்வியை உணர்ந்திருந்தார்.
- முடிவிலி
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)
தனக்குக் கிடைக்கும் நிலையான இன்பத்தை விரும்புபவர், உடனே கிடைக்கும் என்பதற்காக அறமில்லாத வழியில் நடக்க மாட்டார்.
Comments
Post a Comment