நினைவடையாளம் - குறள் கதை
நினைவடையாளம்
- முடிவிலி
தன்னுடைய அலைபேசியில் வந்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்த பூவேந்திரனின் முகத்தில் புன்னகை பூத்தது. 'சம்பளம் போட்டாச்சே' என்று மனம் குதியாட்டம் போட்டது. சென்னையைச் சேர்ந்த ஒரு கொதிகலன் நிறுவனத்தில் Graduate Engineer Trainee ஆக சேர்ந்த குழுவில் சசி, நாதன் மற்றும் பூவேந்திரனும் இருந்தனர். இந்த மூவரும் அந்நிறுவனம் சார்பாக, மத்திய பிரதேசம் ஓசங்காபாத் அருகே உள்ள நூற்பாலை ஒன்றின் தன்னக மின் நிலையத்தின் (Captive Power Station) கொதிகலன் நிறுவுதல் மற்றும் துவக்கப் பணிகளைக் (Boiler Erection and Commissioning) கற்கவும், பணிபுரிந்து கொள்ளவும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் அந்தக் குழுவில் site in charge, கட்டுமானப் பொறியாளர்கள், துவக்கப் பொறியாளர்கள் என மொத்தம் 10 பேர் உடைய குழு இருந்தது.
கொதிகலனின் 12மீ தளத்தில் நின்று கொண்டிருந்த பூவேந்திரன், குறுஞ்செய்தியைப் பார்த்ததும், சசிக்கு அலைபேசியில் அழைத்தபடி கீழே இறங்கி site office நோக்கி நடந்தான். சில நிமிடங்களில், சசி, பூவேந்திரன், நாதன் மூவரும் துவக்கப் பொறியாளர் சுந்தரைச் சுற்றி நின்றனர்.
"என்ன சசி, கூட்டமா வந்திருக்கீங்க?"
"சார், சம்பளம் வந்திருச்சு, ஒரு அரை மணி நேரம் முன்னாடி வண்டியை எடுத்தா நாங்க போயி ATM ல பணம் எடுத்திடுவோம்." என்றான் சசி.
சுந்தர் சிரித்துக் கொண்டே, "ATM இருபத்தி நாலு மணிநேரமும் இருக்குமே, சசி, இப்ப நான் வண்டியைக் கிளப்பச் சொன்னா, இன்ஸ் என்னைக் குத்தம் சொல்லவா?"
"சார், எல்லா வேலையும் முடிஞ்சாச்சு, boiler startupக்கு இன்னும் மூனு நாள் இருக்கு. நம்ம பக்கம் எல்லாம் பக்காவா இருக்கு. Client தான் Fuel Oil, Coalக்கு arrange செய்யணும்" என்றான் பூவேந்திரன்.
"எனக்கும் இதெல்லாம் தெரியும், பூ. உள்ளே போயி நீயே இன்ஸ்கிட்ட கேளு" என்று சுந்தர் கூற, சற்று நேரம் அனைவரும் அமைதியாய் நின்றனர்.
"சரி, சரி, வேற யார்லாம் வர்றாங்கன்னு கேளுங்க, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நான் second trip ல வர்றேன்." என்றார் சுந்தர்.
"Thanks sir" என்று மூவரும் வெளியே ஓடினர், பள்ளி மணி அடித்ததும் வகுப்பை விட்டு ஓடும் குழந்தைகள் போல. சசி, பூவேந்திரன், நாதன், இன்னும் மூன்று பேருடன் டவேரா ஓசங்காபாத் நகரின் SBI ATM நோக்கி விரைந்தது.
****
இரண்டு நாள் கழித்து,
சசி கையில் இருந்த Walkie "சசி, Come Online" என்றது.
"Online, சொல்லுங்க"
"FD Fan Motor கிட்ட போயி clearance கொடு, No load Trialக்கு start செய்யப் போறோம்" என்று சுந்தர் கூற, சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுந்தர் Motorஐத் துவக்க, அது உயிர்பெற்று ஓடியது.
சசி, "சுந்தர் சார், come online" என்றான்
"சொல்லு சசி"
"சார், Direction of rotation எல்லாம் ஓகே. Vibration லாம் இல்ல, கொஞ்சம் கீழ வர்றீங்களா?"
"வேற ஏதும் problem ஆ, சசி"
"சார், வாக்கீல வேணாம், நேர்ல வாங்க" என்று சசி கூற, சரியென்று கூறி சுந்தர் கீழே வர, சசி, பூவேந்திரன் இருவரும் நின்றிருந்தனர். சுந்தரைப் பார்த்ததும், இருவரும் அருகே வந்து, "யாரோ நம்ம குரூப்ல திருடன் இருக்காங்க, சார்" என்றனர் ஒரே குரலாய்.
"சசி, நான் ஏதோ பெரிய problem போலன்னு நெனச்சு மேலேந்து ஓடி வர்றேன். நீங்க என்னடான்னா, ஸ்கூல் பசங்க மாதிரி திருடன் போலீஸ்னு சொல்லிட்டு இருக்கீங்க" என்றார் சுந்தர்.
"சார், உண்மையிலேயே சொல்றோம். உன் போனை எடுத்துக் காட்டு, பூவேந்திரா" என சசி சொல்ல, பூவேந்திரன் தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்திகளை எடுத்துக் காட்டினான். இரு குறுஞ்செய்திகள் SBI bankல் இருந்து வந்திருந்தன. முதலில் 1000ரூ எடுக்கப்பட்டிருந்தது போலவும், அடுத்த நிமிடமே 12000ரூ எடுக்கப்பட்டதாகவும் காட்டின குறுஞ்செய்திகள்.
சுந்தர் பூவேந்திரனிடம் கேட்டார், "ரெண்டு நாள் முன்னாடி பணம் எடுத்ததா?"
"சார், நல்லா பாருங்க, இன்னிக்குக் காலைல அஞ்சரை மணிக்கு எடுத்திருக்காங்க. நான் எடுக்கலை, என்னோட பர்ஸ்லேந்து ATM card ஐத் திருடி எடுத்திருக்காங்க. எடுத்தவனுக்கு என்னோட பின் நம்பர் தெரிஞ்சிருக்கு" என்றான் பூவேந்திரன். பணத்தை இழந்த நடுக்கம் குரலில் தெரிந்தது. சுந்தருக்கு நிலைமையின் வீச்சு இப்போது தான் விளங்கியது.
சசி தொடர்ந்தான், "நம்ம சைட்ல சின்ன சின்ன பொருளா அடிக்கடி காணாமப் போயிட்டு தான் இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருங்க, உங்களோட பொருள் எதுவும் காணாமப் போயிருக்கா? என்னோட பென் ட்ரைவ் மட்டும் ரெண்டு காணாமப் போயிருக்கு."
"நான் கம்ப்யூட்டர் பயன்படுத்துறப்ப, கண் strain ஆகுதுன்னு ஒரு கண்ணாடி போட்டிருந்தேன். ஒரு நாள் அதைக் கழட்டி வச்சுட்டு, பாய்லர் போயிட்டுத் திரும்பி வந்து பாத்தா காணோம். நாம தான் கெஸ்ட் ஹவுஸ்லயே வச்சுட்டோம் போலன்னு ரூம்க்குப் போயி பாத்தா அங்கயும் காணோம். சரி, போனா போகுதுன்னு விட்டுட்டேன்" என்றார்.
"இப்ப அப்படி விடமுடியாது, சார்" என்றான் பூவேந்திரன். சுந்தர் இருவரிடமும் கேட்டார், "உங்களுக்கு யார் மேலயாவது doubt இருக்கா?"
இருவரும் ஒருவரை ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். சசி கூறினான், "உதய் மேல தான் டவுட். ரெண்டு நாள் முன்னாடி நாங்க சம்பளம் வந்ததும் ATM போனப்ப கூடவே உதயும் வந்திருந்தான். நான் போற வழியிலேயே நெட் பேங்கிங்ல அக்கவுண்ட்டுக்கு 10000ரூ அனுப்பிட்டேன். ATM ல 1000ரூ மட்டும் எடுத்தேன். எனக்குப் பின்னாடி பூவேந்திரன் தான் நின்னான். அவனுக்குப் பின்னாடி உதய் நின்னுட்டு இருந்தான். பூவேந்திரனும் ஆயிரம் ரூபாய் மட்டும் எடுத்துட்டுத் திரும்பி வரும் போது உதய்யும் எங்க கூடவே வந்துட்டான்." குரலில் சீற்றம் தெரிந்தது.
"சசி, டவுட் மட்டும் தான் இருக்கு. இதை வச்சு ஒன்னும் செய்ய முடியாது. கெஸ்ட் ஹவுஸ் 1ல இருக்குற இன்னும் ரெண்டு பேரையும் டவுட் லிஸ்ட்ல வைப்போம். இப்ப நானும், பூவெந்திரனும் பேங்க் வரைக்கும் போயிட்டு வர்றோம். வந்து பேசும் வரை யார் மேலும் டவுட்டு இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டாம்." என்ற சுந்தர் ஓடிக் கொண்டிருந்த motorஐப் பார்த்தார். சசியிடம், "அரை மணிநேரத்துக்கு ஒரு vibration, bearing temperature reading எடுத்துடு, நாங்க பேங்குக்குப் போயிட்டு வந்திடுறோம்" என்று பூவேந்திரனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் சுந்தர்.
****
மதியம், குழுவின் அனைவருக்கும் பணம் காணாமல் போனதைப் பற்றி தெரிந்திருந்தது. அனைவரும் site officeல் இருந்த நேரம் சுந்தரும், பூவேந்திரனும் site in charge ஈஸ்வர் "என்ன ஆச்சு, பேங்க்ல என்ன சொன்னாங்க?" என்றார்.
அறையைச் சுற்றியும் சில நொடிகள் பார்த்த சுந்தர், அறையில் அனைவரும் இருப்பதை உறுதி செய்துவிட்டு, "பேங்க்ல கேட்டோம். Policeகிட்டேந்து ஒரு FIR copy வாங்கிட்டு வந்தா, CCTV image தருவோம்னு சொல்லிருக்காங்க. வாங்கிக் கொடுத்துட்டு வந்திருக்கேன். Evening அஞ்சு மணிக்கு வந்து வாங்கிக்கச் சொல்லிருக்காங்க" என்றார்.
உதய், "அப்படியா, சார், அப்படின்னா பணம் யார் எடுத்ததுன்னு கண்டுபுடிச்சுடலாம் தானே, யார் செஞ்சுருப்பாங்க?" என்றான் குரலில் சிறு பதட்டத்தை மறைக்கும் முயற்சி தெரிந்தது. சுந்தர், சசியைப் பார்த்தார். சசி கண்களாலே 'உதய் தான்' என்பது போல் சொன்னான்.
சுந்தர், "யார் செஞ்சிருந்தாலும், இன்னிக்கு அஞ்சு மணிக்குத் தெரிஞ்சுடும். நேரா பேங்க்லேந்து ஒரு ரிப்போர்ட் போலீஸ்க்கும் போயிடும்." என்று கூற, உதய், "சூப்பர் சார், அப்பாடா, பூவேந்திரனோட காசு கெடச்சுடும்" என்றான்.
சுந்தர், ஈஸ்வரைப் பார்த்து, "சார், 5 மணிக்கு நம்ம ரெண்டு பேரும் கிளம்பி பேங்குக்குப் போயிட்டு வந்துடலாம்" என்று கூறிவிட்டு, சசியின் பக்கம் திரும்பி விட்டு, "சசி, வா, அதுக்குள்ள நாளைக்கு commissioning activitiesக்கு prepare செஞ்சுடலாம். இன்னும் மூனு நாளுல fuel oil வந்துடும்னு client சொன்னாங்க." என்று கூற, மற்றவர்களும் தத்தம் பணிக்குத் திரும்பினர்.
சில நிமிடங்கள் கழித்து, ஈஸ்வரின் அறையில் உதய் நுழைந்தான். "வா, உதய் என்ன வேணும்?" என்றார் ஈஸ்வர்.
எதிரே இருந்த இருக்கையில் அமராமல் நின்றிருந்த வண்ணம், "சார், நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்றான்.
"சொல்லுங்க உதய்"
"சார், நான் தான் சார் அந்தப் பணத்தை எடுத்தது. காசு திருப்பிக் கொடுத்திடுறேன். போலீஸ்க்கு எல்லாம் வேணாம், சார். Evening போறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டிடுறேன்."
"அப்ப சுந்தரும், சசியும் guess செஞ்சது சரியாத் தான் போச்சு. சரி, அதிருக்கட்டும், ஏன் இப்படி செஞ்ச?"
"சார், ஏதாவது சின்ன சின்ன பொருளை எடுப்பதுல ஒரு thrill, அஞ்சு வயசுல பல்பம் திருடுறது போல எடுப்போம் ஆனா use செய்யமாட்டோமே, ஆனா இதுவரைக்கும் பணம்லாம் திருடுனதே இல்ல, ஏதோ மனசு அலைபாய்ஞ்சுடுச்சு சார், போலீஸ்லாம் வேணாம் சார், ப்ளீஸ் சார்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே, கையில் ஒரு சின்ன பையோடு சுந்தரும், பூவேந்திரனும் உள்ளே வந்தனர்.
பூவேந்திரன் அருகே வந்த உதய், "என்னை மன்னிச்சுடு பூவேந்திரன், நான் பணம் திருப்பிக் கொடுத்திடுறேன். போலீஸ்லாம் வேணாம், ப்ளீஸ்" என்றான். பூவேந்திரன் எந்தப் பதிலும் அளிக்காமல் சுந்தரையே பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தரின் கையில் இருந்த பையைக் கவனித்த உதய், அந்தப் பையினை அவர் கையில் இருந்து வாங்க முயன்றான். அவனைப் பூவேந்திரன் பிடித்துக் கொள்ள, சுந்தர் பையினைத் திறந்து, ஈஸ்வரின் மேசையில் கொட்டினார். 6 பென் டிரைவ், 22 பேனா, 3 stapler, சுந்தரின் கண்ணாடி, 3மீ Measuring Tape, ஒரு கையால் மடக்கப்பட்ட ATM Card இத்தனையும் இருந்தன.
ஈஸ்வர், "இதெல்லாம் எங்க இருந்தது?" என்றார்.
"நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல உதய் ரூம்லேந்து எடுத்தது. ஒவ்வொரு திருட்டுக்கும் திருடுனதை நினைவு அடையாளமா எடுத்து வச்சிருக்கான், பணம் மட்டும் இன்னும் கிடைக்கல, ஆனா உடைஞ்ச ATM cardலேந்து எல்லாமே கிடைச்சுடுச்சு. பேங்க்ல எப்பவும் போல சரியா ஒத்துழைப்பு கொடுக்கல, நம்ம பணத்தை எடுத்துட்டு இப்ப திருடு போயிடுச்சுன்னு சொல்றது போல பேசுனாங்க. அதான் இங்க வந்து ஒரு கதை வுட்டேன். ஆடு தானா மாட்டிடுச்சு." என்ற சுந்தர் உதய்யைப் பார்த்து, "Are you kleptomaniac? ஆனா க்ளெப்டோ உள்ளவங்க திருடுறதைச் சேர்த்து வச்சிருப்பாங்க, பயன்படுத்த மாட்டாங்க, எப்ப நீ காசு திருடுனியோ அப்பவே kleptoலேந்து முழுத்திருடனா மாறிட்ட" என்றார்.
ஈஸ்வர், "இப்பவே head officeக்கு mail அனுப்புறேன். நீ கிளம்பி சென்னைக்குப் போகலாம். பூவேந்திரனோட பணத்தைக் கொடுத்துட்டு, ஆமா, இவ்ளோ படிச்சுருக்க, ஆனா அடுத்தவன் பொருளை எடுக்கக் கூடாதுன்னு அறிவு இல்லையே, சரி, என்னய்யா இது measuring tape, Fitterகிட்டேந்து கூட திருடி வச்சிருக்கியா?" என்று கேட்டுவிட்டு சுந்தரைப் பார்த்தார், இருவரும் சிரிக்க, பூவேந்திரனும் பிடியைத் தளர்த்திவிட்டு, சிரிக்கத் தொடங்கினான்.
பூவேந்திரனின் பிடியில் இருந்து விலகிய உதய்யின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் யார் மனதிலும் எவ்வித உணர்வையும் உருவாக்கவில்லை. அவன் தலை கவிழ்ந்தே இருந்தது.
- முடிவிலி
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய்ஃ செயின். (175)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய்ஃ செயின். (175)
அடுத்தவர் பொருளை அறவழிக்குப் புறம்பாகக் கவரும் விருப்பம் உள்ளவர்க்குப் பரந்த அறிவு இருந்து என்ன பயன்?
Comments
Post a Comment