அக்கா - குறள் கதை

அக்கா...!
- முடிவிலி
இன்று

ஒரு நாலு மாசமாவே என்னோட காலையும், மாலையும் அவளைச் சுத்தியே வந்துகிட்டு இருக்கு. அவ நடந்து போயி அந்த இன்போசிஸ் பஸ்ல ஏறுறது, திரும்பி பக்கத்துல இருக்க அவளோட ப்ரெண்டு கூட பேசுறது. ஏன், நின்ன இடத்துலேந்து தலையை மட்டும் நீட்டி, தன்னோட கம்பெனி பஸ் வந்துடுச்சான்னு எட்டிப் பாக்குறதுன்னு எல்லாமே எனக்கு slowmotionல  நடக்குறது போலவே இருக்கும். எத்தனை முறை பாத்தாலும், அவ கண்ணு, அதுக்கு அளவா வில்லு மாதிரி புருவம், அந்த புருவத்துல வந்து படியுற நாலே நாலு முடின்னு கவிதைங்க அவ. நாலு மாசமா பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். அவளுக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்? எந்த நடிகர் பிடிக்கும்? என்ன கலர் பிடிக்கும்? இப்படி எல்லா டீடெயிலும் தேடிக் கண்டுபுடிச்சாச்சு. ரெண்டு மாசம் முன்னாடி, அப்பப்ப முறைச்சுப் பாக்குற பார்வை கூட இப்ப குறைஞ்சுருக்கு. 

என்னடா இவன், இந்தப் பொண்ணு பின்னாடி சுத்துறதையே fulltime வேலையா வச்சிருப்பான் போலயேன்னு நீங்க நினைக்குற mindvoice எனக்கே கேட்குது. நான் விவேக், ஒரு தனியார் கம்பெனில நல்ல வேலையில இருக்கேன். ஒரே மாதிரி ஓடிக்கிட்டு இருந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில இதமான தென்றல் போல வந்தவ தான் என்னோட தேவதை ஐஸ்வர்யா. என்ன தான் அப்பாகிட்ட பணம் இருந்தாலும், கார், பங்களா என எல்லாம் இருந்தாலும் தன்னோட விருப்பத்துக்காக வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கா, அதுவும் கம்பெனி பஸ்ல. எத்தனை பேருக்கு இந்த மனசு வரும் சொல்லுங்க. இருங்க, இதோ இந்த சென்னை வெயில்லயும் மெலிசாத் தென்றல் அடிக்குதுல்ல, அவ வந்துட்டான்னு நினைக்கிறேன் இதோ இன்னிக்கு அவ கிட்ட என்னோட லவ்வ சொல்லப் போறேன். அவ மட்டும் எனக்கு ஓகே சொல்லிட்டா என்னைக் கையிலேயே புடிக்கமுடியாது. ஒரு ரெண்டு வாரம் முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது, அன்னிக்கு ஒரு கரடி வந்து ஆட்டையக் கலைச்சுட்டு போயிட்டான். பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த ஐஸ்வர்யாகிட்ட நெருங்கிட்டேன், திடீர்னு என்கிட்ட ஒருத்தன், "பாஸ், உங்க போன் கொஞ்சம் கொடுங்களேன், ஒரு கால் செஞ்சுட்டு கொடுக்குறேன், urgent பாஸ்" என்றான். 

"யோவ், எனக்கும் தான்யா urgent"

"பாஸ், ப்ளீஸ் ப்ளீஸ், ஒரே ஒரு கால்" என்றான் ஏதோ கொடுத்து வச்சவன் போல.
இவன் போனா தான் நான் propose செய்ய முடியும்னு, போனை அவனிடம் கொடுத்தேன். வாங்கியவன், தொடுதிரையில் எண்களை அடித்து, "ஹலோ"ன்னு சொன்ன நேரம், அவளோட கம்பெனி பஸ் வந்து நிற்க, அவ அதுல ஏறிப் போயிட்டா. 

இன்னிக்கும் அந்த மாதிரி எந்தக் கரடியும் இல்லன்னா, என்னோட இன்றைய mission success தான். 

சில நாட்களுக்கு முன்பு
"ஜனனி, எங்க போனாலும் பின்னாடியே வந்துடுறான். ஆபீஸ் போகும் போது, ஆபீஸ்லேந்து திரும்பும் போது, ஷாப்பிங் மால் போனா, காபி ஷாப் போனா இப்படி எங்க போனாலும் வந்துடுறான். நீ தான் சைபர் கிரைம்ல இருக்கல்ல. எதாச்சும் செஞ்சு எனக்கு ஹெல்ப் செய்யலாம்ல. இப்படியே இவன விட்டோம்னா ஒரு நாள் கையில ஒத்த ரோஜாவ வச்சுகிட்டு propose செய்யப் போறான்." என்றேன்.

"உண்மையா சொல்றியா? நீ யாருன்னு வெளியில காட்டிக்க மாட்டியே. சும்மா பின்னாடி சுத்திட்டு இருக்கப் போறான், திரும்பி நின்னு முறைச்சா அக்கான்னு சொல்லிடுவான் பாரு" என்றாள் என் அக்கா ஜனனி.

"அதெல்லாம் முறைச்சாச்சு, திரும்பினா வேற எங்கயாவது பார்க்குற மாதிரி நடிப்பான். அப்புறம் நான் பஸ்ல ஏறுற வரைக்கும் நின்னு என்னையே பாத்துட்டு இருப்பான். அப்புறம் பஸ் பின்னாடி கொஞ்ச நேரம் பைக்ல வருவான். பஸ்ஸத் தாண்டி போகும் போது ஹார்ன் அடிச்சுக்கிட்டே போவான். அப்படியே போயி ஏதாவது லாரியில மோதி சாவுடான்னு சொல்லத் தோனும்."

"சொல்றதெல்லாம் பாத்தா, ஸ்டாக்கிங் மாதிரி தான் தோனுது. ஆனா, நீ சொன்னது மாதிரியே ஒரு நாள் உன்கிட்ட வந்து அவன் propose செஞ்சு, அதை நீயும் ஏத்துக்கப் போறன்னு வச்சிக்குவோம், உன் வருங்கால கணவன் மேல எப்படி action எடுக்குறது?" என்று சொல்லிச் சிரித்த ஜனனியை நான் முறைத்துக் கொண்டிருந்தேன்.  
  
இன்று

பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் சில பாட்டிகள் உட்கார்ந்திருக்க, என் உள்ளத்தில் இருக்கையிட்டு அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா நிறுத்தத்தின் வெளியே வாகைமர நிழலை இன்னும் குளுமையாக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் மறைத்து வைத்திருந்த கையில் முட்கள் நீக்கப்பட்ட நீண்ட ஒற்றை ரோஜா மலரின் இதழின் தெளித்த நீர், 'நான் காய்ந்து போவதற்குள் என்னை அவளிடம் கொடுத்து விடு' என என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது. எப்போதும் பின்னாலோ அல்லது தொலைவிலோ நிற்பவன், இன்று அவளின் அருகில் சென்று நின்றேன். கூந்தலை ஒதுக்கிவிட்டபடி, என் புறமாய்ப் பார்த்தாள். அந்த நொடியில் ஐஸ்வர்யாவும், நானும் தவிர நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள், ஹார்ன் அடிச்சுட்டுப் போகிற பைக்குகள், அந்தக் கிழவிங்க உட்கார்ந்திருக்க பஸ் ஸ்டாப்பு எல்லாமே மறைஞ்சு போச்சு. நான் அப்படியே ஒரு காலை முட்டியிட்டு கையில் வைத்திருந்த ரோஜாவை என் ஐஸ்வர்யாவிடம் நீட்டினேன். அவள் தன் கைகளால் பட்டம் வாங்கிய உலக அழகி போல் தன் முகத்தை மூடிக் கொண்டாள். 

மெதுவாக, "ஐ லவ்..." யூ சொல்வதற்குள் கன்னத்தில் பளார் என்று விழுந்த அரையில் கண்களைச் சுற்றிப் பொறி பறந்தது. 

இரு நாட்களுக்கு முன்பு:

அலுவலக நேரத்தில் என் கணினி அருகே இருந்த அலைபேசி அதிர்ந்து நகர்ந்தது. ஜனனியின் பெயரைப் பார்த்ததும், எடுத்த நான், "ஹலோ, என்ன ஆபீஸ் டைம்ல" என்றேன். 

"என்ன சிஸ்டர், உங்க பின்னாடி சுத்துற ரோமியோ பத்தி கேட்டீங்க? மறந்து போச்சா?" 

"ஏன் ரொம்ப நல்லவனா அவன்?"

"உன் பின்னாடி சுத்துறது தவிர வேற எந்த தப்பும் செய்யல" என்று நிறுத்திய ஜனனி, சற்று இடைவெளிவிட்டு, "இன்னிக்கு ஒன்னு தெரிய வர வரைக்கும்" என்றாள்.

"என்ன அது?"

"உனக்கு whatsappல voice message அனுப்பிருக்கேன் கேட்டுப் பாரு." என்று ஜனனி இணைப்பைத் துண்டித்தாள். 
சற்று நேரத்தில் மீண்டும் அலைபேசி அதிர, எடுத்து அந்த voice messageஐக் கேட்டேன். 

'டேய், கோபாலு, நல்லா வசதியான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கப் போறன்னு ஆணவத்துல ஆடாதடா. இன்னும் கொஞ்ச நாளுல நானும் என் ஆளுகிட்ட propose செஞ்சுடுவேன். அவங்க அப்பாகிட்ட எத்தனை பிசினெஸ் இருக்கு தெரியுமா? எத்தனை வீடு இருக்குன்னு தெரியுமா? வீட்டுல எத்தனை காரு இருக்கு தெரியுமா? ஐஸ்வர்யா மட்டும் ஓகே சொல்லட்டும். அப்புறம் என்னோட நிலைமையே வேறடா.'

'டேய் விவேக், உன்ன கல்யாணத்துக்குத் தானடா கூப்பிட்டேன். இப்படி பேசுற?' 

'ஆமாடா, நான் பொறாமை புடிச்சு பேசுறவன் தான். நீ நல்லவன் தானே. எங்க உங்க மாமனார் சொத்து குடுத்தா வேணாம்னு சொல்லுவியா?'

'டேய் விவேக், எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுடா'

'என்னடா'

'என் கல்யாணத்துக்கு மட்டும் வந்துடாத' அந்த voice message முடிந்திருந்தது. மீண்டும் ஜனனிக்கு அலைபேசியில் அழைத்தேன். 

"கேட்டியா?"

"கேட்டேன், ஆமா, எப்படி இந்த voice message கெடச்சுது?"

"அதுவா, உன் பின்னாடி ஒரு நாள் அவன் சுத்திட்டு இருக்கப்ப, என்னோட கான்ஸ்டபிளை விட்டு, அவன்கிட்டேந்து போன் வாங்கி கால் செய்யுறது மாதிரி, அவன் நம்பர்லேந்து என் நம்பர்க்குக் கால் செஞ்சு, spying app ஒன்னை install செஞ்சு விட்டோம். அதுலேந்து நான் virtually follow செஞ்சுகிட்டிருக்கேன். அதாவது, அவன் எப்படி உன்ன Stalk செய்யுறானோ, அதே போல நான் அவனை Stalk செஞ்சுகிட்டு இருக்கேன்."

"ரெண்டு நாளுல வந்து propose செய்யுறான்னு சொல்லிருக்கானே?"

"லைப்டைம் சான்ஸ், ஐசு, நீ அடிக்கப் போறியா, நான் அடிக்கவா?"

இன்று

"அய்யோ,  யக்கா, யக்கா, எதுக்குக்கா அடிக்கிறீங்க? விட்டீங்கன்னா இப்படியே ஓடிருவேன். இனிமே sister பக்கமே வரமாட்டேன்"

-முடிவிலி 

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமைக் குணம் கொண்டவனை அடையாளம் கண்டு கொண்டு, தன் மூத்தவளுக்குக் காட்டிவிட்டுச் சென்று விடுவாள் திருமகள்.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka