எதுக்கு? - குறள் கதை
எதுக்கு?
என்றைக்கும் வகுப்பு முடிந்து உற்சாகமாக வரும் ஜீவா, இன்று ஏதோ சிந்தித்துக் கொண்டு வருவதைப் பார்த்தாள் யாழினி. தான் பணிபுரியும் அதே பள்ளியில் ஜீவாவும் படித்து வருகிறான். ஜீவாவின் பள்ளி நேரம் முடிந்து மேலும் ஒரு மணிநேரம் யாழினிக்கு வேலை இருக்கும். ஜீவாவும் வகுப்பிலிருந்து வந்து ஆசிரியர் அறையில் அமர்ந்து அன்றைய வீட்டுப்பாடங்களை எழுதுவது வழக்கம்.
"என்னடா ஏதோ வலுவா யோசிச்சுகிட்டே வர்ற?" என்றாள் யாழினி,
"ஒன்னுமில்லம்மா" என்று ஒப்புக்குச் சொன்னவன், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான். பெற்றோர்க்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக வீட்டுப்பாடங்கள் பற்றிய குறிப்பினைக் கணினி மூலம் எழுதி அனுப்புவதில் யாழினி முனைந்திருந்தாள். தன் வேலை முடிவதற்கும், பணி நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. யாழினியின் கணினிக்கு மேலே இருந்த கடிகாரத்தின் மணி முள் ஐந்தின் அருகே நிற்க, நிமிட முள் பன்னிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
அருகே யாழினி வந்து நின்றது கூடத் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த ஜீவாவைக் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, "பெரிய மனுசா, வாடா போலாம்" என்றாள் யாழினி.
"ம்ம்" என்ற ஜீவா, தனது பைகளை எடுத்துக் கொண்டு யாழினியின் பின் நடக்கத் தொடங்கினான்.
"என்னடா, உம்முன்னு வர்ற?" என்றாள் யாழினி.
"ப்ச், ஒன்னுமில்ல" என்றான் ஜீவா.
யாழினி, தானியங்கி வருகைப்பதிவு கருவியில் தன் சுட்டுவிரலை வைத்தாள். கைரேகை பதிவாகி, கருவியின் பதிவான குரலில் சொல்லும் 'thank you'க்கு ஜீவா எப்போதும் பதில் 'thank you' சொல்வது வழக்கம். ஆனால், இன்று ஜீவா அமைதியாகவே வந்தான்.
யாழினி ஜீவாவின் பைகளை வாங்கி முன்னால் மாட்டிவிட்டு, ஸ்கூட்டியில் அமர, பின்னால் ஏறி அமர்ந்தான் ஜீவா. வண்டி வீட்டை நோக்கி செல்லத் துவங்கிய சிறிது நேரத்தில், ஜீவா கேட்டான். "ஏன்மா, எங்களுக்கு ஸ்கூல்ல யுனிபார்ம் தர்றாங்க?"
"ஏன்டா? என்னடா ஆச்சு?"
"சொல்லும்மா, யூனிபார்ம் எதுக்கு?"
"ஒவ்வொரு ஆண்டும் நம்ம கிட்டேந்து பள்ளி fees கூட extraவா காசு வாங்க" என்றாள் யாழினி.
"ப்ச், அதில்லம்மா, பொதுவா சொல்லு. யுனிபார்ம் எதுக்கு?"
"ஓ, நம்ம ஸ்கூலப் பத்தி கேட்குறியோன்னு நெனச்சுட்டேன். யுனிபார்ம் எதுக்குன்னா, உன் கிளாஸ்ல பணக்காரங்க வீட்டு பசங்க, காசு இல்லாதவங்க இப்படி யாரோட பசங்களா இருந்தாலும், அவங்களுக்குள்ள எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது, அடுத்தவனையும் தன்னைப் போல சமமா மதிக்கணும், இதுக்காகத் தான் ஒரே மாதிரியான ட்ரெஸ் கொடுத்திருக்காங்க, இப்படித் தான் நான் நெனக்கிறேன், ஏன்டா திடீர்னு கேட்குற?" என்றாள் யாழினி, வண்டியை ஓட்டியபடி.
"நானும் இப்படித் தான் நெனக்கிறேன். ஆனா, எல்லாரும் இதே போல நெனக்க மாட்றாங்களே?"
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, "ஓய், பெரிய மனுசா, என்ன ஆச்சு சொல்லு. யாரு ஒன்ன என்ன சொன்னாங்க?" என்றாள் யாழினி.
"என்ன யாரு என்ன சொல்லுவாங்க? நான் அப்படியே சொன்னாலும், ஈசியா எடுத்துக்குவேன். ஆனா, மத்தவங்க ஈசியா எடுத்துக்குறாங்கன்னு நம்ம செய்யுற தப்பெல்லாம் சரியாகிடுமா?"
"டேய், இப்ப புரியுற மாதிரி சொல்லப் போறியா இல்லயா?"
"சொல்லலாம், ஆனா, எனக்குப் பசிக்குதே, அதான் வண்டிய நிறுத்தியாச்சே, வாங்களேன், இந்தக் கடையிலே வாழைக்காய் பஜ்ஜியோட ஒரு coffee குடிச்சுகிட்டே பேசுவோம்" என்றான் ஜீவா, அருகில் இருந்த தேநீர்க்கடையைக் காட்டியபடி.
"ம்ம், இறங்கு, அப்படியே அப்பாவ மாதிரியே பேசு." என்ற யாழினி, சுந்தரை நினைத்துக் கொண்டாள்.
வண்டியில் இருந்து இறங்கிய ஜீவா, நேரே கடைக்குப் போய், "ஒரு ப்ளேட் பஜ்ஜி, ஒரு coffee" என்றான்.
"ஏன்டா உனக்கு coffee வேணாமா?" என்ற யாழினி, ஜீவாவுடன் உள்ளே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். "வேணாம், எனக்கு பஜ்ஜி போதும்," என்றான் ஜீவா.
"சரிடா, நம்ம செய்யுற தப்பு சரின்னு ஏதோ சொன்னியே, என்ன ஆச்சு, சொல்லுடா"
"எல்லாம் இந்த ராம்னால தான்."
"யாரு, ராம் தானே உன்னோட பெஸ்ட் ப்ரெண்டு?"
"பெஸ்ட் ப்ரெண்டா இருந்தான். ஒரு நல்ல friend என்ன செய்யணும், தன்னோட friend தப்பு செஞ்சா, ஏன்டா இப்படி செய்யுறன்னு கேட்கணும், இல்லயா?"
"ம்ம்ம், முழுசா சொல்லி முடி. அப்புறம் உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறேன்."
"சரி, என் கிளாஸ் செழியன் இருக்கான்ல, அவன் கேங்குக்கும், எங்க கேங்குக்கும் எப்பவுமே ஆகாது."
"இருக்குறது 25 பசங்க இதுல கேங்காடா?"
"ப்ச், சொல்லுறதக் கேளும்மா, கேங்னா படிப்புல தான் எங்க போட்டி இருக்கும். அதனால ஒன்னும் தப்பு இல்ல. ஆனா, நமக்குப் பிடிக்காதவனா இருந்தாலும் பொறாமை இருக்கக் கூடாது தானே?"
சூடான பஜ்ஜியுடன் coffee வந்திருந்தது. பஜ்ஜியை எடுத்துச் சாப்பிட்டபடி, அவனது கதையைத் தொடர்ந்தான் ஜீவா. "நம்ம செழியன் போன வாரம் நடந்த எக்சாம்ல எல்லாத்திலும் ராமை விட அதிக மார்க். இதனால, அவனோட பேக்ல இருந்த பென்சில் பாக்ஸ் எடுத்து உடைச்சு வச்சுட்டான் ராம். ஏன்டா இப்படி செஞ்சன்னு கேட்டதுக்கு 'உன்னையெல்லாம் கம்பேர் செஞ்சு எங்க அப்பா அம்மாகிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கு, அதனால தான் இப்படி செஞ்சேன்'னு சொல்லி அடிச்சு வேற வச்சிருக்கான். இப்படி செஞ்சதும் இல்லாம, என்கிட்ட வந்து பெருமையா வேற சொன்னான்."
"அதுக்கு நீ என்னடா சொன்ன?"
"நான் என்ன சொன்னேன்னா, 'உன்னால முடிஞ்சா அடுத்த எக்சாம்ல அவனை விட அதிக மார்க் வாங்கு, அத விட்டுப்புட்டு அவனோட பென்சில் பாக்ஸ் எடுத்து உடைக்குறது, அவனை அடிச்சு வைக்குறது எல்லாம் என்னோட friend செய்யுற வேலை இல்ல' இப்படி சொன்னேன்"
"சரியாத் தான் சொல்லிருக்க, சூப்பர்டா"
"அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'அந்த செழியனுக்காக என் friendshipஅ வேணாம்னு சொல்றியா? இனிமே நீயும் அந்த கேங் தான். பாத்துடலாம்டா'ன்னு சொன்னான். அதுக்கு நான், 'ராம், உன் கூட friendஆ இருந்தா, நான் இன்னொருத்தனுக்கு எதிரில்லாம் கெடயாது, எனக்கு யார் மேலயும் பொறாமையும் கெடையாது, எல்லாரையும் நான் ஒன்னா தான் பாக்குறேன். நீ செஞ்சது தப்புன்னு சொல்றேன், அது கூட உன்னால ஏத்துக்க முடில, ஆனா நீ என்ன வேற கேங்குன்னு சொல்ற. ஒரு நாள் நீயே இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சுப்ப'ன்னு சொன்னேன்"
"ப்பா, சினிமா டயலாக் கூட தோத்துடும் ஜீவா" என்றாள் யாழினி.
முறைத்துப் பார்த்த ஜீவா, "நான் எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன், சினிமா டயலாக்னா சொல்றீங்க, உங்ககிட்ட சொல்லிட்டுருக்கேன் பாருங்க, எதுக்க்கு...?" என்று கேட்டபடி மீதி பஜ்ஜியை உண்ணத் தொடங்கினான். மனதிற்குள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் யாழினி.
- முடிவிலி
தழுக்கா றிலாத இயல்பு. (161)
தனது மனதளவில் பொறாமை இல்லாத குணத்தையே ஒருவன் ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment