அப்பா, ஒரு கதை சொல்றியா? - குறள் கதை
"அப்பா..." எனது மகனின் அறையின் விளக்கை அணைக்கப் போகுமுன், அவன் குரல் கேட்டுத் திரும்பினேன்.
"டேய் ஜீவா, தூங்கலயா நீயி"
"அப்பா, ஒரு கதை சொல்றியாப்பா?" ஜீவா கேட்க, அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த யாழினி சிரித்துக் கொண்டே உள்ளே வந்து ஜீவாவின் அருகே அமர்ந்தாள். அவனை அப்படியே தூக்கித் தன் மடியில் அமர வைத்துக் கொண்டு, "அப்பாவுக்குக் கதையெல்லாம் சொல்ல வராதுடா" என்று சொல்லியபடி, என்னைப் பார்த்து, "என்ன சுந்தர், சர்தானே?" என்றாள் கேலியாக.
"ஆமாடா, நீ அம்மாக்கிட்டயே கதை கேட்டுக்கோ" என்றேன்.
"அப்பா, ப்ளீஸ்பா, ஒரே ஒரு கதை" என்ற ஜீவா, யாழினியின் வாயில் கைவைத்து மூடியபடி, "இனி அம்மா ஒன்னும் சொல்லாம நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னான். இருவரும் சிரிக்க, உடன் யாழினியும் சிரித்தாள். யாழினியின் அருகே நான் அமர, அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த ஜீவாவின் கால்களை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டு கதையைச் சொல்லத் துவங்கினேன்.
"கதை சொல்றேன். ஆனா, இப்படியெல்லாம் நடக்குமான்னு எல்லாம் கேட்கக் கூடாது. சரியா?"
"சரி" என்றனர், இருவரும்.
"ஒரு ஊர்ல" என்றேன்.
"போச்சுடா" என்றான் ஜீவா.
"என்னடா, என்ன ஆச்சு?"
"எப்ப பாத்தாலும், ஒரு ஊர்ல கதையா? போரு"
"சரிடா, வேற சொல்றேன்" என்று சற்று சிந்தித்து, "கடல் வச்சு சொல்லவா?" என்று கேட்டதும், "ம்ம், சரி" என்றான் ஜீவா, யாழினியைப் பார்த்தபடி. யாழினியும் ஒப்புதலாய்த் தலையை அசைத்தாள்.
"அந்தக் கடல்ல அப்பத்தான் ஒரு புயல் அடிச்சு ஓய்ஞ்சு இருந்தது. ஆனா, இன்னும் காத்தோட சீற்றம் அப்படியே இருந்தது. அதுல உடைஞ்ச ஒரு படகோட மரக்கட்டைத் துண்டுகளைப் பிடிச்சபடி ரெண்டு பேர் மெதந்துட்டு இருந்தாங்க. அவங்க களைச்சுப்போயி இருந்தாங்க. ஒருத்தனுக்கு தோள்பட்டைல ஏதோ குத்தி காயமா இருந்துச்சு."
"அவங்களுக்குப் பேர் இல்லயா?" என்றாள் யாழினி.
"ஆமா, நானே பேரு வைக்கிறேன். அப்பா, இதுல யாரு ஹீரோ?" என்றான் ஜீவா.
"அடேய், நான் என்ன சினிமாக் கதையா சொல்றேன். ஹீரோ எல்லாம் வச்சு சொல்ல, நீ பேரு மட்டும் சொல்லு." என்று நான் கேட்க, "என் ப்ரெண்டுங்க பேரு, ஆதவன், கிசோர்" என்றான் ஜீவா.
"சரி, அடிபட்டு இருக்குறவன் பேரு கிசோர். இன்னொருத்தன் ஆதவன் ஓகேயா?" என்று கையை ஜீவா முன் நீட்ட, என் கையில் ஹை 5 அடித்துவிட்டு, "Ok" என்றான் ஜீவா.
நான் மேலும் தொடர்ந்தேன். "காத்துல அந்த மரம் மெல்ல மிதந்து போயிட்டிருந்துச்சு, காயம் பட்டு இருந்த கிசோர் களைப்புல மயக்கம் அடையப் போற நேரத்துல தான் அவன் கண்ணுக்குச் சில மரங்கள் கண்ணுல பட்டுச்சு. அவன் பிடிச்சிருந்த மரக்கட்டையும் அந்த இடத்தை நோக்கித்தான் போய்ட்டுருந்துச்சு."
"ம்ம், அப்புறம்"
"கொஞ்ச நேரத்துல கிசோர் மட்டும் கரையில வந்து சேந்திருந்தான். இதுவரை ஒரே மாதிரி கட்டைய புடிச்சுட்டு இருந்ததால, களைப்புல அப்படியே கரையிலயே படுத்துத் தூங்கிட்டான். அலையோட உப்புத்தண்ணி வந்து காயத்துல பட்டு எரியக் கொஞ்ச நேரத்துலயே முழிச்சுக்கிட்டான் கிசோர். இன்னொரு கைய வச்சு ஊனி, எந்திரிச்சு, கரைலேந்து கொஞ்சம் உள்ளே போயி பாத்தான். இருந்த கொஞ்சம் சத்து வச்சு, 'யாராச்சும் இருக்கீங்களா?'ன்னு கத்துனான். மரங்களில் இருந்த பறவைங்க மட்டும் பறந்து போச்சு."
"ம்ம்"
"கொஞ்ச நேரத்துல கரைக்கு வந்தவன், அலைக்கு அருகே வந்து உட்காந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் அவன மனசுல ஓடுச்சு. 'என் அண்ணன்கிட்ட அப்பவே சொன்னேன். இந்த ஆதவனை எல்லாம் கூட சேக்காதன்னு. ஆனா, படகுல கூட்டிட்டு வந்தான். அப்பவே தெரியும், அவன் நேரத்துக்கு எதாச்சும் ஆகும்னு. புயல்ல சிக்கி, எனக்கு அடிபட்டு, அண்ணன் என்ன ஆனான்னே தெரியல. இப்ப முழிச்சுப் பாத்தா இந்தத் தீவுல இருக்கேன். உள்ள வேற யாரும் இல்லயே' என்று நினைச்சவன், மறுபடியும் சத்தமா, 'யாருன்னாச்சும் இருக்கீங்களா?' என்று கத்தினான்"
"ஓ, படகுல மூனு பேரு வந்தாங்க, புயல்ல accident ஆச்சா?" என்றான் ஜீவா.
"ஆமா. முதல் நாள் அந்தத் தீவு முழுசும் சுத்திட்டான் கிசோர். ரொம்ப சின்னத் தீவு தான். தென்னை மரம் நிறைய இருக்குற காடு, நடுவுல ஒரு நல்லத்தண்ணி ஊத்து, அந்தக் காட்டைக் கடந்து அந்தப் பக்கம் போனா கரை அவ்ளோ தான் அந்தத் தீவு. பெரிய சைஸ்ல இருந்த இலைய எடுத்து அவன் புண்ல கட்டிக்கிட்டு, காட்டுல இருந்த சில பழத்தை எடுத்து சாப்பிட்டுக்கிட்டே தீவைச் சுத்தி வந்தான். மாலை நேரம் வந்ததும் தான், இருட்டுனா என்ன செய்யுறதுன்னு அவனுக்கு உள்ளுக்குள்ளே உதறல் எடுத்துச்சு"
"ஏன்?"
"யாருமே இல்லாத தீவு தானேடா, அங்க என்ன நைட் ஆனதும் ஸ்ட்ரீட் லைட்டா போடுவாங்க, செம்ம இருட்டாயிடும்ல"
"ஓ..."
"கையில கிடைச்ச சருகுங்க, காய்ஞ்ச மரத்துண்டு, ரெண்டு கல்லு வச்சு, தேய்ச்சு தேய்ச்சு தீய வரவழைக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனான். ஆனா, காத்துல இருந்த ஈரப்பதம், கடல் காத்து எல்லாம் அவனுக்கு எதிராவே இருந்துச்சு. நல்லா இருட்டிடுச்சு. அவன் காதுகிட்ட யாரோ மெதுவா பேசுற மாதிரி அவனுக்குக் கேட்டது."
"யாரு?"
"சொல்றேன்டா. 'கிசோரு, நீ மணி அண்ணன் சொன்னப்பவே கயிறு அறுத்திவிட்டிருந்தா, மணி அண்ணனும் கீழே விழுந்திருக்கமாட்டாரு, உனக்கும் அடிபட்டிருக்காது, படகும் உடைஞ்சுருக்காதுல' அப்படின்னு கேட்டுச்சு அவனுக்கு. கிசோர் திரும்பிப் பாத்து, 'யாரு, யாரு பேசுறது?'ன்னு கேட்டான். ஆனா, அங்க யாரும் இல்ல. மறுபடியும் அவன் காதுக்குப் பக்கத்துலயே கேட்டுச்சு ஒரு குரல், 'கிசோரு... நெலத்தப் பாத்ததும் என்னை அடிச்சு வேறப்பக்கம் தள்ளிவிட்டுட்ட, இப்ப இங்க தனியா மாட்டிக்கிட்டியே' ரெண்டு காதையும் மூடிக்கிட்டான் கிசோர்." என்று நான் சொல்ல, ஜீவாவும் ரெண்டு காதையும் மூடிக்கொண்டு சிரித்தான்.
அவன் காதிலிருந்து கையை எடுத்துவிட்டு, "அது வேற யாரும் இல்ல, மனசுல அவனே நெனச்சுக்கிட்டது தான். தீவுல தனிமை, இருட்டு எல்லாம் அவனைப் பயமுறுத்தி, அவனுக்கு இல்லாததெல்லாம் கேட்டுச்சு. கொஞ்ச நேரத்துல, காதுல எதுவும் வாங்காம தீயைக் கொளுத்துறதுல கவனம் செலுத்துனான். ரொம்ப நேரம் கழிச்சு, மெல்ல நெருப்பு வந்துச்சு. அதுமேல இன்னும் நிறைய விறகை அடுக்கினான். இப்ப நல்லாவே எரியத் தொடங்கியது. அப்படியே அது பக்கத்துலயே படுத்துத் தூங்கிட்டான்."
"அப்புறம் என்ன ஆச்சு? அந்தக் குரல் மறுபடியும் வந்துச்சா?" என்று கேட்டான் ஜீவா.
"இல்லடா, விடிஞ்சிருச்சு, இப்ப அவனை யாரோ எழுப்புற மாதிரி இருந்துச்சு. அடிச்சு புடிச்சு எழுந்திரிச்சான் கிசோர். அவன் முன்னாடி நின்னுட்டு இருந்தது வேற யாரும் இல்ல" என்று சொல்லி, ஜீவாவைக் கவனித்தேன்.
"யாரு?" என்றாள் யாழினி.
"இதை இவன் கேட்பான்னு நெனச்சேன்" என்றேன்.
ஜீவா, "அது ஆதவன் தானே" என்றான். "எப்படிடா கரெக்டா சொன்ன?" என்று நான் கேட்க, "இருக்குறது மூனு கேரக்டர் தான், அதுல ரெண்டுல ஒன்னுன்னு கெஸ் பண்ணுனேன்" என்றான் ஜீவா.
"சூப்பர்டா ஜீவா" என யாழினி அவன் கன்னத்தைக் கிள்ள, நான் மேலும் தொடர்ந்தேன்.
"ஆமா, ஆதவன் தான் அவன் முன்னாடி நின்னான். 'நேத்து குரல் மட்டும் கேட்டுச்சு, இன்னிக்கு நேர்லயே வந்துட்டியா?'னு கேட்டான் கிசோர். அதுக்கு ஆதவன், 'என்ன கிசோர் உளருற? நான் இப்பத்தானே வர்றேன், அதுவும் இந்தப் புகையப் பாத்து' என்று பக்கத்தில் நேற்று கொளுத்திய நெருப்பின் புகையைக் காட்டினான் ஆதவன்.
கிசோர் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தான். "கிசோரு, வாடா போலாம், நான் கடல்ல மிதந்துட்டு இருந்தப்ப, ஒரு பெரிய மோட்டர் போட்ல இருந்த ஆளுங்க என்ன காப்பாத்துனாங்க, போகத் தெரிஞ்சவங்ககிட்ட என் கூட்டாளி பக்கத்துத் தீவுல தான் இருப்பான்னு சொல்லி இந்தப் பக்கமாக் கூட்டி வந்தா, நெருப்பு, புகை பக்கத்துல நீ படுத்திருக்க'ன்னு சொல்லி அவனைக் கைத்தாங்கலாத் தூக்கினான் ஆதவன். கொஞ்ச நேரத்துல ஆதவன், கிசோர் ரெண்டு பேரும் அந்த மீன்பிடிப்படகுல இருந்தாங்க. கிசோர் கேட்டான், 'நான் தான் உன்மேல இருந்த கோவத்துல உன்ன அடிச்சுத் தள்ளிட்டு வந்தேன். அப்படியே என்ன விட்டுட்டுப் போயிருக்கலாம்ல? ஏன் என்னக் காப்பாத்துறதுக்கு ஆள் கூட்டிட்டு வந்த?' அதுக்கு ஆதவன் சொன்னான், 'எனக்குத் தெரிஞ்சே உன்ன நான் விட்டுட்டுப் போனேன்னா, இதுவரைக்கும் நீ என்னைப் பத்தி தப்பா நெனச்சுட்டு இருந்ததெல்லாம் உண்மைன்னு ஆகிடாதா? இதுவரை நடந்ததெல்லாம் என் தப்புன்னு நீ நெனச்சாலும் நான் இதையே தான் செஞ்சிருப்பேன்.' "என்று சொல்லி முடித்தேன்.
இப்ப, ஜீவாவைப் பாத்து, " இந்தக் கதையிலேந்து நீ என்ன தெரிஞ்சுக்குற?" என்றேன்.
ஜீவா எழுந்து, "ம்ம்ம்..." என யோசித்துவிட்டு, "ஆங், எதையும் முழுசாத் தெரியாம ஒருத்தரை blame செய்யக் கூடாது. அதே போல, பழிவாங்குறது தப்பு, அந்த மாதிரி ஒருத்தரு நம்மகிட்ட தப்பா நடந்துகிட்டாலும், நாம பொறுமையா நல்லவனா இருக்கிறது தான் நல்லது, சரியா?" என்று கூற, யாழினி அவன் கன்னத்தைப் பிடித்து, கையால் முத்தமிட்டாள்.
இப்போது, யாழினி "ஆமா, மணியண்ணன் என்ன ஆனாரு, சுந்தர்?" என்று கேட்க, நான் பதில் சொல்லத் தொடங்கும் முன், ஜீவா "நான் சொல்றேன், நான் சொல்றேன்" என்றான்.
"சரி சொல்லுடா, இதுவரைக்கும் கதை பாசிடிவ்வா போயிருக்கு, இதையும் பாசிடிவ்வா முடி, பாப்போம்" என்றேன்.
"ஆங், மணியண்ணன் அவருக்கு அடிபட்டுக் கீழே விழுந்தப்ப லைப் ஜாக்கெட் போட்டிருந்தாரு, ஆனா அடிபட்டதுல மயக்கமாயிட்டாரு. இப்பதான் ரெண்டு பேரும் ஒன்னு சேந்தாச்சே, படகு அடிபட்ட எடத்துக்குப் போயி அவரைக் காப்பாத்திடுறாங்க" என்று சொல்லி முடித்தான் ஜீவா.
- முடிவிலி
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று. (157)
பிறர் நமக்குச் செய்த இழிவானவற்றிற்கு வருந்தி அவரைப் பழி வாங்காமல் இருந்து பொறுப்பது நன்று.
Comments
Post a Comment