எப்போது? - குறள் கதை

எப்போது?


"தம்பி, எத்தனை பேரு?" இந்த கேள்வியும், இந்த கேள்விக்கு அடுத்துவரும் வரிசையா வரும் கேள்விகளும் கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்து விட்டிருந்தது.
"ரெண்டு பேரு தான்மா, நான், என்னோட wife"  
"பசங்க இல்லையா?" நல்ல வேளை இந்தக் கேள்விய என் மனைவி கேக்கல.
"இல்லம்மா, மேரேஜ் முடிஞ்சு ஒன்னரை ஆண்டு தான் ஆகுது"
"முதல்ல அம்மான்னு கூப்பிடாதீங்க, சரி, லவ் மேரேஜா? அரேஞ்சுடா?" இதுவரை இந்தக் கேள்வியை வேறெங்கும் கேட்டதில்ல. 'இது புதுசாருக்கே!' என்று நினைத்துக் கொண்டு, "லவ் மேரேஜ் தான், ஏங்க இதுக்கும், வாடகை வீட்டுக்கும் என்னங்க தொடர்பு இருக்கு?" என்றேன்.
"இருக்குங்க, அரேஞ்சுடு மேரேஜ்னா, ரெண்டு வீட்டுலேந்தும் எப்பவும் உறவுக்காரவுக வந்துக்கிட்டே இருப்பாங்க, லவ் மேரேஜ்னா அது இருக்காது"
'நான் லவ் மேரேஜ் செஞ்சதுக்கு இப்படி ஒரு பலன் இருக்கா?' என்று நினைத்துக் கொண்ட நான், "அதெப்படிங்க, ரெண்டு வீட்டிலும் லவ்வுக்கு ஒத்துக்கிட்டாங்கன்னா, அடிக்கடி உறவினர்கள் வந்து போவாங்க இல்லயா?" என்றேன். என்னைப் பார்த்து முறைத்த வீட்டு உரிமையாளர், நான் சற்றும் எதிர்பாராமல், "அப்ப, உங்க வீட்டுல ஒத்துக்கல?" என்றார். 'எனக்கு ஏன்டா கேட்டோம்' என்றாகி விட்டது.    
"வீடு பாருங்க, ஆணி அடிக்கக் கூடாது, ஏற்கனவே அடிச்சிருக்க ஆணியப் புடுங்கக் கூடாது, நான் வெஜ் சமைக்கலாம், ஆனா வெளில கவுச்சி வராம பாத்துக்கணும். மத்த வீட்டு ஓனர் மாதிரி நிறைய கண்டிசன்லாம் போட மாட்டேன். யூனிட்டுக்கு 6 ரூவா வச்சு கரண்ட பில் கொடுத்திடுங்க. மெயின்டனென்ஸ்க்கு 250 ரூவா, ஒரு ஹால், ஒரு பெட்ரூம், சமையலறை நல்லா வசதியாவே இருக்கும். 7500 ரூவா வாடகை, 10 மாசம் வாடகை அட்வான்ஸ், உள்ள போயிப் பாத்துக்கங்க, அவ்ளோ தான்" மூச்சு விடாமல் பேசி முடித்திருந்தார். உள்ளே சென்று பார்த்துவிட்டு, 'வீடு நல்லாருக்கு' என்று என் மனைவி கயலுக்கு அலைபேசியில் சொன்னேன். ஏற்கனவே நிறைய வீடு பார்க்க அலைந்து அலைந்து களைத்திருந்ததால் இந்த முறை அவள் வரவில்லை.
வீட்டு உரிமையாளரிடம், "வீடு நல்லாருக்கு, புடிச்சிருக்கு, இந்தாங்க, டோக்கன் அட்வான்ஸ்" என்று 5000 ரூபாயை எடுத்துக் கொடுக்க, "இல்ல, இருக்கட்டும் தம்பி, உங்க வீட்ல கூட்டுட்டு வாங்க, லட்சுமி கையில தான் வாங்கணும்." என்றார்.
"நான் போன நேரம் வேற யாருக்காவது கொடுத்துட மாட்டீங்களே?"
"அப்படில்லாம் செய்ய மாட்டேன் தம்பி, ஆனா, வேற யாரும் கொடுக்குறதுக்கு முன்னாடி நீயே உன் wife கூட்டிட்டு வந்து கொடுத்துடு, சரியா?" என்று கூறி சிரித்தபடி, "போயிட்டு வாங்க" என்றார். வேறு யாருக்கோ வீடு போயிடுமோ என்ற அச்சத்திலேயே அடுத்த நாளே என் மனைவியையும் கூட்டி வந்து முழு முன்பணத்தையும் கொடுத்து அடுத்த வாரமே அந்த வீட்டில் குடியேறி இருந்தோம்.
ஏற்கனவே இருந்த இடம் எங்கள் இருவரும் பணிபுரியும் இடங்களை விட மிகத் தொலைவில் இருந்ததால் மாற வேண்டிய கட்டாயம். இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் காலை 11 மணிக்கு, எனது அலைபேசி அதிர்ந்து, திரையில் 'Darling Calling' என்றது. எடுத்து, "சொல்லு, கயல்ஸ், என்ன offiiceல பொழுது போகலயா?" என்றேன். மறுமுனை அமைதியாக இருக்க, "கயல்ஸ், any problem?" என்றேன்.
"கணேஷ் இப்பத்தான் பேசுனான்" என்ற கயலின் குரல் கொஞ்சம் உடைந்திருந்தது. கணேஷ் என்னுடைய மச்சான் தான். ஆனா, எங்களுக்கு மணமானதிலிருந்து இதுவரை எங்கள் வீட்டில் இருந்தோ, கயலின் வீட்டில் இருந்தோ யாரும் எங்களுடன் பேசியதில்லை. எனக்கு இப்போது மகிழ்வதா அல்லது இதுவரை இல்லாமல் இப்போது என்ன என ஐயப்படுவதா எனத் தெரியவில்லை.
"ம்ம்" என்றேன்.
"என்ன? ம்ம், இப்பத்தான் கணேஷ் போன் பண்ணுனான்" கயலின் குரல் இப்போது உயர்ந்திருந்தது. என்னுடைய மனநிலையில் தான் அவளும் இருக்கிறாள் என எனக்குப் புரிந்தது.
"சரிடா, புரியுது, டூ இயர்ஸ், யாரும் வரலை, ஆனா, இது போல என்னிக்காவது நடந்திடணும்னு ரெண்டு பேரும் நினைச்சுக்கிட்டுத் தான் இருந்தோம் இல்லையா?" என்று கேட்டு, சில நொடி விட்டுத் தொடர்ந்தேன். "என்ன சொல்றான் என் மச்சான்" என்றேன்.
"அப்பா, அம்மா நம்மளைப் பாக்க வர்றாங்களாம்" என்ற கயலின் குரலில் சிரிப்பும், அழுகையும் கலந்த ஒரு உணர்வு தெரிந்தது. எனக்கு இப்போது அவளின் அருகில் இல்லையே என்றிருந்தது. "வாவ், செம்ம டார்லு, எப்ப வர்றாங்க?" என்றேன்.
"ஏய், உண்மையாத் தான் சொல்றியா? இல்ல, எனக்காக நடிக்கிறியா?"
"என்ன சொல்ற, கயல், இதுவரை என்ன தான் நாம மகிழ்ச்சியா இருந்தாலும், உன் மனசுல ஒரு ஓரத்துல அழுதுட்டு இருக்குறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா?"
"தேங்க்ஸ்டா அருண்"  
"அப்பாடா, நார்மல் ஆயிட்ட போல, எங்கடா இந்த டாவக் காணோம்னு பாத்தேன்"  
"ம்ம்! லஞ்சுக்கு எங்கயாச்சும் வெளில போலாமா, அருண்?"
“Done, 12:30க்கு நான் வந்து பிக் பண்ணிக்குறேன். ரெடியா இரு.” மகிழ்வில் மனம் இலகுவாயிருந்தது. ஆனால், எதுவும் தவறாகிப் போய் விடக்கூடாது என அச்சமும் மனத்தை ஆட்கொண்டிருந்தது.  
----
சரியாக பத்து நாள் கழித்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். எனது அத்தை மாமாவை அழைத்துச் செல்லக் காத்திருந்தேன். காதலிக்கும் போதும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவர்களை எதிர்த்து, நாங்கள் திருமணம் செய்து கொண்ட போதும் நான் இந்த அளவுக்குப் பதறியதில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தது எனக்கு. ‘வந்து இறங்கியதும், வாங்க மாமா, வாங்க அத்தைன்னு சொல்லணும், லைட்டா சிரி’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்த நேரம், சோழன் விரைவு வண்டி ஆறாவது நடைமேடையில் நுழைந்து வந்து நின்றது. H1 பெட்டியில் இருந்து என் அத்தையும், மாமாவும் வெளியே வர, ஏற்கனவே மனதிற்குள் பலமுறை சொல்லிப் பார்த்தவற்றைச் சொன்னேன். மாமா, என்னைப் பார்த்து, “வர்றோம் மாப்பிள்ளை” என்று சிரித்தார். என் மனது ‘அப்பாடா, முதல் கட்டத்தில் பாஸ் ஆகிட்டோம்’ என்று நினைத்துக் கொண்டது. அவர்களின் பெட்டிகளை வாங்கிக் கொண்டேன்.  வெளியே வந்து ஆட்டோ பிடித்து, வீடு வந்து சேர்ந்தோம்.
கயல் ஒவ்வொரு பத்து நிமிடமும் என்னை அழைத்துக் கொண்டிருந்தாள். ஆட்டோ வீடு முன் வந்து நின்றபோது, கயல் நின்றிருக்க, பின்னால் வீட்டு உரிமையாளரான ஆண்டாள் அம்மாவும் நின்று கொண்டிருந்தார். “வாங்கப்பா, அம்மா நல்லாருக்கியாம்மா?” என்ற கயலின் கயல்விழி கலங்கியிருந்தது. பெட்டிகளை எடுத்துக் கொண்டு நான் கயலைத் தாண்டி உள்ளே செல்ல, “என்ன அருண் சார், வீட்டுக்கு விருந்தாளிங்களா?” என்று கேட்டார் ஆண்டாள் அம்மா.
“ஆமாங்க, என்னோட மாமனார், மாமியார், ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் வர்றாங்க” என்றேன்.
“எத்தனை நாள் தங்கப் போறாங்க?” என்று ஆண்டாள் அம்மா கேட்ட கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் தவிர்த்து வீட்டுக்குள் நுழைந்தேன். கயல் தனது பெற்றோர் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள். மாமாவும் நானும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, கயல் தனது அம்மாவுடன் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்.
மாமா, வீட்டை ஒருமுறை அமர்ந்தவாறே பார்த்துவிட்டு, “வீடு நல்லா வச்சிருக்கீங்க, வாடகை எவ்வளவு?” என்றார்.
“ஏழாயிரத்து ஐநூறு, மாமா, மெயின்டெனன்ஸ் எல்லாம் சேத்தா எட்டாயிரம் கிட்ட வரும். இந்த ஏரியால இவ்ளோ குறைச்சலா வாடகை கிடைக்குறது ரொம்ப ரேர். ரெண்டு பேத்துக்கும் ஆபீஸ் பக்கம். வசதியா இருக்கு. வீடு டிசைன் எல்லாம் கயல் தான் செஞ்சது.” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாமாவின் பார்வை சுவற்றில் இருந்த படத்தில் குத்திட்டு நின்றது. ஒரே frameல் கயலுடன் மாமா, அத்தை நின்றிருக்கும் ஒரு படம், நான் என் பெற்றோருடன் நிற்கும் ஒரு படம், இரண்டிற்கும் கீழே நானும், கயலும் நின்றிருக்கும் படம் ஆகிய மூன்றும் இருந்தன. சில நொடிகள் அதையே பார்த்திருந்த மாமா, “உங்க அப்பா, அம்மா இப்ப பேசுறாங்களா?” என்றார்.
என் அமைதியான சிரிப்பிலேயே அவருக்குப் புரிந்திருக்கும், இருந்தும், “பாக்கலாம், மாமா, இனிமே எல்லாம் நல்லதாவே நடக்கும்னு எனக்குத் தோனுது” என்ற நான், “சரிங்க மாமா, டே ட்ரெயின்ல வந்தது களைப்பா இருக்கும், குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்” என்றேன்.
இரவு சாப்பாடு முடிந்து, அத்தை மாமாவிடம், “மாமா, நீங்க ரூம்ல இருந்துக்கங்க. அந்த ரூம்ல மட்டும் தான் ஏசி இருக்கு. கயலும் உங்க கூட இருக்கேன்னு சொன்னா, பேசுறதுக்கு நிறைய இருக்கும். நான் இங்க ஹால்ல படுத்துக்கிறேன்” என்றேன்.
“அதெப்படி மாப்பிளை, எங்களுக்கு ஏசிலாம் பழக்கமில்ல, நாங்க இப்படியே கிடந்துடுவோம்” என்று கூற, அவரை வற்புறுத்தி அறையில் படுக்க வைத்து விட்டு வரவேற்பறையில் வந்து படுத்திருந்தேன். மனம் மிகவும் மகிழ்ந்திருந்தது. அந்த மகிழ்ச்சியிலேயே கண்மூடிப் படுத்திருந்தேன். சற்று நேரத்தில் கயல் அறையிலிருந்து வெளிவந்து என் தலையைக் கோதி, நெற்றியில் முத்தம் வைக்க, கண்ணைத் திறக்காமல் என் கயலைக் கட்டி அணைத்தேன். “ஆ…” எனச் சிறு ஓசை எழுப்பி, பின் வாயை மூடிச் சிரித்த கயல், “தேங்க்ஸ்டா” என்றாள்.
“ஏய், நான் ஒன்னும் சொதப்பிடலையே? நான் இன்னும் உள்ளுக்குள்ள பயந்துகிட்டுத் தான் இருக்கேன்”
“அதெல்லாம் ஒன்னுமில்ல, இப்படியே உங்க அப்பா, அம்மாவும் வந்து பேசுனா நல்லா இருக்கும். இல்ல…”
“என்ன கயல், இழுக்குற?”
“இல்ல, ஒரு நாள் நாமளே அவங்க கிட்ட பேசுவோமா?”
“பாக்கலாம். கயல்”
“ம்ம், சரி” என்றவள் “நான் போயித் தூங்கப் போறேன். நீ இங்கேயே தனியாக் கிட” என்று சொல்லி முத்தமிட்டுச் சென்று விட்டாள்.
அடுத்த நாள், நானும், கயலும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தோம். காலை எழுந்து ஒன்றன்பின் ஒன்றாக குளித்து விட்டு, கயல் செய்திருந்த இட்லியும், புதினா சட்னியும் மாமா, அத்தையுடன் நானும் சாப்பிட்டு கை கழுவப் போன நேரம் மின்சாரம் போயிருந்தது. குழாயைத் திறக்க தண்ணீரும் வரவில்லை. குடிநீர்க் கேனிலிருந்து எடுத்து மாமா, அத்தைக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு நானும் கை கழுவிவிட்டு வரவேற்பறைக்கு வர, வீட்டுக்கு வெளியே யாரோ சத்தம்போட்டு பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. என்னவென்று பார்க்கக் கதவைத் திறந்து நான் பார்க்கையில், “இன்னிக்கு ஷ்ட் டவுன்னு தெரியாது, எல்லாரும் தண்ணிய வாரி இறைச்சு வச்சிருக்கீங்க, இப்பக் கரண்டு போச்சு, சமையல் செய்யல, தண்ணி இல்ல, மோட்டாரும் போட முடியாது” என்று கத்திக் கொண்டிருந்தார் ஆண்டாள் அம்மா.
“இருங்கம்மா, நான் ஈபிக்குப் போன் செஞ்சு கேட்குறேன்” என்றேன்
“ஆமா, இவரு பெரிய மின்சாரத்துறை மினிஸ்டரு, நீங்க சொன்னதும் அப்படியே விட்டுட்டுத் தான் மறு வேல பாப்பாங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வரும்போதே நெனச்சேன். இப்படிலாம் ஆகும்னு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது என் மாமாவும், அத்தையும் வெளியே வந்திருந்தனர்.
“என்னங்க, இப்படிலாம் பேசுறீங்க, கரண்டு வந்தா தண்ணியும் வந்துடப் போகுது, இதுக்கு எதுக்கு வீட்டுக்கு வந்தவங்களை எல்லாம் இழுக்குறீங்க?”
“நேத்து எத்தனை நாளுக்குத் தங்கப் போறாங்கன்னு நான் கேட்டதுக்கு என்ன மதிச்சு, பதில் சொன்னீங்களா? நேத்து நைட்லேந்து ரெண்டு தடவை மோட்டார் போட்டாச்சு, உங்க வீட்டுக்கு மட்டும் தான் நீங்க கரண்டு பில் கட்டுறீங்க, தண்ணி இப்படி செலவானா, காமன் கரண்டு பில் எவ்ளோ வரப் போகுதோ?”
அவருக்குப் பதில் சொல்லப் போன என்னைக் கயல் தடுத்தாள். “அருண், சரிக்குச் சமமாப் பேசிட்டு இருந்தா அவங்களும் பேசிட்டே தான் இருப்பாங்க, வா உள்ளே” என்றாள்.
“போங்க, போங்க, எல்லாரும் வீட்டுக்குள்ள போயிடுங்க…” என்று ஆண்டாள் மீண்டும் கொஞ்ச நேரத்திற்குத் தன் தொண்டை தண்ணீரும் வற்றக் கத்திக் கொண்டிருந்தார்.
மாமா, என் அருகே வந்து “ரொம்ப நன்றி மாப்பிளை, என் பொண்ண நல்லா பாத்துக்குறீங்க, என் மனசு நெறஞ்சு இருக்கு, நாங்க அப்படியே கிளம்புறோம்.” என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “மாமா, ஆண்டாள் அம்மா சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நீங்க உடனே கிளம்ப வேண்டாம். ஒரு ரெண்டு நாள் தங்கியிருந்துட்டுப் போலாம் மாமா. இருங்க, கயலைக் கூப்பிடுறேன்.” என்றேன்.
“இல்ல, மாப்ள, நீங்க என்ன செஞ்சீங்க? உங்க ரெண்டு பேத்தையும் பாக்கணும்னு வந்தோம். அப்பப்ப ஊருக்கு வந்து போங்க” என்றார் மாமா. சற்று நேரத்தில் அனைவரும் கோயம்பேட்டில் இருந்தோம். மாமாவும், அத்தையும் என்னிடம் “போயிட்டு வர்றோம், மாப்ள” என்றனர். கயலைத் தனியே அழைத்து, அத்தை பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் கயல் என்னிடம் வந்து நிற்க, பேருந்து புறப்பட்டது. ஆறுதலாக, கயலின் கையைப் பற்றினேன். “வா போலாம், அருண்” என்றாள் கயல்.
“ச்ச, இந்த வீட்டு ஓனரால சொதப்பிடுச்சுடா, நான் எவ்ளோ சொல்லியும் மாமா கிளம்பிட்டாங்க. சாரி கயல்”
“அதெல்லாம் ஒன்னுமில்ல, இப்ப அம்மா அப்பா எதுக்கு வந்தாங்க, தெரியுமா?”
“நம்மளைப் பாக்குறதுக்கு, வேறெதுக்கு? இந்த மகாராணிய நான் எப்டி பாத்துக்குறேன்னு பாக்குறதுக்கு”
“இல்ல, அருண், வந்ததுலேந்து அம்மா நாலு தடவை ‘நல்லாப் பாத்துக்குறாரா? உஙகளுக்குள்ள ஏதும் ப்ராப்ளம் இல்லல்ல?’ இப்படி கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு முறை நானே கேட்டுட்டேன், ‘ஏம்மா, நீயே பாக்குறியே? நாங்க நல்லாத்தானே இருக்கோம்'னு கேட்டா, ‘அப்புறம் ஏன்டி குழந்தை இல்ல?’ன்னு கேட்குறாங்க. ஊர்ல எல்லாம் கேட்குறாங்களாம். ஏற்கனவே நம்ம கல்யாணம் செஞ்சுக்குறோம்னு சொன்னப்ப, தப்பா பேசுவாய்ங்கன்னு சொன்ன அந்த நாலு பேர் பேசுறதுனால தான் வந்து பாக்க வந்திருக்காங்க.”
“பேரக்குழந்தைங்க பாக்கணும்னு அவங்களுக்கும் விருப்பம் இருக்கும்ல, கயல்”
“இருக்கட்டும், அருண், ஆனா, ஒன்றரை வருசம் ஆகியும் குழந்தை இல்லன்னு என்னைப் பெத்த அம்மாவே சொல்லிக் காட்டுறது எல்லாம்” என்ற கயலின் விழி கலங்க, “ஏய், என்ன இது?” என்று அவள் கண்களைத் துடைத்தேன்.

"அருண், இது நம்ம வாழ்க்கை, யாரோ நாலு பேரு நம்மளோட முடிவு எடுக்குறத என்னால ஏத்துக்க முடியல. ஆனா, இப்படி வர்ற கேள்விகளுக்குப் போகிற இடமெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்குறது தான் வலிக்குதுடா"

கண்ணீரைத் துடைத்துவிட்டு, கயலின் கன்னத்தில் என் உள்ளங்கை வைத்து ஆதரவாய்ப் பார்த்தேன். அவள் கைகள் இப்போது என் கைகளை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தது.

- முடிவிலி


இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)

வந்தவர்களைக் கவனிக்கமுடியாமல் போவது தான் நமது இயலாமையிலேயே பெரிது. வலிமையில் பெரு வலிமை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல் இருப்பவரைப் பொறுத்துக் கொள்வது.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka