பயணம் - குறள் கதை


பயணம்

என்ன தான் கை நிறைய காசு, வங்கியில் பணம், கடன் அட்டை இப்படின்னு ஆயிரம் வசதிகள் வந்தாலும், மனசு 'அடுத்து என்ன? அடுத்து என்ன?'ன்னு கேட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த மாதிரி ஒரு நேரத்துல இந்த தேடல் உணர்வு என்னுடைய இயல்பான 9 - 5 சுழற்சி வாழ்க்கையிலேந்து ஒரு சின்ன ஓய்வு எடுத்துட்டு, எங்கேயாவது போன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. நான் என் வீட்டோட வாசலின் படியில் உட்காந்திருந்தேன். என்னைத் தினமும் அலுவலகத்துக்குக் கூட்டிட்டுப் போகும் என் நண்பன், அவனோட பெரிய கண்ணை இமைக்காம என்னையே பாத்துட்டு இருந்தான். நான் அவனை செம்மையா ஓட்டுவேன். சில நேரம் வாழ்க்கையில ஏற்படுற வெறுப்பு, யார் யார் மேல வர்ற கோவம் எல்லாத்துக்கும் என்கிட்ட அடி வாங்குவான். ஆனா, ஒருமுறை கூட என்னைக் கைவிட்டதில்லை. எதிர்த்துப் பேசினது கூட இல்லன்னா பாத்துக்கோங்க. ஆனா, இந்த முறை பார்வையாலேயே 'என்னடா செஞ்சுகிட்டு இருக்க? கிளம்புடா...'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். 

ஓ... உங்ககிட்ட நான் யாருன்னே அறிமுகப்படுத்திக்கல பாருங்க... நான் செல்வக்குமரன். சென்னையில ஒரு CGI நிறுவனத்துல Matte Artist மற்றும் Lead Programmer ஆக இருக்கேன். தங்கி இருக்கிறது  வேளச்சேரியில, அலுவலகம் இருப்பது சிறுசேரியில. என்னோட நண்பன் இவன் தான்... JAWA 42, 293CC Engine, Single Cylinder, Double Cradle Chassis, Disc Brake. இன்னும் இவனைப் பத்தி பேசிக்கிட்டே போலாம். ஆனா, அவன் என்னைப் பாத்து முறைச்சுகிட்டு இருந்தான்.  



"சரிடா, கெளம்புறோம். எங்கன்னு தெரியாத இடத்துக்கெல்லாம் போறோம். ஒரு 15 நாள் யாரு கையிலும் சிக்காம நீயும் நானும் மட்டும் சுத்துறோம்." என்றேன், அவனுடைய தலையில் அடிச்சபடி. எழுந்து வீட்டுக்குள் சென்றேன். சில துணிகள், என்றோ வாங்கி வைத்திருந்த ஒரு ஆள் அளவுக்கான சிறு கூடாரம், இன்னும் பயணத்துக்குத் தேவையான எல்லாத்தையும் ஒரு பின்னால் மாட்டிக் கொள்ளும் படியான ஒரு பையில் எடுத்து வைத்து எனது மேலதிகாரிக்குத் தகவல் சொல்ல, எனது போனை எடுத்தேன். நவம்பர் 2, 2016 19:30 என்று நேரத்தைக் காட்டியது முகப்புத்திரை. முதலில், மேலதிகாரிக்குப் பேசிவிட்டு, போனிலிருந்தே விடுப்புக் கடிதத்தை மின்னஞ்சலாக அனுப்பினேன். அம்மாவுக்கும் அழைத்துச் சொன்னேன். 

"என்னென்னமோ சொல்றடா... பாத்து சூதானமா போயிட்டு வாடா"ன்னு சொன்னாங்க. 

"சரிம்மா" என்று போனை வைத்தேன். வேறு யாரிடமும் சொல்லனும்னு தோணல. ஹெல்மெட்டையும், பையையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஜாவா என்னைப் பார்த்து, சிரிப்பது போல் இருந்தது. 

நானும் ஜாவாவும் அப்பவே கிளம்பினோம். வீட்டின் அருகே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க, அட்டையைச் சொருகி, 5௦௦௦ என அழுத்த, இரு 5௦௦ ரூபாய்த் தாள்களோடு மற்றதெல்லாம் நூறு ரூபாயாய்த் தள்ளியது, ஏடிஎம்.  'என்னடா, இது எல்லாம் நூறு ரூபாயாக வருதே.' என அலுத்துக் கொண்டு, இரு 5௦௦, மேலும் சில நோட்டுக்களை மட்டும் வாலட்டில் வைத்துவிட்டு, மற்றவற்றை என்னுடைய பையில் ஒரு மூலையில் வைத்தேன்.

சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் நெடுஞ்சாலையில் நுழையும் முன், டேங்க் முழுதும் பெட்ரோல் நிரப்பிக் கொண்டேன். எங்கு போகப் போகிறோம் என்று முடிவெடுக்காத - அடுத்த நொடி தரப்போகும் வியப்புகள் எதையும் எதிர்பாராமல் எதிர்கொள்ள ஒரு முன்னெடுப்பாக இந்த பயணம் அமையும் என்ற நம்பிக்கையோடு நெடுஞ்சாலையில் நுழைந்த என்னைச் சுமந்து, சென்னையின் வழக்கமான போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட்ட பறவையாய்ப் பறந்தான் ஜாவா. முதல் ஆறு நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. பலமொழி - பல குணத்தின் தெரியாத மனிதர்கள், உடன் பறந்து வரும் பறவைகள், பின்னால் நகரும் மரங்கள், அடர்ந்த காடுகள் என நான் இதுவரை உணராத உணர்வாக இருந்தது. இத்தனை நாட்கள் ஆந்திரா, தெலங்கானா தாண்டி, இப்போது மத்திய பிரதேசத்தில் நுழைந்து ஒரு நாள் ஆகி இருந்தது. ஆறாவது நாள் ஷாபூர் என்னும் இடம் தாண்டிய பின் வரும் காட்டில், சிறு தீமூட்டி, கூடாரமிட்டு, பூச்சிகளின் கீச் கீச் சத்தத்திற்கு இடையே, அன்று இந்தியா முழுதும் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்றோ, நாளை எனக்கு நிகழப் போகிறது என்று அறியாதவனாய் உறங்கிக் கொண்டிருந்தேன். 

அடுத்த நாள் எப்போதும் போல் எழுந்து, போகும் வழியில் எங்காவது உணவகத்திலோ, தாபாவிலோ சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஜாவாவைக் கிளப்பினேன். எப்போதும் போல் இல்லாமல், எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தன. சில ஊர்களில் ஏடிஎம் வாசலில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். இன்னும் முன்னே சென்று ஒரு பெட்ரோல் பங்கில் நுழைந்த போது தான் புரிந்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாய் ஆயினவென்று. நல்ல வேளையாய் கிரெடிட் கார்டு கொண்டு, ஜாவாவின் பசியையாவது போக்க முடிந்தது.


காலையிலிருந்து முதல் நாள் பிடித்து வைத்திருந்த தண்ணீர் மட்டும் தான் குடித்திருந்தேன். கிட்டத்தட்ட 100 கிமீ வந்திருந்தேன், தாபாவும் இல்லை, சாப்பாடும் இல்லை. ஜாவாவை ஓரம்கட்டி விட்டு நின்றேன்.  சாலையின் மேலே பலகை ஒன்று, BHOPAL 42 KM என்றது. இடதுபுறம் அம்புக்குறியிட்டு, BHIMBETKA 2.5 KM என்றது. "மெயின் ரோட்டுல ரொம்ப தூரம் வந்தாச்சு... உள்ளே போயி பார்ப்போம்..." என்று வண்டியின் டேங்கைத் தட்டி, இடது புறமாக ஜாவாவை வளைத்துச் சென்றேன். பீம்பேட்கா அடைந்த பின்பு தான் தெரிந்தது. அது கற்காலத்து குகை ஓவியங்கள் உள்ள பகுதி என்று. சுற்றுலாப் பகுதியெனினும், அங்கும் எந்த உணவகமும் இல்லை. பசியின் காரணத்தினால், சுற்றிப் பார்க்கவும் மனமில்லாமல், நானே கற்காலத்துக்குப் போனது போல் உணர்ந்தேன். மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்றேன்.

மீண்டும் நெடுஞ்சாலையைத் தொடும் இடம் வந்த பின்பு எங்கு போவது எனப் புரியாமல், எனை அறியாமலே பசியில் "ஆ"வெனக் கத்தினேன்.

"க்யா ஹோ கயா, பாய்?" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

என்னவென்று புரியாமல் விழித்த நான், குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்து, ஒரு முதியவர் நிற்க, "இட்ஸ் நத்திங்" என்றேன். பின் தான், எனக்கு ஹிந்தி தெரியாதது போல, அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை. அவர் என்னைப் பார்த்து, வா என்பது போல் கையால் அழைத்தார். ஜாவாவை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, எந்த நம்பிக்கையிலோ அவர் பின்னால் சென்றேன். அருகில் தான் இருந்தது அவரோட குடில். வீட்டின் வாசலில் நான் நிற்க, உள்ளே சென்றார் அவர். 

ஏதோ இந்தியில் பேசும் அவரும் பின்னர், ஒரு பெண்மணியின் குரலும் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த பெண்மணி, கையில் குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, "தேங்க்ஸ்" என்றேன். குடிசையின் முகப்பின் திண்ணை போன்ற இடத்தில் அமருமாறு சைகை காட்டிவிட்டுச் சென்றாள். பின்னால் மாட்டியிருந்த பையை இறக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அமர்ந்தேன்.
அவரும் வந்து என் அருகில் அமர்ந்தார். முகத்தில் புன்னகை இருந்தது. என்ன பேசினாலும், இருவருக்கும் புரியப் போவதில்லை என்பதை இருவரும் அறிந்திருந்ததால் புன்னகையும், சைகையும் மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்தோம். சாப்பிட்டாச்சா? என்பது போல வாயில் கை வைத்து கேட்டார். நான் வயிற்றில் கை வைத்து இல்லையென தலையை ஆட்டினேன். மீண்டும் புன்னகையோடு கையை வைத்து சைகையில் 'அமைதியா இரு' என்பது போல் காட்டினார்.

சிறிது நேரத்தில் அந்த அம்மா, தட்டில் சில சப்பாத்திகளோடு உள்ளிருந்து வந்தார். என் முன்னே வைக்க, இருவரையும் ஒரு முறை பார்த்தேன். இருவர் முகத்திலும் அப்படியொரு அமைதியும், கருணையும். சாப்பிடு என்பது போல சைகையில் கூற, சப்பாத்தியில் கை வைக்கும் முன், என் கைகள் இருவரையும் வணங்கியது. என் முன் அமர்ந்த பெரியவர், வணங்கிய கையைப் பிடித்து, "காலோ பாய்" எனக் கூறினார். எத்தனை சப்பாத்தி சாப்பிட்டேன் என்று எண்ணிக்கைல்லாம் தெரியவில்லை. மனமும் வயிறும் நிறைந்திருந்தது. 

ஒரு தாளில், மேலும் சில சப்பாத்திக்களை வைத்து மடித்து, அந்த அம்மா என்னிடம் கொடுத்தார். எனது பையின் உள்ளே வைத்திருந்த 100 ரூபாய்த் தாள்களை எடுத்தேன். உடன் தலையை வேண்டாம் என்பது போல அசைத்து, பணத்தை வாங்கிக் கொள்ள இருவரும் மறுத்து விட்டனர். நான் கொடுக்க வந்த பணத்தினை என் கையிலேயே திருப்பி வைத்து மூடினர். என் கண்கள் கலங்கி இருந்தன. எனது வாலட்டை எடுத்து விரித்தேன். எனது தாய் தந்தையின் புகைப்படம் இருந்தது. அந்த படத்தை அவர்களுக்குக் காட்டி, நீங்களும் என்னோட அப்பா அம்மா போல என சைகையால் கூறி, அவர்களின் காலில் விழ எத்தனித்த என்னைத் தடுத்து கட்டியணைத்தார் அந்த மாமனிதர். அவரின் கருணையின் அணைப்பு என் கண்களை கண்ணீர்க்கடலாக்கியது.

அந்த இருவரின் கருணையின் அன்போடும், அவர் உணவு கொடுத்த தெம்போடும், வழியில் உண்ண அவர்கள் உணவோடும், பேசாமலே அவர்கள் எனக்களித்த வாழ்க்கைப் பாடத்தோடும் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம் நானும் ஜாவாவும்.

- முடிவிலி

குறள்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 

வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)

அதிகாரம்: விருந்தோம்பல்
இயல்: இல்லறவியல்

இல்லறம் ஏற்றோர் இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினராய் வந்தவர்கட்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கே.

(அவர்கள் இருவரும் கருணையோடு தந்த உணவு, தெலங்கானா வரும்வரை தான் இருந்தது.  அங்கிருந்து கையில் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டும் வைத்துக் கொண்டு, நொந்து நூலாகி சென்னை வந்து சேருவதற்குள் உயிர்போய் உயிர் வந்தது.)

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka