பாலுவாகிய நான் - திருக்குறள் கதை
பாலுவாகிய நான்
தெளிந்திருந்த வானத்தில் வெண்முகில் திட்டுதிட்டாய் விரவிக் கிடக்க, அப்போது முளைத்திருந்த விடிவெள்ளியின் மஞ்சள் கதிர்கள் அந்த முகிலின் ஒரு புறத்தை மஞ்சள் நிறம் கூட்டியிருந்த வானில் இருந்து கீழிறங்கி நான் இருக்கும் வீட்டின் கொல்லைப்புறத்தின் புல்வெளியில் அமர வந்த வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்தி விளையாடி களித்துக் கொண்டாடி மனம் திளைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கூட எனது செவி, வீட்டில் இருந்து சிறு குரலுக்குக் காத்து கொண்டிருந்தது.
அவர்கள் எனக்கென்று ஒரு பெயர் வச்சிருக்காங்க. என்ன பொருளுன்னெல்லாம் தெரியாது. ஆனால், 'பாலு' என அவர்கள் கூப்பிட்டா, எங்கிருந்தாலும் ஓடிப் போயி அவங்க முன்னாடிப் போயி நிப்பேன்.
நான் இந்த வீட்டுக்கு வந்தபோது நான் கண்ணே திறந்து பார்க்கலைன்னு சொல்ல கேட்டிருக்கேன். ஆனால், இந்த வீட்டில் தான் முதலில் அன்புன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அவங்களோட தொடுதல்ல - தூக்கிக் கொஞ்சுதல்ல - எனக்கு உணவு கொடுக்குறதுல இன்னும் நெறைய...
முதல்ல ரெண்டு பேர் தான் இருந்தாங்க... எனக்கு ஒரு பெயர் தானே... ஆனா, அவங்களுக்கு ரெண்டு பெயர் இருந்துச்சு, ஒருத்தரு பேரு 'என்னங்க, அப்பா', இன்னொருத்தரு பேரு 'செல்வி, அம்மா'.
அப்புறம் ஒரு நாள், அவங்களைப் போலவே ஒரு அழகான - இன்னும் அன்பான ஒருத்தங்க அந்த வீட்டுக்கு வந்தாங்க. அவங்களைப் பாத்ததுமே என் மனசுக்குள்ள அவ்ளோ மகிழ்ச்சி... ஏன்னா, மத்த ரெண்டு பெரும் என்னை விட ரொம்ப பெரியவங்க, ஆனா புதுசா வந்தவங்க, கிட்டத்தட்ட என் அளவுக்கே இருந்தாங்க. அவங்கள மத்த ரெண்டு பெரும் அம்முன்னு கூப்பிட்டாங்க.
ஆனா, முதல்ல என்னை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து எனக்கு 'பாலு'ன்னு பேரு வச்சு, தூக்கிக் கொஞ்சி, சாப்பாடு கொடுத்த என்னங்கவும், செல்வியும், இப்ப நான் புதுசா வந்த அம்மு பக்கத்துல போனா கொஞ்சம் பயப்படுற மாதிரி உணர்ந்தேன். அதுவும் என்னங்க இருக்காரே, நான் அம்மு பக்கம் போனாலே "ஏய், ஏய்"னு என்ன மாதிரியே பேசத் துவங்கிடுவாரு. அம்மா தான் "பாலுவ ஏன் அதட்டுறீங்க? அதான் நான் இருக்கேன்ல, பாத்துக்குறேன்"னு சொல்லுவாங்க.
ஆனா, இந்த பயத்தை எல்லாம் போக்குனது அழகான அம்மு தான். ஒரு நாள் தூங்கிக்கிட்டு இருந்த என்னோட கண்கிட்ட யாரோ தொடுற மாதிரி இருந்துச்சு. முழிச்சுப் பாத்தா அம்மு... என்னைப் போலவே நாலு காலையும் கீழ வச்சுப் படுத்தது போல என் கிட்ட உட்கார்ந்து என் முகத்துல கையை வச்சு விளையாடிட்டு இருந்தா... கொஞ்ச நேரத்துல அம்மா வந்து பாத்தப்ப, நான் அமைதியா உட்காந்திருந்தேன். என் மேல ரெண்டு கையையும் என் மேல போட்டு சாஞ்சு படுத்து தூங்கிகிட்டு இருந்தா அம்மு. நான் அம்மாவோட கண்களைப் பார்த்தேன், அதுல வியப்பும், சிரிப்பும் கலந்து இருந்துச்சு. அதுலேந்து நான் அம்மு கூட விளையாடுறதுக்கு யாரும் எதுவும் சொல்லுறதில்ல...
இப்ப அம்மு என்னை விட இன்னும் பெருசா வளர்ந்திருக்கா. நானும் முன்ன இருந்ததை விட வளர்ந்திருக்கேன். என் மேல மூனு பேரு காட்டுற பாசமும் வளர்ந்திருக்கு. என்னோட உலகமே அம்மா, அப்பா, அம்மு, இந்த வீடு, வீட்டின் பின்னால் இருக்கும் கொல்லை, கொல்லையின் பின்னால் ஓடும் அமைதியான ஆறு, அவ்ளோ தான்.
இப்பெல்லாம் அப்பா மாதிரியே அம்முவும் நிறைய நாளு காலையிலேந்து மாலை வரை எங்கோ போயிடுவா... ஆனா, திரும்பி வரும் நேரம் என்னைத் தான் தேடுவா. சில நேரம் ஒளிஞ்சு விளையாடுவேன். சில நேரம் ஓடிப்போய்த் தாவிப் பிடிச்சு விளையாடுவேன். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கிட்டே வருவேன். அஞ்சு நாள் காலைல கிளம்பி மாலை வரை எங்கோ செல்பவள், இரண்டு நாள் வீட்டிலேயே இருப்பா... அப்பா ஆறாவது நாளும் காலையிலேயே கிளம்பிப் போயிடுவாரு.
இன்னிக்கும் அப்படி ஒரு நாள் தான்... நேற்றிரவு சிறு மழையின் தூறலில் நனைந்திருந்த புல்லின் மீதிருந்த தண்ணீரைக் குடிக்க வந்திருந்த பட்டாம்பூச்சியைத் துரத்திக்கிட்டு இருந்தேன்... அப்ப, அம்மான்னு ஒரு சத்தம்... தொடர்ந்து ஏதோ தண்ணியில் விழுந்த சத்தமும். சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன்...
இன்னும் பயத்தோடு கத்துவதாய். இந்த முறை ஆற்றில் இருந்து... அம்முதான்... யோசிக்கவே இல்லை குதித்து விட்டேன், ஆற்றில்... விரைந்து நீந்திச்சென்று, அம்முவைப் புடிச்சு இழுத்தேன்... அம்முவின் முழு எடையையும் என்னால் எப்படி இழுக்க முடிந்தது என எனக்குத் தெரியவில்லை... இழுத்து வந்து கரையில் அம்முவைப் போட்டு விட்டு, என்னுடைய மொழியில் அம்மாவை அழைத்தேன்.
மூச்சுப் பேச்சற்றுக் கிடக்கும் அம்முவை அங்கேயே விட்டுப் போவதற்கும் மனமின்றி, அம்மாவை அழைக்கவும் வேண்டுமென்றும் மனதில் முடிவெடுக்க முடியாமல் அதே இடத்தில் வட்டமிட்டபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன்.
அதோ அம்மாவே வந்திட்டாங்க... சற்று அருகில் வந்ததும், இன்னும் உரக்கக் கத்தினேன்.
அம்மா பதறிப் போய், அம்முவைத் தூக்கிப் பார்த்து, கன்னத்தில் தட்டி, வயிற்றில் அமுக்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் கொஞ்சம் இருமிய படி, கொஞ்சம் தண்ணியைத் துப்பியபடி, அம்மு கண் விழிச்சா... நான் மேலும் கத்தத் துவங்கியிருந்தேன்... இம்முறை உற்சாகத்தில், மகிழ்ச்சியில்.
அம்மா இந்த நிகழ்வை எத்தனையோ முறை நிறைய பேரிடம் சொல்லிக் காட்டியிருக்கிறாள். எங்க பாலுவுக்கு அப்படி ஒரு நன்றி உணர்ச்சி என்று சொல்லுவாள். இது நன்றி உணர்வா இல்லையான்னு எல்லாம் எனக்குத் தெரியல... நான் ஒரு நொடி கூட சிந்திக்காம ஆத்துல குதிச்சு காப்பாத்த என்னை இயக்குனது இந்த மூனு பேரும் எம்மேல வச்சிருந்த அன்பு தானே... அது தானே செயலா மாறியிருந்துச்சு... இதைத்தான் 'அவங்க நன்றியுள்ளவன் பாலு'ன்னு சொல்லும் போதெல்லாம், என் மொழியில சொல்லுவேன்...
"வௌவ்வ்... வௌவ்வ்..." என்று வாலை ஆட்டியபடியே.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
குறள் எண் - 73
அதிகாரம் : அன்புடைமை
இயல் : இல்லறவியல்
செம தமோ! "என்னங்க, அப்பா" மற்றும் கடைசி வரி எல்லாம் செமயா இருக்கு... 👌🏾👌🏾👏🏽
ReplyDeleteஅருமையான கதை..
ReplyDeleteஅருமையான கதை சகோ
ReplyDeleteசுவாரஷ்யமாக படிக்கத்தூண்டும் கதை
ReplyDelete