போலீஸ் தாத்தா - குறள் கதை
பாலமலையின் மேலே கடந்து போன கருமுகில் எல்லாம் இன்னும் நகர்ந்து போய், கர்நாடகத்தில் நல்ல மழை பொழிந்ததால், அதிகப்படியான தண்ணீரைத் திறந்து விட்டிருந்தது கர்நாடகம். நாம் பேசும் மொழி, மாநிலம் ஆகிய வேறுபாடுகள் அறியாப் பொன்னியானவள், மேட்டூர் அணையில் தேங்கி, சிறிது ஓய்வெடுத்து 16 கண் மதகுகள் வழியே வழிந்து ஓடி வந்து கொண்டிருந்த வழியில் 16 கிலோமீட்டர் தள்ளி கிழக்குக்கரையில் இருந்தது கருப்பண்ணனின் சிற்றூர், மொலப்பாறை. ஊரில் நுழையும் போதே பச்சை விரித்த வயல்களும், உயர்ந்த தென்னைகளும் வரவேற்றன. ஊருக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த பேருந்து நிறுத்தம் வரை கேட்ட எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், ஊரில் மாரியம்மன் திருவிழா நடப்பதைச் சொல்லிக் காட்டியது.
கருப்பண்ணன் அந்த ஊரின் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக இருந்தார். காவல்துறையிலும், அந்த வட்டாரத்திலும் நல்ல பெயரை எடுத்திருந்தார். இதற்குக் காரணம், யாராய் இருந்தாலும், இனிமையாகப் பழகக்கூடிய அவரது குணம் தான். ஊரின் சிறுவர்கள் கூட, போலீஸ் தாத்தா என்றழைக்கும் அளவுக்கு அன்பான மனிதர். அப்படி அழைக்கும் சிறுவர்களிடம், "ஏலேய், என்ன உன்னவிட எனக்கு பதினஞ்சு வயசு அதிகம் இருக்கும், அதுக்குன்னு என்ன தாத்தா ஆக்கிட்டீங்களா?" எனச் சொல்லி அவர் சிரிக்கும் போது, புன்னகையின் ஒளியில் அவரின் நரைமுடிகள் சில நொடிகள் தங்கள் வெண்மையில் தோற்றுத் தான் போகும்.
அன்று அவருடைய ஊரிலேயே திருவிழாவிற்குக் காவல் பணியில் இருந்தார், கருப்பண்ணன். தனது கீழ் இருந்த இரு காவலர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து, "கூட்டம் நெறைய இருக்குற எடத்துல நல்லா கவனமா இருக்கணும். ஊருசனம் திருவிழாவுல திருட்டு, சண்டைன்னு ஒரு கொறையும் சொல்லக் கூடாது..." என்று அவர்களுக்குச் சொல்லி விட்டு, ஆளுக்கு ஒரு புறமாய் அனுப்பி வைத்தார்.
எங்கு திரும்பினாலும், 'ஏழையின் அண்ணனே, வாழும் வள்ளலே, வீரத்தின் விடிவெள்ளியே' என தண்டபாணியின் தன்விளம்பரத் தட்டிகளே தென்பட்டன. திருவிழாவில் வந்தோரில் பாதிபேர் இந்த தட்டிகளைப் பார்த்தும் பார்க்காதது போல் கடந்தனர். தன் படைசூழ கோயிலுக்கு வந்த தண்டபாணிக்கு முதல் மரியாதையோடு திருவிழா நடந்து முடிந்தது.
"தம்பிங்களா, நல்ல படியா கடைசி வரை இருந்து முடிச்சு கொடுத்தீங்க, அங்கங்க சின்ன வாய்ப்பேச்சு மட்டும் தான். வேற எந்த கொறையும் இல்லாம திருவிழா முடிஞ்சுது, நல்லதுய்யா" என்று கருப்பண்ணன் தன்னுடைய உதவி காவலர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். மணி இரவு 11:30 இருக்கும். தன் வீட்டில் இருவரோடு அவரும் அப்போது தான் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
"ண்ணா, எல்லாம் உங்களோட நல்ல குணத்துனால தானண்ணா, அதுவும் இது உங்க ஊரு" என்றார் ஒரு காவலர்.
"ஏய், ஆரம்பிச்சுட்டீங்களா...?" என்று செல்லமாக அதட்டிய கருப்பண்ணன், "மணியும் பன்னெண்டு ஆவப்போது, நைட்டு இங்குட்டே தூங்கிடுங்க. காலையில எல்லாம் சேந்து ஸ்டேசன் போயிடலாம்." என்றார்.
இருவரும் ஒரே குரலில், "அய்யோ, அதெல்லாம் வேணாண்ணே... இப்படியே பைக்ல போனோம்னா 20 நிமசம் தான்... போயிடுவோம்ணே" என்றனர்.
---
அடுத்த நாள் காலையிலே கருப்பண்ணன், காவல் நிலையத்துக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே வந்த போது தான் கவனித்தார். திருவிழாவிற்குப் போட்ட மைக்செட்டு குழாயில் இன்னமும் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், பாடல் மட்டும் எல்.ஆர்.ஈஸ்வரியிடமிருந்து சொப்பனசுந்தரிக்கு மாறியிருந்தது. முழு ஒலியளவில். தன்னுடைய பழைய சைக்கிளை எடுத்து, தனது கைத்தடியை ஒருபுறமாக மாட்டி விட்டு, சைக்கிளில் ஏறி அமர்ந்தார் கருப்பண்ணன்.
"போலீஸ் தாத்தா..." என்ற குரல் அருகில் கேட்க, சைக்கிளில் இருந்தபடி திரும்பிப் பார்த்தார். சைக்கிளின் பின்னால், அந்த ஊரின் சிறுவர்கள் இருவர் மெதுவாக சைக்கிளை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தனர்.
"என்ன பசங்களா... ஸ்கூலுக்கா?"
"இல்ல தாத்தா, நாளைக்கு தான் ஸ்கூலு. காலாண்டு தேர்வு வேற"
"பின்ன ஏன்டா, படிக்காம சைக்கிளை எடுத்துகிட்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க?" என்றார் கையால் தன் அருகில் வந்த அவர்களின் சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து நிறுத்திய படி.
"எல்லா பக்கமும் இந்த பாட்டு தான் கேட்டுக்கிட்டு இருக்கு, தாத்தா. எங்க படிக்க?"
"அதுக்குன்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்துவீங்களோ? அடி" என மெதுவாகக் கையை ஓங்கினார்.
"போலீஸ் தாத்தா, நீங்க தானே சொல்லிருக்கீங்க, போலீஸ் ஸ்டூடெண்ட அடிக்க முடியாதுன்னு, ரூல்ஸ் தெரியாதுன்னு நினைச்சுகிட்டீங்களா?" என்றான் ஒரு சிறுவன்.
"நல்லா வாய் பேசுங்கடா, சரி, நான் போயி இந்த பாட்டுக்கு ஒரு வழி பண்ணுறேன், நீங்க படிக்க போங்க, கெளம்பு வீட்டுக்கு." என்று கருப்பண்ணன் அதட்ட, சைக்கிளை எடுத்துக் கொண்டுத் திரும்பிய சிறுவர்கள் திரும்பி,
"தனியாவா போறீங்க, பெருசு. வேணும்னா, நாங்களும் துணைக்குக் கூட வரவா?"
"அடிங்..." என்று தன் கைத்தடியைக் கையில் எடுக்க, சிரித்துக் கொண்டே சிட்டாய்ப் பறந்தனர் சிறுவர்கள்.
திருவிழா நடந்த கோவிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், சில இளந்தாரிப் பையன்கள் அமர்ந்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மூலையில் இருந்த ப்ளேயரில் CD ஓடிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த கருப்பண்ணனைப் பார்த்து ஒருவன், "என்ன ஏட்டு சார், இந்த பக்கம், திருவிழா தான் முடிஞ்சிடுச்சே, ஸ்டேசன் போகலையா?" என்று சொல்ல, மற்றவர்கள் சிரித்தனர்.
கருப்பண்ணன், "எங்கய்யா, போக வுடுறீங்க? இந்த பாட்ட நிறுத்துங்களேன்யா, நேத்து வரை திருவிழா... சரி. இன்னிக்கு என்ன? பசங்க எல்லாம் படிக்க முடியாம இருக்குதுங்க..."
"என்னது பாட்ட நிறுத்தணுமா? அதெல்லாம் முடியாது" என்றபடி எழுந்து வந்தவனின் மூச்சில் சாராய வாடை நிறைந்திருந்தது.
"தம்பி, நேத்து வரைக்கும் தான் இதுக்கெல்லாம் பர்மிசன், மத்தவங்களுக்கும் தொந்தரவா இருக்க வேணாமே, சொல்றத கேளுங்க, " என்றார் கருப்பண்ணன், அமைதியாக.
"ஓ, பர்மிசனா... ரூல்ஸ் பேசுறியா பெருசு... தண்டபாணியண்ணன் கூட இங்க பர்மிசன் வாங்கி தான் சவுண்டு செட்டு வைக்கணுமா?" என்று சண்டைக்கு வர, கருப்பண்ணன் CD பிளேயரை நிறுத்தி விட்டு, "மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குதுல்ல... நாளைக்கு பள்ளியில பரிச்சை வேற, புரிஞ்சுக்கங்கப்பா, தண்டபாணியண்ணன் வீட்டுக்கு எதிரத் தான் நானும் இருக்கேன். அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு" என்று சொல்லிவிட்டு ஸ்டேசனை நோக்கி சைக்கிளை விட்டார். கூட்டத்தில் ஒருவன், தனது போனை எடுத்து, 'அண்ணன்' என்று இருந்த எண்ணுக்கு அழைத்தான்.
---
மாலை காவல் நிலையத்தில் இருந்து திரும்பிய கருப்பண்ணன், சைக்கிளில் அவர் வீட்டின் முன், வண்டியை நிறுத்திய நேரம்...
"ஏட்டு..."
குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்த இடத்தில் தண்டபாணி அமர்ந்திருந்தார். வளைவுகள் கொண்ட சுற்றுச்சுவர்... பெரிய கதவுகள் கொண்ட நுழைவாயில்... அதிலிருந்து தள்ளி இரு மாடிகளோடு இருந்த வீட்டின் முகப்பில் அமர்ந்தபடி கருப்பண்ணனை அழைத்தார் தண்டபாணி.
சைக்கிளில் இருந்த படி, "வணக்கங்க.." என்றார் கருப்பண்ணன்.
"கொஞ்சம் உள்ள வாங்க... பேசணும்"
சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற கருப்பண்ணன், தண்டபாணியின் அருகே சென்று, "வணக்கம், நல்லாருக்கீங்களா?" என்றார், அனைவரிடமும் பேசும் அதே சிரித்த முகத்துடன்.
"என்னய்யா, சிரிப்பு..." என்றபடி கருப்பண்ணனின் கன்னத்தில் அறைந்தார் தண்டபாணி. என்ன நிகழ்ந்தது எனப் புரிவதற்கே சில நொடிகள் ஆனது கருப்பண்ணனுக்கு.
"நீ போட்டிருக்க உடுப்புக்குத் தான் ஒன்ன ஊருக்குள்ள விட்டு வச்சிருக்குறதே... அது என்ன சொன்ன, பசங்ககிட்ட? நீ சொன்னா நான் கேட்டுக்குவனா? சொல்றத எல்லாம் சொல்லிட்டு என் முன்னாலயே சிரிக்குற? அவ்ளோ எகத்தாளம்... ஊருல எவனாது கேட்டானாய்யா? பெருசா ரூல்ஸ் பேசிருக்க?" இதற்கு மேல் சொன்ன எதுவும் கருப்பண்ணனின் காதினில் விழவில்லை. எவ்வளவு நேரம் குனிந்த தலையோடு நின்று கொண்டிருந்தாரென்றும் அவருக்கே தெரியவில்லை.
"யோவ்... இவ்ளோ சொல்றேன், மரம் மாதிரி நிக்குற? கண்ணு முன்னாடி நிக்காதே, போயிடு" என்றான் தண்டபாணி.
அழுத கண்ணீர் கன்னம் நனைத்திருக்க, தண்டபாணியின் வீட்டை விட்டு நடைபிணம்போல் வெளியே வந்த கருப்பண்ணனை இந்த நிலையில் பார்த்த சிறுவன், "போலீஸ் தாத்தா என்ன ஆச்சு?" என்றான். அந்த தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்த நாய் ஒன்று, கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டியிலிருந்த தண்டபாணியின் படத்தை நோக்கித் தன் பின்னங்காலைத் தூக்கியது.
- முடிவிலி.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)
அதிகாரம்: அன்புடைமை
இயல் : இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
இயல் : இல்லறவியல்
அன்பு என்பது கொண்டவர்கள் தான் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாமல் வாழ்பவர்கள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்திய உடல் கொண்டவர்கள் தான்.
தோற்றுப் போகும் நரை... அந்த வரி நல்லாயிருந்தது. கடைசி வரி செம! அருமையான கதை 👌🏾👌🏾
ReplyDelete