புன்னகை - குறள் கதை

புன்னகை

அடுக்ககங்கள்... எல்லை பெருகி வரும் பெருநகர வாழ்வில் பெருகி வரும் ஒன்று. ஒரு முகவரி எனினும் முகம் பார்க்காத பல முகங்கள், பார்த்தாலும் பொருளில்லாப் புன்னகைக்குக் கூட நேரமில்லாப் பலரைத் தன்னுள் அடைத்திருக்கும் இடம். இது போன்ற ஒரு அடுக்ககத்தில் தான் நானும் இருக்கிறேன். என் மகன் பழனியின் வீடு... வேலைக்குச் செல்லும் மகனும், மருமகள் செல்வியும், ரெசிடென்சியல் பள்ளியில் இருந்து மாதம் ஒரு முறை வீட்டுக்கு வரும் பேரன் செழியனும், பணியில் இருந்து ஒய்வு பெற்ற நானும், போன ஆண்டு இறந்து போன என் மனைவி மீனாளும் என அனைவரும் ஒற்றுமையாக ஒரு கூரையில் இருக்கலாம் என நினைத்து வாங்கிய வீடு இது.
இதற்கு முன்பு வாடகை வீட்டில் இருந்த போது, என்ன தான் நமது வீடு போல் நாம் பார்த்துக் கொண்டாலும், வீட்டின் உரிமையாளரின் சில கட்டுப்பாடுகளுக்கும், சில பேச்சுக்களும் எனது மகன் மற்றும் மருமகளின் மனதை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது. அந்த காயங்களின் வலியை விட கடன் சுமை ஒன்றும் பெரிதல்ல என அவர்கட்குத் தோன்ற வாங்கிய வீடு இது. மூன்று படுக்கை அறைகளுடன் பெரிய வரவேற்பறை என 1300 சதுர அடியில் பரந்திருந்தது வீடு. பனிரெண்டு மாடி கொண்ட அடுக்ககத்தில் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த பெரிய வீடு. அதே தளத்தில் இரண்டு இரு படுக்கையறை கொண்ட வீடும் இருந்தன.
ஆனால், இவ்வளவு செலவு செய்து வாங்கிய இந்த வீட்டிற்கு வந்த பின், வாடகை வீட்டில் பட்ட பாடுகள் இல்லாமல் மகிழ்ந்திருப்போம் என்ற எனது எண்ணம் தவறாகவே போனது. வாடகை வீட்டில் இருந்த போது, ஊரில் இருந்த எங்களிடம் அடிக்கடி எனது மகனும், மருமகளும் வீட்டு உரிமையாளர் தரும் குடைச்சல்களைச் சொல்வர். தண்ணீர் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடு, சில நேரம் நான் ஊருக்குப் போய், அவனுடன் தங்கும் போது கூட எத்தனை நாளுக்கு இருப்பாங்க என்று கேட்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால், வங்கியில் மாதம் இருவரும் சேர்ந்து 35000 ரூபாய் மாதத் தவணையாகக் கட்டினாலும், இது தங்களின் வீடு என்பதில் உள்ள பெருமையை அவர்களால் உணர முடியவில்லை.
என்ன காரணம்...??? பெரும்பாலும், இந்த அடுக்ககத்தில் அனைவருமே வீட்டு உரிமையாளர்களே... இதுவரை வாடகை வீட்டில் இருந்து விட்டு, ஏதோ மனத்தால் தனக்கென்று உரிமையாக ஒரு வீடு வேண்டும் என்று ஏங்கி வீடு வாங்கியவர்கள் தான். இதுவரை வீட்டைத் தங்குமிடமாகக் கண்டவர்கள் இன்று தன் கௌரவச் சின்னமாகப் பார்த்திடத் துவங்கியது தான். அதிலும், பெரிய வீடு வாங்கியவர்கள், அளவில் சிறிய வீடு வாங்கியவர்களை ஏளனமாக நினைப்பதும், தேவையில்லாதவைக்கெல்லாம் சிறு சிறு சண்டைகள் என இங்கும் நாள்தோறும் நிகழ்ந்தேறியது தான்.
வீடு வாங்கி ஒரு ஆண்டு இருக்கும். அப்போது என் மருமகள் செல்வி வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்த நேரம், ஒரு சாக்லேட்டின் கவர் மேலில் இருந்து வந்து விழுந்தது. பால்கனியில் இருந்து மேலே என் மருமகள் பார்க்க, யாரோ மூன்றாம் மாடியில் இருந்த வீட்டு பால்கனியில் இருந்து உள்ளே செல்வது தெரிய... கோபம் தலைக்கேறியது அவளுக்கு. வந்து பழநியிடம்,
"இன்னிக்கு ஒரு நாள் தான் லீவு, ஆனா இன்னிக்குக் கூட என்ன நிம்மதியா இருக்க விடமாட்றாங்க"
"என்னம்மா ஆச்சு..."
"மேல் வீட்டுலேந்து குப்பைய நம்ம வீடு பால்கனியில போடுறாங்க, நம்ம இவ்ளோ செலவு செஞ்சு வாங்குன வீடு அவங்களுக்கு குப்பைத்தொட்டியா?"
"ஓ... இது தானா?"
"அது என்ன, இது தானா? இப்ப நீங்க போயி கேட்கப் போறீங்களா? இல்ல, நான் போயி கேக்கவா?"
"ஏம்மா, இதையெல்லாம் பெருசா ஆக்கணுமா?"
"உங்கக்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது..." என்று சரசரவென மேல்வீடு நோக்கிச் சென்றாள் செல்வி. பின்னே, நானும், என் மகனும் சென்றோம். நாங்கள் மாடி ஏறி வருவதற்குள், அவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அடித்திருந்தாள் செல்வி. கதவு திறக்கப்பட, ஒரு கையால் தன் இரண்டரை ஆண்டு குழந்தையையும், இன்னொரு கையால் கதவையும் பிடித்தபடி நின்றிருந்தாள் ஒரு பெண். "டேய், ஓடாத நில்லுடா" எனத் தன் குழந்தையிடம் சொல்லியபடி, "சொல்லுங்க, என்ன வேணும்?" என்றாள் செல்வியைப் பார்த்து.
அவள் கையை விட்டு வெளியே ஓடிய அந்த சிறுவனை நான் படிக்கட்டு இருக்கும் பக்கம் போகாமல் பிடித்துத் தூக்கினேன்.
"நன்றிங்க... ஒரு எடத்துல நிக்க மாட்டான். வாலு... இங்க வா, அம்மாட்ட வா" என்று சொன்ன அவளிடம் செல்வி, "நாங்க உங்க வீட்டு கீழ் வீட்டுல இருக்கோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, உங்க வீட்டுலேந்து  இந்த குப்பைய எங்க வீட்டு பால்கனியில் போட்டிருக்கீங்க" என்றாள் கொஞ்சம் கடுமையான குரலில்.
"அய்யோ... சாரிங்க... இவன் தான் சாக்லேட் சாப்பிட்டுட்டு இருந்தான். நான் குழம்பு கொதிக்குதுன்னு உள்ள போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி பண்ணிட்டான். சாரிங்க... இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன். ஏன் வெளியிலேயே நிக்குறீங்க? உள்ள வாங்க..." என்றாள் அவள்.
"பரவால்லங்க... இன்னொரு நாள் வர்றோம்..." என பழனி கூற,
"ஆமா... சாரி... சாரின்னு சொல்லிட்டா எல்லாம் சரியாயிடுமா...?" என்று கடுகடுத்த படி பேசிவிட்டு செல்வி கீழே சென்று விட்டாள். செல்வியின் பின்னால் பழனியும் செல்ல, அந்தச் சிறுவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தேன்.
"என்னாத்து, தாத்தா?" என்றான் இன்னும் மழலை மாறாத மொழியில்.
"ஒண்ணுமில்லய்யா... எது சின்ன விசயம், எது பெரிய விசயம்னு சில நேரம் பெரியவங்களுக்குத் தெரியறதுல்ல... நீ இதெல்லாம் பாக்காத... போயி விளையாடு..." என்றேன் அந்த சிறுவனிடம்.
"ரொம்ப சாரிங்க... எல்லாம் உன்னால தான்டா..." என்றாள் அவள் தாய். குழந்தையின் முகம் சுருங்க, "அதெல்லாம் ஒன்னுமில்லடா..." என்றபடி, அவன் கன்னத்தை மெல்ல வலியின்றிக் கிள்ளி, கையில் முத்தமிட்டேன். என்னைப் பார்த்து, பின் தன் அம்மாவைப் பார்த்து சிரித்தபடி கையைத் தூக்கிக் காட்ட, அந்தக் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தேன். "மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்கம்மா... இன்னொரு நாளுல பாக்கலாம்" என்று சொல்லி விட்டு நானும் கீழே வந்தேன்.
அடுத்த நாள் மாலை நானும், என் மனைவியும் எங்கள் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் அமர்ந்திருக்க, என்னிடம் ஓடி வந்தான் அந்தச் சிறுவன், தாத்தா எனக் கூவியபடி. மேல்வீட்டுப் பெண்மணியும் தன் கணவனோடு நின்றிருந்தனர். "வாங்க, நல்ல இருக்கீங்களா?" என நான் கூற, அவர்கள் இருவரும், "ஒரு வருசமா ஒரே எடத்துல இருக்கோம்... ஆனா, யாரும் யாருக்கும் தொல்லை தராம இருக்கணும்னு தள்ளி இருக்கப் போயி, ஆனா, இப்ப யாரையும் தெரியாமலே இருந்திடப் போறோம்னு தோணுது... அதுவும் நேத்து நடந்ததை நெனச்சுப் பாத்தா, நம்ம முன்னாடியே அறிமுகமாகி இருந்தோம்னா, அந்த சண்டையே வந்திருக்காதுன்னு தோணுது..." என்று சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
எங்களுக்கும் முந்தைய நாளிலிருந்து மனத்தில் இருந்த சுமை இறங்கியது போல் இருந்தது. அன்றிலிருந்து நானும் என் மனைவி மீனாளும் முடிவு செய்தோம். இத்தனை பேர் ஒன்றாக தானாக மனமுவந்து ஒரே இடத்தில் கூடி வாழ்வது என்பது வியப்பான ஒன்று தானே... ஆனால் எதிர்படும் மனிதர்களைக் காணும் போது சிறு புன்னகையுடன் எதிர்கொள்ள நம்மைத் தடுப்பது எது...? அப்படி சிரித்து பேசிவிடுவதால் நாம் இழக்கப் போவது என்ன...? ஒன்றுமில்லை தானே. ஆனால், அன்போடு நம் முகத்தில் காட்டும் சிறு புன்னகை நல்ல நட்பைக் கொடுக்கும். நம் சூழலை - நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் ஒருவித நேர்மறைத் தாக்கத்தை உண்டாக்கும் என அறிந்து, எங்கள் அடுக்ககத்தில் உள்ளவர் பலருடன் நட்பானோம். பெரும்பாலும், குழந்தைகளோடு... அனைவரும் எங்களை தாத்தா பாட்டி என அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆண்டுகள் கடந்து கொண்டிருந்திருந்தன. போன ஆண்டு இந்த நாள், மீனாள் எப்போதும் காலை 6 மணிக்கே எழுந்து விடுவாளே, இன்னும் தூங்குகிறாளே என எழுப்பும் போது தான் தெரிந்தது, என்னை விட்டு அவள் பிரிந்து போனது. சில மணி நேரங்களில், மொத்த குடும்பங்களும் எங்கள் வீட்டில் தான் இருந்தன. எனக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவதற்கும், ஆக வேண்டிய காரியங்களைச் செய்வதற்கும் என மொத்த அடுக்ககமும் எங்கள் குடும்பமாய் மாறி இருந்தது என் மகனுக்கும், செல்விக்குமே பேரு வியப்பாய் இருந்தது. இன்று, என் மீனாள் எனைவிட்டுப் போய்,  ஒரு ஆண்டு ஆகிறது. என் வாழ்நாள் முழுதும் சிறந்த நட்பாக இருந்தவள். இன்றும் அவளின் சிரித்த முகத்தை என்னைத் தாத்தா என அழைக்கும் என் குடும்பத்தின் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும், என்னைத் தங்களுள் ஒருவனாய் நினைத்துப் பாராட்டும் பலருடைய நட்பில் அவளுடைய புன்னகையைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.


- முடிவிலி.


குறள் :
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)

Comments

  1. கதையோட துவக்கமே அருமையா இருக்கு.. அமேரிக்காவிலே எதிரில் தெரியாத ஒருவர் வந்தாலும் புன்னகைத்து வாழ்த்துவார்களாம்! அது போல இல்லை என்றாலும் நம்மைச் சூழ்ந்தவர்களிடமாவது புன்னகைக்கலாம். நல்ல கதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka