தாய்மொழிப் போற்றுதும் - Celebrate Mother Language

தாய்மொழிப் போற்றுதும்



இன்று உலகத் தாய்மொழி நாள்...
ஐக்கிய நாடுகள் மன்றம் பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துக் கொண்டாடுகிறது. 

ஏன் தாய்மொழி? 

மொழி அறிவு அல்ல... அது கருத்துத்தொடர்புக்கான ஒரு கருவி. ஆனால், ஒரு கருவியைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை சரிவர பயன்படுத்தலும் கைகூடும். ஒரு மொழி அறிவு அல்ல எனினும் குறைந்த அளவு மொழியறிவு இங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சுமார் 5 மாதங்கள் முதல் குழந்தையின் செவியுணர் திறன் துவங்கி விடும். அவைக் கேட்கும் சொற்களே அக்குழந்தையின் மூளையின் மொழியறிவுக்காக இருக்கும் பகுதியில், கட்டுமானக் கற்களாய் அடுக்கப்படும். வயிற்றில் இருக்கும் போதும், பிறந்த பின்பும் தான் கேட்கும் ஒவ்வொரு புதிய சொற்களையும் மூளை தானாகப் பதிவு செய்கிறது. இவ்வாறாக, ஒரு குழந்தை தான் கேட்டச் சொற்களைக் கொண்டு, எவ்வித இலக்கணமும், ஆசிரியரும் இன்றி தானே பேச எத்தனிக்கும் மொழியே தாய்மொழி. 

இந்தத் தாய்மொழி மூலம் கற்றிடில், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. யார் தன் தாய்மொழியில் மிகவும் வலிமையுள்ளவராய் இருக்கின்றாரோ, அவர்க்கு பன்மொழி கற்பதில் எவ்விதச் சிக்கலும் இருப்பதில்லை... 

நாம் செய்ய வேண்டியது:
ஆனால், எங்கும் நிறுவனமயமாகிவிட்ட சூழலில், எது கற்றால் பணி கிடைக்கும் என்றாகிவிட்டதால், தாய்மொழி மறுத்து மற்ற மொழி பேசத் துவங்கிவிட்டோம். இதனால், தான் கற்ற மொழியின் அறிவு இருக்குமே ஒழிய சிந்திக்கும் ஆற்றலென்பது மழுங்கடிக்கப்படுகிறது. ஒரு குழந்தை தானாகச் சேர்த்து வைத்த கட்டுமானக் கற்கள் பயன்படுத்தப்படாமல் பாழடிக்கப்படுகிறது. 
இக்காலப் பள்ளிகள் ஒரு குழந்தை சிந்தனை ஆற்றலைக் கத்தரித்துவிட்டு, பாடநூலில் உள்ள அறிவை மட்டும் தந்து கொண்டிருக்க, நாம் செய்ய வேண்டியது தாய்மொழியின் இன்றியமையாமையை உணர்ந்திருப்பதே. அந்த உணர்வை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதே. பன்மொழிக் கற்றல் தவறன்று. நற்சிந்தனை படைப்பாற்றல் தரும் தாய்மொழி அறிவையும் வளர்த்துக் கொள்வோம். 
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் உலகத் தாய்மொழி நாளுக்கான முழக்கமாக இதனைக் கூறியுள்ளது...

"நமது மொழிகள்... நமது உடமை..."
"Our Languages... Our Assets..." 

உலகெங்கிலும் தன் தாய்மொழியில் கல்வி கற்க பல முனைவுகள் எடுக்கப்பட்டு தானிருக்கின்றன. பன்மொழி வழிக்கல்வியினை ஊக்கப்படுத்திடும் விதமாக பல முனைவுகளை ஐநா மன்றமும் எடுத்து வருகிறது.

நெல்சன் மண்டேலாவின் ஒரு கூற்றுடன் நானெழுதிய வெண்பாவுடன் நிறைவு செய்கிறேன். 

"ஒரு மனிதனுக்குப் புரியும் மொழியில் சொன்னால், அது அவன் மூளைக்குச் செல்லும். அவனுடைய மொழியில் சொன்னால் அது அவனுடைய இதயத்திற்குச் செல்லும்"


பொருள்:

ஒரு குழந்தை முதல் முதலாக கேட்டு - கற்று - உளத்தால் உணர்ந்து - மனதில் பதித்திடும் மொழியான தாய்மொழியை நன்குக் கற்றால் தான் சிந்திக்கும் ஆற்றல் ஓங்கி வளர்ந்திடும்... அதனால், தாய்மொழியினைப் போற்றுவோம்...

இனிய உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள், அனைவருக்கும்....

தாய்மொழி போற்றுதும்.

- கணபதிராமன்

Comments

  1. தாய்மொழியை போற்றுதல் இல்லையெனினும் பழகுதலாவது இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய சூழல் மறந்தும் கூட பழக அனுமதிப்பதில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka