புளியமரம்
ஊருக்கு வெளியே புளியமரம்
சாலையோரம் வளந்த மரம்
பசங்க கூடி உலுக்குவோம்
அது நிழலுல தல கிடத்துவோம்
சித்திரை வெயில்ல கூட
சில்லுன்னு நிழலிருக்கும்...
புளியங்காய் புளிச்சாலும் அது
நெனப்பு நெஞ்சினிக்கும்...
கல்லு வச்சு அத அடிச்சோம்...
வலிக்கவில்லை அதுக்கும்...
அப்பக் கூட சிரிச்சுக்கிட்டே
குளிர் காத்து கொடுக்கும்...
சாலைய அகலம் பண்ண
வெட்டிட்டாய்ங்க மரத்த...
வாழுங்கால நினைப்பு அது
எங்க போய் கொளுத்த...
வச்சதாரு வளத்ததாரு
தெரியவில்லை இன்னும்...
எங்கள வளத்தது இந்த மரம்
வலிக்குதய்யா இன்னும்...
ஒத்தமரம்னு வெட்டிப்புட்டா
ஒண்ணுமாகிப் போவாது...
ஒண்ணு ஒண்ணா வெட்டுறியே...
இந்த பூமி வாழாது...!
வெட்டிப்போட்ட கிளை ஒண்ணு
புதரோரம் முளைக்க...
இது வளந்து நின்னு காய்க்கவேணும்
தலைமுறைக்கும் நிலைக்க...!!
- கணபதிராமன்
Comments
Post a Comment