என்றாவது ஒரு நாள் - Someday in Future
"என்றாவது ஒரு நாள், நீ நல்ல நிலமைக்கு வருவடா... கவலைப்படாதே" சுந்தரோட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார். சுந்தருக்கு அப்பாவின் இந்த ஆறுதல் சொல் கூட சிறு கோபத்தையும், கோபம் கொள்வதற்காக குற்றவுணர்வையும் ஒருசேரத் தந்தது. அமைதியாகவே இருந்தான்.
பொறியியல் கல்லூரிப் படிப்பு 2002ல் முடித்து இரு ஆண்டுகள் முடிந்திருந்தும், இன்னும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஊதியம் பெறும் பணி கிடைக்கவில்லை. வெளிநாடு செல்வதற்கும் முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த முயற்சியில், மும்பையில் நடந்த நேர்முகத் தேர்வில், அவனுடன் வந்த மூன்று நண்பர்களுக்கு துபாயில் வேலை கிடைக்க, சுந்தருக்கு வழக்கம் போல் கிடைக்கவில்லை... அதற்குத் தான் அப்பா அவனை ஆறுதல் செய்து கொண்டிருந்தார். மௌனமாக அன்று இருந்துவிட்டு, அடுத்த நாள் மேட்டூருக்குக் கிளம்பினான்.
தொலைபேசியில் கூட, சில நாட்கள் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்த்திருந்தான். செய்தித்தாள்களிலும், முகமைகள் மூலமும் விளம்பரங்கள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிதையே முழுத்தொழிலாகக் கொண்டிருந்தான். அனல்மின்நிலையத்தில் வேலை செய்தாலும், இரு ஆண்டுகளில் நுட்பங்கள் பல கற்றிருந்தாலும், சரியான ஊதியம் கிடைக்காததும், கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த துபாய் வேலை கிடைக்காததும் அவனை உள்ளே வதக்கிக் கொண்டிருந்தன. மாதத்தின் ஏழாம் நாள், ஒப்பந்ததாரரான கந்தசாமி, சுந்தரிடம், ஒரு கவரில் 2000 ரூபாயை வைத்து, "தம்பி, இந்த மாச சம்பளம்..." என்றார். சுந்தர் வெளிநாடு செல்ல முயல்வது கந்தசாமியண்ணனுக்குத் தெரியும்.
மேலும் தொடர்ந்தார்...
"சுந்தரு, ஒரு மூணு மாசம் லீவ் எடுத்துக்கோ... துபாய்க்கு வேலைக்குப் போயிருக்குற உன்னோட ஃபிரெண்டுகளை விட உனக்கு விசயம் அதிகம் தெரியும்... இருந்தும், உனக்கு அந்த வேலை கிடைக்கலன்னா, இதை விட நல்ல வேலை கிடைக்கும், தம்பி... நீ இங்க இருந்துகிட்டு கன்சல்டன்சிக்கும், இண்டர்வியூக்கும் ஒவ்வொரு தடவை சென்னை போறதுக்கு, கொஞ்ச நாள் அங்கேயே போய்த்தேடு..., அப்பாக்கிட்ட நான் சொல்றேன்"
"அதெல்லாம் வேண்டாண்ணே" முதலாளி என்பதை விட அண்ணன் என அழைப்பதையே கந்தசாமியும் விரும்பினார்.
"ஏற்கனவே, அப்பாவுக்கு இன்னும் பாரமா தான் இருக்கேன். இப்ப இந்த வேலையும் விட்டுட்டு, எப்படி சென்னைக்குப் போய், அப்பா கூட இருக்குறது...?"
"தம்பி, உங்க அப்பாவ நீ புரிஞ்சுக்கிட்டது இவ்ளோ தானா? உன்ன இந்த வேலைக்கு சேர்க்கும் போது அவருக்காகத் தான் உன்னை சேத்துக்கிட்டேன். உண்மையில, நான் எடுத்துக்கிற காண்டிராக்டுக்கு எனக்கு இஞ்சினியர் தேவையே இல்ல... சூப்பர்வைசர் நாலு பேர் இருந்தா போதும், இருக்குற நாலு கேங்குக்கு... ஆனா, அப்பா என்ன சொன்னாரு தெரியுமா...? இவனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னா, அவனுக்கு முதல்ல அனுபவம் கிடைக்கணும்... அது அவன் பணம் பத்தி நினைக்காம - செய்யுற வேலைய விரும்பிக் கத்துக்கிட்டாத்தான் முடியும்... அவனுக்கு வேலை கொடுங்க... சம்பளம் எல்லாம் உங்க இஷ்டம்னு சொன்னாரு... நீயும் உங்க அப்பா சொல்லி இங்க சேந்தாலும், முதல் நாளிலேந்து இந்த பவர் பிளாண்ட் கத்துக்கிறதுல காட்டுன ஆர்வம்... உன்னோட முயற்சி... இதெல்லாம் வீணாகிடக் கூடாது... நீ எங்கிட்ட இருக்குற வரைக்கும், இந்த வேலையே போதும்னு நீ நினைச்சுட வாய்ப்பு இருக்கு... அதனால் நீ கிளம்பு... மூணு மாசம் முழு மூச்சா வேலை தேடு... கண்டிப்பா பாறேன்... இந்த மூணு மாசத்துக்குள்ள கந்தசாமிண்ணே, எனக்கு நல்ல வேலை கிடைச்சுடுச்சுன்னு நீ எனக்கு ஃபோன் பண்ணுவ...!"
சுந்தர் கண்ணில் நீர்க்கோடிட்டது... அன்றிரவு சென்னைக்குப் புறப்பட்டான் சுந்தர்...
*****
மூன்று மாதங்களுக்குப் பிறகு, கந்தசாமியண்ணன் அலுவலகத்து தொலைபேசி ட்ரிங்கியது... ரிசீவரை எடுத்து காதுக்கும் தோளுக்கும் நடுவில் வைத்து பிடித்த படி "ஹலோ" என்றார் அண்ணன்.
எதிர்முனையில் சுந்தர் "அண்ணே, வேலை கிடைச்சுடுச்சுண்ணே... இன்னிக்குத் தான் மும்பைல இண்டர்வியூ முடிச்சுட்டு சென்னை வந்தேன்... சார்ஜால வேலை..."
"நான் தான் சொன்னேன்ல... நீ நல்ல நிலைமைக்கு வருவப்பா... நல்லது சுந்தர்... அப்பா இருக்காங்களா, பக்கத்துல...?"
"இதோ தர்றேன்... அப்பா....கந்தசாமியண்ணன்..." என்று அப்பாவிடம் ரிசீவரை நீட்டினான் சுந்தர். சுந்தர் தள்ளிச்செல்லும் வரை காத்திருந்து பின் ஹலோ என்றார் அப்பா.
கந்தசாமி சொன்னார் "சார், சொல்லிட்டீங்களா? நீங்க தான் அவனை லீவு போட்டு வரச்சொன்னதுன்னு..."
அப்பா மெல்லியக் குரலில் "இல்ல..." என்றார்... "இந்த ரெண்டு வருசமா சம்பளங்குற பேர்ல அந்த ரெண்டாயிரம் கூட உங்க பணம்னாவது சொன்னீங்களா? ஆனா, தன்னுடைய பதவி வச்சுக்கிட்டு தான் குடும்பத்துக்கு என்ன வேணாம் செஞ்சுக்குற ஆளுங்க மத்தியில, உங்க காசை எங்கிட்ட குடுத்து, அதை சம்பளமா குடுக்க வச்சு, அவனுக்கு ஒரே நேரத்துல காசோட அருமையும், தொழில் அறிவையும் கொடுக்க உங்களால மட்டும் தான் முடியுங்க..."
அப்பா "எல்லாம் அவன் நல்ல நிலைமைக்கு வரணுங்குறதுக்குத் தானே... இதுவும் குறுக்கு வழிதான்... ஆனா, அவன் யாரையும் ஏமாத்தல... யாரோட வேலையயையும் பறிச்சுட்டு வரல... உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்..."
சார்ஜாக்குப் போன சுந்தருக்கு இன்னும் தெரியாது... அவனோட முதல் வேலையும், ரெண்டு வருட சம்பளமும் கொடுத்தது அவங்க அப்பா தான்னு... என்றாவது ஒரு நாள், அவனோட அப்பாவே சொல்லட்டும்... நீங்க யாரும் சொல்லிடாதீங்க... !
கற்பனையா
ReplyDeleteஇல்ல எதாவது அனுபவமா...??
ண்ணா
எதுவாயினும் பரவாயில்லை நல்லாயிருக்கு 😊👌
நடக்க இயலுபவை எனத் தோன்றினால் அது உண்மைக்கு அருகாமையானது... இப்படியெல்லாம் நடக்குமா எனத் தோன்றினால், கற்பனை... படிக்கும் நீ சொல்ல வேண்டியதை எழுதிய என்னிடம் கேட்கிறாயே..ம் செந்தில்...
ReplyDeleteArumai sir.
ReplyDeleteமிக்க நன்றி வினோத்...
Delete