இன்சுலினும் இன்றைய நாளும் - Insulin and Today Jan 11

இன்றைய சூழலில் நிறைய பேர ஆட்டிப்படைக்கும் ஒரு நோயின்னா, அது நீரிழிவு நோய் தான்... இன்னிக்கும் இந்த நோய்க்கும் ஒரு தொடர்பு இருக்கு...

அப்படியா...? நீரிழிவுன்னா செல்லமாக, சர்க்கரை நோய் எனவும் சொல்றாங்களே... அதான? அது என்னப்பா சக்கரை நோயி...?

அதுக்கு முதல்ல, நம்ம உடம்புல நாம சாப்பிடுறது எப்படி செரிமானம் ஆகுதுன்னு தெரியணும்... சரி... எங்க செரிமானம் ஆகத் தொடங்குதுன்னு தெரியுமா?

இது தெர்யாதா எனக்கு? வயித்துல...

அதான் இல்ல... வாயிலயே ஆரம்பிச்சுடும்... வாய்ல எச்சியிலே நிறைய என்சைம்ங்க இருக்கு... அது நம்ம மெல்லும் போது, சாப்பாட்டோட சேர்ந்து செரிமானத்தை வாயிலயே ஆரம்பிச்சுடும்... அதனால தான் நல்லா மென்னு சாப்புடுடான்னு அம்மா சொல்லுவாங்க...

அப்புறம்...

வாயிலேந்து உணவுக்குழல் வழியா இரைப்பைக்குப் போகும் சாப்பாடு... ஒரே நேரத்துல அப்படியே இறங்காது... கவளம் கவளமாத்தான் இறங்கும்... இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்து, நம்ம சாப்பிட்ட சாப்பாட்ட உடைத்து கரைக்கும்...

அமிலமா? நம்ம வயித்துலயா?

ஆமா... மேலக் கேளு... வாயில சுரந்த எச்சிலும், இரைப்பையில இருக்கும் என்சைம்களும் சேந்து கூழாயிருக்குற சாப்பாட்டுல இருக்குற சர்க்கரை சத்து, கொழுப்பு சத்து, புரதச்சத்து எல்லாத்தையும் பிரிக்க உதவி பண்ணும்...

அப்ப அங்க தான் நம்ம சாப்பாடு செரிக்குதாண்ணே...?

அதுவும் இல்ல... அப்புறம் அங்கேந்து சாப்பாடுக்கூழ் சிறுகுடலுக்குப் போகும்... அங்க தான் சர்க்கரை சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து எல்லாம் செரிச்சு ரத்தத்தில கலக்கும்... இரைப்பையிலேந்து சிறுகுடலுக்குப் போற வழியில, கணையத்துல சுரக்குற இன்சுலின், பித்தப்பையில சுரக்குற பித்தமும் அதுல சேரும்...

இன்சுலினா? இந்த சக்கரை நோய் வந்தவங்களுக்கு ஊசி போடுறாங்களே அதுவா?

அதே தான்... அத சரியா சேந்தா தான், சர்க்கரைச் சத்து உடம்புக்கு பயன்படுற  மாதிரி மாறும்... இல்லன்னா, ரத்தத்தில சர்க்கரை அளவு கூடி சிக்கல் தான்...

அப்படி என்னண்ணே, பண்ணுது இந்த இன்சுலின்...?

சர்க்கரைச் சத்துன்னு சொல்றேன்ல அதுபேர் கார்போ ஹைட்ரேட்... நாம சாப்புடுற எல்லா வெஜ் ஐட்டத்திலும் இது தான் இருக்கு... அது கூட கொஞ்சம் வைட்டமின்னும் இருக்கும்... ஆனா, பெரும்பகுதி கார்போ ஹைட்ரேட் தான்... இந்த கார்போ ஹைட்ரேட்ட உடைச்சிக்கிட்டே வந்தா - அதாவது செரிக்கும் போது கடைசியா அது குளுக்கோஸா மாறும்... இந்த குளுக்கோஸ ரத்தத்தில அதிகமா சேரவிடாம அதை கிளைக்கோஜனா மாத்தி விடுறது தான் இன்சுலினோட வேலை...

குளுக்கோஸுன்னு சொல்ற... கெளைக்கோசன்னு சொல்ற... ஒண்ணும் விளங்கலையே...?

நம்ம உடம்புல சத்து இருக்க, உடம்புல குளுக்கோஸ் வேணும்... ஆனா அதுக்குன்னு அதிகமா ரத்தத்தில குளுக்கோஸ் இருந்தா, அதுவும் சிக்கல் தான்... நாள்தோறும் நமக்குத் தேவையான குளுக்கோஸ் அளவை விட அதிகமா சேருற குளுக்கோஸ, இரத்தததுல இருக்க விடாம, க்ளைக்கோஜனா மாத்தி கல்லீரல், திசுக்கள்ல சேத்து வைக்க உதவுறது தான் இன்சுலின்.

அப்ப கிளைக்கோஜன என்ன செய்யுறது...? சேந்துகிட்டே போனா...?

அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமான்னு தெரியாதவனுக்கு கிளைக்கோஜன் சேரவே சேராது... அவன் உழைப்புக்குத் தேவையான சாப்பாடே அவனுக்குக் கிடைக்குறதில்ல... உழைக்காம சும்மா இருக்குற நம்மள மாதிரி ஆளுங்க தான் கவலைப்படணும்... சேருற கிளைக்கோஜன், சாப்பாடு இல்லாத நேரத்துல மறுபடியும் குளுக்கோஸா மாறி உடம்புக்கு சத்து கொடுக்கும்...

ஓ... இதுல சக்கரை நோய் எங்க வருது?

இப்ப இன்சுலின் சரியா சுரக்கலன்னா, ரத்தத்தில அதிகமா இருக்குற குளுக்கோஸ் கிளைகோஜனா மாறாம ரத்தத்துலயே இருந்துடும்... ரத்தம் கிட்னிக்கு போயி, குளுக்கோஸ் சிறுநீர் வழியா வெளியேற ஆரம்பிக்கும்... அடிக்கடி சிறுநீர் வரும் (பாலியூரியா)... அடிக்கடி தாகம் எடுக்கும் (பாலிடிப்ஸியா)... அடிக்கடி பசி எடுத்து நிறைய சாப்புடுவாங்க (பாலிபேஜியா)... இது எல்லாம் சேந்தது தான் நீரிழிவு நோய்...

அப்ப இன்சுலின் சுரக்கலன்னா சிக்கல் தான்... அப்படிதானண்ணே..?

அதுதான்... ஆனா தானா சுரக்காதவங்களுக்கு, ஊசி மூலம் இன்சுலின் கொடுக்கமுடியும்... நான் சொன்னேன்ல... இன்னிக்கு முக்கியமான நாளுன்னு... 95 ஆண்டு முன்னாடி, இதே நாளுல அதாவது ஜனவரி 11 அன்னிக்குத் தான், முதன் முதலா ஒரு 14 வயசு சக்கரை நோயால அவதிப்பட்ட லியனார்ட் தாம்ப்ஸன் என்கிற பையனுக்கு இன்சுலின் ஊசி போடப்பட்டது... முதல் தடவை சரியாக சேரலைன்னாலும், இது நடந்த அடுத்த வாரம் போட்ட ஊசியிலிருந்து நல்ல மாற்றம் தெரிஞ்சுது... 13 ஆண்டு இன்சுலின் அந்தப் பையனோட வாழ்க்கையை நிறுத்திப் பிடிச்சது... ஆனா, நீரிழிவு நோயிலேந்து தப்பிச்ச லியனார்ட், அவனோட 27வது வயசுல நிமோனியா வந்து இறந்து போயிட்டான்...

ச்ச... பாவம்ல... இந்த இன்சுலின் தான் நிமோனியாக்கு காரணமாண்ணே...?

இல்ல.. நிமோனியா அவனுக்கு குளிர்னாலயும் பாக்டீரியா தாக்குதல்னாலயும் வர்றது...

சரிண்ணே... இன்சுலின் யாருக்குப் போட்டதுன்னு சொன்ன? ஆனா, யாரு இதைத் தயாரிச்சது...?

கனடா நாட்டு மருத்துவ பேராசிரியர்... பேரு பிரெட்ரிக் பேண்டிங், அவரு சார்லஸ் பெஸ்ட் என்பவரோட சேர்ந்து இன்சுலின் குறைபாட்டால் அவதிப் படுறவங்களுக்கு வெளிப்புறமாக இன்சுலின் தருவதற்கு... அதான் ஊசிப் போட... ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருந்தாரு... இதப்பார்த்து ஆர்வத்துல இன்னொரு ப்ரொபஸரும் அவர் கூட சேர்றாரு... அவர் பேர் ஜே ஜே ஆர் மெக்லியொட். கடைசியில், மருந்தியல் நிபுணர் ஜேம்ஸ் கோலிப் என்பவரும் இந்த ஆய்வில் சேர்ந்து, மிருகங்கள் (நாய், ஓநாய்...) உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட இன்சுலினை லியனார்ட் தாம்ப்ஸன் உடம்பில் செலுத்தி சோதிக்கிறாங்க...

அய்யோ, நாய்கிட்டேந்து எடுத்தா? இதுக்கு அந்தப் பையன் எப்படி ஒத்துக்கிட்டான்?

இதுக்கு முன்னாடி, முயல்கள், கினி பன்றிகள் உடம்பில் செலுத்தி சோதிச்சுட்டுத் தான் அப்புறம் லியனார்ட் உடம்பில் செலுத்துறாங்க...

ஆனா சக்கரை நோயெல்லாம் கம்பெனிங்க மருந்து விக்குறதுக்கு செய்யுற ஏமாத்து வேலைன்னு சொல்றாங்களேண்ணே...?

சரி... ஏமாத்துறாங்கன்னே வச்சிக்குவோம்... நம்ம எத்தனை பேர் அரசாங்கம் தர்ற இலவச சக்கரை நோய்க்கான மாத்திரை வாங்கிப் பயன் படுத்துறோம்... அரசு தர்றது தேவையில்லைன்னு கோடியில விளம்பரம் செய்யுற ஆஸ்பிட்டல் போனா அவன் விலை அதிகமான மருந்து உன் தலையில தான் கட்டுவான்... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உடலுழைப்பு இருக்கிறவனுக்கு சர்க்கரை நோய் வரவே வராது... உக்காந்து ஊர் நாயம் பேசுறவனுக்குத் தான் இந்த நோயெல்லாம்...

ஆனா, ஒரு தடவை மருந்து சாப்பிட ஆரம்பிச்சா, தொடர்ந்து சாப்பிடணும்னு சொல்றாங்களே...

ஆமா... ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு சரியாக இருக்கணும்னா கண்டிப்பாக மாத்திரையோ, இன்சுலினோ போட்டுத்தான் ஆகணும்... ஒண்ணு புரிஞ்சுக்கோ... மாத்திரைய நிறுத்தி என்ன ஆகுதுன்னு பாக்குறேன்னு சொல்ல நம்ம உடம்பு சோதனைக்கூடம் இல்ல... ஏற்கனவே, உலகம் பூரா ஆராய்ச்சி செய்து இது தான் நோய், இது தான் மருந்துன்னு நிறுவி இருக்குறப்போ, அத ஏத்துக்குறதுல என்ன தப்பிருக்கு... சொல்லு பாப்போம்...

சரிதாண்ணே... அப்ப இன்னிக்கு நீரிழிவு நோயாளிகள் நாளாண்ணே...?

ஏம்ப்பா... அப்படி சொல்லுற...? இன்சுலின் நாள்னு சொல்லலாம்ல...

- கணபதிராமன்.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka