7½ - குறள் கதை

 7½

- முடிவிலி

20.7.2022

காலை 7:30 மணி

அண்ணா நகர் மில்லினியம் பூங்காவின் சுற்றுப்பாதையில் மூன்று சுற்று நடந்து முடித்ததில் சற்று களைத்திருந்தார் மூர்த்தி. அருகே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். “என்ன டாக்டர் சார், வாக்கிங்கா? ஜாக்கிங்கா?” என்ற குரல் கேட்டு, கண் விழித்துப் பார்த்தவர், முன்பு தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்து, தற்போது நண்பராகிவிட்ட துரைசாமி நின்றிருந்தார்.

வாக்கிங் தான், பாத்து ரொம்ப நாளாச்சு, நல்லாருக்கீங்களா?” என்றார் மூர்த்தி.

நல்லா இருக்கேன், அதனால தான் பாக்க முடியல. உடம்புக்கு எதுவா இருந்தாலும் உங்ககிட்ட வந்துடுவேனே.” என்று சிரித்தபடி மூர்த்தியின் அருகில் அமர்ந்தார் துரைசாமி.

நல்லது, அப்புறம் வேற என்ன, வீட்டுல பசங்க எல்லாம் நல்லாருக்காங்களா?”

எல்லாரும் நலம் தான் டாக்டர், உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சுட்டு இருந்தேன்"

ம், கேளுங்க"

நீங்க பில்ராத்துக்கு consultingக்குப் போறீங்களா?”

ஆமா, வாரத்துல ரெண்டு நாள் போவேன். சில நேரம் on call ல கூட. ஏன் கேக்குறீங்க?”

****

காலை 10:55 மணி

திடீர்னு வந்து கதவைத் தட்டுனதும் பயந்துட்டேன்டா, உள்ள இருந்துட்டே கதவைத் தட்டுறது யாருன்னு தெரியாம யாருன்னு கேட்கக் கூட முடியாம, ச்சை, என்ன பொழப்பு இது" என்றாள் சித்ரா.

இந்த ஏரியால எங்க கம்பெனிக்குச் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது, அப்படியே நீ தனியா உக்காந்திருப்ப, பாத்துட்டுப் போகலாம்னு வந்தா…” என்று சொல்லிச் சிரித்தான் பழனி.

இது தான்டா கடைசி, இனிமே வேற யாரயாச்சும் வச்சுக்குவோம், நாலு வருசத்துல வெவ்வேற பேருலன்னாலும், உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலெடுக்குதுடா" என்றாள் சித்ரா.

என்ன திடீர்னு இப்படி சொல்ற? எப்படி இருந்தாலும் அடுத்த ஆபரேசன் ஆறு மாசம் கழிச்சுத் தான, அப்புறம் பாத்துக்கலாம், இங்க பாரு, பணம் எப்படி குமியுதுன்னு. இதுவரைக்கும் நம்மளோட ஆப்பரேசன்ல இது தான் செம்ம. முன்னெல்லாம் school fees, college feesனு செஞ்சுட்டு இருந்ததை விட, இந்த hospital fees தான் செம்மயா யாவாரம் ஆகிருக்கு, இது வரைக்குமே ரெண்டு லட்சத்தைத் தாண்டியாச்சு.” என்று தனது கைப்பேசியின் திரையைச் சித்ராவிடம் காட்டினான் பழனி.

சற்று முன்னிருந்த பதற்றம் மாறி, திரையில் தெரிந்த தொகை சித்ராவின் முகத்தில் சிரிப்பை வரவழைத்து இருந்தது. “என்ன இருந்தாலும் இப்படி வீட்டை விட்டு வெளியே போகாம ஒரு வாரமா உக்காந்திருக்குறது செம்ம காண்டாவுதுடா, அதுவுமில்லாம ஒவ்வொரு முறையும் என்ன வச்சே ப்ளான் போடுற? அடுத்த ப்ளான்ல உன்ன வச்சு ப்ளான் போடுவோம், நீ வீட்டுலயே இரு, நான் மத்த வேலை எல்லாம் பாத்துக்குறேன்" என்றாள் சித்ரா.

ஏய், இது நீ - நான் போட்டி இல்ல, சித்ரா, நம்ம ரெண்டு பேரும் ஒரு டீம், அப்படி இருக்குற வரைக்கும் தான் மாட்ட மாட்டோம். ஒரு வாரம் வீட்டுக்குள்ளா ருக்குறதுக்கெல்லாம் அலுத்துக்கிட்டா வேலைக்காவுமா? இதப் போல இன்னும் ஒரு ரெண்டு ஆபரேசன் செஞ்சா போதும், அடுத்து ஒரு செம்ம ப்ளான் வச்சிருக்கேன். ஏமாறுறவங்க இருக்குற வரைக்கும் நம்ம காட்டுல பணமழை தான்"

அப்படி என்னடா ப்ளானு?” என்று தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தபடியே கேட்டாள் சித்ரா.

அது என்னன்னா…” என்று தொடங்கிய பழனி, “ ஏய், இது எந்த போனு? நான் சுவிட்ச் ஆப் செஞ்சு வச்சிருந்த போனா?” என்றான் பதறியவனாய்.

ஆமா, நீ எனக்குக் கொடுத்திருந்த போன்ல வெறும் பட்டன் மட்டும் தான் இருக்கு. இரு, கொஞ்சம் FB பாத்துட்டு அப்புறம் switch off செஞ்சிடுறேன்.” என்றாள் சித்ரா.

, லூசு, நீ இருக்குற எடம் தெரியக் கூடாதுன்னு தான் இந்த போனை வேற ஏரியாவுல switch off செஞ்சு, உன்கிட்ட கொடுத்து வச்சிருந்தேன். இந்த மொபைல்லேந்து தான் post போட்டிருக்கோம். ஏதாவது சிக்கல்னா இந்த போனைத் தான் trace செய்வாங்க. இப்ப என்ன செய்யுறது?”

அஞ்சு நிமிசம் ஆன்ல வச்சதுக்கெல்லாமா மாட்டுவோம்?”

வாய்ப்பிருக்கு, முதல்ல போனை off செய்" என்று சற்று மிரட்டலாய்ப் பழனி சொல்ல, வேண்டா வெறுப்பாக அந்த போன் அணைத்து வைக்கப்பட்டது.

சரி இப்பவாவது சொல்லு, என்ன ப்ளானு?” என்றாள் சித்ரா.

ப்ளான்லாம் அப்புறம் சொல்றேன், நான் போயி சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போறேன். இல்லன்னா, மீண்டும் switch on செஞ்சு சொமேட்டாவுல ஆர்டர் செஞ்சு வைப்ப, உன்ன நம்ப முடியாது" என்ற பழனியை முறைத்தாள் சித்ரா.

வெளியே கிளம்பிச் சென்ற பழனி பதினைந்து நிமிடத்தில் பிரியாணிப் பொட்டலத்தோடு வந்தான். கதவைத் திறந்த சித்ராவிடம் கொடுத்து, “சரி, நான் வர்றதுக்கு evening ஆகிடும், வெளியில…” என்று சொல்லிக் கொண்டிருந்த பழனியோடு சேர்ந்து, “எங்கயும் போகிடாத, நான் வரும் போது பட்டன் போனுக்குக் கூப்பிடுவேன், அப்ப மட்டும் கதவைத் திற, சரியா?” என்று சித்ராவும் சொல்லிவிட்டு, “போயிட்டு வாடா, I will manage” என்றாள்.

பழனி சிரித்துக் கொண்டே நகர, கதவை மூடிவிட்டு வந்து, டிவியைத் துவக்கி, சாய்விருக்கையில் அமர்ந்தாள், அவள் முன் இருந்த கண்ணாடி மேசையில் அந்த போன் இருந்தது. டிவியில் 'உனக்குள்ளே மிருகம்' பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

****

காலை 7:35 மணி

இல்ல டாக்டர், ரெண்டு நாள் முன்ன, ஒரு facebook post ஒன்னு எனக்கு வாட்சப்ல forwardல வந்துச்சு, அதுல ஒரு ஆபரேசனுக்கு மூனு லட்சம் வரைக்கும் செலவு ஆகுது. உங்களால முடிஞ்ச உதவி செய்யுங்கன்னு கேட்டிருந்தது. அதுல சில மெடிக்கல் ரிப்போர்ட் கூட இருந்தது, அதுல consulting doctor மூர்த்தின்னு போட்டிருந்தது. அது நீங்க தானான்னு கேக்கலாம்னு தான்.” என்றார் துரைசாமி.

அப்படியா? எந்த caseனு தெரியலயே. அந்த postஅப் பாக்கலாமா?” என்றார் மூர்த்தி.

ஒரு நிமிசம்" என்றபடி, தனது போனை எடுத்து, மேலும் கீழும் சில முறை தள்ளிவிட்டு, “இதோ இந்த post தான்" எனக் காட்டினார் துரை.

வாங்கிப் பார்த்த மூர்த்தி, அதில் இருந்த எல்லா மெடிக்கல் ரிப்போர்ட்டையும் பார்த்துவிட்டு, “சார், இதை எனக்கு forward செஞ்சுக்கவா?” எனக் கேட்க, “sure, செஞ்சுக்கோங்க டாக்டர்" என்றார் துரை.

சரி, நீங்க கேட்டதுக்குப் பதில் ஆமா, இல்ல" என்றார் மூர்த்தி.

புரியலயே"

இந்த patient நான் பாத்தவங்க தான், ஆனா, நான் அவங்களுக்கு surgeryக்கு எல்லாம் recommend செய்யல, அவங்க சொன்ன symptomsக்கு test எடுக்கச் சொல்லிட்டு, next visitobserve செய்யலாம்னு தான் சொல்லி வச்சிருந்தேன். சரி, நீங்க காசு ஏதும் அனுப்பிட்டீங்களா?”

****

பகல் 12:45 மணி

தனக்கு முன்னேயிருந்த போனையே சில நேரம் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, 'பழனி வர்றதுக்குத் தான் இன்னும் அஞ்சாறு மணி நேரம் இருக்கே' என்று கைப்பேசியைத் துவக்க, சிறு இசையைச் சிணுங்கியபடி துவங்கியது அந்த சாம்சங் கேலக்ஸி. இணைய இணைப்பையும் துவக்கி, தனது முகநூல் பக்கத்தில் பதிவுகளைப் பார்த்துவிட்டு, யூட்யூப்பில் காணொளிகளைப் பார்க்கத் துவங்கினாள். டிங் என்ற ஒலியோடு, 1 new message என்று ஒரு குறுந்தகவல் அறிவிப்பு வந்தது. காணொளியை நிறுத்திய சித்ரா, குறுந்தகவலைத் திறந்தாள்.

****

மாலை 2:35 மணி

தனது வண்டியை நிறுத்திவிட்டு, அந்தப் பழச்சாறுக்கடைக்குள் நுழைந்த பழனி, “பாஸ், ஒரு லெமன் சோடா, என்ன வெயிலு" என்று உள்ளே இருந்த நாற்காலியில் அமர்ந்து, தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். தான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போது வந்த குறுஞ்செய்திகளில் ஒன்றைத் திறந்து பார்த்து அதிர்ந்து போனான். “பாஸ், லெமன் சோடா கேன்சல்" என்று சொல்லிவிட்டு, வண்டியில் ஏறித் துவக்கினான். வண்டி சித்ராவின் இருப்பிடம் நோக்கி நகர்ந்தது.

அடுத்த கால் மணி நேரத்தில் "சித்ரா, சித்ரா, நான் தான் பழனி, கதவைத் திற" என்று கதவைத் தட்டினான். “என்னடா அதுக்குள்ள வந்துட்ட?” என்றபடி கதவைத் திறந்த சித்ராவிடம், “என்னடி செஞ்ச? நம்ம பணமெல்லாம் போச்சு" என்றான் பழனி.

என்னடா சொல்ற?”

பாரு, இப்ப எல்லாரும் அனுப்பிருந்த பணம் கிட்டத்தட்ட ரெண்டே கால் லட்சம் மட்டுமில்லாம முன்னமே இருந்த எழுபதாயிரம் எல்லாமே சேந்து போயிடுச்சு. எதுவுமே இல்ல, பாரு. நீ ஏதாவது செஞ்சியா?”

நான் ஒன்னும் பண்ணலடா, ஏன் வாசல்லயே நின்னு கத்துற, உள்ள வா" என்றாள் சித்ரா.

சரி, அந்தப் போனை ஆன் செஞ்சியா?”

ஒரு நொடி தயங்கியவள், “இல்லடா…” என்று இழுத்ததிலேயே பழனிக்குப் புரிந்துவிட்டது.

எவ்ளோ படிச்சுப் படிச்சுச் சொன்னேன், இப்ப பாரு, எல்லாம் முடிஞ்சு போச்சு" என்றான்.

இன்னும் எல்லாம் முழுசா முடியல, நீங்க ரெண்டு பேரும் உள்ளப் போனா முழுசா முடிஞ்சிடும்" என்ற குரல் கேட்டு அதிர்ந்து திரும்பிய பழனியின் முன் சைபர் க்ரைம் திலக் அவரது உதவிக் காவலருடன் நின்றிருந்தார்.


****

காலை 11:30 மணி

டாக்டர் மூர்த்தி, நான் சைபர் க்ரைம்லேந்து திலக் பேசுறேன். காலையில நீங்க சொல்லிருந்தது பத்தி தான், யாரோ அமெச்சூர் தான் சார், எந்த போன்லேந்து பதிவிட்டாங்களோ, அது கொஞ்ச நேரத்துக்கு ஆன்ல இருந்து மீண்டும் ஆப் ஆகிருக்கு. ஏரியா கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் ஒரு முறை ஆனாச்சுன்னா, பிடிச்சுடலாம். மக்களோட இரக்கத்தை, தேவைப்படுறவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்குறதைக் கூட காசாக்குறாங்க. இன்னிக்கு மாட்டுவாங்க, சார். பிடிச்சுட்டு உங்களுக்குத் தகவல் சொல்றோம்.”

****

பகல் 1:35 மணி

சித்ரா குறுஞ்செய்தியைத் திறக்க, “Dear CUSTOMAR, your electricity power will be disconnected to night at 9.30 pm from electricity office because your previous month bill was not updated. Please immediately pay using this link goo.gl/ni3y4 Thank you” என்றிருந்தது. 'ஏன் போன் ஆன் செய்யுறேன்னு கேட்டான்ல, இப்ப ஆன் செஞ்சதால தான் EB bill கட்டப் போறேன், இல்லன்னா, இன்னிக்கு இருட்டுல தான் உக்காரணும்' என்று நினைத்துக் கொண்டே அந்த இணைப்பைச் சொடுக்கினாள் சித்ரா.


கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.


குறள் எண் : 332

அதிகாரம் : நிலையாமை

பொருள்: பெரும் செல்வம் என்பது கூத்தாடும் போது வந்து சேரும் கூட்டம் சேர்வதைப் போன்றது. சிறுகச் சிறுகச் சேர்ந்தாலும் கூத்து முடிந்தால் மொத்தமாகக் கலைந்து விடும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka