அழியாக்குருதி - குறள் கதை
அழியாக்குருதி
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. - குறள் எண்: 329
“அம்மா,byeம்மா"
“டேய் சரண், எங்கடா போற? இருட்டப் போகுதுடா”
“அம்மா, கொஞ்ச நேரம் தான், சைக்கிள் ஓட்டப் போறேன், just half an hour” என்று சொல்லியபடி தனது fiber helmetஐ எடுத்து மாட்டிக் கொண்டே தனது RODEO மிதிவண்டியில் ஏறிப் பறந்தான் அவன்.
“கேட்டுக்குள்ள ஓட்டுடா, வெளியப் போகாதே” என்ற அம்மாவின் குரல் அவன் காதுகளில் எட்டியிருக்கவில்லை.
****
மாலை வெயில் தனது சூட்டின் வீச்சினை மெல்ல மெல்ல குறைக்கத் தொடங்கியிருந்தது. மணி நான்கு என்பதை காவல் நிலையத்துக்குள் நுழைந்த டீக்கடைப் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்ட தலைமைக் காவலர், “ட்டான்னு கரெக்ட்டா வந்துடுறான்யா" என்று சொல்லியபடி, தேநீரை எடுத்துக் கொண்டார். அவரைக் கடந்து அந்தப் பையன், பத்தொம்பது வயசு ஆகுது, இருந்தாலும் பையன்னே சொல்வோம், ஆய்வாளர் அறைக்குள் நுழைந்து 'செல்வம் காவல்துறை ஆய்வாளர்' என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையின் அருகே தேநீர்க் குவளையை வைத்தான்.
தலையைப் பின்னால் சரிந்தவாறே, கண்களை மூடி அமர்ந்திருந்த செல்வம், டீ க்ளாஸின் ஒலியினால் கண் விழித்தார். அவர் கண் விழித்ததைப் பார்த்து, சற்று மிரண்ட பையன், “சாரி சார்" என்றான்.
“டீ தான குடுத்த? எதுக்குடா சாரி கேக்குற? இந்தா" என்று தனது walletல் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார் செல்வம்.
“சார், கணக்கு மாஸ்டருக்குத் தான் தெரியும்" என்ற பையன் தலையைச் சொறிந்தான்.
“தம்பி, என்னிக்கு உங்க மாஸ்டர் ஸ்டேசன்லேந்து காசு வாங்குனாருன்னு அவருக்கே தெரியாது. நான் இப்ப கொடுக்குறது கூட நாங்க தர வேண்டியத விடக் குறைவாத் தான் இருக்கும். வாங்கிக்க, மாஸ்டர்கிட்ட கொடு" என்று செல்வம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய கைப்பேசி மேசை மீது 'க்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற ஒலியுடன் நகர்ந்தது. அந்தப் பையனிடத்தில் பணத்தைக் கொடுத்துவிட்டு, கைப்பேசியை எடுத்துப் பார்த்தார் செல்வம், ‘எமன் calling’. அந்தப் பையனைப் பார்த்துக் கண்ணாலே வெளியேறச் சொன்னார். பையன் வெளியேறியதும், கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்தார் செல்வம்.
“சார் சொல்லுங்க சார்"
“ஸ்டேசன்ல தானே இருக்குற, போன் எடுக்க இவ்ளோ நேரம் ஏன்யா? ஒரு important matter, பக்கத்துல யாரும் இல்லல்ல?”
“யாரும் இல்ல சார், சொல்லுங்க"
“செல்வம், உன்னைத் திருப்போரூருக்கு transfer செய்யுறதத் தடுக்குறதுக்கு நான் ரொம்ப முயற்சி செஞ்சேன். ஆனா, உனக்கே தெரியும். பெருமாள் கேங்ல யாரு பேசுனாலும் உன் பேரு வெளியில வரும்னு. சரி, அதெல்லாம் விடு. இப்பவும் உனக்கு எந்த உதவின்னாலும் செய்யுறதுக்கு நான் ரெடியா இருக்கேன்" என்று மறுமுனை பேசிக் கொண்டே இருக்க, சில நொடிகள் கண்ணை மூடி, கடுப்பான முகத்தோடு கைப்பேசியைக் காதில் இருந்து எடுத்து தனக்கு முன்னாக வைத்தபடி ஒலியே இல்லாமல் ஏதோ வன்சொல் கூறி 'என்னய்யா வேணும் உனக்கு' என்று வாயசைத்தார் செல்வம்.
“செல்வம், நான் பேசுறது கேக்குதா?” கைப்பேசி காதிற்கு வந்திருந்தது.
“கேக்குது சார் சொல்லுங்க, ஏதோ importantனு சொன்னீங்க" என்றார் செல்வம், இயல்பான குரலில்.
“இப்ப பெருமாள் ஏரியாவ சர்மா கேங் தான் பாத்துட்டிருக்காங்க, தெரியுமா?”
“சார், நான் இப்ப திருப்போரூர்ல இருக்கேன், அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன சார் செய்யப்போறேன்?”
“உன்னைத் தூக்கி ராமநாதபுரம், தூத்துக்குடின்னு எங்கயோ போடாம திருப்போரூர்ல போட வச்சதும் நான் தான். சிட்டிக்கு வெளியவும் நம்ம ஆள் இருக்கணும்னு தான்"
செல்வம் அமைதியாக இருந்தார்.
“என்ன செல்வம், பேச்சையே காணோம், நம்ம ஆளு தான?”
“டிப்பார்ட்மென்ட்ல இருக்குற வரைக்கும் அமைதியா இருந்துட்டுப் போயிடணும்னு இருக்கேன் சார். நீங்க என் மேல் அதிகாரி, நீங்க சொல்லுங்க சார்"
“செல்வம், இப்ப எனக்கும் வேற வழியில்ல, நான் சொல்றதைக் கவனமா கேட்டுக்கோ, இப்ப உனக்கு ஒரு location அனுப்புறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க கொஞ்ச நேரத்துக்கு surveil செய்ய வேண்டியிருக்கும். uniform, service weapon வேணாம். உங்ககிட்ட வேற piece இருக்கா?”
“சார், என்னதுன்னு சரியா சொல்லுங்க. surveillanceக்கு எதுக்கு weaponலாம்.”
“அந்த இடம் ஒரு குடோன் திருப்போரூர் அவுட்டர்ல மாமல்லபுரம் போற வழியில இருக்கு. அங்க என்ன activity நடக்குதுன்னு கொஞ்சம் மானிடர் செஞ்சு சொல்லணும் அவ்ளோ தான், என்னொட ஆளுங்க கொஞ்ச பேரும் வந்து உன்கூட சேந்துக்குவாங்க. சரியா?”
“ஓகே சார், நான் அங்கப் போயிட்டு உங்களுக்குப் பேசுறேன், இது டிப்பார்ட்மென்ட் வேலையா? இல்ல personal favour ஆ?”
“இந்த வேலை எப்படி முடியுதுங்குறத பொருத்தது”
“சரி சார், இத நான் personal favourனு நெனச்சுக்கிட்டே செய்யுறேன். for all time sake” என்ற செல்வம் கைப்பேசி இணைப்பைத் துண்டித்தார். அவருக்கு முன் இருந்த தேநீர் இப்போது ஆறியிருந்தது, செல்வத்தின் தற்போதைய நிலையைக் காட்டுவது போல இருந்தது. தனது அறையை விட்டு வெளியே வந்த செல்வம், தலைமைக் காவலரிடம், “அண்ணே, நான் கொஞ்சம் வெளியே போறேன், ஏதாவதுன்னா மொபைலுக்குக் கூப்பிடுங்க. நாளைக்குப் பாக்கலாம்.” என்று தனது பைக் சாவியுடன் வெளியே சென்றார் செல்வம்.
****
மணி 5:45 ஆகியிருந்தது. ‘எமனுக்கு’ “அழைத்து இடத்துக்கு வந்துட்டேன், குடோனுக்கு முன்னால இருக்குற பெட்டிக்கடைக்குப் பக்கத்துல வண்டியை நிறுத்திட்டு பாத்துட்டு இருக்கேன்” என்று சொல்லி முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. இந்த முக்கால் மணி நேரத்தில் குடோனில் எந்த நிகழ்வும் நடக்கவில்லை. குடோனுக்கு முன் ஒரே ஒரு பைக் நின்றிருந்தது. அதன் வண்டி எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார் செல்வம்.
செல்வம் குடோனைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், தன்னை யாரோ கவனிப்பதாக உணர்ந்தார். பெட்டிக்கடையில் இருந்து இருவர் செல்வத்தின் காரையே பார்த்துக் கொண்டிருந்தனர். செல்வம் அவர்கள் பக்கம் திரும்பியதும், அவர்கள் இருவரும் செல்வத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். செல்வத்துக்குத் தனது service weapon எடுத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.
அருகில் வந்தவனில் ஒருவன், செல்வத்தின் கார் கதவின் அருகே வந்து குனிந்தான். செல்வம் கண்ணாடியைக் கீழே இறக்க, “வண்க்கம் செல்வம் சார்” என்றான். சொல்லிய வணக்கத்திலேயே வடநாட்டு வாடை அடித்தது.
முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அவனையே சில நொடிகள் கூர்ந்து பார்த்தார் செல்வம். ‘என்னோட ஆளுங்க கொஞ்ச பேரும் வந்து சேந்துக்குவாங்க’ என்று அவர் சொல்லியது நினைவுக்கு வந்து போனது.
‘என்ன சார் அப்டி பாக்குற? சோட்டு சார், சார் இங்க இருக்கும்னு எனக்கு போன் வந்துச்சு. நானும் உங்க சைடு தான் சார்”
சோட்டு, சர்மா கேங். ஆளுங்க என்று அவர் சொல்லிய போது டிப்பார்ட்மென்ட் ஆட்கள் என்று தான் நினைத்திருந்தார் செல்வம். தான் தள்ளித் தள்ளிப் போனாலும் நிழலுலகம் தன்னோடு சேர்ந்து வருவது அவருக்கு உறுத்தலாக இருந்தது.
“ஓபன் பண்ணு சார்”
Central door lockல் செல்வம் கை வைத்த நொடி, சோட்டுவும், அவன் கூட்டாளியும் சட்டெனப் பதுங்கினர். அதே நேரம் செல்வத்தின் காரைக் கடந்து ஒரு டெம்போ குடோனுக்குள் நுழைந்தது. செல்வம் தனது மொபைலில் வண்டியை போட்டோ எடுத்தபடி, வண்டி எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார்.
கீழே பதுங்கிய சோட்டு, “சார், நிக்கல் ஜாவ் சார், ஹம் தேக் லேகா” என்றான்.
“டேய், என்ன எழவுடா சொல்ற?” என்று செல்வம் கத்த, “நீ போ சார், நம்பல் பாத்துக்கிறான்” என்றான் சோட்டு.
“இப்ப அவருக்கு நான் என்னடா சொல்றது?” என்ன நடக்கிறது என்று புரியாமல் செல்வம் கேட்க, சோட்டு, “சார், இது முத்து கேங் சரக்கு. இங்க குடோனுக்கு யாரெல்லாம் வருதுன்னு பாக்கத் தான் உன்கிட்ட சொன்னது. ஆனா இப்ப சரக்கே வந்துடுச்சு. இந்த வண்டி ஏற்கனவே நாங்க நோட் பண்ணி வச்சிருக்கு. இப்ப நீ கெள்ம்பு சார்” என்ற சோட்டு தனது பின்னாலிருந்து pistol எடுத்து glock செய்தபடி குடோனின் பின்பக்கம் நோக்கி ஓடினான் சோட்டு. அவனது கூட்டாளி எங்கோ கையைக் காட்ட, இன்னும் சிலரும் குடோனைச் சுற்று போட்டனர்..
மீண்டும் விதியின் வலையில் சிக்கியதை உணர்ந்த செல்வம், வண்டியில் இருந்து இறங்கி சோட்டுவின் பின்னால் ஓடினார். சட்டென நிகழ்ந்தவற்றைக் கவனித்த பெட்டிக்கடை இப்போது மூடியிருந்தது.
சர்மா கேங் திடீரென சுற்று போடும் என்பதை முத்து கேங் உணரவில்லை. அதற்கு ஆயத்தமாகவும் அவர்கள் இல்லாமல் இருந்தது சோட்டுவின் திட்டம் ஈடேறுவதை எளிமையாக்கி இருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் குடோன் சோட்டுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முத்து கேங்கில் ஒருவன் மட்டும் காலில் காயத்தோடு தப்பிக்க, அவன் ஏறியிருந்த பைக் இங்கும் அங்கும் தடுமாறியது. பின்னாலே சோட்டுவும் தொடர, தன் கட்டுப்பாட்டை மீறி நிகழும் எதையும் தடுக்க முடியாத செல்வம் தனது காரில் வந்து அமர்ந்து சோட்டுவைத் தொடர்ந்தார். சற்று தொலைவு சென்றதும் பைக் ஒரு சாலையில் திரும்பியது. சோட்டுவும் அந்த சாலையில் திரும்பி நின்று, அந்த பைக்கை நோக்கித் தனது pistol ஆல் குறி பார்த்தான்.
****
திடீரெனக் கேட்ட அந்தக் கூர்மையான ஒலியினால் அதிர்ந்த சரண், சட்டென உறைந்து ஒரு காலைக் கீழே வைத்து சைக்கிளில் நின்றபடி திரும்பிப் பார்த்தான். தனக்கு பத்து அடி முன்னே யாரோ இப்போது தான் அடிபட்டு விழுந்திருப்பதை உணர்ந்தான்.
வண்டி ஒருபுறம் கிடக்க, சாலையில் விழுந்து தேய்ந்து கிடந்த அந்தக் காட்சியில் உறைந்து நின்ற சரணின் முகம் வெளிறிப் போயிருந்தது. மீண்டும் அதே கூர்மையான வெடிச் சத்தம். இப்போது சரண் சைக்கிளில் நின்றிருக்கவில்லை. செல்வம் தனது வண்டியில் இருந்து இறங்கி ஒடிச் சென்று, கீழே விழுந்திருந்த சிறுவனிடம் சென்றார். கழுத்தில் இறங்கி இருந்தது குண்டு, அருகே அமர்ந்த செல்வத்தைப் பார்த்த சரணின் விழிகள், மெல்ல விரிந்தன. அவை என்ன சொல்லின? ஏன் இப்படி நடந்தது எனக் கேட்டனவோ தெரியவில்லை. செல்வம் திரும்பிப் பார்த்தான். சோட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
குருதி மூச்சுக்குழலை அடைக்க, சில நொடிகள் மூச்சுக்குத் தவித்த சரண், மொத்தமாக அசைவற்றுப் போனான். அவன் கண்கள் செல்வத்தையே உற்று நோக்கியபடி இருந்தன.
****
செல்வத்தின் கைப்பேசி ‘டிங்’கென்றது.
‘chottu will take care of the boy. leave the place and take a week off’ எமனிடம் இருந்து ஓலை வந்திருந்தது. சற்று நேரத்தில் சோட்டுவின் ஆட்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அந்த டெம்போவில் சரணும், அவனுடைய சைக்கிளும் ஏற்றப்பட்டன.
செல்வத்தின் அருகே அருள் அமர்ந்திருந்தார். செல்வத்தின் கைகள் ஒன்றையொன்று தடவியபடி எதையோ துடைப்பது போல இருந்தது. அவரின் கண்களில் ஓரத்தில் கண்ணீர் வழிந்திருந்தது.
“அதுக்கப்புறம் என்னால எதுலயும் சரியா ஈடுபடமுடியல. அந்தப் பையனை நான் கொல்லலன்னு அறிவுக்குத் தெரிஞ்சாலும், நானும் ஒரு காரணம் என்பதை என்னால மறக்க முடியல. அதுலேந்து ஒரு வாரம் கழிச்சு dutyல சேந்ததும், நான் முதல்ல பாத்தது அந்தப் பையனோட அம்மாவை. பையனைக் காணோம்னு ஒரு வாரமா ஸ்டேசனுக்கு நடந்துட்டு இருந்திருக்காங்க. நான் எவ்வளவோ சொல்லியும், இன்னும் ஒரு வாரத்துக்கு அலைய விட்டு, அப்புறமாத் தான் பையனோட உடம்பைக் கொடுக்கவிட்டாங்க. இப்பவும் அவன் எப்படி செத்தான்னு அந்த அம்மாவுக்குத் தெரியாது. யாரோ கடத்திட்டுப் போனது போல தான் நினைச்சுட்டு இருக்காங்க. அந்த அம்மா complaint கூட குடுத்த அந்தப் பையனோட போட்டோ, அதுல சிரிச்சுட்டு நிக்குற அந்தப் பையன் இன்னமும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு அருள். அந்தக் கண்ணுங்க எப்பவும் என்னையே பாத்துட்டு இருக்குறது போல. தூக்கம் இல்லாம போச்சு, தூங்குனாலும் கனவுல அந்தக் கண்கள் வெறிச்சுப் பாக்கும். இங்க டிப்பார்ட்மென்ட் இப்படித் தான் இருக்கும், இதை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாதுன்னு தான் இருந்தேன் அருள். இந்தப் பையன் எனக்குள்ள விதைச்சிருந்த குற்றவுணர்வு, எதையும் செய்ய முடியாத ஆற்றாமை என்னை நடைபிணமாக மாற்றியிருந்தது. ஒரு கட்டத்துல நான் அவங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படுறவனா இல்லாம போனதால, என்னையும் தீத்துக் கட்டுவாங்களோ அப்படிங்குற எண்ணமும் மனசுல ஓடிட்டு இருந்தது. முன்னாடி என்கிட்ட இருந்த கார்த்திய மட்டும் தான் என்னால நம்ப முடிஞ்சுது. அவனும் நான் மாட்டியிருக்குற சுழல்ல தான் மாட்டியிருக்கான், ஆனா எதனாலோ அவனை நான் நம்புறேன். நேத்து எனக்கு போன் செஞ்சிருந்தான். எனக்குக் கட்டம் கட்டிருக்காங்கன்னு. அருள், என்ன அவங்க போட்டுத் தள்ளுனாலும், இந்தக் குற்றவுணர்வுலேந்து விடுதலை கிடைச்சது போலத் தான் இருக்கும். ஆனா, பலபேரோட நல்லவங்க முகமூடி கிழிபடாமலே போகும். அதான்,” என்று தனது கையில் இருந்த பையினை அருளிடம் கொடுத்தார் செல்வம்.
“evidence, transaction details என்னால எவ்வளவு details சேக்க முடியுமோ, அவ்ளோ சேத்திருக்கேன். இதுல கொஞ்சம் cloud ல ஏத்தி அதை கார்த்திக்கும் அனுப்பிருக்கேன்.”
“அது safeனு நினைக்கிறீங்களா?” என்று அருள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அருளின் கைப்பேசி ஒலித்தது. எடுத்தபோது அந்த எண்ணைப் பார்த்த செல்வம், “SI கார்த்தி நம்பர்” என்று கூற, அழைப்பை ஏற்று speakerல் “ஹலோ” என்றார் அருள்.
“ஹலோ, அருள், நான் sub inspector கார்த்திகேயன் பேசுறேன். இன்னிக்கு நாலு மணிக்கு உங்களை meet செய்ய முடியுமா? எங்கயாவது public placeல?”
“Anything important?”
“நேர்ல பேசுவோம் அருள்.”
“ஒகே, VR மால் cafe coffee day நாலு மணிக்கு வந்துடுங்க” அழைப்பைத் துண்டித்த அருள், செல்வத்தைப் பார்த்தார்.
“என் கண்ணு முன்னாடி போன அந்தப் பையனோட முடிவு தான் என்னை மாத்துச்சு. அதுக்கு முன்ன எங்க செயலால எத்தனை உயிர் போச்சோ, எல்லா ரத்தமும் அழியாம என் கையில இருக்கு. அதைக் கார்த்தியும் உணர்ந்துட்டான்னு தோனுது.” என்றார் செல்வம்.
“You;’re a good man, செல்வம்,”
“இல்ல, நான் என்னை நல்லவனாக் காட்டிக்க விரும்பல. நான் ஒரு கொலைகாரன்னு உணர்ந்திருக்கேன் அவ்ளோ தான்.” என்றார் செல்வம். இப்போதும் செல்வத்தின் கைகள் அந்த அழியாத குருதியைத் துடைத்தபடி இருந்தன.
- முடிவிலி
Comments
Post a Comment