என்னம்மா சொல்ற? - குறள் கதை

என்னம்மா சொல்ற?

-முடிவிலி

சென்னையின் வெயில் சாளரத்தின் வழி உள்நுழைந்த காற்றையும் சூடாக்கி அனுப்பிக் கொண்டிருந்தது. இணையவழிக் காணொளி வகுப்பறை முடிந்ததும், தனது அறையில் இருந்து வெளியே வந்து, வரவேற்பறையில் இருந்த சாய்வணையில் அமர்ந்தான் ஜீவா. அருகே இருந்த சிறிய plastic chairஐ இழுத்து, தனது இடது காலை எடுத்து அதன் மேல் இட்டவனாய், remoteடினை எடுத்துத் தொலைக்காட்சியைத் துவக்கினான். இப்போது வளர்ந்துவிட்ட ஜீவாவினால் உட்கார முடியாத அளவுக்கு மிகச்சிறிய நாற்காலி அது. அவன் குழந்தையாக இருந்த போது, வாங்கியது.

தொலைக்காட்சியின் ஒலி கேட்ட யாழினி, சமையலறையிலிருந்து, "ஜீவா, class முடிஞ்சுதாடா?" என்றாள்.

"முடிஞ்சுடுச்சும்மா, இன்னிக்கு என்னம்மா சமையல்?" என்றான் plastic chairல் இருந்த காலின் மேல் இன்னொரு காலையும் எடுத்துப் போட்டபடி.

"சிக்கன் குழம்புடா" என்றாள் யாழினி.

"சிக்கனா, வாசனையே வரலையே" என்ற ஜீவாவின் குறும்புச்சொற்கள் காதில் விழுந்தும், மனதுக்குள் சிரித்தபடி பதிலளிக்காமல் அமைதியாய் இருந்தாள் யாழினி. 'சுந்தரும் இப்படித் தான் சொல்லுவான்ல, அப்படியே அப்பா போல பேசுறான்' என்று அவள் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

தேங்காய் அரைத்து ஊற்றியிருந்த சாற்றில் கொதித்துக் குதித்துக் கொண்டிருந்த கோழித் துண்டுகளைக் கரண்டியால் யாழினி கிளறிக் கொண்டிருந்தபோது, 'டம்' என்று ஒரு ஒலி கேட்க, "என்னடா ஜீவா?" என்று கேட்டாள்.

"ஒன்னுமில்லம்மா" என்று சொல்லிய ஜீவா, உடனே சமையலறைக்கு ஓடிவந்து, "என்னம்மா சமையல் இன்னிக்கு?" என்றான்.

"டேய், இப்பத் தானே சிக்கன்னு சொன்னேன். என்னடா டம்னு சத்தம்? என்ன செஞ்ச?"

"ஒன்னுமில்லம்மா, sofaலேந்து கீழ குதிச்சது சத்தம் கேட்டுச்சு போல. என்னம்மா இன்னிக்குக் கோழிக் குழம்பு வாசனை தூக்குது?" என்றான் ஜீவா.

"ஆங், தூக்கும் தூக்கும். போயி அங்க இங்க குதிக்காம உட்காரு, போ" என்றாள் யாழினி.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு, ஜீவா இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதி நிலவியது. கோழிக் குழம்பு கொதிக்கும் ஒலியும், மணமும் வீடு முழுதும் நிறைய, அடுப்பை அணைத்து விட்டு, வரவேற்பறைக்கு வந்தாள் யாழினி. அமைதியாக TVயையும் அணைத்துவிட்டு அமர்ந்திருந்தான் ஜீவா.

"ஏன்டா, ஜீவா, இன்னிக்கு இவ்ளோ அமைதியா நல்ல புள்ளையா உக்காந்திருக்க?" அவனது தலையைச் செல்லமாகக் கோதி விட்டபடி கேட்டாள்.

"ஒன்னுமில்லையே" என்ற ஜீவா மீண்டும் அமைதியானான்.         
   
"சரி, இரு வீட்ட கூட்டிட்டு வர்றேன், வந்ததும் சாப்பிடலாம், சரியா?" என்று சொல்லிய யாழினி, துடைப்பத்தை எடுத்துக் கொண்டு, ஜீவாவின் அறைக்குச் சென்றாள். ஒரு மூலையிலிருந்து கூட்டத் தொடங்கியவள், ஜீவாவின் கட்டிலை நோக்கி நகர, ஜீவா வரவேற்பறையில் நின்றபடி அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கட்டிலின் அருகே இருந்த plastic chairஐப் பார்த்த யாழினி, அதைத் தள்ளி வைக்கத் தொடக் குனிந்த போது தான் கவனித்தாள், அந்த plastic chairன் கால்களில் ஒன்று உடைந்திருப்பதையும், உடைந்தது தெரியாதபடி, அது நிறுத்தி வைத்திருக்கப்பட்டிருப்பதையும்.

"என்னடா ஜீவா, உன் chair உடைஞ்சிருக்கு?" என்று யாழினி சொன்னதும், உள்ளே ஓடிவந்த ஜீவா, "என்னம்மா சொல்ற? chair உடைஞ்சிருச்சா?" என்றான்.

"எப்படிடா உடைஞ்சுது?" என்றாள் யாழினி, முந்தைய கேள்வியில் இருந்த வியப்பு இப்போது ஜீவாவை நோக்கிய கேள்வியாய் மாறியிருந்தது.

"தெரியலையேம்மா. இப்ப சொன்னதுக்கு அப்புறம் தான் நான் பாக்குறேன்." என்றான் ஜீவா.

பதிலேதும் சொல்லாமல், ஜீவாவை முறைத்த யாழினியின் விழிகளைப் பார்த்த ஜீவா குனிந்து கொண்டான். சரசரவென அறையையும், வரவேற்பறையையும் கூட்டி முடித்தவள், கைகளைக் கழுவிவிட்டு, சமையலறைக்குச் சென்று, சோறு இருக்கும் cookerஐ எடுத்து வர, பின்னாலேயே வந்த ஜீவா, கோழிக் குழம்பினைக் எடுத்துக் கொண்டு வந்து dining table மீது வைத்தான்.

ஜீவாவின் தட்டினை எடுத்து, அவனுக்குச் சோறு போட்டுவிட்டு, தானும் சாப்பிடத் தொடங்கினாள்.

"ஏம்மா, ஒன்னுமே பேச மாட்டேங்குற?" என்றான் ஜீவா.

அவனைக் கண்டு ஒரு நொடி முறைத்தவள், மீண்டும் அமைதியாக எதுவும் பேசாமல் சாப்பிடத் தொடங்கினாள்.

"ம்மா, உன்னத் தானே கேக்குறேன்" என்றான் ஜீவா. மேலும் அமைதியாகவே இருந்த யாழினியையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவின் கண்கள் கலங்கத் தொடங்கின.

சில நொடிகளில் மடை திறந்த வெள்ளமாக, கண்ணருவி கொட்ட, "நான் தான்மா உடைச்சிட்டேன். அது மேலே ஏறுனேன், weight தாங்காம உடைஞ்சிடுச்சு. இது தெரிஞ்சா அடிப்பியோன்னு தான் பொய் சொல்லிட்டேன்." என்று அழுதபடியே கூற, தன் இடது கையினால் அவனது கண்களைத் துடைத்த யாழினி, "நீ விளையாண்டது, chairல ஏறுனது, அதை உடைச்சது கூட தப்பு இல்ல, ஆனா அதை மறைக்க ஒன்னுமில்லன்னு பொய் சொன்ன பாரு. அது தான் தப்பு. நீ schoolல, உன் classல எவ்ளோ நல்லவன்னு பேரு வாங்குனாலும், முதல்ல வந்தாலும், நீ பொய் சொல்றவன்னு ஆகிடுச்சுன்னா, அதுவரைக்கும் வாங்குன எல்லா நல்ல பேரும் போயிடும்" என்றவள், "அது மட்டும் இல்ல, நீ சொன்னது பொய்னு மத்தவங்களுக்குத் தெரியுறதுக்கு முன்ன, உனக்குத் தெரியும்ல, உன் மனசே உன்ன குத்தத் தொடங்கிடும்" என்று சொல்லி, அவனைப் பார்த்தாள்.

தேம்பிக் கொண்டிருந்த ஜீவா, "இனிமே பொய் சொல்லமாட்டேன்மா, நீ பேசாம இருக்காதே" என்றான்.

மெல்லச் சிரித்தவள், "சரி, சாப்பிடுடா, அழாத, சாப்பிடு" என்றாள்.

கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கியவன், "அம்மா" என்றான்.

"என்னடா?"

"இன்னிக்கு உண்மையாலுமே கோழிக்குழம்பு செம்மையா இருக்கும்மா" எனக் கூற, "இப்பத் தானே பொய் சொல்லாதேன்னு சொன்னேன், உன்ன" என்று கையை உயர்த்த, இருவரும் சிரிக்கத் தொடங்கினர்.             

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

இயல்: துறவறவியல்
அதிகாரம்: வாய்மை
குறள் எண்: 293 
மனம் அறிந்து பொய் சொல்ல வேண்டாம். அவ்வாறு சொல்லியபின், நம்முடைய மனமே நம்மைச் சுட்டு உணர்த்திக் கொண்டே இருக்கும்.         

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka