பொய் - குறள் கதை
பொய்
- முடிவிலி
நேற்று இரவோடு இரவாக, சென்னை வானூர்தி நிலைய வாசலில் இருந்து, அந்தக் கட்சி அலுவலகம் வரை கட்சியின் சின்னம் கொண்ட கொடிகளும், தேசியத் தலைவரும், மாநிலத் தலைவரும் இணைந்து சிரித்தபடி வெற்றிக் குறி காட்டும் பேனர்களும் சாலையின் நடுவிலும், சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்தன. இன்று வரவிருக்கும் கட்சியின் நடுவண்குழுத் தலைவர் சியாராம் குப்தாவை வரவேற்கப் பலரும் வானூர்தி நிலையத்தில் காத்திருந்தனர்.
வரவேற்புக் குழுவில் நடுவே நின்றிருந்த மாநில செயல்குழுத் தலைவர் விநாயகம், தன்னருகே நின்ற சம்பத்திடம், "ஏன்யா, centerலேந்து தலைவர் வர்றப்ப கூட இவ்ளோ பேரு தான் கிடைச்சாங்களா?" என்று கடிந்து கொண்டிருந்தார். சம்பத், 'இந்த ஆளுங்களைக் கூட்டி வர நான் பட்ட பாடு எனக்குத் தெரியும்' என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்த நேரம், நடுவண்குழுத் தலைவர் புகைப்படக்கருவிகளுக்குக் கையசைத்தபடி வாசலில் இருந்து வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும், செய்தியாளர்கள் ஒலிவாங்கியை நீட்டியபடி, கேள்விக்கணைகளை எழுப்ப, அனைத்திற்கும் சிரித்தபடியும், வணக்கம் கூறியபடியும் கடந்து, குளிரூட்டப்பட்ட வண்டியில் ஏறி அமர, அருகில் விநாயகமும் ஏறிக் கொள்ள, நான்கைந்து வண்டிகளும் கட்சித் தலைமை அலுவலகம் நோக்கி முன்னேறின.
நடுவண்குழுத் தலைவரின் வருகை எப்படியாவது தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வலிமையைப் பெருக்க வழிவகைகள் குறித்து உள்கட்சிக் கூட்டத்தில் பேசுவது என ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
சென்னையின் வெப்பம் என்ன என்று தெரியாத வண்ணம், உள்ளே சிலுசிலுவெனக் குளிரடித்துக் கொண்டிருக்க, பேனர்கள் மற்றும் கொடிகளைப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்த குப்தா, விநாயகத்தைப் பார்த்து, "விநாயக்ஜி, நல்லா publicity செஞ்சிருக்குது, very good, very good" என்று பல மொழிகளைக் கலந்து சொல்ல, விநாயகம் "thank you ஜி, if you see our party office, you will be surprised" என்றார்.
"விநாயக்ஜி, தமில்லயே பேசு மேன், நமக்குள்ள poster அடிக்குறது முக்கியம் இல்ல, நம்ம peopleகிட்ட போயி சேரணும், அதுக்கு இங்க தமில் ரொம்ப முக்கியம். நானே கத்துக்குது மேன்"
"அப்படியாஜி, சரிஜி, சரிஜி" என்று தலையாட்டினார் விநாயகம்.
கட்சி அலுவலகத்தின் அரங்கில் மேடையில் விநாயகம், குப்தா, மற்றும் சில கட்சி அலுவல் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க, கீழே பாதிக்கு மேலான நாற்காலிகள் காலியாக இருந்தன. மேடையின் பின்னே இருந்த சம்பத்தை அழைத்த விநாயகம், "என்னய்யா, மத்தவங்க எல்லாம் எங்கய்யா? பின்னாடி எல்லாம் ஆளே இல்ல? வந்திருக்குறவன் என்னய்யா நெனப்பான்?" என்றார்.
"ஆளு வேணும், ஆளு வேணும்னு கேட்டா நான் எங்கங்க போறது, கிடைச்ச ஆளுங்க கொஞ்ச பேரு ஏர்போர்ட்டுக்கு, மீதி இங்கன்னு கொண்டு வந்து கொட்டிருக்கேன். இத விட என்ன செய்யுறது?"
"என்னது, ஏர்போர்ட்டுக்கு வந்தவனை இங்க கூட்டி வர வேண்டியது தானே?"
"அவுனுங்க எப்பவோ போயிட்டானுங்க" என்று குறுகிய குரலில் சம்பத் சொல்ல, அருகே இருந்த குப்தா மெல்ல குரலைச் சரி செய்வது போல சிறு ஒலியெழுப்ப, விநாயகம் அவரைப் பார்த்து, "தொடங்கிடலாமா ஜி?" என்றார்.
கடவுள் வாழ்த்து, வரவேற்புரை, வாழ்த்துரைன்னு அடுத்த கட்சிப் பொறுப்பு வேண்டியவர்கள் எல்லாம் சியாராம் குப்தாவைப் போற்றிப் புகழ் பாடிக் கொண்டிருந்தனர். இறுதியாக விநாயகமும் தன்னால் முடிந்த அளவு பாடி முடித்து விட்டு, சியாராம் குப்தாவைப் பேச அழைத்தார்.
எழுந்து வந்து ஒலிவாங்கி முன் நின்ற நொடி, சம்பத் ஓடிவந்து ஒலிவாங்கியை அவருடைய உயரத்துக்கு ஏற்றவாறு சரிசெய்தார். இன்னொரு ஒலிவாங்கியில் விநாயகம் அவரது இந்தி உரையைத் தமிழில் மொழிபெயர்க்க ஆயத்தமாய் இருந்தார்.
"வண்க்கம்" என்று சியாராம் சொல்ல, கீழே இருந்த அனைவரும் கைத் தட்டினர். சில நொடிகளுக்குப் பிறகு, கையைத் தூக்கிக் காட்ட, கைத்தட்டல் நின்றது.
"என்க்கு தமில் கொஞ்ச்ம் கொஞ்ச்ம் தான் தெரியுது. அதனால நான் ஹிந்தியில பேசுது" என்று விநாயகத்தைப் பார்த்துக் கண்ணசைக்க, விநாயகம் தலையை அசைத்தார்.
முதலில் ஹிந்தியில் அவர் பேச, உடன் விநாயகமும் தமிழில் சொல்லிக் கொண்டு வந்தார். முதலில் மத்தியில் இருக்கும் கட்சியின் வலிமை பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர், பின்பு, இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லத் தொடங்கினார்.
"இப்ப நாம இருக்குறது டிஜிட்டல் உலகம், நம்மளால போக முடியாத இடத்துக்குக் கூட நம்ம கொள்கை போயிச் சேரணும்னா, கண்டிப்பா, social mediaல நம்ம வலிமையா இருக்கணும். நம்ம என்ன சொன்னாலும் அது செய்தி ஆகணும், எதுவும் இல்லையா? பொய் சொல்லுங்க, நம்ம சொல்றது பொய்னு மக்களுக்குத் தெரியுறதுக்குள்ள அது எல்லாருக்கிட்டயும் போயிச் சேந்திருக்கணும், அதுக்கு வாட்சப் குரூப் நிறைய தொடங்குங்க. எதிர்க்கட்சி சில நேரம் இதெல்லாம் பொய்னு சொன்னாலும், திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருந்தா, நெருப்பில்லாம புகையாதுன்னு மக்களும் நம்ம பக்கம் பேசத் தொடங்குவாங்க." என்று விநாயகம் சொல்லி முடிக்க, குப்தா தன் கையில் இருந்த தாளில் ஹிந்தியில் எழுதி வைத்திருந்ததை எடுத்து, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினார்,
"போய்மையும் வாய்மை இடத் புராய்தீர்ந் நன்மாய் பயக்கு மேனின்னு வள்ளுவர் சொல்லிருக்கு" என்று சொல்ல, கூட்டம் ஆரவாரமிட, விநாயகமும் சேர்ந்து கைத்தட்டத் தொடங்கி இருந்தார்,
"நமக்கு நல்லது நடக்குதுன்னா, பொய் கூட நல்லதுன்னு வள்ளுவரே சொல்லிருக்காரு. அதனால, வட மாநிலங்கள் போல நம்ம வலிமையா இருக்கணும்னா, அங்க நம்ம செஞ்சது போல, social mediaல நம்ம பேசிக்கிட்டே இருக்கணும், நம்மளப் பத்திப் பேசிக்கிட்டே இருக்கணும். அது பொய்யாவே இருந்தாலும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருப்போம், அது உண்மையாகிடும், அதைப் பொய்னு prove செய்யுறதுக்குள்ள நம்ம நெனக்குறது மக்கள்கிட்ட போயிச் சேந்திருக்கணும்" என்று தன் உரையை முடித்திருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களில், கட்சி அலுவலகம் சற்று பரபரப்பாக சியாராம் குப்தாவைக் கவனித்துக் கொண்டிருந்தது. மதிய உணவு முடிந்து மாலை நான்கு மணி வானூர்தியில் மீண்டும் டெல்லிக்குப் பறந்து சென்றிருந்தார் குப்தா.
குப்தா, டெல்லியில் இறங்கித் தனது மொபைலைத் துவக்கியதும், நிறைய notification வந்து குவிய, சற்று நேரத்தில், கட்சித் தலைவரிடத்தில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசியைக் காதுக்குக் கொடுத்தவருக்கு, காது வீங்கும் அளவுக்கு வன்சொற்கள் வந்து விழுந்தன.
****
மாலை நான்கு பதினைந்துக்கு, தமிழ்ச்செய்தி ஊடகங்களில், 'Breaking News' என்று இரண்டு நிமிடத்துக்கொரு முறை 'ட்ட்டிடும்' என்ற அதிரச் செய்யும் இசையுடன் குப்தா பேசிய காணொளி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
"தேசியக் கட்சித் தலைவர் பேசிய சர்ச்சைப் பேச்சு, வாட்சப்பில் வைரல்"
"சமூக ஊடகங்களில் பொய்யைப் பரப்புங்கள் - சியாராம் குப்தா"
அன்றிரவு நடந்த விவாத மேடையில், தமிழ் ஆர்வலர் மூங்கிலார் "இவங்க எதுக்கெடுத்தாலும் திருக்குறளைக் கையிலெடுக்குறது இப்படி அதைத் திரிக்கிறதுக்குத் தான். வள்ளுவர் சொல்லியிருப்பது, புரை தீர்ந்த - அதாவது, யாருக்கும் தீங்கு செய்யாத நன்மை விளையும்னா, பொய் சொல்லலாம்னு தான் வள்ளுவர் சொல்றாரு. இவங்க போல ஊரை அடிச்சு உலையில போடுறதுக்காகப் பொய் பரப்புறதுக்கு எல்லாம் வள்ளுவரைத் துணைக்கு இழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நன்மை பயக்கு மெனின்.
அதிகாரம்: வாய்மை
இயல்:துறவறவியல்
குறள் எண்: 292
Comments
Post a Comment