முன்னொரு காலத்தில்...! - குறள் கதை

முன்னொரு காலத்தில் 
- முடிவிலி

றை நாடு வளத்திலும், மக்கள் மனத்திலும் சிறந்த நாடாக விளங்கியது. பெரும் பேரரசுகளால் சூழ்ந்திருந்த போதும், மக்களின் மனம் கவர்ந்த வீரமிக்க மன்னன் ஆட்சியில் நாட்டின் அனைவரும் குறையேதுமின்றி வாழ்ந்து வந்தனர். மலையொரு புறம் ஏறை நாட்டின் அரணாய் நிற்க, அடிவாரத்துக் காடுகளின் கிளைகளில் துள்ளித் திரிந்த குரங்குகளின் சேட்டையினால், அதிர்ந்த மரக்கிளைகள் காட்டின் அமைதியைக் குலைக்க, ஓய்ந்து அமர்ந்திருந்த புள்ளினங்கள் கூக்குரலிட்டுப் பறக்கத் துவங்கின. அவ்வாறு பறக்கத் துவங்கிய பறவை ஒன்று காட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த அந்நாட்டின் தலைநகர் நோக்கிச் சென்றது.
ஏறை நாட்டுத் தலைமைக் காவலர் கடம்பர் தன் வீட்டை விட்டு அரண்மனை நோக்கி நடக்கத் துவங்கினார். நாள்தோறும் காலையில் அவர் அரண்மனைக்குச் செல்லும் போது, அவர் இருக்கும் தெருவில் வசிக்கும் சுப்ரமணியரைச் சந்திப்பது வழக்கம். இன்றும், கையில் இருந்த செம்புத் தண்ணீரை விரல்களால் எடுத்து நெற்றி வரை கொண்டு வந்து உதடுகள் முனுமுனுத்தபடி, கீழே ஊற்றிக் கொண்டிருந்தார் சுப்ரமணியர். கடம்பரைக் கண்ட சுப்ரமணியர், நட்பாகச் சிரிக்க, கடம்பர் “வணக்கம், சுப்ரமணியரே” என்றார்.
சுப்ரமணியர் பதிலுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, மேலே வானைப் பார்க்க, ஒற்றையாய்ப் பருந்து ஒன்று பறந்து செல்ல, வானை நோக்கிக் கும்பிட்டபடி, தன் கைகளைக் கன்னத்தில் போட்டுக் கொண்டு, “கருடா...!” என்றார். இதைப் பார்த்த கடம்பனும், தன் கன்னத்தில் போட்டுக் கொண்டார். அந்த நேரம், கடம்பனைக் கடந்து எதிர்த்திசையில், வெண்ணிற அங்கியை உடல் முழுதும் சுற்றிக் கொண்டு, மொட்டை அடித்த தலையுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். 
கருடனுக்காக மூடிய சுப்ரமணியரின் கண்கள் திறக்கும் போது, சென்று கொண்டிருந்த அந்த புத்தத் துறவியின் மீது பார்வை பட, “ஐயோ, கருடனைப் பார்த்த கண்ணால இவனையா பார்த்தேன்? இன்னிக்கு என்ன நடக்கப் போறதோ?” என்றார்.
கடம்பன் சுப்ரமணியரின் அருகில் வந்து, “என்ன ஆனது? சுப்ரமணியரே, அவரால் என்ன ஆகப்போகிறது?” என்றார், தான் நண்பர் எனக் கருதும் சுப்ரமணியரின் புலம்பலால் அவர் குறை நீக்கும் எண்ணம் கொண்டவராய்.
“கடம்பரே, உங்களிடம் சொல்வதற்கு என்ன?” என்று கூறி அவரை அருகே அழைத்து, அவர் மென்குரலில் சுப்ரமணியர் கூறக் கூற, கடம்பரின் முகம் மாறியது. அரண்மனையை நோக்கிச் செல்லாமல், புத்தத் துறவி சென்ற திசை நோக்கிச் செல்லத் துவங்கினார் கடம்பனர்.           
****
ஊரின் நடுவே இருந்த மண்டபத்தில் புத்தத் துறவியான சமந்தர் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றியும் பலரும் சூழ்ந்திருந்தனர். அவர் எங்கிருந்து வந்தார், என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலாய் இருந்தனர் ஏறை நாட்டு மக்கள். சமந்தர் முகத்தில் இருந்த புன்னகையில் இருந்த அமைதி, அந்த மக்கள் குழுவிற்கும் கடத்தப்பட்டிருந்தது. சமந்தர் பேசத் தொடங்கினார்.
"இந்த அடியேனைக் காண வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்." என்று துவங்கியவர், புத்தத்தின் கருத்துக்களை எளியோர்க்கும் புரியும் வண்ணம் சொல்லிக் கொண்டிருக்க, சூழ்ந்தவர்களும் ஆழ்ந்த உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்திலிருந்து ஒரு குரல், "ஏனுங்க, நீங்க சொல்றதெல்லாம் நல்ல இருக்கு. ஆனா, ஆசை தான் தும்பப்படுறதுக்குக் காரணமுன்னா, எல்லாரையும் உங்கள மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு, துறவியா போவச் சொல்றீங்களா?" என்று கேட்க, அமைதியான புன்னகையை உதிர்த்தபடி, "இல்லை, இல்லை, நமது செயல்கள் தான் நமக்கு விளையும் செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது. தன்னலமாக ஆசை கொள்ளுதல், நமக்கு தற்காலிகமான இன்பத்தைக் கொடுத்தாலும், அந்த ஆசையின் விளைவால் செய்த செயலின் பலன், திருப்பி வந்து நம்மைத் தாக்கும். நமது செயல்களே நம்மைக் கட்டமைக்கின்றன. நீங்கள் யார் என்பதை நீங்கள் செய்யும் செயல்களே முடிவு செய்கின்றன. நீங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே என நீங்கள் எதிர்பார்ப்பது எனக்குப் புரிகிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் எனச் சொல்லும் என்னிடம் கேட்கும் கேள்வியைக் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பவரிடம் கேட்டிருக்கிறீர்களா? கடமை செய்தால் அதற்குரிய பலன் தரப்பட வேண்டும். அது உங்கள் உரிமையும் கூட. ஆனால், தன்னலமான ஆசை என்பதை விடுவதற்குத் துறவியாக மாற வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனது செயல்கள் தனக்கும், தன்னைச் சுற்றியுள்ள பிறர்க்கும் நன்மையே கொடுக்கும் என்ற உள்ளுணர்வோடு சிந்தித்து செயல்படுபவராக இருந்தாலே போதும். உங்களை அப்படிப்பட்டவராய் மாற்றவே நாம் இங்கு வந்துள்ளோம்" என்றவரின் கரத்தைக் கடம்பர் பிடிக்க, சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.    
"கடம்பரே, என்ன ஆனது? ஏன் இவரை வந்து பிடிக்கிறீங்க?" என்றார் கூட்டத்தில் அமர்ந்திருந்த வயதான ஒருவர்
"நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் கருத்துக்களைப் பரப்புவதாக இவர் மீது புகார், நாட்டின் தலைமைக்காவலன் நானே நேரிலும் பார்த்துவிட்டேன்." என்று கூறியவர், சமந்தரைப் பார்த்து, "ம், வாருங்கள்" என்றார்
"கடம்பரே, யாரோ உங்களிடம் தவறாகக் கூறியுள்ளனர். அவர் ஒன்றும்..." என்று சொல்லத் துவங்கிய அந்த வயதானவரைத் தன் பார்வையாலே தடுத்த சமந்தர், வேண்டாம் என்பது போல தலையை அசைத்தார்
சமந்தரைத் தலைமைக்காவலர் அழைத்துச் செல்ல, அதிர்ச்சி மீளா மக்கள் கூட்டமும் பின்னே சென்றது. சற்று நேரத்தில், கூடி வந்த மக்கள் கூட்டம் அரண்மனை மன்றத்தில் பொங்கி வழிய, மன்னர் ஏறைக்கோனின் வருகை அங்கு கூடியிருந்த அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது
"என்னய்யா, இது பேசுனதுக்குச் சிறை பிடிக்கும் நிலையிலா நம் மன்னர் ஆட்சி இருக்கிறது, வியப்பா இருக்கே?" 
"கடம்பர் சொன்னதைக் கேட்டியா? நாட்டு நலனுக்கு எதிராக கருத்து பரப்புவதாகப் புகார் வந்திருக்குன்னு சொன்னாரே? இவருக்கு எதிரா யாரு புகார் கொடுத்திருப்பாரு?"
"நல்லதைத் தானே சொல்லிக்கிட்டு இருந்தாரு, இந்தக் கடம்பரை யாரோ..." என்று பல மெல்லிய குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்த வேளையில், வெண்முரசும், சங்கொலியும் முழங்க, ஏறை நாட்டின் அரசர், ஏறைக்கோன் அந்த மன்றத்துக்குள் வந்து கொண்டிருந்தார். கூடியிருந்த மக்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொண்ட ஏறைக்கோனுக்கு அவர்கள் முகத்தில் பொலிவு குறைந்திருப்பதையும், மன்றத்தின் நடுவே சமந்தர் அமர வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து இன்றைய நாள் தனக்கும், இந்த நாட்டுக்கும் என்னவோ சொல்லக் காத்திருக்கிறது என்பதை உணர்ந்தவராய் அந்த மன்றத்தின் மையத்தை நோக்கி நடந்தார்
"வீராதி வீரர், ஏறை நாட்டையும், மக்கள் மனதையும் ஆளும் அரசர் ஏறைக்கோன் வாழி" என ஒருவர் கூற, "வாழி, வாழி" என மகிழ்ந்து கூறும் மக்களின் குரலில் இன்றும் மகிழ்வு குறைந்தே காணப்பட்டது.
தனது இருக்கையில் வந்தமர்ந்த ஏறைக்கோன், "கடம்பரே, இன்று மன்றம் காணும் வழக்கு என்ன? இந்தத் துறவியை ஏன் பிடித்து வைத்துள்ளீர்?" என்றார்.
"மன்னா, இவர் நாட்டின் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் கருத்துக்களை மக்களிடம் பரப்பிக் கொண்டிருந்ததால், இவரைச் சிறை பிடிக்க வேண்டியதாயிற்று." எனக் கடம்பர் கூற, சமந்தரைக் கண்ட ஏறைக்கோனின் கண்களுக்கு, இத்தனை துன்பத்திலும் அவர் முகம் அமைதியில் ஒளிவீசுவதாகவே தெரிந்தது.
"சரி, நீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். வழக்கு எனில் குற்றம் புரிந்தவர், குற்றம் சாட்டுபவர் என இருவர் இருக்க வேண்டுமே. நீங்களே குற்றம் சாட்டுபவர் எனில் உமக்கு அவரைச் சிறைபிடிக்கும் அதிகாரம் இல்லை. குற்றம் சாட்டியவர் நீங்கள் இல்லை எனில், யார் அவர்?" என வினவினார் ஏறைக்கோன்
"மன்னா, நான்கு மறைகளைக் கற்றறிந்த அறிவாளி, திரு. சுப்ரமணிய சதுர்வேதி தான் குற்றம் சாட்டியவர்" என்று கடம்பன் கூற, அவரையும் வழக்கு மன்றத்துக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார் மன்னர்
ஒன்றரை நாழிகை நேரத்தில் மன்றத்தில் செருக்குடன் நடந்து வந்தார் சுப்ரமணியர். கடம்பர் மீண்டும் முன்பு சொன்ன முகத்துதிகளைக் கூறி, சுப்ரமணியரை அறிமுகம் செய்ய, "சுப்ரமணியரே, இந்தத் துறவி மீது என்ன குற்றம் கண்டீர்?" என நேரடியாய்க் கேட்டார் அரசர்.
"இவரும், இவர் போன்ற புத்தத்துறவிகளும் தங்கள் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதாய்க் கூறி, மக்களிடம் நஞ்சை விதைக்கின்றனர். இதனால், மக்கள் தங்கள் கடமைகளை மறக்கின்றனர். இதனால், நாட்டுக்குப் பெரும் நலக்குறைவு உண்டாகும் என்று நானறிந்த வேதமும், உபநிடதமும் சொல்கின்றன. அதனாலேயே, கடம்பனிடம் இவரைப் பற்றி சொன்னேன். அவரும் கையும், களவுமாக இவரைப் பிடித்து வந்திருக்கிறார் என நம்புகிறேன்" என்றார் சுப்ரமணிய சதுர்வேதி.
கூடியிருந்த கூட்டத்தில் இருந்து, "சமந்தர் அவ்வாறு எதுவும் பேசவில்லை, அவர் தவறாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்." என்று குரல்கள் எழுந்தன
ஏறைக்கோன், சமந்தரிடம், "ஐயா, இந்தக் குற்றச்சாட்டுக்குத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" எனக் கேட்க, "நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் கூறுவது இந்நாட்டு நீதியின் படி குற்றமெனில், அக்குற்றத்தை இங்கும் செய்ய ஆவலாய் உள்ளேன்." என்றார் சமந்தர்
"தன் கருத்தை மக்களிடம் கூறுவது என்னுடைய நாட்டில் குற்றமன்றே." என்று ஏறைக்கோன் கூற, மகிழ்ச்சியில் மக்கள் "ஏறைக்கோன் வாழி வாழி" எனக் குரலெழுப்பினர்
"மன்னா, இது ஏறை நாட்டின் நீதியின் படி, குற்றமில்லாது போகலாம். ஆனால் மனுநீதியின் படி கடும் குற்றமாகும். இதனால், மக்கள் தங்கள் கடமையைச் செய்ய மறுப்பதோடு, உயர்ந்தோரை மதிக்க மறுப்பர். நாட்டின் சமநிலை வீழும். இறுதியாய் நாடு வீழ்ச்சியுறும்." என்றார் சுப்ரமணியர்.
ஏறைக்கோன், "நிறுத்துங்கள், சுப்ரமணியரே, இன்னமும் சமந்தர் என்ன கூறினார் என யாரும் இங்கு சொல்லவில்லை. அவர் ஏதும் தவறான கருத்துரைக்கவில்லை என்பது மக்களின் உறுதியில் புலனாகிறது. ஏன் இவ்வாறு நாடு வீழும் என்றெல்லாம் உளறுகிறீர்?" என வினவினார்.
"வேதத்தைக் கற்றுத் தெளிந்தவன் நானிங்கிருக்க, இதோ இவரைப் போன்ற வேதத்தை மறுத்துப் பேசுபவர்களைத் தடுத்து நிறுத்தாது போனால், நாடு கண்டிப்பாய் வீழத் தான் போகிறது." என்று சுப்ரமணியர் கூற, அதுவரை அமைதியாய் இருந்த சமந்தர் பேசத் தொடங்கினார்.
"பிபா ஸோமம் மபி யமுக்ர தர்த் கவ்யம் மஹிம்  க்ருஹணான் இந்த்ர"
சமந்தர் இதைச் சொல்லச் சொல்ல, மேலும் சினத்தின் உச்சத்தை அடைந்த சுப்ரமணியர், "யாரோ, எவனோ வேதத்தைக் கூறுகிறானே. இந்த நாடு அழியும் காலம் வந்துவிட்டதோ?" எனப் பதறினார்
இதற்கும் சிரித்தார், சமந்தர்
ஏறைக்கோன், சமந்தரைப் பார்த்து, "ஐயா, இதன் பொருள் என்ன?" என்று கேட்க, "நான்கு மறைகளைக் கற்றுத் தெளிந்தவர் இருக்கிறாரே, அவரைக் கேளுங்கள்" என்றார்
சுப்ரமணியரோ, "வேதத்தை, வேதத்தின் பொருளை எல்லாரிடமும் சொல்வதா, அதற்கென்று தகுதி வேண்டாமா? என் போன்ற உயர்ந்தவனை வழக்கு மன்றத்தில் நிறுத்திக் கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த நாடு சென்று கொண்டிருக்கிறதே" என அங்கலாய்க்க, ஏறைக்கோன், "எதற்கெடுத்தாலும் நாடு நாடு எனக் கூறினால், என்ன பொருள்? அவர் கூறியதன் பொருள் என்ன, அதைச் சொல்லுங்கள், சதுர்வேதியாரே?" என்றார்.
சுப்ரமணியர் பேச்சற்று நின்றிருக்க, மன்னன் சமந்தரைப் பார்த்து, "நீங்களே கூறிவிடுங்கள்" என்று கூற, சமந்தர், ", இந்திரனே, உனக்காக போதை தரும் சோம பானத்தையும், சுவையான மாட்டிறைச்சியும் படைக்கிறோம், எடுத்துக் கொள்வாயாக" என்று கூற, வழக்கு மன்றம் முழுவதும் அதிர்ந்து கூச்சல் உண்டாகியது. மேலும், சமந்தர் தொடர்ந்தார். "இவர் கூறும் வேதங்களும், உபநிடதங்களும் கடவுளுக்குக் காணிக்கையாய், உயிர்ப்பலியை ஏற்கின்றன. ஆனால், உயிர்ப்பலி எப்படி தெய்வீகம் ஆகும்? அனைத்து உயிரிடத்தும் அன்பு செலுத்துவதை எடுத்துரைப்பதே உயர் கருத்தல்லவா? உலகில் வாழும் அத்துணை உயிர்க்கும் வாழும் உரிமை உண்டெனில், அதைப் பறிக்கும் உரிமை எவர்க்கும் உண்டோ? கடவுளே உயிரினை பலி ஏற்கிறதெனக் கூறுதல் தகுமோ? அங்ஙனம் கூறின் அது தெய்வமோ?"
சுப்ரமணியர், "ஐயோ, வேதத்தைப் பழிக்கிறார்களே, என்ன நடக்கப் போகிறதோ, காலையில் இவன் முகத்தில் விழித்த போதே நினைத்தேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று. இனி இந்த நாட்டில் மழை பொழியுமா?" என அடுக்கிக் கொண்டே போக, ஏறைக்கோன், "சுப்ரமணியரே, நிறுத்துங்கள். இந்த நாட்டில் யாரும் எந்தக் கருத்தையும் கூறும் உரிமையை உங்கள் வேதமோ, மனு நீதியோ கொடுக்கவில்லை. நான் கொடுத்துள்ளேன். அந்த உரிமை உங்களைப் போன்றவர்களால் தூண்டப்பட்டு, கடமை தவறும் கடம்பர் போன்றோரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றால் அதைக் கண்டு பொறுத்துக் கொண்டிருப்பவனில்லை நான். நான் கொடுத்த உரிமையைக் காக்காமல், நாட்டைக் காக்கும் திறனற்றவனாய் நானிருப்பின் நான் மன்னனாய் இருக்க முடியுமா? அனைத்துயிர்க்கும், தேவனுக்கும் தேவன் என நீங்கள் உயர்த்திக் கூறும் இந்திரனே சோமபானமும், மாட்டிறைச்சியும் உண்கிறானெனில், அந்தக் கடவுளிடம் கருணை இருக்குமா? வேதம் என்பதை மறை மறை எனக் கூறி மறைத்து வைப்பதன் பொருள் இப்போதல்லவா தெரிகிறது." என்றவர், கடம்பரைப் பார்த்து, "உங்களிடம் நாட்டின் காவல் பணியையும், அதிகாரத்தையும் கொடுத்தது உங்கள் மனத்திலிருந்து உண்மையான முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில். ஆனால், எடுப்பார்க் கைப்பிள்ளையாக இருப்பீர்கள் என்றெண்ணும் போது மிக்க மனம் வருந்துகிறேன்." என்று கூறிய மன்னர் சமந்தரைப் பார்த்தார். இப்போதும் அந்த முகத்தில் அமைதிச்சிரிப்பு நிலை கொண்டிருந்தது. 
"சமந்தரே, இதுவும் நன்மைக்கே, நீவிர் முன்பிருந்த மன்றத்தில் மக்கள் மட்டும் இருந்திருக்க, நம் கடம்பர் அழைத்து வந்த இந்த மன்றத்தில் மக்களோடு நானும் இருக்கிறேன். உங்கள் கருத்துக்களை நீவிர் இங்கு உரைப்பீராக" எனக் கூற, மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, சமந்தர் பேசத் தொடங்கினார்.
கடம்பர் தன் தவறை உணர்ந்தவராய்த் தலை கவிழ்ந்து நின்றிருந்தார். சுப்ரமணியர் சினப்பிழம்பாய்க் கொதித்து, வழக்கு மன்றத்தை விட்டு வெளியேற, இப்போதும் தன் தலைக்கு மேல் ஒரு பருந்து பறந்து செல்வதைக் கண்டார். "கருடா, லோகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? இந்த நாட்டில் இனியும் மழை பொழியுமா?" என்று கதற, அந்தப் பருந்து, இன்னும் மேலேறி மேகத்தை விட உயரே பறந்து மறைய அடுத்த நொடி கண்ணைக் கூசும் வெள்ளொளி வீச, இடியோசை மேளம் கொட்ட, ஏறை நாட்டு மண்ணில் வான் தரும் மழைத்துளிகள் நடனமாடத் தொடங்கின
- முடிவிலி


பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளைப் போற்றிப் பாதுகாவாதவரிடத்து பொருள் இருப்பதில்லை, அது போல, ஊன் தின்று உயிர் வளர்ப்பவரைக் கருணை கொண்டவராய்க் கருத முடியாது.

ஏறைநாடு கதைகள் :1: முன்னொரு காலத்தில்... | 2: ஆ...! 3 : யாருக்கு நீதி | 4 : அரண் | 5 : வஞ்சகன் | 6 : திகழொளி

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka