மெய்ப்புலனார் - குறள் கதை

மெய்ப்புலனார்

ஊரின் நடுவே இருந்த அந்த ஆலமரத்து மேடையைச் சுற்றித் தான் அன்று ஊரே கூடி இருந்தது. ஆலமரத்தின் அடியில் ஊர்மக்கள் கூடுவது உள்ளூர் வழக்குகளுக்கோ, ஊராட்சிக் கூட்டத்துக்கோ தானிருக்கும். ஆனால் அன்று இந்தக் கூட்டத்துக்குக் காரணம் இந்த இரண்டும் அல்ல.

"என்னய்யா, இது இம்மாம் நேரமா இவரச் சுத்தி நின்னுட்டு இருக்கோம். கண்ணத் தொறந்து கூட பாக்க மாட்றாரே." என்று கூட்டத்தில் ஒரு பெரியவர் குரல் கொடுக்க, அதுவரை அங்கு நிலவியிருந்த அமைதி விலகி, சலசலப்பொலி பரவியது. 

தொடர்ந்து கொண்டிருந்த முனுமுனுப்புகளுக்கு இடையே இன்னொருவனின் குரல் சற்று உயர்ந்து, "ஏப்பா, கொஞ்சம் பேசாம இருங்கப்பா, அவர் கண்ணை மூடி உட்கார்ந்திருக்குறதப் பாத்தா, கும்பிட்டுட்டு இருக்காரு போல. இந்த நேரத்துல இப்படி சலசலன்னு கத்திட்டு தொல்லை செஞ்சோம்னா, எதாச்சும் சொல்லிடப் போறாரு, செத்த அமைதியா இருங்கப்பா" என்று கூற, சலசலப்பு சற்று உயர்ந்து அமைதி ஆனது. 

சில நொடிகள் கழித்து, மூடிய விழிகளைத் திறந்த மெய்ப்புலனார், தன் இருக்கை கூப்பி, சூழ்ந்துள்ள அனைவரையும் வணங்கினார். சுற்றி நின்ற கூட்டத்தில் அவருக்கு அருகில் இருந்தவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க, "ஏலே, கண் முழிச்சுட்டாருப்பா" என்று கூறியபடி, பின்னிருந்தவர்கள் முந்திக் கொண்டு முன்னே வர முயன்று கொண்டிருந்தனர். 

கூட்டத்தில் முன்னே நின்று கொண்டிருந்த கந்தன், "ஏய்யா, எல்லாரும் இப்படி முண்டியடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா எப்படிய்யா? எல்லாரும் அப்படியே நிக்குற இடத்துலேயே உட்காருங்கப்பா" என்று கூற, அனைவரும் அமர்வதற்கு சற்று நேரம் பிடித்தது. இப்போது மெய்ப்புலனார் பக்கம் திரும்பிய கந்தன், "ஐயா, நீங்க ரொம்ப தொலவுலேந்து வந்து இருக்கீங்க போல. எல்லாம் கத்தி தொந்தரவு பண்ணிட்டோமா?" என்றார். 

மெய்ப்புலனார், சற்று சிரித்தபடி, "இவ்வளவு பேரும் இந்தச் சிறியவனைப் பார்க்க வந்திருப்பதே நான் செய்த நற்பயன். அனைவருக்கும் எனது வணக்கங்கள்" என்றார். 

"என்ன சாமீ, உங்களைப் போயி சிறியவன்னு சொல்லிக்கிறீங்க?" என்றார் கந்தன்.

"அது தானே உண்மை. உண்மையைச் சொல்ல என்றுமே நான் தயங்கியதில்லை. இப்போதும் கூறுகிறேன். இந்தச் சிறியவனை மதித்து வந்த உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் கடமை பட்டுள்ளேன்."

"ஐயா, உங்க பேரு, எங்கிருந்து வர்றீங்க? அப்படியே இந்த ஊருக்கு, மக்களுக்கு நல்லதா எதாச்சும் சொல்லுங்க"

"சொல்கிறேன் ஐயா, நீங்களும் உட்காருங்க" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். 

"எனது பெயர் மெய்ப்புலனார். இந்தப் பெயர் கூட பிறரால் எனக்கு வழங்கப்பட்டதே. இந்த ஊரென எனக்கு எதுவும் இல்லை. யாதும் ஊரே" என்று நிறுத்தியவர், அனைவரையும் காட்டி, "யாவரும் கேளிர்" என்றார்.

"நான் ஏன் என்னைச் சிறியவன் எனக் கூறினேன் தெரியுமா?" என்று அவரே கேள்வி ஒன்றை மக்கள் முன் வைக்க, "அதையும் நீங்களே சொல்லிடுங்க" என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. 

"அறம் என்றால் என்ன?" என்று அவர் கேட்க, சலசலப்பொலி எழுந்து மீண்டும் அமைதி ஆனது. 

"நாம் செய்யும் செயல்களை நல்லது நடப்பதற்காக செய்வோம் இல்லையா? அப்படி செய்யும் செயல்கள் நமக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் நல்லதாக செய்வதற்கான வழிமுறைகள் தான் அறம். நம்மை நாமே மேம்படுத்திக்கிட்டு முன்னேறிச் செல்வதற்கான எல்லா வழிகளுமே அறம் தான்."

"ஆனால், இதுக்கும் உங்களைச் சின்னவன்னு சொல்லிக்கிட்டதுக்கும் என்னய்யா தொடர்பு இருக்கு? இப்பவும் சொல்றேன். இவ்ளோ தெளிவா எல்லாம் பேசுறீங்க? நீங்க எப்பவுமே எங்க கண்ணுக்குப் பெரியவராத் தான் தெரியுறீங்க" என்று கந்தன் சொல்ல, கூடியிருந்த கூட்டமும் 'ஆம்' என்றது. 

"எனக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?" என்றார் மெய்ப்புலனார்.

"ஐயா, உங்களப் பாத்தா, முற்றும் துறந்தவர் மாதிரி இருக்கீங்க. கல்யாணம் குடும்பம்னு இல்லாம உலகத்தையே தன் வீடாக நினைக்குறவங்க, இதான் எங்களுக்குத் தெரிஞ்சது, சரியாய்யா" என்றார் கந்தன்.

"அதாவது, முன்பு நான் சொன்னேன் இல்லையா? அறம் என்று இந்த அறவழியில் நடக்கணும் என்பதற்காக, அனைத்தையும் விட்டு விட்டு இருப்பவன். ஆனா நீங்க எல்லாரும்..." என்று சற்று நிறுத்தியவர் சிறு புன்னகைக்குப் பின் தொடர்ந்தார்,

"இல்லறம் எனும் பெயரில், சுற்றி இருப்போரிடம் அன்பு செலுத்துதல், வீட்டுக்கு வந்தவரை வரவேற்று விருந்தளித்தல், உதவி செய்தல், செய்த உதவிக்கு நன்றியாய் இருத்தல், அடக்கமாய் இருப்பது, ஒழுக்கத்தோடு இருப்பது, துன்பத்திலும் பொறுமையாய் இருப்பது, அடுத்தவர் மீது சினம், பொறாமை கொள்ளாதிருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக தீய செயல்கள் செய்ய அஞ்சுதல் என இவ்வளவும் செய்து இந்த உலகம் இயங்கக் காரணமாய் இருப்பது நீங்கள் தான். உங்களைப் போன்ற குடியானவர்கள் தான். ஊர் ஊராகச் சென்று கிடைக்கும் இடத்தில் கண் மூடி அமர்ந்து, தவப்பயனால் அறம் மிக்கவன் என எனைப் போன்றோர் பெயர் எடுப்பது எளிதே. ஆனால், குடும்பம் எனும் கூட்டுக்குள் இருந்தபடி, தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்க்கும் நன்மை எது எனப் பின்பற்றி, எது தீமை என்றுணர்ந்து அதை ஒதுக்கி, இல்லறமே நல்லறம் என்று உலகத்துக்குக் கூறாமல் கூறும் நீங்கள் அனைவரும் எனைவிடச் சிறந்தவர்களே, உங்களோடு ஒப்பிட நான் சிறியவனே" எனக் கூறிய நேரத்தில், கூடிய கொண்டல் மழைத்துளிகளை உதிர்க்கத் தொடங்க, தொலைவினில் மின்னிய ஒளிக்கீற்றின் ஒலி இடியாகக் கேட்க சில நொடிகள் எடுத்தது. 

மழை வந்ததும் கூட்டம் மெல்லக் கலையத் துவங்க, கந்தன், "ஐயா, நீங்க வந்த நேரம் மழையே வந்திருக்கு. நீங்க பெரியவரு தாங்க" என்று மெய்ப்புலனாரிடம் கூற, அவரோ, "என்னை விட இவ்வளவு உயர்ந்தவர் இருக்கிறீர்களே, உங்களுக்காகத் தான் மழை வந்திருக்கு" என்று கூறினார். 

"எலேய், பெருமழையா வரும்போல, வரப்பு வெட்டி விடணும்டா. வாங்கய்யா போவோம்." என்று சிலர் வயல்களை நோக்கி ஓட, "வீட்டுல போட்டது போட்ட படி போட்டுட்டு வந்துட்டேன்கா, மழை வேற பெருசா வரும் போல" என்று கூறியபடி பெண்களும் தங்கள் வீட்டை நோக்கி நடக்க, இறுதியில் கந்தனோடு சிலர் மட்டும் ஆலமரத்தடியில் மெய்ப்புலனாருடன் நின்று கொண்டிருக்க, கந்தன், "ஐயா, மழையில இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. நீங்க எங்க வீட்டுக்கு வரணும். விருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல ஏற்பாடு ஆகிடும்" என்றார்.

மெய்ப்புலனார், "நான் தான் கூறினேனே, இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா? என்னைப் போன்ற துறவர்களுக்கும் சேர்த்தே நல்லறம் செய்யும் உங்களைப் போன்ற இல்லறர்கள் தான் உயர்ந்தவர்கள், இதை ஒத்துக்கொண்டால் வருகிறேன்" என்று சிரித்தவர், "சரிதானே?" என்றார்.

- முடிவிலி

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

நலவாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வாரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.  
      

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka