யாருங்க இவங்கெல்லாம் - குறள் கதை

யாருங்க இவங்கெல்லாம்?
- முடிவிலி


"யாருங்க இவங்கெல்லாம்?"

"இன்னிக்கு இந்த நிலைமை வரும்னு நான் நெனச்சே பாக்கல."

"வேலை செய்யாததுக்கு வேலைலேந்து தூக்கிருந்தாலும், மனசு கொஞ்சம் அமைதியாயிருந்திருக்கும். ஆனா, நான் என்ன செய்யணுமோ அதைச் செஞ்சதுக்கு இந்த நிலைமை."

"அவனை நெனச்சாலே *#@#@#@#@@#*"

****

நான்கு நாட்களுக்கு முன்,

'247 செய்தித் தொலைக்காட்சியின் நேரலை நேர்க்காணலில் இன்று' என்று எனது நிகழ்ச்சிக்கு இரு நாட்களாக எங்கள் தொலைக்காட்சியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. வாரத்திற்கு இரு VIPகளை நேர்காணல் செய்வதால், எனக்கு இருந்திருக்க வேண்டிய அச்சம் ஏனோ சிறிதும் இருந்திருக்கவில்லை. என்றும் போல அன்றும் நேர்காணலில் கேட்கவேண்டிய கேள்விகளுக்காக, கூகுளின் உதவியை நாடிக் கொண்டிருந்தேன். செய்து கொண்டிருந்த வேலையில் மூழ்கியிருந்த எனக்கு, எங்கள் அலுவலகம் வரப்போகிறவரின் பாதுகாப்புக் காவலர்களால் சோதனை எனக் களேபரம் ஆகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.

"செந்தில்" என்ற ஒலி கேட்டு, எழுதிக் கொண்டிருந்த குறிப்பை எழுதியபடி, தலையைத் திருப்பி நோக்க, எங்கள் தலைமைச் செய்தி ஆசிரியர் ராகவன் நின்றிருந்தார்.

"சொல்லுங்க ரா" என்றேன்.

"செந்தில், questionnaire ready ஆ?"

"முடிச்சுக்கிட்டே இருக்கேன். இன்னும் முழுசா முடிக்கல, ஏன்?"

"முடிச்ச வரைக்கும் குடுங்க, urgent"

"என்ன ரா இது, பொதுவா, எந்த நிகழ்ச்சியிலும், இப்படி questionnaire கேட்க மாட்டீங்களே?"

"ஐயோ, செந்தில், காலையிலேந்து கேபினை விட்டு எட்டி வெளியில பாக்கலயா? அவங்க ஆளுங்க, security check, list of questions, crew member detailனு துளைச்சு எடுக்கிறாங்க, please give me something, they are eating my brain, literally"
அது வரை எழுதியிருந்த கேள்விகளை ராவிடம் கொடுத்தேன். 

எடுத்துக்கொண்டு ஓடியவரைச் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகமே பரபரப்பாய் இருந்தது. 'MLA, MPங்க வந்தப்ப கூட இவ்ளோ பண்ணலய்யா? ஓவராப் போறீங்கடா' என்று உள்ளுக்குள் மனது சொல்லிக் கொண்டது. மீண்டும், கூகுளுக்குள் நுழைந்தேன்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, நானும், ராவும் எங்கள் செய்தி படப்பிடிப்பு தளத்தின் வாசலில், நேர்காணலில் பங்கேற்க வருபவரை வரவேற்க நின்றிருந்தோம். நான்கு SUV முன்னே செல்ல, ஐந்தாவதாய் வந்த hummerல் இருந்து இறங்கி வந்தார் தவத்திரு சித்தானந்தர். முன்னே சென்ற ரா நேரே அவரின் பாதத்தைத் தொட்டு வணங்க, கையை உயர்த்திக் காட்டியவர், "Welcome to 247 sir" என்று கூறிய என்னைப் பார்த்து மையமாய்ச் சிரித்தது தாடியின் மய்யத்தில் ஒன்றும் தெரியவில்லை. மற்ற கார்களில் இருந்து இறங்கியவர்கள், கையில் நிறைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளே வர, "ரா, எதுக்கு இத்தனை பெட்டி, இத்தனை பேரு? என்ன நடக்குது?" என்றேன், மெல்லிய குரலில்.

"செந்தில், இவங்கள்லாம் அவரோட costumes, make up, beauticians" என்று ராகவன் சொல்ல, விழி விரிந்தவனாய், "நம்ம பேட்டி தானே எடுக்கப் போறோம், உள்ளப் போற பெட்டியெல்லாம் பாத்தா, ஷக்கலக்க பேபி பாட்டுக்கு டான்ஸ் ஆடப்போறாருன்னு நெனக்கத் தோனுது." என்றேன்.

"செந்தில்" என்று அதட்டலாய்ச் சொன்ன ரா, குரலைக் குறைத்து, "மெதுவாப் பேசுய்யா" என்றார்.

"நம்ம ஆபீஸ் தானே, நீங்க மட்டும் தானே இருக்கீங்க" என்றேன் அவரைப் போலவே குரலைக் குறைத்து.

"எல்லாம் வெளயாட்டாப் போச்சு உனக்கு, டைம் ஆச்சு, இன்னும் அரைமணி நேரத்துல on air. நீ போ studioக்கு" என்றார் ரா.

"ரா, அவர் எடுத்துட்டுப் போன மேக் அப்லாம் போட்டு வர்றதுக்கே அரை மணிக்கு மேலே ஆகும். நீங்க அவரைப் போயிப் பாருங்க" என்று சொல்லிவிட்டு, படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றேன்.

Green matக்கு நடுவே இரு luxury couch வைக்கப்பட்டிருந்தன. Camera angle, green mat live filter, mic audio check, video light exposure என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் மற்றும் படப்பிடிப்பு குழுவோடு ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். தவத்திரு வருவதற்கு முன் அவரது security அந்த couchஐக் கடைசி முறையாகச் சோதனையிட்டுக் கொண்டிருந்தார்.

"சார்,  நீங்க செக் செஞ்சுட்டுப் போன 10 நிமிசம் நான் மட்டும் தான் இங்க உட்காந்திருக்கேன். வேற யாரும் வரல. நான் அந்த சீட்ல பாம் எதுவும் வைக்கல. ஏன் சார் இவ்ளோ ஓவரா செய்யுறீங்க?" என்றேன்.

"I am doing my duty." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிரித்த முகத்துடன் உள்ளே வந்து கொண்டிருந்தார் சித்தானந்தர்.

"Welcome to 247, sir" என்றேன், எனது வலதுகையை நீட்டியபடி.

கைகூப்பி வணக்கம் தெரிவித்தவர், "செந்தில், right?" எனக் கேட்க, "எஸ்" என்றேன்.

"இப்பத் தான் ராகவன்கிட்ட எல்லாம் விசாரிச்சுட்டு இருந்தேன். Questionnaireல இருக்குறது மட்டும் தானே?"

"லைவ் தானே சார், அதனால, நீங்க சொல்லும் பதிலைப் பொறுத்து சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கும்." என்று நான் கூற, "ஹா ஹா ஹா" எனச் சிரித்துக் கொண்டார்.

'அவ்ளோ பெரிய ஜோக் இல்லயே' என உள்ளே சந்தானம் எட்டிப் பார்க்க, நானும் மெலிதாய்ச் சிரித்து வைத்தேன். அவருடைய மேற்சட்டையில் ஒலிவாங்கியை உதவியாளர் பொருத்திச் செல்ல, இறுதியாய் ஒரு முறை ஒலி அளவினைச் சோதித்த பிறகு, நிகழ்ச்சி இயக்குனர் on air countdown சொல்ல, நிகழ்ச்சி முகப்பு இசை முடிந்து, என் முகம் மட்டும் தெரியும்படிக்கு வைக்கப்பட்டிருந்த படக்கருவியை நோக்கிப் பேசத் தொடங்கினேன்.

"செய்தி 247 நேயர்களுக்கு மனம் நிறைந்த தமிழ் வணக்கம். இன்று VIP 247 நிகழ்ச்சியில் நம்மோடு இருப்பவர் ஆன்மீக உலகில் அறிமுகமே தேவையில்லை. வணக்கம் சித்தானந்தர் அவர்களே" என்று சொல்ல,
சித்தானந்தர், படக்கருவியைப் பார்த்து, "ஜெய், லிங்கேசாய நம" என்றார்.

"சொல்லுங்க, உங்களோட வாழ்வில் எப்போது நீங்கள் இந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குனீங்க?"

"ஹா, ஹா, ஹா, என்னோட வாழ்க்கையே இந்த ஆன்மீகத்துல தானே தொடங்கியது. இதற்கு முன் நான் என்னவாய் இருந்தேன்னு எனக்கே தெரியாது. ஆனால், எனக்கு ஆன்மீக தீட்சை கிடைத்த பிறகு தான் நான் தவத்திரு சித்தானந்தர் ஆனேன். நான் மனது அடையும் அமைதியின் இன்பத்தை என்னை நோக்கி வருபவர்களுக்கும் கொடுக்கிறேன். Me an my yoga transform the mind and spirit of hundreds and thousands of people coming to me."

"யார்கிட்டேந்து நீங்க தீட்சை பெற்றீங்க?"

"ஹா, ஹஹ்ஹா, நான் தானாக உருவானவன். சுயம்பு. யாரிடமும் என்னுடைய அருளைப் பெறல. ஆனா, எனக்குக் கிடைத்த இந்தப் பொக்கிஷத்தை எல்லார்க்கிட்டயும் பகிர்ந்துக்கணும்னு தான் இதையெல்லாம் சேவையா செஞ்சுட்டு வர்றேன்."

"சரி சார், உங்களோட லிங்கா அமைப்புல என்னென்ன சேவையெல்லாம் கொடுக்கிறீங்க?"

"எங்க அமைப்புல எல்லாமே science தான். இந்த உலகமே scienceஆலத் தான் இயங்கிட்டு இருக்குன்னு நம்புறவன் நான். அதனால தான் நாங்க கத்துக் கொடுக்கும் யோகா, வாழ்வு முறை எல்லாத்தையும் அறிவியல் வழியாகச் சொல்லிக் கொடுக்கிறோம். இது இல்லாம, பசுமைத்திட்டம் மூலம் அழிந்து வரும் காடுகளை மீட்டெடுத்தல், பலருக்கு இயற்கை மருத்துவச்சேவை என்று எங்களால முடிந்த அளவுக்கு எல்லாமே செஞ்சுட்டு வர்றோம். இது எல்லாத்துக்கும் யாரு காரணம், நானா? இங்கு நான் என்பதே என்ன என்பதில் பெரிய கேள்வியாக நிற்கிறதே. நான் என்கிற ஜீவாத்மா என்பதே பரமாத்மாவின் சிறு துளி தானே. அந்தக் கடவுளே தான் அனைத்துக்கும் காரணம். என்னுள் நுழைந்து இயக்கிக் கொண்டிருக்கும் ஷக்தி அவன் தானே. உயிர் ஷக்தி, அதை ஒருநிலை படுத்துறது தானே யோகா எனும் அறிவியல். எல்லாம் அறிவியல் தான்."

"நல்லது சித்தானந்தர், நீங்கள் இப்ப சொன்னப்ப, பசுமைத் திட்டம்னு..." எனக் கேட்கத் தொடங்கிய போது, "தவத்திரு சித்தானந்தர்னு சொல்லுங்க" என்றார் தவத்திரு.

திடீரெனக் குறுக்கிட்டதால் என்ன சொல்கிறார் எனச் சரிவர உள்வாங்க இயலாதவனாய், "pardon sir" என்றேன்.

"Call me தவத்திரு சித்தானந்தர்..." எனச் சினப்பிழம்பாய்ப் பொரிந்தபடி கூறினார், சித்தானந்தர். நிகழ்ச்சி இயக்குனர், என்னுடைய headsetல் "செந்தில், ரியாக்ட் செய்யாதீங்க, நான் கட் செஞ்சு ad break போடுறேன்" எனச் சொல்லி, live relayல் விளம்பரங்களை ஓடவிட்டு, "2 min" என்றார்.

"இதுல என்ன இருக்கு, சார்?"

"நான் பெற்ற தவ வலிமை பத்தில்லாம் உனக்குத் தெரியுமா? யாரை எப்படி address செய்யணும்னு தெரியாம நீங்கள்லாம் எப்படி நேரா பேட்டி எடுக்க உக்காந்துடுவீங்களா? Where is Raghavan?" என்று அவர் கேட்பதற்குள் ரா உள்ளே வந்திருந்தார்.

"செந்தில், இனிமே சரியாக் கூப்பிடுங்க. எவ்ளோ சீனியர் நீங்க? நீங்களே இப்படி செய்யலாமா?" என என்னைப் பார்த்துக் கூறிவிட்டு, "குருஜி, it will not be repeated. I am begging apology on his behalf" என்றார்.

"ராகவன், அதெல்லாம் வேணாம்பா, பாரு, எவ்ளோ கோவம் வருதோ உடனே மன்னிக்குற மனமும் என்கிட்ட உண்டு. No issues, we can continue" என்றவர், "தம்பி, அடுத்து எங்களோட தக்‌ஷிண் கங்கா திட்டத்தைப் பத்தி கேளுங்க, சரியா? அதைப் பத்தி பேசுறதுக்குத் தான் நான் வந்திருக்கேன்." என்றார், என்னிடம்.

ராகவன், "okay, செந்தில், don't mess it anymore" என்றார். "ரா, என்ன நீங்களும் என்னைச் சொல்றீங்க?" எனக் கூற வந்த என்னைத் தடுத்து, "லைவ் ப்ரோகிராம், ரொம்ப நேரம் breakல வைக்க முடியாது. Be serious, செந்தில்" என்று அங்கிருந்து நகர்ந்தார்.

நிகழ்ச்சி இயக்குனர் எனது headsetல் cue கொடுக்க, நான் மீண்டும் பேசத் தொடங்கினேன்.

"விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் உங்களை வரவேற்கிறேன். இன்று நம்மோடு தவத்திரு சித்தானந்தர் இருக்கிறார். Breakக்கு முன், பசுமைத்திட்டம் பத்தியும், அவரோட மத்த சேவைகள் பத்தியும் அவர் சொல்லிட்டு இருந்தாரு." என்று கேமரா பார்த்துக் கூறியவன், தவத்திருவைப் பார்த்து, "தவத்திரு சித்தானந்த குருஜி, நீங்க பசுமைத்திட்டத்தினால காடுகளை மீட்டெடுக்குறது பத்தி சொல்லிட்டு இருந்தீங்க. ஆனா, உங்களோட ஆசிரமத்துல ரெண்டு மூனு காட்டுல தான் இருக்கு. இல்லயா?" என்று நான் கேட்டபோதே, அவர் முகம் போட்டிருந்த மஸ்காராவின் அளவையும் மீறிக் கருத்தது. முகத்தில் இருந்த தாடியின் அளவையும் தாண்டி சினம் கொப்பளிந்து கொண்டிருந்ததைப் பார்வையாளர்கள் காண முடியாது போயிருக்கலாம். ஆனால், என்னால் நன்கு உணர முடிந்தது.

"தம்பி, நீங்க தெரியாம பேசுறீங்க, எங்கள் ஆசிரமம் எல்லாமே முறையாக வாங்கப்பட்ட பட்டா நிலங்கள். எல்லாத்துக்கும் documents சரியா இருக்கு. என் மேல இப்படி அவதூறுகள் சொல்றது மூலமா, நம்ம மதத்தை இழிவு படுத்துறது தான் இப்படி கெளப்பி விடுறவங்களோட திட்டம்."

"இல்லயே, உங்களோட சத்தியமங்கலம் ஆசிரமத்துல போன ஆண்டு டிசம்பர் மாதம் கூட இரவு வெடிபோட்டு, காட்டு விலங்குகளை விரட்டுனதாகவும், அதனால அந்த விலங்குகள் மிரண்டு பக்கத்து ஊருல புகுந்ததாகவும் தகவல் இருக்கே?"

"அதுவும் எங்கள் மேல் திரிக்கப்படும் அவதூறு தான். தாகமாக இருக்கும் யானை ஒன்று எங்கள் ஆசிரமத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் வந்து தண்ணீர் குடிப்பதாக ஒரு வீடியோ கூட இருக்கு. நாங்க மக்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் நல்லது செய்றோங்குறதுக்கு இதுவே நல்ல சாக்ஷி"
"இந்த வீடியோவா பாருங்க, குருஜி " என அருகே திரையைக் காட்ட, அதில் ஒரு கட்டடம் அருகே இருந்த தொட்டியில் ஒரு யானை வந்து தண்ணீர் குடித்துவிட்டு, திரும்பி, தும்பிக்கையைத் தூக்கிக் காட்டிவிட்டுச் சென்றது.

பார்த்தபடி, "ஹா ஹஹ்ஹா" எனச் சிரித்தவருடன் சேர்ந்து நானும் சிரிக்கத் துவங்கியிருந்தேன்.

"பாத்தீங்களா, தம்பி, யானை எவ்ளோ அழகா வந்து தண்ணி குடிச்சுட்டு, நன்றி சொல்லிட்டுப் போவுது. எங்கள் கூட அவ்வளவு பழகியதால் தான் இதெல்லாம் நடந்தது." என்றார்.

"குருஜி, குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும். நாம இப்ப பார்த்த இந்த வீடியோல இருப்பது African wild elephant. இந்த வகை யானை நம்ம ஊருலயே கிடையாது. இது கானா நாட்டுல எடுக்கப்பட்ட வீடியோ. எடுக்கப்பட்ட ஆண்டு 2016." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கைக் கழட்டத் துவங்கிய தவத்திரு, "ராகவன்" எனக் கத்தத் துவங்கி இருந்தார்.

நாங்கள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த, "ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் நிகழ்ச்சி தொடரும்" என்ற இடைச்செருகலுடன் விளம்பர இடைவேளை தொடங்கியிருந்தது. 

அங்கிருந்து வந்த ராகவன், என்னிடம் இருந்து மைக்கை வாங்கிக் கொண்டு, தானே மீதி நிகழ்ச்சியை நடத்துவதாகக் கூறி விட்டு, என்னை அங்கிருந்து கிளம்பச் சொல்லியபடி, அவரிடம் கெஞ்சத் துவங்கியிருந்தார்.

****

"யாருங்க இவங்கெல்லாம், திடீர் திடீர்னு முளைக்கிற புத்தீசல் போல தன்னைக் கடவுளாக் காட்டிக்கிட்டு, மத்தவனை எல்லாம் ஏமாத்திட்டுருக்காங்க. உலகம் முழுக்க கிளை விரிச்சு, காணிக்கை, donation, yoga classனு மட்டுமில்லாம, காட்டைக் காப்பாத்துறேன், ஆத்தைக் காப்பாத்துறேன்னு ஆத்துல கெமிக்கல் கலக்குற கம்பெனியோடயே கூட்டு சேந்துகிட்டு ஆட்டையப் போடுறானுங்க. ஆனா, பேருக்கு முன்னாடி மட்டும் தவத்திரு... முதல்ல, அடுத்தவன் தனக்குச் செய்யுறது கெட்டதுன்னா கூட மன்னிக்கிறதும், தப்பே செஞ்சிருந்தாலும் பொறுத்துக்கிட்டு அன்பை வெளிப்பட்த்துறத விடவா தவம் இருந்துடப் போகுது. ஆனா, இவன்லாம் mental peacefulness தர்றேன்னு சொல்லி ஊர ஏமாத்திட்டிருக்கான், இவன் கோவத்தையே அடக்கமுடியல, இவரு ஊரானுக்கெல்லாம் class எடுக்குறான்" என்று புலம்பிக் கொண்டிருந்தேன், நான் புதிதாக சேர்ந்திருந்த இணைய செய்தி நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கார்த்தியிடம்.

"செந்தில், விடுங்க, எவ்வளவோ பாக்கணும். இதெல்லாம் கடந்து தான் வாழ வேண்டியிருக்கு." என்றார் கார்த்தி.

"இல்ல கார்த்தி, எத்தனையோ பேரை இதே போல கேள்வி கேட்டிருக்கேன். ஆனா எப்பவும் கேள்விக்கான background check இல்லாம என்னோட கேள்வியே இருக்காது. உண்மையே நம்ம பக்கம் இருக்கும்போது, வேறென்ன வேணும்னு ஒரு துணிச்சலோட பேசுவேன். ஆனா, இன்னிக்கு இந்த நிலைமை வரும்னு நான் நெனச்சே பாக்கல. அந்த ரா என்னை வேலைய விட்டே தூக்குவான்னு நினைச்சே பாக்கல. நிகழ்ச்சி முடிஞ்சதும் நான் collect செஞ்சு வச்சிருந்த details எல்லாம் கொண்டு போய்க் காட்டப் போறேன். 'you are fired, settlement எல்லாம் account departmentல சொல்லிட்டேன், நீங்க கிளம்பலாம்'னு சொல்றான். வேலை செய்யாததுக்கு வேலைலேந்து தூக்கிருந்தாலும், மனசு கொஞ்சம் அமைதியாயிருந்திருக்கும். ஆனா, நான் என்ன செய்யணுமோ அதைச் செஞ்சதுக்கு இந்த நிலைமை. எல்லாத்துக்கும் காரணம் அந்தத் தவத்திரு தான், அவனை நெனச்சாலே  *#@#@#@#@@#*"

"control yourself, செந்தில்" என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டார் கார்த்தி.

"சரி, get to work, உனக்கு இங்க first assignment - OPERATION தவத்திரு" என்று கார்த்தி சொல்ல, இப்போது நானும் சிரிக்கத் தொடங்கியிருந்தேன்.

- முடிவிலி


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
ற்றே தவத்திற் குரு.

இயல்: துறவறவியல்
அதிகாரம் - தவம்
குறள் எண்: 261

குறள் விளக்கம்: தான் பட்ட துன்பத்தைப் பொறுத்தலும், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலுமே தவத்தின் வடிவமாகும். 


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka