ரொம்ப நன்றிண்ணா...! - குறள் கதை
ரொம்ப நன்றிண்ணா...!
'க்ர்ர்ர்ர்... க்ர்ர்ர்ர்... க்ர்ர்ரர்...'
எனது படுக்கையின் அருகே இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த அலைபேசி அதிர்ந்து நகர்ந்து ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. நன்கு உறங்கிக் கொண்டிருந்தாலும், அலைபேசியின் இந்த சிணுங்கலுக்காகக் காத்திருந்தவள் போல, அலைபேசியை எடுத்தேன்.
"செந்தில் வந்துட்டியா?"
"இன்னும் ஒரு முக்கால் மணி நேரத்துல வந்துடுவேன், எழுப்பி விட்டுட்டனா?"
"ச்ச.. ச்ச.. அதெல்லாம் இல்ல, நீ எப்ப கூப்பிடுவேன்னு போனைப் பக்கத்துலையே வச்சுகிட்டு தான் இருந்தேன்."
"ஹலோ, உன் குரல்லயே தெரியது, நல்லா தூங்கிட்டு இருந்தன்னு." என்று செந்தில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு வண்டியின் அழைப்பொலி கடந்து சென்ற சத்தம் கேட்டது.
"செந்தில், வண்டிய நிறுத்திட்டு தானே பேசிட்டு இருக்க?"
"இல்ல இனி, கவலைப்படாதே, நான் கொஞ்ச நேரத்துல வீட்டுல இருப்பேன். கவனமாத் தான் ஓட்டிட்டு வந்துட்டு இருக்கேன்."
"நீ முதல்ல போனை வையி... வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கப்போ போன்ல பேசாதேன்னு எவ்ளோ தடவ சொல்றேன்." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
"ஆ..." என்ற குரலோடு ஒரு பெரிய வெடிச்சத்தம் போல் கேட்டதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
"செந்தில்... செந்தில்... செந்தில்ல்ல்ல்..." என்று என்னை அறியாமலேயே போனில் கத்திக் கொண்டிருக்க மறுமுனையில் 'ட்டும் ட்டும்' என்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்க என்ன செய்வதெனத் தெரியாமல், மீண்டும் செந்திலுடைய அலைபேசிக்கு அழைத்தேன். "The number that you are calling is switched off" என்றது தானியங்கிக் குரல்.
உள்ளே உதறல் எடுத்து வியர்த்துக் கொட்டியது. 'காலை ஐந்தரை மணிக்கு யாரை உதவிக்கு அழைப்பது? செந்திலை எங்கே தேடுவது? செந்திலுக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்ல?' என்று பல கேள்விகள் உள்ளே என்னை அரித்துக் கொண்டிருந்தன. படுக்கையிலேயே அதிர்ச்சியில் சில நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மீண்டும் இரு முறை செந்திலின் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டேன். அதே தானியங்கிக் குரல்.
'முக்கால் மணி நேரத்துல வந்துடலாம்னு சொன்னா கண்டிப்பா சென்னைக்கு அருகில் வந்திருக்கணும், பெங்களூரில் இருந்து இங்கு வரும் வழி எனில் பூந்தமல்லி அருகில் வந்திருக்கலாம். பூந்தமல்லி வரை போயி பாத்துட்டு வந்துடலாம்.' என்று மனம் சொல்ல, எங்கள் இருவரின் நண்பர் துரையை போனில் அழைத்தேன்.
"ஹலோ..."
"ஹலோ... நான் இனியா பேசுறேன் அண்ணா." குரல் பதறியது.
"என்னம்மா ஆச்சு?" என்றவரிடம் சிறிது நேரம் முன்னால் நிகழ்ந்தவற்றைச் சொல்லிட, "நீ ரெடியா இரு, ஒரு அஞ்சு நிமிசத்துல அங்க வந்துடுறேன். பூந்தமல்லி வரை போயி பார்த்துடுவோம். போற வழியிலயும் செக் பண்ணுவோம். கவலைப்படாதே" என்றார் துரை.
இரவு உடையிலிருந்து சுடிதாருக்கு மாறி, எங்களது அடுக்ககத்தின் வாசலில் வந்து நிற்கவும், துரை அண்ணன் வண்டியில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. என் கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டு, "உட்காரும்மா, இது அழறதுக்கான நேரம் இல்ல, கவலைப்படாதே, கண்டுபிடிச்சுடலாம்." என்றார்.
கண்ணீரைத் துடைத்தபடி வண்டியில் அமர்ந்தேன். வேளச்சேரியில் இருந்து வழி தோறும் இரு புறமும் பார்த்துக் கொண்டே வந்தேன். கிண்டி கத்திப்பாரா பாலத்தைக் கடந்து நந்தம்பாக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், எனது அலைபேசி மீண்டும் சிணுங்கியது. துரை அண்ணன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்த, அலைபேசியை எடுத்துப் பேசினேன்.
"ஹலோ"
"ஹலோ, நீங்க இனியா செந்திலா?" என்றது ஒரு குரல்.
"ஆமா, நீங்க யாரு," மனது செந்திலைப் பற்றி ஏதாவது தகவல் தரவேண்டும் என்று அடித்துக் கொண்டிருந்தது.
"ம்மா, செந்தில் உங்க ஹஸ்பண்டா?"
"ஆமா. எங்க இருக்காரு, உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" குரல் உடைந்திருந்தது.
"ஆக்சிடென்ட்மா, பூந்தமல்லியாண்ட யூ டர்ன்ல திரும்புன லாரிமேல காரை விட்டுட்டாரு." நான் அழத் துவங்கி இருந்தேன்.
"அழாதம்மா, நானும் என் ப்ரெண்டும் தான் என்னோட ஆட்டோல தூக்கிப் போட்டு மியாட்ல சேத்து இருக்கோம். வண்டிலேந்து தூக்குறப்பவே அவரோட போனையும் எடுத்தோம். ஆஸ்பத்திரி வந்து ஆன் பண்ணுனா, பாஸ்வேர்ட் கேட்டுச்சும்மா. இனியா செந்தில்னு ரெண்டு மூனு மிஸ்டு கால் இருந்துச்சு. அத பாத்துட்டு தான் இப்ப உங்களுக்கு கூப்பிடுறேன், உடனே வாங்கம்மா."
"இதோ பத்து நிமிசத்துல அங்க இருப்போம் அண்ணா. ரொம்ப நன்றிண்ணா, உங்க பேருண்ணா?"
"இசை, வாங்க நான் ரிசப்சன்லையே இருப்பேன். ஆட்டோ டிரைவர்."
"இதோ வர்றேன் அண்ணா"
அலைபேசியை வைத்துவிட்டு, துரை அண்ணனிடம் "அண்ணா, மியாட் ஹாஸ்பிடல்" என்றேன். அடுத்த சில நிமிடங்களில் மியாட் மருத்துவமனையின் வரவேற்பறையில் இசை அவர்கள் முன்னே நின்றிருந்தோம்.
"ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா, இந்தாங்க அவரோட பேக், போனு, பர்சு," என்று ஒவ்வொன்றாக எடுத்து கொடுத்தார். "அவரோட லைசன்சுல O பாசிட்டிவ்னு போட்டிருந்துச்சு. கூட்டுட்டு வர்றப்பவே நெறையா ரத்தம், அட்மிட் பண்ணிட்டு, அப்படியே ரத்தமும் கொடுத்தாச்சு. இந்நேரம் ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிஞ்சிருக்கும்மா." என்று இசையண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு நர்ஸ் வந்து "செந்தில், செந்திலோட ரிலேட்டிவ்ஸ் யாராச்சும் இருக்கீங்களா?" என்றார்.
"போங்கம்மா, போயி பாருங்க, அப்படியே நாங்களும் கிளம்புறோம்." என்றார் இசை.
"அண்ணா, உங்களுக்கு நன்றி கூட சரியா சொல்லலண்ணா" என நான் கூற முன்வர இடைமறித்து,
"அட, என்னம்மா இது, ஒரு உசுரு அடிப்பட்டு கெடக்குறப்ப இந்த உதவி கூட செய்யலன்னா, நாமெல்லாம் மனுசன்னு இருக்குறது எதுக்கும்மா. நெறைய பேரு சொல்ல கேட்டுருக்கேன். ஆக்சிடென்ட் ஆகி முதல் ஒரு மணி நேரம் கோல்டன் அவர்னு. அந்த நேரம் பக்கத்தால ஆஸ்பத்திரி கொண்டாந்து சேத்துட்டா போதும், அது தான் நான் செஞ்சேன், உள்ளே போயி டாக்டரைப் பாருங்க. உங்க புருசனுக்கு ஒன்னும் ஆவாது." என்று சொல்ல,
"ரொம்ப நன்றிண்ணா" என்ற என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, தன் நண்பன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்தார் இசை.
குறள்:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)
முன்னோருதவி செய்யாதவர்க்கு உதவி செய்பவர்கட்கு இந்த உலகத்தையும், அந்த வானத்தையும் கொடுத்தாலும் ஈடாகா.
இக்குறள் மொழியுடன் மாட்டு பொங்கல் இனிதே தொடங்கிற்று.....ராம்.....
ReplyDeleteஇப்படிக்கு
திருமலை.
இனிய பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்து...
Delete