தீவு - தமிழாக்கச் சிறுகதை
பல காலங்களாய், நான் என் தீவின் கரைதனில் உலாவிக் கொண்டிருந்தேன்... தனிமையில் இருப்பினும் மகிழ்வுடன் என் சொர்க்கத்தில்... தொலைக்கடற்பரப்பில் அவ்வப்போது கப்பல்களைப் பார்க்கிறேன்... ஆனால், அவற்றை நான் கண்டுகொண்டதில்லை... ஏனெனில், அவை இத்தீவை நெருங்காது என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த அளவுக்கு இத்தீவை அச்சமூட்டுவதாக மாற்றி வைத்திருந்தேன்...
ஒரு அழகிய நாள் விடியல் நேரம், கதிரின் முதலொளியை நான் விழியால் பருகிக் கொண்டிருந்த வேளையில், வியக்கும் ஏதோ ஒன்று என்னுலகை நெருங்கி வந்தது... பெரும் நாவாயல்ல... சிறுபடகொன்று... இருந்தும் என் விழியை அதை விட்டு எடுத்திடாவண்ணம் கவர்ந்திடும் விதமாய் இருந்தது... துடுப்பினை இட்டபடி படகில் இருந்த உன்னைக் கண்ட அந்த நொடி என் மனம் என் நிலையில்லை...
நீ களைப்பாக இருந்தாய்... கவர்ச்சியாகவும்... நான் உன்னைப் பேச விடவே இல்லை... நீ இன்னும் உன்னை வருத்திக்கொள்ள விரும்பவில்லை... உன்னை ஏந்திக்கொண்டேன்... உனக்காகக் கவலை கொண்டேன்... உன்னை நன்கு கவனித்தேன்... காதலித்தேன்... என்வசம் இருந்த அனைத்தையும் உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்... அனைத்தையும்... இத்தீவில் நான் காத்த, சேர்த்த அனைத்தையும்... நான் உன்னை அதிகம் கவனமெடுத்த போதே, என்மீது உன் கவனம் குறையத் துவங்கியது...
நான் உனக்காகவே - உன்னைப் பார்த்துக் கொள்ளவே பிறந்தவளாக - உன் அடிமையாக நீ நினைக்கத் துவங்கியிருந்தாய்... இன்னுமொரு படி மேலே போய், என்னையும், என் தீவையும் உன் உரிமையாக நீ நினைத்தாய்... நான் எல்லா விதத்திலும் முயன்று கொண்டிருந்தேன், உனக்குப் புரிய வைக்க... அவ்வளவு எளிதில் என்னை உன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள இயலாதென... நீ என் முயற்சிகளைக் கவனிக்கக்கூட மறுத்தாய்...
மேலும், நீ என் தீவின் சூழலும், உணவுகளாலும் புத்துணர்ச்சி பெற்று ஆற்றல் மிக்கவன் ஆனாய்... காலப்போக்கில், என் தீவை உன் எண்ணத்திற்கேற்றாற்போல் மாற்றவும் திட்டமிட்டாய்... என் மனதிற்கினிய அழகிய இடங்களை அழித்தாய்... மரங்களை வெட்டினாய். நான் உன்னை எதிர்க்கத் துவங்கினேன். நீ என்னைத் தடுத்தாய். நான் போராட ஆயத்தமானேன்...
எனக்காகக் கூட இல்லாமல் இந்தத் தீவிற்காக உன்னையும் இழக்க நான் ஆயத்தமாவேன் என நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை... என்னை இத்தீவிலிருந்து துரத்த முயன்றாய். ஆனால், இத்தீவின் மூலை முடுக்கும் நானறிவேன்... நன்கறிவேன்... நான் என்னை என் தீவில் எங்கோ ஒளித்துக்கொண்டேன், நிரந்தரமாய்... நீ என்னை எங்கும் தேடினாய்... உன்னை மீண்டும் காணவே வேண்டாமென்று முடிவெடுத்தே விட்டேன்...
என் இருப்பிடம் குறித்து எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை... தனிமையின் தீவில் விரவியிருந்த அமைதியைப் பொறுத்துக்கொள்ள முடியாது தவித்தாய்... தனிமைக்கு என்றும் பழக்கப்படாதவனாக நீ இருந்தாய்... கடற்பரப்பில் தனிமைத்தீவில் இருந்து உனைக் காப்பாற்றும் நாவாய்களுக்காக நோட்டமிடத் துவங்கி இருந்தாய்... காத்திருப்பு உன்னைப் பைத்தியமாகவே மாற்றியிருந்தது... இறுதியாய், ஒரு கப்பல் தென்பட்டது... கடலில் வீழ்ந்து கப்பல் நோக்கி நீந்தினாய்...
நாவாயிலிருந்து தீவினை நோக்கினாய்... இறுதியாய் என் முகம் காண, நானிருக்கும் தடமாவது அறிய... நான் என்னை உனக்குக் காட்ட விரும்பவில்லை... கப்பல் தீவினை விட்டு விலகத்துவங்கியது... நீயும் சென்று விட்டாய்... நீ திரும்பவே மாட்டாய் என்று நன்கறிந்திருந்தும், நான் வருந்தவில்லை... மாறாக, இன்புற்றேன்... என் காடுகளில், என் மரங்களின் நிழலில், எனதே எனதானத் தீவில் என்றும் மகிழ்ந்து திரிகிறேன்...
👑❤
Comments
Post a Comment