நாடி இனிய சொலின் - குறள்கதை

நாடி இனிய சொலின்

இரவு முழுதும் உதிர்ந்து சாலையின் ஓரங்களை மஞ்சள் வண்ணமாக்கி வைத்திருந்த மரங்கள் நிறைந்திருந்த நுங்கம்பாக்கத்தின் அந்த சாலையில் காலையின் போக்குவரத்து, மஞ்சள் மலரின் இதழ்களைச் சாலையோடு அரைக்கத் துவங்கி இருந்தது. மெல்ல மேலெழுந்து சுட்டெரிக்கும் கதிரின் வெயில் போல, போக்குவரத்து நெரிசலும் மெல்ல மெல்ல அதிகரித்தது. அந்த நுங்கம்பாக்கத்து நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த சற்று குறைவான நடமாட்டம் இருந்த நிழற்சாலையில் அமைந்திருந்தது விழுதுகள் வார இதழின் அலுவலகம். காலை 9 மணிக்கு, அலுவலகத்தில் நுழைந்த இதழாசிரியர் செல்வத்தைக் கண்டதும், பலரும் எழுந்து காலை வணக்கம் சொல்லியதில் செயற்கைத்தன்மை இல்லை. அவர்மீதிருந்த மதிப்பே வெளிப்பட்டது. செல்வம் எளிமையானவர். சிரித்த முகம். பண்பாக பழகக் கூடியவர், அனைவருக்கும் சிறு புன்னகை பூத்த முகத்தோடு செல்வமும் நற்காலை என்றபடி தனது அறைக்குச் சென்று அமர்ந்தார். முதல் நாளே அவர் தொகுப்பாசிரியர்களிடம் கேட்டிருந்த சிறுகதைகள் அவரது மேசை மீது வைக்கப்பட்டிருந்தன. கதவைத் தட்டியபடி, செழியனும், தமிழினியும் உள்ளே வந்தனர். 

"வாங்க, உட்காருங்க செழியன், நீயும் உட்காரும்மா தமிழ்" செழியனுக்கு 25 வயது தான் இருக்கும். இதழியல் பட்டதாரி. தமிழ் ஆர்வமும் உண்டு. தமிழினி, செழியனுக்கு முன்பிருந்தே விழுதுகள் வார இதழில் பணிபுரிபவர். செழியன், தமிழினி இருவரும் இதழ் தொகுப்பாசிரியர்களாக உள்ளனர். 

"சார், இந்த வாரம் இதழில் வெளியிடுவதற்கு இரண்டு சிறுகதைகள் வந்திருக்கு. இரண்டும் Printout எடுத்து வச்சிருக்கேன். நேத்தே உங்கள் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வச்சிருந்தேன்." என்றார் தமிழினி. 

"ஆமா, இரவு தூங்குறதுக்கு முன்னாடி படிச்சுட்டுத் தான் தூங்கினேன். ஆனா, என்னோட கருத்தை விட உங்க ரெண்டு பேரோட கருத்தையும் தெரிஞ்ச்சுக்க விரும்புறேன். நீங்க ரெண்டு பெரும் படிச்சுட்டீங்க இல்லையா?"

"படிச்சாச்சு சார்" என்றார் செழியன். தமிழினியும் ஆமெனத் தலையசைத்தார்.

"சொல்லுங்க... ரெண்டுல எந்த கதையை வெளியிடலாம்?"

"'கருவேல மரம்' கதையை வெளியிடலாம். எழுதியவரும் மக்கள் மத்தியில பரவலான எழுத்தாளர் பிறைநிலவன். அப்படியே ஊர்ப்பக்கம் போய் வந்த ஒரு உணர்வைத் தரும் அளவுக்கு எழுதிருக்காரு. 'பதியம்' கதையும் நல்லாத் தான் இருக்கு. நகரத்தில் நடக்கும் கதை, ஊரில் இருந்து வந்து சென்னைக்கு வரும் ஒரு இளைஞன், தன் மனத்தில் வட சென்னையில் உள்ளவர்களைப் பற்றிய எண்ணங்களைச் சொல்லும் கதை தான். முதலில் அவர்களைக் கரடுமுரடாக நினைக்கும் அவன், தன் எண்ணங்களை மாற்றிக் கொள்கிறான். ஆனாலும், அந்த கதையில் ஏனோ ஒன்ற முடியல சார்."

"தமிழினி, நீங்க என்ன சொல்றீங்க?" 

"இரண்டையுமே படிச்சுட்டேன், இரண்டுமே நல்லா இருக்கு. எதை வெளியிடுவதாக இருந்தாலும் எனக்கு ஒப்புதல் தான்."

"சார், பிறைநிலவன் கதையையே வெளியிடலாம். ஒரு நாள் முன்னாடி, ட்விட்டர்ல நாளை இதழில் புகழ்மிக்க எழுத்தாளர் பிறைநிலவனின் சிறுகதையோடு இந்த வாரம் 'விழுதுகள்', அப்படின்னு பதிவிட்டால், நல்லா இருக்கும். அதுவும் அவர் உங்களுடைய நெருங்கிய நண்பர் கூட" என்றார் செழியன்.

"நேற்று நான் பிறைநிலவன் கூடவும் பேசினேன். கதையைப் படிச்சு முடிச்சதும்." என்றார் செல்வன்.

"அப்பாடா, கருவேல மரம் கதையையே வெளியிடலாம் இல்லையா?" என்றார் செழியன், மகிழ்ச்சியாய்.

"பொறுங்க, செழியன்." என்றார் செல்வன். செழியனின் முகத்தின் மகிழ்வு வியப்பாகக் குவிந்திருந்தது. செல்வன் தொடர்ந்தார், "ரெண்டு கதையிலும் நிகழ்வுகள் இயல்பாக இருக்கு. ஆனால், இரண்டு கதையிலும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கு." 

செழியன் முகத்தில் வியப்பு கேள்விக்குறியாக மாறி இருந்தது. செல்வனிடமிருந்து தன் பார்வையைத் தமிழினியின் பக்கம் திருப்பினான். 

தமிழினி, "மத்த பதிவுகள், கட்டுரைகள், பேட்டிகள் எல்லாமே ரெடியா இருக்கு. சிறுகதை மட்டும் தேர்வு செஞ்சுட்டா போதும். நான் தான் ஏற்கனவே சொல்லிட்டனே, ரெண்டு கதையும் நல்லா இருக்குன்னு. எனக்கு எந்த வேறுபாடும் தெரியல" 

செல்வன் மெலிதாகச் சிரித்துக் கொண்டே, "செழியன், கருவேல மரம் கதையில் முக்கிய கதாபாத்திரம் யாரு?"

"ஒரு தாத்தா, பேரு கூட செவ்வாளை..."

"அவரோட குணம் என்ன? தனித்துவம் என்ன?"

"ஊருல நடக்குற எல்லா நடப்பும் அவருக்குத் தெரியும்... அதே போல, வயசானவரு என்பதால் சிறுவர், வயதில் சின்னவங்கள எடுத்தெறிந்து தான் கூப்பிடுவாரு... ஆனா, வெள்ளந்தியானவரு..."

"இது தான் செழியன், இந்த ரெண்டு கதைக்கும் வேறுபாடு..."

"இதிலென்ன சார் இருக்கு...?"

"கதை நெடுக்க அந்த கதாபாத்திரத்தின் உரையாடலில் அவ்ளோ வன்சொற்கள் இருக்கு, செழியன். ஆனா, இந்த புதுப்பையன் முடிவிலி கதையில் வன்சொற்கள் வருவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவிர்த்திருக்கான்"

"ஆனா, அந்த ஊரு பக்கம் அப்படித் தான் பேசுவாங்க... நானும் அந்த ஊரு பக்கம் தான் சார், அதுவும் இல்லாம சென்னையில பேசாத வன்சொல்லா சார்? இதெல்லாம் ஒரு காரணமா?"

"பாத்தீங்களா, இது தான் நமது முரணே, ஊருபக்கம் அப்படித்தான் பேசுவாங்கன்னு சொல்றீங்க, சென்னையில் பேசாத வன்சொல்லான்னும் கேட்குறீங்க...! அதனால வன்சொல் என்பது எல்லா இடத்திலும் பேசப்படுவது தான். ஆனால், நிகழ்வில் நடக்குது என்பதற்காக, நாமும் அதையே அச்சிலேத்தணுமா?"

தமிழினி, "சார், இதனால பிறைநிலவன் கதையை வேணாம்னு சொல்லணுமா? அதுவும் இல்லாம அவ்ளோ பெரிய வன்சொல் எல்லாம் வரலையே, மூதி, கம்னாட்டி இப்படித் தான் இருக்கு"

செல்வன் இப்போது மேலும் சிரித்தார், "மூதி என்பது மூதேவி. அவர் முகத்தில் முழித்தாலே விளங்காது என்பவரை அடையாளப்படுத்தும் சொல். அதுவும் கதையில் ரெண்டு மூனு இடத்தில் செத்தமூதி என்று வேறு குறிப்பிடுகிறார். பிணம் போன்றவனே அல்லது போன்றவளே... அடுத்தது கம்னாட்டி - கைம்பெண்டாட்டி அதாவது கணவனை இழந்தவள் என்று பொருள்... இந்த சொற்களை எல்லாம் கொண்ட கதையை இப்படித் தானே பேசுறாங்கன்னு அப்படியே அச்சுல ஏத்தப் போறோமா?"

"நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் இந்த சொற்களின் பொருளே தெரியுது சார். ஆனா, இதெல்லாம் இந்த கதையில் டம்மி சொற்களாகத் தானே பயன்படுத்தப் பட்டிருக்கு. அதாவது, அந்த இடங்களில் இந்த சொற்களின் பொருள் எதுவும் இல்லையே." என்றார் தமிழினி.

"அது தாம்மா இன்னும் வேதனையானதே... ஒரு வன்சொல்லை, பொருளே இல்லாமல் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இதெல்லாம் இயல்பாகப் பேசப்படுவது தானே என்று சொல்லும் அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறோம். இது இப்படியே வெளியிடுவதை என் மனம் ஒப்பவில்லை. அது அறமாக இருக்கும்னும் நாம் நம்பவில்லை."

தமிழினியும், செழியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, "சரி சார், அந்த புது எழுத்தாளரின் கதையையே வெளியிடுவோம்." என்று ஒரே குரலில் சொல்ல, பின்னர் செழியன் தொடர்ந்தார். 

"ஆனா, பிறைநிலவன் என்ன நினைப்பாரு...?" 

"நேத்தே அவருகிட்ட பேசிட்டேன்... கதையைத் திருத்தி அனுப்புறதா சொல்லிட்டாரு... இந்த வாரம் இல்லன்னா என்ன, கருவேல மரம் கதையை அடுத்த வாரம் வெளியிடுவோம்" என்ற செல்வன், தன் முன்னால் இருந்த இரு கதைகளில் பதியம் - முடிவிலி என்று தலைப்பிடப்பட்ட கதையை எடுத்து, 'APPROVED TO PRINT' என்ற முத்திரையைப் பதித்து, தன் கையொப்பத்தை இட்டார் செல்வன்.



- முடிவிலி 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின். (96)

அதிகாரம்: இனியவை கூறல் 

நல்ல சொற்களைத் தேடி இனிமையாக நாம் பேசுவோமானால், தீயவை தேய்ந்து அறம் பெருகிடும்.

Comments

  1. 👏🏽👏🏽 இது உண்மைக் கதையா இல்ல கற்பனையா?

    ReplyDelete
  2. சொல்லால் அடித்த சுந்தரன் அருமை தோழரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka