அமிழ்து - திருக்குறள் கதை

அமிழ்து


கானல் நீர் நிறைந்த பாலையின் மீது போடப்பட்டிருந்த 6 வழிச்சாலையில் நூற்றி இருபதில் காற்றைச் சீறிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த பிராடோ. உள்ளே 'நான் தேடும் செவ்வந்திப்பூவிது' என ராஜா பாடிக் கொண்டிருக்க, தனக்குப் பிடித்த பாடல் எனினும் அதில் மனமொன்றாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. அந்த பாலை நாட்டின் வடக்கு மூலையில் இருந்த எண்ணெய் நிறுவனத்தில் பராமரிப்பு பணி ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளன்.  

பிராடோவை ஓட்டிக்கொண்டிருந்த சரவணன், வெற்றி அமைதியாக வருவதைக் கவனித்து, "என்ன மச்சான்... உனக்காகத் தான் இந்த பாட்டே போட்டேன்... என்னமோ சொல்லுவியே, என்கௌண்டரா?"

"ப்ச்... கௌண்டர் பாய்ண்ட்..."

"ஆங், அதே தான்... அதெல்லாம் இந்த பாட்டுல இருக்குன்னு சொல்லுவ, இப்ப  என்னடான்னா இப்படி உம்முன்னு வர்ற...?" 

"மனசு சரியில்லடா... ஏதோ சரியில்லன்னு தோணுது..."

"ஞே... என்னடா உளர்ற...?" என சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெற்றியின் போன் சிணுங்கியது. பாடலின் ஒலியளவைக் குறைத்து விட்டு, போனை எடுத்துப் பேசினான். 

"சொல்லுங்கப்பா... நல்லா இருக்கீங்களா...?" 

"வெற்றி..." மறுமுனையில் அம்மா குரலில் பதட்டம் தெரிந்தது. 

"அம்மா... என்ன ஆச்சும்மா... எப்பவும் அப்பா தானே முதல்ல பேசுவாங்க...?"

"வெற்றி... அப்பாவை ஆசுபத்திரியில சேத்திருக்கோம்பா..." குரல் உடைந்திருந்தது.

"ஏன்ம்மா... என்ன ஆச்சு...?" கதறினான் வெற்றி. வண்டி ஒட்டிக்கொண்டிருந்த சரவணனுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. வண்டியின் வேகம் குறைத்து, ஓரமாக நிறுத்தினான். 

"காலையில அப்படியே நெஞ்ச புடிச்சிக்கிட்டு அப்படியே உட்காந்துட்டாங்க... அப்படியே உடம்பெல்லாம் வேர்த்துப்போயி... கண்ணன் தான் வண்டிய எடுத்துகிட்டு, ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டு வந்தது. டாக்டர் செக் பண்ணிட்டு, ஹார்ட் அட்டாக்குன்னு சொல்லி, உடனே உள்ளே கொண்டு போயிட்டாங்க." 

"அம்மா... இப்ப அப்பாக்கு எப்படிம்மா இருக்கு...?" 

"எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலடா... இப்ப டாக்டர் வெளியில வந்து சொன்னாத் தான் தெரியும்..." என்று சொன்ன அம்மா, கண்ணன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, "இந்தாடா, கண்ணன் பேசுறான்..." என்று போனைக் கண்ணனிடம் தந்தாள். 

"வெற்றி... நீ மனச ஒன்னும் குழப்பிக்காதேடா... இப்ப தான் டாக்டரைப் பாத்துட்டு வர்றேன். முதல் அட்டாக்... அப்பாவ இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு மாத்திடுவாங்க..." 

"நான் இனிக்கே கிளம்பி வர்றேன்ணா... அம்மாகிட்ட கொஞ்சம் போனைக் கொடுங்கண்ணா..." 

"சொல்லுப்பா... வெற்றி..."

"அம்மா... இன்னிக்கே கெளம்பி வர்றேன்மா... அப்பாக்கு ஒன்னும் ஆகாது... நான் வந்திடுறேன்..." என்று சொல்லியபடி போனை வைத்தான். சரவணன் வெற்றியிடம், "என்ன ஆச்சு, மச்சான்...?" என்றான். தனது மேலாளருக்கு போன் செய்த படி, "அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம்டா... நான் இன்னிக்கே ஊருக்குப் போகணும்டா..." என்று சொன்னபோது, மறுமுனை "ஹலோ" என்றது.

தனது நிலையைத் தனது மேலாளருக்கு விளக்கிச் சொல்ல, அவரும் விரைவில் வந்து பாஸ்போர்ட் வாங்கிக் கொள்ள இசைவு தெரிவித்தார். அடுத்த சிலமணிநேரங்களில், வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து, தனது பிளைட்டில் நுழைந்து அமர்ந்திருந்தான் வெற்றி. மனதில் பல நினைவுகள் அவனைப் போட்டுக் கொன்று கொண்டிருந்தது. தனது தந்தை அவனுக்குச் சொல்லிய பல அறிவுரைகள், வாழ்க்கைப் பாடங்கள் எல்லாம் அவன் மனத்தில் ஓடிக் கொண்டிருந்த நேரம், ஏதோ ஒரு அழகிய மழலைக்குரல் அவன் கவனத்தை ஈர்த்தது, தனக்கு அருகே இருந்த இருக்கையில் இருந்த ஒரு அன்னையின் மடியில் அமர்ந்திருந்த சிறு மழலை வெற்றியைப் பார்த்தபடி சிரித்தது. "க்கே... ஹ்ஹேக் அ..." எனத் தன் சிறுகையை அசைத்தபடி, தனக்கு மட்டும் தெரிந்த மொழியில் இவனைப் பார்த்து 'ஒன்னும் ஆகாது, கவலைப்படாதே...' என்று சொல்வது போல் இருந்தது. 

"இன்னும் ஒரு வாய்..." என்று சொல்லியபடி, அந்த குழந்தையின் தந்தை ஊட்டிவிட, வாயில் ஒட்டியிருந்த சில பருக்கைகளைத் தன் வலது கையினால் எடுத்து, இருகையிடையே வைத்து அரைத்துக் கொண்டிருந்தது அந்த சிறுதளிர். 

இதைக் கண்ட வெற்றி, தன் அம்மா இவன் சிறு குழந்தையாக இருக்கும்போது நடந்த நிகழ்வுகளைச் சொன்னது அவன் கண்முன் நிகழ்வாக ஓடத்துவங்கியது.     

27 ஆண்டுகளுக்கு முன்... 

முருகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த நேரம், கையில் காய்களோடு பருப்பு சேர்த்த சோற்றினை ஒரு கிண்ணத்தில் கையில் பிடித்தபடி, செல்வி நடைவண்டியைப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் வெற்றியின் பின்னால், "நில்லுடா... அப்புக்குட்டி..." என்று துரத்திக் கொண்டிருந்தாள். ஓடி வந்து கொண்டிருந்த வெற்றியைக் கண்டதும், முருகனுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்க, "புடிங்க... என் செல்லத்தை..." என்று துரத்த... தந்தையைக் கண்ட வெற்றி, நடைவண்டியைத் திடீரெனத் திருப்பி இருவரிடம் இருந்து தப்பித்து ஓடினான். அவன் புன்னகையில் ஒலிக்கீற்று அந்த வீடு முழுதிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு இடத்தில் அவனைப் பிடித்து நிறுத்த, "என்ன ஓட்டம் ஓடுறான்...?" என செல்வி பொய்யாக அலுத்துக் கொண்டாள். 

முருகன் வெற்றியைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொள்ள, ஒரு வாய் சோறு ஊட்டிவிட்டு, அந்த கிண்ணத்தை முருகன் கையில் கொடுத்த செல்வி, "என்னங்க... கொஞ்சம் அப்புக்குட்டிக்கு ஊட்டிவிடுங்க... எனக்கு அடுப்பங்கரையில ஆயிரம் வேலை கெடக்கு..." என்றாள்.

முருகன் கையில் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு, முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு வெற்றியைப் பார்க்க, குழந்தையோ அவனைப் பார்த்து சிரித்தது. முதல் இரண்டு வாய் வாங்கிய வெற்றி, மூன்றாவது வாய் வாங்கும் போது முகத்தை அசைக்க, சோறு அவன் முகம் முழுதும் ஒட்டிக் கொண்டது... அதைத் தன் கையால் எடுத்த குழந்தை, முருகன் சோற்றினை உருட்டியது போல், கையில் உருட்டி முருகனின் வாய்க்கு நேராகக் காட்டியது. "அழகு பெத்த புள்ள... எனக்கே ஊட்டி விடுறியா...?" என்று சொல்லிய வாய் திறக்க, தன் சிறுகையில் இருந்த உணவை முருகனின் வாயில் வைத்திருந்தான் வெற்றி. 

முன்னால் கேட்டுக் கொண்டிருந்த வெற்றியின் சிரிப்புக்குரல் குறைந்து போயிருந்ததை அடுப்பங்கரைக்குள் இருந்த படி கவனித்த செல்வி, வெளியே வந்து பார்க்க, தரையில் படுத்துக் கொண்டிருந்த முருகனுக்கு மிகுந்த அக்கறையோடு, வெற்றி தன் கையால் பிசைந்த பருப்புச் சோறை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான் வெற்றி. 

"இதுக்குத்தான் ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டுப் போறதில்ல... என்ன வேலை செய்யுது பாரு... அப்புக்குட்டி..???" என்று செல்வி வந்து வெற்றியைத் தூக்கிக் கொண்டு, முகத்தில் பொய்க்கோபம் காட்ட... "உனக்கு ஏன் பொறாமை... என் செல்லம் எனக்கு ஊட்டி விடுறான்...?" என்று சொன்ன முருகனை, "குழந்தை சாப்பாட்டைச் சாப்பிடுறீங்களே... உங்களுக்கே இது சிறு புள்ளத்தனமா இல்ல... எந்திரிங்க...." என்று சொன்ன நேரம் ஏதோ ஒரு ஆங்கில அறிவிப்பு வெற்றியை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தது.  

சென்னையை நெருங்கி விட்டதாக ஆங்கிலத்தில் சொன்ன அறிவிப்பு கேட்டு, தன்னருகே இருந்த சாளரம் வழி வெளியே பார்க்க, அடையாறு, கிண்டி எல்லாம் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. 

சென்னை வந்தடைந்த வெற்றி, அங்கிருந்து நேராக மருத்துவமனைக்குச் சென்றான். வரவேற்பறையில் தகவல் பெற்று, தன் அப்பா இருந்த அறைக்குச் சென்றான். சிறிது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவின் கால் அருகே சென்று, அமைதியாக அமர்ந்தான். அம்மா செல்வியும் இரவு முழுதும் தூங்காததால் நாற்காலியிலேயே அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்க... "அம்மா" என்றபடி அறை உள்ளே வந்த நர்ஸ், "ஓ... அம்மா தூங்குராங்களா...? நீங்க யாரு...?" என்று கேட்க, வெற்றி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "சரி... கொஞ்சம் எழுப்பி இந்த சாப்பாடு கொடுத்திருங்க... இன்னும் 45 நிமிசத்துல மருந்து கொடுக்கணும்..." என்று சற்று மெதுவான குரலில் சொல்லிச் சென்றாள். 

கொடுத்துச் சென்ற சாப்பாட்டைத் தன் கையினால் பிசைந்து, தன் இடது கையால் அப்பாவின் நெற்றியில் கை வைக்க, மெதுவாக கண் விழித்த முருகன், "வெற்றி... வந்துட்டியாய்யா..." என்று சொல்ல வாய் திறந்த நேரத்தில், அன்று சிறுகை கொண்டு ஊட்டிய மழலை வெற்றியின் கைகளால் சாப்பிடும் இன்பம், அமிழ்தமாய் மனமினிக்க முருகனின் விழிநீர் வெள்ளம் கன்னங்களில் கோடிட்டோடியது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.  (64)

அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்
இயல்: இல்லறவியல்


   

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka