மகிழ்ச்சி - குறள் கதை

மகிழ்ச்சி



கார்காலத்தின் காலைப்பொழுதில் தூறலினால் தன் வீட்டுத்தோட்டத்தின் மரங்களின் பசுமை நிறம் இன்னும் மெருகேறியிருந்ததைத் தன் வீட்டு மாடியிலிருந்த கண்ணாடியிட்ட சாளரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார், கதிரேசன். மழையின் இன்பக்குளியலில் நனைந்திருந்த மரங்களும், அந்த மரங்களில் இன்னிசை படித்துக் கொண்டிருந்த மைனாக்களும் அவர் மனதில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டிருந்தன. நேற்றை விட இன்று இரு ரோஜா மலர் மொட்டுகள் மழையில் நனைந்து முகிழ்ந்திருந்தன. தன்னை மறந்து நின்று கொண்டிருந்த கதிரேசனை நோக்கி கையில் பேசியை எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி.

"என்னங்க... குமரன் சார் லைன்ல இருக்காரு..."

பேசியை வாங்கிய கதிரேசன், "குமரன், நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் நலமா? ஆபீஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று கேள்விகளை அடுக்கினார். கதிரேசன், நான்கு மாதங்களுக்கு முன் தான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, தான் பிறந்த ஊரில் கட்டிய மாடி வீட்டிலும், பின்னே அமைத்துள்ள எழில் கொல்லையிலும் தன் ஓய்வு வாழ்வை மகிழ்வோடு கழித்து வருகிறார்.

மறுமுனையில், குமரன் "எல்லாரும் நல்லா இருக்கோம் சார், நீங்க இங்க இல்லாததுங்குற ஒரு குறை தான்... நீங்கள் ரிடையர் ஆகிப்போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது, எவ்ளோ வேலையை எளிதில நீங்க கவனிச்சுட்டு இருந்தீங்கன்னு... வீ ஆர் மிஸ்ஸிங் யூ சார்"

"சும்மா சொல்லாதீங்க குமரன்"

"ரியலி சார்..."

"சரி, அதெல்லாம் இருக்கட்டும்... இன்னும் ஒரு மாசத்துல திருவுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்..."

"இப்ப தான் மேடம் சொன்னாங்க..."

"நானே நேர்ல வந்து உங்களை எல்லாம் பாத்து அழைக்கணும்னு தான் இருந்தேன். ஆனா, முன்ன மாதிரி அதிகம் ட்ராவல் செய்ய முடியறது இல்லை... திருவுக்கும் இப்ப லீவ்இல்ல..." என்று கதிரேசன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, குமரன் இடைமறித்தார்.

"சார், இவ்ளோ சொல்ல வேண்டியதே இல்ல... நீங்க தேதி, இடம் மட்டும் சொல்லுங்க, நாங்க எல்லாரும் வந்துடறோம்."

"மகிழ்ச்சி குமரன்... நான் போஸ்ட்ல அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறேன்..."

"சரி சார், நான் இன்னொரு நாள் பேசுறேன்."

அழைப்பினைத் துண்டித்து, போனை வள்ளியிடம் கொடுத்த நேரம், எங்கிருந்தோ வந்த ஒற்றைத் தேனீ ஒன்று, சாளரத்தின் கண்ணாடியை வழி என்று நினைத்து, அதில் மோதி ரீங்காரம் இடத் துவங்கியது. "என்னங்க... கொட்டிட கிட்டிட போகுது" என்றாள் வள்ளி, காதைப்பொத்தியபடியே.

கதிரேசன் கண்ணாடியை மெதுவாகத் திறக்க, வழி கிடைத்ததில் திறந்த வெளியில் தனக்கு வேண்டிய தேன் தேடி தோட்டத்தின் பக்கமாய்ப் பறந்தது அந்த தேனீ.

கீழே "அக்கா" என்ற குரல் கேட்க, உடன் வள்ளி, "என்னங்க, கண்ணன் குரல் மாதிரி இருக்குங்க..." என்றாள். இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
கண்ணனைப் பார்த்ததும் வள்ளி தன் சிரித்த முகத்தோடு, "வாடா, மல்லிகா வரல? நித்யா எப்ப லீவ்ல வர்றா? நீ நல்லா இருக்கியாடா?" என வரவேற்க, கதிரேசனும், "வாங்க மச்சான், உட்காருங்க... நல்லா இருக்கீங்களா?" என்றவர் வள்ளியைப் பார்த்து, "டீ போட்டு எடுத்துட்டுவாம்மா..." என்றார்.

கண்ணனுக்கு 47 வயது இருக்கும்... இன்னும் இளைஞனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் செயற்கையாக அவன் தலைமுடிக்குக் கருமையைத் தந்திருந்தது. 10கிமீ தொலைவில் உள்ள சிறு நகரத்தில் தான் எலக்ட்ரிகல் கடை வைத்திருக்கிறான்.

வரவேற்பறையின் தொலைக்காட்சிக்கு எதிரே 'ப' வடிவில் இடப்பட்டிருந்த சாய்வணையில் இருவரும் அமர்ந்தனர்.

"சொல்லுங்க மச்சான்... மல்லிகா, நித்யா எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"நாங்க நல்லா இருக்கோம் மாமா..."

"நானே வரணும்னு நெனச்சுட்டு இருந்தேன். திருவுக்குக் கல்யாணம்..."

கண்ணன் இடைமறித்து, "தெரியும் மாமா, அதைப்பத்தித் தான் பேசலாம்னு வந்தேன்."

வள்ளி ஒரு தட்டில் மூன்று தேநீர்க் கோப்பைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். "எடுத்துக்கோங்க மச்சான்..." எனச் சொல்லிய கதிரேசன், வள்ளியைத் தன் அருகே அமரச் சொன்னார். தேநீர் கோப்பையை எடுத்து, சிறிது குடித்துவிட்டு, முன்னிருந்த மேசையில் வைத்த கண்ணன், "டக்குன்னு கல்யாணம் வச்சுட்டீங்க... மாமா...?" என்றான்.

"ஆமா கண்ணன்... எதுக்கு நல்லதைத் தள்ளிப்போட்டுகிட்டு...? அதான் முடிவு செஞ்சாச்சு..." என்றார் கதிரேசன், உற்சாகமாக. ஆனால், கண்ணன் முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல், "பொண்ணு யாருன்னு நல்லா விசாரிச்சுட்டீங்களா மாமா...?" என்றான்.

"எல்லாம் நல்லா விசாரிச்சாச்சு... மச்சான்..."

"இல்ல மாமா... நமக்குன்னு ஒரு பழக்க வழக்கம் இருக்கு, கல்யாணம் மட்டும் இல்ல, அதுக்கு அப்புறம் ஆயிரம் தேவைங்க வரும்... நல்லது கெட்டது கெடக்கு... எல்லாத்துக்கும் சொந்தக்காரங்க தான் வருவாங்க... எதுக்கு சொல்றேன்னா, நாளைக்கு கல்யாணத்துல யாரும் குறை சொல்லிடக்கூடாது பாருங்க..."

"குறையா...? என்ன சொல்லணும் மச்சான்... நேரா சொல்லுப்பா..." என்றார் கதிரேசன்.

"மாமா... பொண்ணு வீட்லயும் நம்ம ஆளுங்க தானே, நல்லா விசாரிச்சுட்டீங்களான்னு கேட்டேன்..."

கதிரேசன் முகம் கேள்வியினால் சிறு மாற்றம் கொண்டது. ஆனாலும், இதெல்லாம் எதிர்பார்த்தவை தான் என்பதால், முகத்தில் அடுத்த நொடி சிரிப்பை வரவழைக்க அவரால் முடிந்தது. சிறு புன்னகையோடு, "அதெல்லாம் விசாரிச்சாச்சு..." என்றார்.

கண்ணன் முகத்தில் இப்போது வெளிச்சம் ஏறி இருந்தது. "அப்பாடா... நான் கூட சென்னையில வேலை பாக்குற எடத்துல ஏதும் லவ் கிவ்வுன்னு நெனச்சுட்டேன். பொண்ணு எந்த ஊரு மாமா... ஏன் கேக்குறேன்னா எல்லா ஊருலயும் உள்ள நம்ம ஆளுங்க கிட்டயும் தகவல் சொல்லலாம்ல..."

இப்போது கதிரேசனின் முகம் கொஞ்சம் மாறியது. "கண்ணன், இது லவ் மேரேஜ் தான்... பொண்ணு நம்ம சாதி கிடையாது... யாராயிருந்தா என்ன? ஒரு கல்யாணத்துக்கு எது தேவை...? கல்யாணம் பண்ணிக்கப் போற ரெண்டு பேருக்குப் பிடிச்சிருக்கணும். அதானே?"

"இல்ல மாமா, நம்ம ஆளுங்களயே இந்த பகுதியில நீங்க தான் முதல் பட்டதாரி, நம்ம வீட்டுலயே கலப்பு கல்யாணம்னா நல்லா இருக்காது மாமா... நானும் நாலு பேருகிட்ட எப்படி சொல்லுறது? என்ன இருந்தாலும் தாய் மாமன் அப்படிங்கிற உரிமையில கேக்குறேன்.”

"என்னைப் பொருத்தவரை, எனக்கே அதைக் கேட்க உரிமை கிடையாது கண்ணன். ஆமா, நாம எதுக்கு குழந்தைகளைப் பெத்துக்கிறோம்... நம்ம வாழ்க்கைக்குப் பொருள் கொடுப்பவங்களே அவங்க தான். எப்படி நான் முதல் பட்டதாரியா ஆனப்ப, வீரன் மவன் பெரிய படிப்பெல்லாம் முடிச்சுட்டான்டான்னு சொன்னாங்க. எங்க அப்பா சொல்லுவாரு, 'அவன் தான்யா படிச்சான். அவன் பேரச் சொல்லுங்கலேன்னு.' இருந்தாலும், கடைசி வரைக்கும் அப்பாவுக்கு நான் படிச்சதில அப்படி ஒரு பெருமை... இது தானே ஒரு குடும்பத்துக்குத் தேவை..." என்று தன் கையில் இருந்த தேநீரைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்,
"நான் என் பையனுக்கு அவனோட வாழ்க்கை முடிவு எடுக்குறதுக்குக் கத்து கொடுத்திருக்கேன். அவனோட முடிவுகள் சரியா இருக்கான்னு பாக்குறதுக்கு எனக்கு உரிமை இருக்கு... ஆனா, என்னோட விருப்பத்தை அவன் மேல திணிக்கிறதுக்கு இல்ல... இந்த கல்யாணம் திருவோட விருப்பம், அவனோட மகிழ்ச்சி..."

"இல்ல மாமா, நாளைப்பின்ன ஏதாவது சிக்கல் வந்துச்சுன்னா, அதுல நம்ம பையன் வாழ்க்கை தானே போகும்? அவசரப்படாம யோசிச்சுப் பாருங்க..."

"கண்ணா, கொஞ்ச நேரம் முன்னாடி நாலு பேரு கிட்ட எப்படி சொல்லுறதுன்னு கேட்ட? இப்ப சிக்கல் வந்துடும், வாழ்க்கை போயிடும்னு சொல்லுற? இப்ப உனக்கு என்ன தாண்டா வேணும்?" என்று கேட்டாள் வள்ளி.

"அக்கா, நீயுமாக்கா?" என்றான் கண்ணன்.

"என் பையன் அவனுக்குப் பிடிச்ச வாழ்க்கைய தேர்ந்தெடுத்திருக்கான்... அவனோட மகிழ்ச்சி தானே எங்க மகிழ்ச்சியா இருக்க முடியும். அவனுக்கும் 25 வயசு ஆகுது. அவனுக்கும் நல்லது கெட்டது தெரியும். அவனோட வாழ்க்கையை - அவனோட வாழ்க்கையோட பொருளை அவனே தேடட்டும்... நம்ம அவனோட வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பாக்குறத விட இந்த தேவையில்லாத சாதி, சம்பிரதாயம் எல்லாம் எங்களுக்கு அவ்ளோ பெருசா படலடா..." என்ற வள்ளி, கொஞ்சம் இடைவெளி விட்டு "டீ ஆறுது பாரு கண்ணா, இட்லி வச்சுட்டேன், ஒரு பத்து நிமிசம்... ரெடியாயிடும்... நீயும் சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க... சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் கல்யாண மண்டபத்துக்குப்  போயி புக் பண்ணிட்டு வந்திடுங்க... என்ன நான் சொல்றது?" என்று சொல்லிவிட்டு கதிரேசனைப் பார்த்துச் சிரித்தபடி, சமையலறையை நோக்கிச் சென்றவளைக் கண்ணன் அதிர்ச்சியோடு பார்த்தது அவனுடைய தேநீர்க் கோப்பையில் தலைகீழ் பிம்பமாய்த் தெரிந்தது.

- முடிவிலி

குறள் :
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நம்முடைய வாழ்க்கையின் பொருள் நமது குழந்தைகள்... அவர்களுடைய வாழ்வின் பொருள் அவருடைய வினையினால் - செயல் திறனால் - முயற்சியினால் உண்டாகும்.  

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka